புற்றுநோய் பற்றிக் கல்லூரியில் பாடம் எடுத்திருக்கிறேன். என் ஆசான் அருணந்தி, மூளைப் புற்றுநோய் வந்து இறுதிக் காலத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டு இறந்து போனார். அப்போதும், அதற்குப் பின்னரும் புற்றுநோய் தொடர்பாக நிறைய படித்தேன். எனவே நீண்ட நாள் வாழ்வதற்காக அனைத்து வழிமுறைகளையும் கைகொண்டேன். எதுவும் சாப்பிடப் பிடிக்காது. உடலும் சோர்வாக இருக்கும். இரவில் தூக்கமும் வராது. அப்போதெல்லாம் சுமார் 300 கட்டுரைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன்.

ஆண்களுக்கும்கூட மார்பகப் புற்றுநோய் வரும் என்பதைத் தெரிந்துகொண்டேன். அது தொடர்பான ஒரு கட்டுரையை எழுதி, ஃபேஸ்புக்கில் வெளியிட்டேன். இதைப் பார்த்து திருப்பூரில் உள்ள எழுத்தாளர் சங்கம் மற்றும் உலக எழுத்தாளர் அமைப்பு என்னை அழைத்து உலக அளவில் என் கட்டுரைக்கு இரண்டாம் பரிசு கொடுத்தனர். நானே சென்று அந்தப் பரிசைப் பெற்றுக்கொண்டேன்.

இரண்டாம் கீமோதெரபி முடிந்து 15 நாட்களுக்குப் பிறகு முடி கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்ட ஆரம்பித்தது. இரவு தூங்கி விடியற்காலை 5 மணிக்கு விழித்து, தலையணையைப் பார்த்தால், முடியைப் பரப்பி வைத்ததுபோல அப்படியே கிடக்கும். இது எதிர்பார்த்ததுதான் என்பதால் நான் கவலைப்படவில்லை.

மூன்றாவது கீமோதெரபிக்காக ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சேர்ந்தேன். தலைக்கு வைக்க வேண்டிய விக் வந்துவிட்டது. அதை மாட்டி போட்டோ எடுத்தேன். ரத்தப் பரிசோதனையில் ஹீமோகுளோபின் அளவு 12.6 என்று வந்தது. மற்ற ரத்த செல்களின் எண்ணிக்கையும் ஆரோக்கியமாக, போதுமானதாக இருந்ததால், ரத்தம் ஏற்ற வேண்டிய தேவை இல்லை எனவும், எனக்கு உடனே கீமோதெரபி கொடுக்கலாம் என்கிற நிலையில் இருந்தேன்.

மூன்றாவது கீமோதெரபி சிகிச்சையின்போது வாந்தி, வயிற்றுப்போக்கு எதுவும் ஏற்படவில்லை. செலவும் குறைவுதான். இப்போது மருந்தின் விலை இருநூறு மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது.

புதிய பிரச்னை ஏதும் இல்லை என்றாலும் உடல் அநியாயத்துக்குச் சோர்வாக இருந்தது. சமைப்பது, வேலை செய்வது, நிற்பது எல்லாம் கடினமாகவே இருந்தது. இருந்தாலும் நான் கொஞ்சம் வேலைகளைக் கட்டாயமாகச் செய்தேன். மாடியில் நடந்தேன். உடற்பயிற்சியும் செய்தேன். இல்லை என்றால் இடது கை செயல்பாட்டுக்கு வராது.

மூன்றாவது சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்து, இரவு படுத்து எழுந்தபோது முடி கொத்துக் கொத்தாகக் கொட்டியது. இன்னொரு பிரச்னையும் வந்தது. அது தோலில் உள்ள செல்களும் உதிர்ந்துகிடக்கும். அவற்றை நோக்கி எறும்புகள் படை எடுக்கும். தம்பி லோகனாதன் என்னை எறும்புகளிடமிருந்து காப்பாற்றப் போராடுவார்.

வீட்டுக்குள் அடைபட்டுக்கிடப்பது என் இயல்பில் இல்லை என்பதால், திருமூர்த்தி மலை, வரதமாநதி அணை என்று கிளம்பிவிட்டேன். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை எப்போதும் நவம்பர் மாதம் முதல் 15 தினங்களுக்குள் நடத்திவிடுவோம். நான் இவர்களுக்கு மாநில கருத்தாளராகவும், கல்வி ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தேன். தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கோவை பொறியியல் கல்லூரியில் நடந்தது. நானும் இந்த உடல் நிலையோடு, தேசிய குழந்தைகள் மாநில மாநாட்டுக்குச் சென்றேன். யாரும் நான் வருவேன் என்று நினைக்கவே இல்லை. தனியாக வந்ததில் எல்லாருக்கும் ஆச்சரியம். நீண்ட நாள்களுக்குப் பிறகு இயக்கப் பணி செய்துவிட்டுத் திரும்பியதில் மனம் உற்சாகமாக இருந்தது.

தலையில் முடி என்கிற ஒன்றே இல்லை. முடி அடியோடு விழுந்து விடுவதால், வழுக்கை வந்தவர்களுக்கு எப்படி வழு வழுப்பாக இருக்குமோ அப்படி இருந்தது மண்டை. அது மட்டுமல்ல, புருவம் மற்றும் உடலில் உள்ள அனைத்து இடங்களிலிருந்தும் முடி கொட்டிவிட்டது.

நான்காவது கீமோதெரபிக்கு முன்னரே, இருமுறை ரத்தப் பரிசோதனை செய்தாயிற்று. எதுவும் பிரச்னை இல்லை. ரத்த ஹீமோகுளோபின் அளவு 12.6 என்று இருந்தது. மற்றபடி, ரத்த செல்களின் எண்ணிக்கையும் குறையவில்லை. எனவே ரிப்போர்ட்டை மருத்துவருக்கு அனுப்பிவிட்டு, நான்காவது கீமோதெரபி எடுத்துக்கொள்ள, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்குச் சென்றோம்.

நான்காவது கீமோதெரபி முடிந்ததும் பேராசிரியர்கள் ராசமாணிக்கம், தினகரன் இருவரும் என்னைப் பார்க்க வந்தனர். என் நிலையைப் பார்த்து இருவரும் அதிர்ந்து போனார்கள். கீமோதெரபியின் எண்ணிக்கை கூடக்கூட சோர்வும் தளர்வும் அதிகம் ஆனது.

எப்போது கீமோதெரபி முடியும் என்று காத்திருந்தேன்.

5வது கீமோதெரபிக்குப் பின்னர், உடல் நிலை ரொம்பவும் மோசமாகிவிட்டது. உள்ளம் உறுதியாக இருந்தது. நடப்பதே சிரமம் என்கிற நிலை, இருந்தாலும் நடந்தேன். என்னால் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டுக்குச் செல்ல இயலவில்லை. அதனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமனைச் சந்திக்க முடியாத வருத்தம் இன்றும் இருக்கிறது.

கடைசி கீமோதெரபிக்கான நாள் வந்தது. கீமோதெரபியைக் கண்டுபிடித்தவர் டாக்டர். ஜேன் குக் ரைட் (Jane Cooke Wright) என்கிற ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணிதான். இவரை ‘கீமோதெரபியின் தாய்’ என அழைக்கிறார்கள்.

(இன்னும் பகிர்வேன்)

படைப்பாளர்:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.