பகுதி – 2

“தொடக்கக் காலங்களில் ஆண், பெண்ணுன்னு வேறுபாடில்லாம முடி வளர்த்திருந்தனர். காலமாற்றத்திற்கேற்ப ஆண்கள் பண்பாடு மாற்றத்திற்குட்பட்டு முடியை வெட்டிக்கொண்டனர்” என்றார் லோகேஸ்வரி.

“என்னது ஆண்கள் முடி வளர்த்தாங்களா? இப்பல்லாம் நீட்டமா முடி வளர்த்தா நீ என்னடா பொண்ணான்னு கேட்பாங்களே! ஆண்கள் ஏன் முடியை வெட்டிக்கொண்டனர்? ஆண்கள் இப்போ மாறியிருக்கும் போது பெண்கள் முடி வெட்டாம இப்படி ஏன் வளர்த்தாங்களோன்னு தெரியலையே? இல்லன்னா விருப்பப்படறவங்க முடி வெட்டிக்கோங்கன்னாவது இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்!”

“ஆண் என்கிற காரணத்தாலே முடி வெட்டணும், பெண்ணென்றாலே முடி வளர்க்கணும்ன்னு எழுதாத விதியை மக்கள் மண்டைக்குள்ள ஏத்தி வைச்சிருக்காங்களே? இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலமே கிடையாதா?” என்று உள்ளிருந்த ஆதங்கத்தையெல்லாம் கேள்விகளால் அடுக்கிக்கொண்டிருந்தாள்.

“பொதுவாக நீண்ட முடி இருந்தா தினமும் சீவிப் பராமரிக்கணும். இல்லன்னா சிக்கு விழுந்திடும். வாரம் ஒரு முறை இல்லன்னா இரு முறையாவது தலைக்குக் குளிச்சிட்டு, எண்ணெய் வைச்சு தலைப்பின்னல் போட்டோ இல்ல கொண்டை போட்டோ பராமரிக்கணும். இவ்வளவும் செய்யறதுக்குக் கணிசமான நேரம் நாம் தினமும் ஒதுக்கணும். இதுல ஷாம்பூ, எண்ணெய்னு பொருள்செலவு ஒருபக்கம் அதிகம் தேவைப்பட்டது. வேலைக்குப் போயி சம்பாரிச்ச ஆண்கள், சவுகர்யத்திற்காகக் காலமாற்றத்தையொட்டி முடியை வெட்டிக்கொண்டு தங்களைப் பரிணமித்துக் கொண்டனர். அவர்களுக்கு நேரமும் பொருளும் மிச்சம் ஆனது. குறிப்பா சொல்லணும்னா முடி விழுங்கிய பொருளும் நேரமும் தன் அறிவை, ஆளுமையை வளர்த்துக்கொள்ளப் பயன்பட்டது. அவர்களும் பல்வேறு தளத்தில் தங்களை வளர்த்துக்கொண்டனர். வெகுவாக முன்னேறினர்.

“அதனால்தான் பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட ஆளுமைகள் முடிவெட்டிக்கச் சொன்னாங்க. அப்படிப் பெண்கள் மேம்படணும்ன்னு செயல்படறவங்களும் முன்மாதிரியாக முடியை வெட்டிக்கொண்டும் இருக்காங்க. உயர்பதவிகளுக்கு வந்த பெண்கள் கூட முடியை வெட்டிக்கொண்டுள்ளனர். நம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் பார்த்திருப்பீயே எப்படித் தனித்த அடையாளத்தோடு இருந்தாங்கன்னு” என்றார் லோகேஸ்வரி.

“நீங்க சொல்றபடி சாதித்த, சாதிக்க நினைக்கும் பெண்கள் முடியை நீட்டி முழக்கி அழகுன்னு பராமரிக்கறதில்லைதான். தங்களை வளர்த்துக்க எத்தனிக்கும்போது இதெல்லாம் கணக்கிலேயே வைக்க முடியாது. இதைக் கணக்கில் வைத்தால் அவர்கள் பணியில் சுணக்கம் ஏற்படும். நேரம் ஒதுக்க முடியாம போய்டும். நான் சொல்றது சரிதானே மேடம்?” என்றாள் பொன்னி.

“பொதுவாகப் பண்பாடு என்பது மாற்றத்திற்கு உட்பட்டதுதான். பண்பாடு காலத்திற்கேற்ப மாறிக்கிட்டேதான் வந்திருக்கு. ஆனால், பெண்கள் மீது சுமத்தப்படும் விஷயங்கள் பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் மாற்றத்திற்கு உள்படாமல் கெட்டித்தட்டிப்போய், பெண்களைக் கலாச்சாரக் காவலர்களாக மாற்றி வைத்துள்ளது சமூகம். ஒரு பண்பாட்டு / கலாச்சார மாற்றம் ஆண்களிடத்தில் எளிதில் நடக்கும் இடம் வாய்க்கப்பட்டிருப்பினும் பெண்களிடம் பல விஷயங்களில் மாறிலியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். பெண்களின் சின்ன மாற்றம் தென்பட்டாலே ஐயோ கலாச்சாரம் கெட்டுப்போச்சு, மேற்கத்திய நாகரிகம் வந்துடுச்சுன்னு சமூகம் குதியாய் குதிக்கும். பெண்களிடம் மாற்றம் நடக்காமல் இல்லை, ஆனால் தேவையான அளவு மாற்றம் நடக்க பல போராட்டங்கள் நடத்த வேண்டியுள்ளது வேதனைக்குரியது.”

“இந்தத் தொலைக்காட்சி விளம்பரங்கள், சினிமா எனப் பெண்களுக்கு நீண்ட முடி அழகு, அதை எப்பாடுபட்டாவது பராமரிக்கணும்னு தீயாகப் பரப்பல் வேலையைச் செய்யுது மக்கள் மனங்களில். அதுவுமில்லாம பள்ளிக்கு ரெண்டு ஜடை போட்டு சீவிக்கிட்டு போறதுலயே பல பேர் வீட்ல காலை நேரம் ஒரு யுத்தமே நடக்கும். அதே ஆம்பளப் பையன் டக்குன்னு சீவிக்கிட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பிட முடியுது. அதுவுமில்லாம சின்ன வயசுல பெண் குழந்தைகளுக்குக் குட்டையா முடி வெட்டிவிடறாங்க பெற்றோர், சற்று வளர்ந்ததும் குறிப்பா வளரிளம் பருவத்தை எட்டிய பெண்கள் குட்டையாக முடி வைத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. ஏன் மேடம்?” என்று கேட்ட பொன்னியை இவ்ளோ சிறுவயதில் ஆழ்ந்து சிந்திக்கிறாளே எண்ணிக் கொண்டார் லோகேஸ்வரி.

“நீ சொல்ற மாதிரி வியாபார நோக்கத்திற்காக விளம்பரமும் பெண்கள் சார்ந்து சமூகக் கருத்துகளை மாற்றத்திற்குட்படாமல் வச்சிக்க ஊடகம் ஒரு முக்கியப் பணியைச் செய்யுது. தினமும் பள்ளிக்கூடத்துக்கு ஜடை போட்டுக்கிட்டு கிளம்புவது நிச்சயம் சிரமம்தான். சின்ன வயசுல பெருசா ஆண், பெண் வித்தியாசம் பார்ப்பதில்லை. அப்போல்லாம் பெண் வெளிலயே வரக்கூடாதுன்னு கட்டுப்பாடுகள் இருந்தது. இப்போ பெண் படிச்சி நிறைய தொழில்களில் பங்கெடுக்கத் தொடங்கிட்டாங்க. ஒரு நல்ல மாற்றமா தற்போதைய நவீன காலத்துல குழந்தையா இருக்கும் போது முடியை வெட்டிவிட்றாங்க. ஆனா, பருவமெய்திட்டா இந்த நவீனமெல்லாம் அங்க செல்லுபடி ஆகாமல் திரும்பவும் கலாச்சாரத்தைக் காப்பாற்றணும்ன்னு கிளம்பிடறாங்க. நான் முடி வெட்டிக்கிட்டு வந்ததும் வீட்ல மற்றும் சுத்தியிருந்த சொந்தக்காரங்க அனைவருக்கும் பேரதிர்ச்சி. அதுக்குத்தான் பொண்ணுங்கள படிக்க வைக்கக் கூடாது. அதும் ஆப் டவுசர் போட்டு விளையாடவே விட்டிருக்கக் கூடாதுன்னு ஒரு புறம்ன்னு அவங்களுக்கு விருப்பப்படி சுத்தியிருந்த வாய்களெல்லாம் கதையெழுதி வியாக்கியானம் பேசிக்கிட்டு இருந்த சூழல்ல ஒரு வாய் எழுதிய கதையில் பேரதிர்ச்சியில் உறைந்துதான் போனேன்.”

“அப்படி என்னதான் எழுதினாங்க சொல்லுங்களேன். ஆனா, இப்படி முடியை வெட்டிக்கிட்டதால எத்தனை பேர்கிட்ட சொல்லடி வாங்க வேண்டியிருக்கு! நம்ம வீட்ல ஒத்துக்கிட்டாலும் அக்கம்பக்கம் போடற அழுத்தத்திலிருந்து மீள்வது சற்றுக் கடினம்தான் போல” என்றாள் பொன்னி.

“டக்குன்னு ஒருத்தர் இனி யார் இந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்குவான்னு எங்கம்மாகிட்ட சொல்ல, எங்கம்மா ஓன்னு அழத் தொடங்கிட்டாங்க. ஒரு வேளை எங்கப்பா இருந்திருந்தா என்ன சொல்லியிருப்பார்ன்னு தெரியல. எங்கம்மா தனிப் பெற்றோரா இருக்கறதால அவங்களுக்கு இந்தச் சொற்கள் பேரிடியாய் இறங்குச்சு. அதாவது பருவமெய்திட்டா அந்தப் பெண், அவளோட விருப்பத்தைத் துறப்பு செய்து சமூகத்தால் கலாச்சாரம்ங்கிற பேர்ல அவளை வடிவமைக்கப்படத் தொடங்கிடறாங்க. அதன்பிறகு மிகவும் இறுகியதா மாறி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுது. இப்பக்கூட முடியை வளர்த்துடுன்னு எங்கம்மா சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க. உன்னை யார் கல்யாணம் பண்ணிக்குவான்னு அழுவாங்க. முடியெல்லாம் ஒரு விஷயமே இல்ல, நான் ஒரு நாள் சாதிப்பேன்மா… அப்போ இதெல்லாம் ஒரு பொருட்டில்ல நீ கவலைப்படாதன்னு நானும் சமாதானம் சொல்வேன். அவங்க சாதாரண குடும்பத்துல பிறந்து வளர்ந்தவங்க. சமூக அழுத்தம் அவங்களுக்கு, அவர்களை ஒன்னும் சொல்ல முடியாது. அவங்ககிட்ட கோவிச்சுக்கறதோ வருத்தப்படறதோ தேவையில்லாத விஷயம்ன்னு நான் நினைக்கிறேன்” என்றார் லோகேஸ்வரி.

“விருப்பப்படும் பெண்கள் முடி எப்படி வைச்சிக்க விரும்பறாங்களோ அப்படி வைச்சிக்கணும். அதைச் சமூகம் இயல்பா எடுத்துக்கப் பழகிக்கணும். நான் கடினமா உழைச்சு உங்கள மாதிரி கபடில நிறைய சாதிக்கப் போறேன். என்னோட வாழ்நாள் நோக்கமே அதுதான். பெண்களுக்கு முடி வெட்டினா பல விஷயங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்ன்னு பெண்கள் மேம்பாட்டுக்காகப் பாடுபட்ட தலைவர்களெல்லாம் சொல்லிருக்காங்கன்னு புத்தகங்கள்ல படிச்சிருக்கேன். நான் முடி வெட்டிக்கப் போறேன். அதை எங்க அம்மா, அப்பாகிட்ட பேசிப் புரிய வைக்கப் போறேன். எப்படிப் பேசறதுன்னு குழப்பமா இருந்துச்சு. நீங்க எனக்குத் தெளிவா நிதானமா புரிய வைச்சிட்டிங்க. மிக்க மகிழ்ச்சியும் அன்பும். உங்கள என்றும் என் வாழ்நாளில் மறக்கமாட்டேன்” என்றாள் நெகிழ்ச்சியுடன் பொன்னி.

“மிக்க மகிழ்ச்சி பொன்னி. மாற்றத்தை நாமெல்லாம் சேர்ந்துதான் முன்னெடுக்கணும். பேரறிஞர் காரல் மார்க்ஸ் சொன்னபடி மாற்றம் ஒன்றே மாறாதது. பல தடைகள் வந்தாலும் மனம்தளராமல் நமக்காகப் பாடுபட்ட முன்னோர்களை நெஞ்சில் ஏந்தி, சமூகம் முன்னோக்கிப் பயணிக்க நாம் ஒரு சிறுகல்லை எடுத்து வைத்தோம்ன்னு பெருமையா, மகிழ்வா வீறுநடைபோட்டு கெத்தா போவாம் வா பொன்னி.”

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.