தமிழ்நாடு அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த முன்னெடுப்பு நல்ல முறையில் வெற்றி பெற்றால் அது நம் பெண் சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய நீதி என்று சொல்ல வேண்டும்.

இது சம்பந்தப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவில், ‘எனக்குத் தெரிஞ்ச ஒரு அம்மா, அவங்க பையன் லட்சத்துல சம்பாதிக்கிறான். ஆனா, இந்த அம்மா தான் ஒருத்தருக்காக மட்டும் தனி ரேஷன் கார்டு வச்சிருக்காங்க. இந்த ஆயிரம் ரூபாயை வாங்குறதுல அவங்க குறியா இருக்காங்க’ என்று அவரைச் சிறுமைப்படுத்தி ஒரு பின்னூட்டத்தைப் பார்த்தேன்.

இது போன்ற மனநிலையை எண்ணி மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது.

அரசாங்கம் இந்தத் தொகையை ஒரு பெண்ணுக்கு கொடுக்க நிறைய நிபந்தனைகளை விதித்திருக்கிறது. அதுவும் நியாயமானதே. அதன்படி பார்க்கும்போது எந்தவித வருமானத்திற்கும் வழி இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு இந்தத் தொகை கட்டாயம் சேரும் என்பது புரிகிறது.

ஒரு மகன் லட்சத்தில் சம்பாதிப்பதால் மட்டுமே அவனுடைய தாய்க்கு அதில் உரிமை இருக்கிறது என்று பொருள் இல்லை. ஓர் அவசர செலவுக்கு, மருந்து, மாத்திரை வாங்க என்றாலும்கூட ‘எனக்கு இது வேண்டும் வாங்கிக் கொடு’ என்று வாய்விட்டுக் கேட்கும் நிலையில்தான் பல பெண்கள் இருக்கிறார்கள்.

ஒருநாள் கிழமை பண்டிகை என்றாலோ பேரப்பிள்ளைகளில் பிறந்தநாள் என்றாலோ ஏதாவது நல்ல நாட்கள் என்று அவர்களிடம் யாரேனும் ஆசி பெற வந்தாலோ, அவர்களுக்குக் கொடுக்கக்கூடப் பத்து ரூபாய் கையில் இருக்க வேண்டும் இல்லையா?

பாட்டி எனக்கு சாக்லேட் வாங்கிக் கொடு என்று கேட்கும் பேரக் குழந்தைகளுக்கு என்னிடம் காசு இல்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய கொடுமை, தெரியுமா?

”அம்மா உனக்கென்று தனிப்பட்ட செலவுகள் இருக்கும், அதனால் இதை நீ வைத்துக்கொள்’ என எல்லா மகன்களும் மகளும் சொல்கிறார்களா? மகள்களுக்கு எந்த வருமானமும் இல்லாமல் இருக்கிறார்கள். அல்லது தனது வருமானத்தில் ஒரு தொகையை அம்மாவுக்குக் கொடுக்க கணவன் அல்லது புகுந்த வீட்டினரின் அனுமதி அவளுக்குத் தேவையாக இருக்கிறது. அம்மாவிடம் தாராளமாகப் பணத்தை எடுத்து நீட்டிவிடுவதில்லை.

இப்படி எல்லாம் நடந்துவிட்டால் நம் ஊரில் முதியோர் இல்லங்கள் என்பதே இருந்திருக்காதே. அதேபோலத்தான் கணவனின் வருவாயிலும்கூட முழு பாத்யதையை எல்லாப் பெண்களும் பெற்றுவிடுவதில்லை.

உரிமையுடன் கணவனின் சட்டைப் பையில் கையை விட்டுப் பணத்தை எடுத்து தாராளமாகச் செலவு செய்யும் பெண்கள் அதிகமாக இருந்தாலும்கூட, பிள்ளைகளுக்குச் சமைத்துப் போட, பொருட்கள் வாங்கக்கூட கணவனிடம் கையேந்தி நிற்கும் நிலையில் பல பெண்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஒரு சானிட்டரி நாப்கின், ஏன் உள்ளாடைகள் வாங்க வேண்டும் என்றாலும்கூட அதை வெளிப்படையாகச் சொல்லி, காசு வேண்டும் என்று கேட்டு நிற்கும் நிலை அவலம்தான்.

குறைந்த வருவாய் உள்ள பெண்களுக்கும் இந்தத் தொகை ஓர் அவசியமான செலவைச் சமாளிக்கப் பேருதவியாக இருக்கும். பெண்கள் ஈட்டும் ஒரு ரூபாயும்கூட அவளுடைய குடும்பத்திற்குச் சிந்தாமல் சிதறாமல் சென்று சேருகிறது என்பது நிதர்சனமான உண்மை.

ஓர் அரை நூற்றாண்டு குடும்பம் நடத்திய பிறகும்கூட, இடி சோறு போடக்கூட பிள்ளைகள் இல்லாமல், கால் நீட்டி உட்கார ஒரு சிறு குடிசையோ மூன்று வேளை உணவுக்கு ஆதாரமாக ஏதோ ஒரு சேமிப்புத் தொகையோ அல்லது வருமானத்திற்கான ஆதாரமோ எதுவுமே இல்லாமல் ஒரு பெண்ணை தவிக்கவிட்டு இறந்து போகும் ஆண்களின் வயோதிக மனைவிகள் இங்கே அதிகம்.

இப்போது அரசாங்கம் பெண்களுக்கு உரிமை தொகையாகக் கொடுக்கும் இந்த ஆயிரம் ரூபாய் என்பது இது போன்ற நிலையில் இருக்கும் பெண்களைப் பொறுத்தவரை ஆயிரம் கட்டி வராகனுக்குச் சமம், ஏனென்றால் ‘ஈ என இரத்தல் இழிந்தன்று’ என்று சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட சமுதாயத்தில்தான் நாம் இருக்கிறோம்.

அதேபோல பெண்களை இழிநிலையிலேயே வைத்திருக்கும் எந்த ஒரு சமுதாயமும் இழிவானதுதான்.

இந்த நிலையை மாற்ற ஓர் அரசாங்கம் கிள்ளிப் போடும் சிறு துரும்புகூட பெண்களின் முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய ஆயுதம்தான்.

படைப்பாளர்:

கிருஷ்ணப்ரியா நாராயண். தமிழ் நாவலாசிரியர். சென்னையைச் சேர்ந்தவர்.  8 நாவல்கள் புத்தகமாக வெளிவந்துள்ளன. வாசித்தலில் அதிக ஆர்வம் உண்டு