They என்னும் Third person Singular

பாலினம் என்பது இருநிலையானது அல்ல (Non Binary). அது ஒரு நிறமாலை போல (Sprectrum) பாலின அலைக்கற்றை. ஒரு நிலைக்கும் இன்னொரு நிலைக்கும் கோடு போட்ட வித்தியாசம் கிடையாது. ஒன்று தேய்ந்து இன்னொன்றாகலாம், அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிறங்களின் சந்திப்பிலும் ஒருவர் இருக்கலாம். இதைக் கண்டறிய ஒருவருக்கு ஓர் ஆயுள்கூடப் பிடிக்கலாம். அதனால்தான் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்கூடத் தங்களை வெளிப்படுத்திக்கொள்வது நடக்கிறது. இதைக் கண்டறியும் நிகழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தன் பாலினத்தையோ, பாலின ஈர்ப்பையோ மாற்றிக்கொள்வதும் நடக்கலாம். நாம் இன்னும் திரு/ திருமதி தாண்டி யோசிப்பதையே வாழ்நாள் சாதனையாகக் கருதிக்கொண்டிருக்கிறோம். உடற்கூறு ரீதியாகத்தான் இருபாலரில் ஒருவரல்ல என்பதை நிரூபித்துவிட்ட திருநருக்கே இன்னும் நாம் வேலை வாய்ப்பில் சமநிலை, அந்தஸ்து அளித்துவிடவில்லை. இதில் பாதியில் மாறும் பாலினமா? பாதியில் உணரும் பாலின ஈர்ப்பா என்று தலை சுற்றுகிறதல்லவா? கேளுங்கள்.

நீங்கள் பெரும்பான்மை பாலினத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். அந்தப் பாலினத்து அடையாளத்தையே மாற்றி, அதாவது ஆணை பெண்ணாகவோ, பெண்ணை ஆணாகவோ மாற்றி உங்களை அழைத்தால் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்? காலமெல்லாம் இப்படி மாற்றி அடையாளப்படுத்தப்படுவது பெரும்பான்மை அல்லாத பாலினத்தவருக்கு எவ்வளவு மனச்சோர்வை அளிக்கும்? வெளிப்புற அடையாளமான பெயர் மாற்றிக் கூப்பிடுவதைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், அடுத்தவரின் அடிப்படையான உள்ளார்ந்த அடையாளத்தை அளிக்க மறுப்பது எவ்வளவு குரூரமானது? அழைத்தல் மற்றும் அடைமொழி (title) இவற்றுக்காகத்தான் பாலினம் அறிந்துகொள்வதே. பாலின ஈர்ப்பு பற்றி, உங்களுக்கு அந்த நபர் மேல் பாலின ஈர்ப்பு இருந்தாலன்றி,அவ்வித ஈர்ப்பை வெளிப்படுத்தி உறவுக்கான அவரது சம்மதம் பெறவேண்டி இருந்தாலன்றி அதைத் தெரிந்துகொள்வது உங்கள் வேலையே அல்ல.

அப்படியென்றால் ஒருவர் என்ன பாலினம் என்று எப்படிக் கேட்பது?

உங்கள் பெயர் என்ன என்று எப்படிக் கேட்போமோ அப்படித்தான்! ஆமாம். அப்படியேதான்! எப்படிக் கேட்பது என்று நீங்கள் சங்கோஜப்பட, எப்படிச் சொல்வது என்று அவர்கள் சங்கோஜப்பட, அட, இதென்ன 80களின் காதல் கதையா? அரசும் தனியார் நிறுவனங்களும்தாம் இதற்கு வழி செய்யவேண்டும்.

ஒருவர் தான் எவ்வாறு அழைக்கப்பட விரும்புகிறார் என்று கேட்பதை சாதாரண விஷயமாகப் பார்க்க வேண்டும். ஏற்கெனவே பன்னாட்டு நிறுவனங்கள் இந்த வேலையை ஆரம்பித்துவிட்டன. நிறுவனத்தில் இருப்பவர்களின் பெயர் பட்டியலோடு அவரின் அடைமொழி, என்னவென்று அழைக்கப்பட விரும்புகிறார் என்பதையும் கேட்க ஆரம்பித்துவிட்டன. Mx, M, Pr, Misc, Msr, Mre போன்ற அடைமொழிகளுடன் மேற்கத்திய நாடுகள் வலம்வர ஆரம்பித்தாகிவிட்டது. மேற்கத்திய கலாச்சாரம் வேண்டாமெனில், இந்தியர்கள் Tr/Tmt தவிர Tx போன்ற ஒன்றை கண்டுபிடிக்கவேண்டும், இந்தியர்கள் தாங்கள் பெரிதும் விரும்பும் சுயசார்பு பயன்பாட்டிற்கு.

ஒருவர் தனது பெயருடனோ தான் வழக்கமாக அலுவலக மெயிலில் இடும் வழக்கமான கையெழுத்துப் பகுதியிலோ, தன்னை எவ்வாறு குறிப்படப்படவேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறார். உதாரணமாக, பெண்ணாக அடையாளப்படுத்தப்படவேண்டுமென விரும்பினால் Sincerely, அவரது பெயர் She/Her ஆணாக அடையாளப்படுத்தப்படவேண்டுமென விரும்பினால்

Sincerely, அவரது பெயர் He/Him, இருநிலையிலும் அடையாளப்படுத்தப்பட வேண்டாமென விரும்பினால் என்ன செய்வது? ஆங்கிலத்தில் Third person Singularஇல் மீதம் இருப்பது It என்கிற அஃறிணைதான். மொழியின் போதாமைக்கு அஃறிணையாக முடியுமா? காலங்காலமாக ஆறாத ரத்தம் வடியும் புண் அல்லவா அது?

மிச்சம் இருப்பது Third Person Plural இல் They/ Them என்கிற பதம். ஆங்கில மொழியின் போதாமையை மீறி They என்கிற பதத்தை இப்போது Third person Singular இல் பயன்படுத்த தொடங்கியுள்ளார்கள் இந்த இருநிலை சாராத பாலினத்தார்.

கீழ்க்கண்டவாறு அதைக் காணலாம்.

Sincerely,

அவரது பெயர்

They/Them

ஆனால் தமிழில் இந்தப் போதாமை இல்லை. படர்க்கையில் உயர்திணையாக அவர்/அவருக்கு என்ற பதம் பயன்படுத்தப்படலாம். இவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் ஒருவரது பாலினம், அவர் எவ்வாறு அடையாளப்படுத்தப்பட விரும்புகிறார் என்பது தெரியவரும்.

நமது சமூகத்தில் பெண்களை உற்றுப் பார்ப்பதையும் பெண்வடிவில் உள்ள திருநங்கைகளை உற்றுப் பார்ப்பதையும் அசாத்தியமாகச் செய்பவர்கள், திருநம்பிகளை மட்டும் எளிதாக அடையாளம் கண்டுகொள்வதில்லை எனக் கவனித்திருக்கிறீர்களா?

ஏனெனில், பெண்களையும் திருநங்கைகளையும் உற்றுப் பார்ப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் மன நெருக்கடியை அலட்சியப்படுத்தும் இச்சமூகம், ஆண் வடிவில் இருப்பது திருநம்பி எனச் சந்தேகத்திற்கு இடமின்றி தெரியும்வரை, நமுட்டுச்சிரிப்பு சிரித்தால்கூட அதனால் ஓர் ஆண் மனநெருக்கடிக்கு ஆளாகிவிடுவானோ என்று பரிதவித்து பாவப்படுகிறது. தன்னையும் அறியாமல்கூட ஆணுக்கு அத்தகைய நெருக்கடி அளிப்பதில்லை. அதனால்தான் திருநம்பிகள் பெரும்பாலும் உற்று நோக்கப்பட்டு ஆராயப்படுவதில்லை, அவர்கள் திருநம்பிகள் என்று உறுதியாகத் தெரியும்வரை. தெரிந்தபின் அதே கதைதான்.

சண்டிகர் கரெ ஆஷிகி

ஹிந்தியில் சண்டிகர் கரெ ஆஷிகி என்கிற படம் வந்தது. நாயகன், தன் காதல் இணையராகத் தேர்ந்தெடுத்தது பெண் என்று நினைத்த ஒரு திருநங்கையை. அதன்பின் நான் உன்னைத்தான் காதலிக்கிறேன். நீ யாராக இருந்தாலும் காதலிப்பேன் என்ற முடிவு எடுப்பார். அது நன்று, அதுவும் நடக்கலாம் எனினும், வெளிப்படையாகப் பாலினம் தெரியும் சூழலில்தான் ஆரம்பத்திலேயே சுதந்திரமாக ஒருவர் முடிவு எடுக்க இயலும். அது பல நடைமுறை சிக்கல்களை மனச்சோர்வுகளைத் தவிர்க்கும். தான் இன்னார் என்பது மரியாதைக்குரிய பொதுத்தகவல் என்பதே பெரிய பலம்.

பாலியல் ஈர்ப்பிலிருந்து ஏன் இப்போது பாலின அடையாளத்திற்கு வந்தோமெனில், தான் ஆண் என்ற பாலின அடையாளத்தை, இதர பாலினங்களை விளிம்புநிலைக்குத் தள்ளிவிடுவதற்கான லைசென்ஸ் என்று ஆண்களில் ஒரு சாரார் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளத்தான். இதுதான் நச்சாண்மை என்பது (Toxic masculinity). பாலியல் குற்றங்களுக்கான ஆரம்பப்புள்ளி இதில்தான் உள்ளது. பாலின அடையாளங்களையும் பாலின ஈர்ப்பையும் ஆண்களிடமிருந்தும், ஆண்கள் அதிகாரம் செலுத்தும் சமூகத்திடமிருந்தும் மறைப்பதன் மூலம் ஆணை வேட்டைக்காரனைப்போல பாவிக்க விட்டுவிடுகிறோம்.

இதர பாலினங்களை அவமரியாதை செய்யும் போக்கு கொண்ட நச்சாண்மை கொண்ட ஆண்கள் ஒரு பக்கத்திலும், அவர்களால் ஒடுக்கப்படும் பெண்கள், குழந்தைகள், இதர பாலின விளிம்புநிலை மக்கள், இந்த மாதிரி நச்சாண்மை ஆண்களால் பாதிக்கப்படும் சக ஆண்கள் என்று இன்னொரு பக்கமும் நின்றால் இந்த நச்சாண்மை நிறைந்த ஆண்கள்தாம் சிறுபான்மையினர். இதை உணர்ந்தாலே பாலின சமத்துவத்திற்கான பாதி வேலை ஆயிற்று.

அலுவலகங்களில் தொடர்ந்த வருடாந்திர வேலைக்கான பயிற்சிகளில் பாலினம் குறித்த விழிப்புணர்வின் மூலம் நிறையவே சாதிக்க முடியும். மீறும் நிகழ்வுகள் பாலியல் குற்றங்கள்தாம். பெண்களுக்கே பாலியல் குற்றங்களில் முழுத்தீர்வு கிடைப்பதில்லை, இதெல்லாம் ஆகிற வேலையா என்று சிலர் சொல்லக் கேட்கிறோம். பெண்களுக்கு முழுநீதி கொடுத்து முடிக்கும் வரையெல்லாம் காத்திருக்க முடியாது. பாலின விளிம்புநிலையாளர்களையும் உடனடியாக அதில் சேர்க்க வேண்டும். சமத்துவமும் நீதியும் உடனடியானதும் முழுமையானதுமே ஆகும். அரைகுறை கோரிக்கைகள் எப்போதும் வேலைக்காகாது.

உலகமே இப்படித்தான் எப்போதும் இருந்ததா?

பார்ப்போம்!

படைப்பாளர்:

காளி

காளி. இதே பெயரில் Twitter-ல்  @The_69_Percent  என்று இயங்கி வருகிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் புனைபெயரில் அழைக்கப்படுவதையே விரும்புகிறார். ஆணாதிக்கத்திடம் அதிகாரம் இழந்த பெண்மையைக் குறிக்கவே இந்தப் பெயர். முச்சந்துமன்றம் என்ற பெயரில் உள்ள புத்தக வாசிப்பு குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.