எனக்கு நீதிமன்றங்கள் மிகவும் பிடிக்கும். என்ன சம்பந்தம் இல்லாமல் நீதிமன்றங்களைப் பற்றிப் பேசுகிறேன் என்று நினைக்கிறீர்களா?

இந்திய உச்ச நீதிமன்றங்களுக்குச் சமமாக உயர்நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் இருக்கும். சமீபத்தில் கேரளா உயர் நீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

‘சட்டப்படி கருவைக் கலைக்க கணவனின் சம்மதம் தேவை இல்லை.’ இப்படி ஒரு தீர்ப்பை கேரளா உயர் நீதிமன்றம் கொடுக்கக் காரணம் என்ன?

கேரளாவைச் சேர்ந்த 21 வயது பெண் காதலித்து, குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணை வரதட்சணை கேட்டு காதல் கணவனும் அவன் அம்மாவும் கொடுமைப்படுத்தி உள்ளனர். மோசமான கட்டத்தில் அந்தப் பெண் கர்ப்பம் தரித்துள்ளார்.

‘ஒரு குழந்தை பொறந்தால் எல்லாம் சரியாயிரும்’ என்ற பழமொழி எல்லாம் இங்கு எடுபடவில்லை. உன் வயிற்றில் இருக்கும் குழந்தை என்னுடையது அல்ல. அதனால் இதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல என்று கணவன் உதறித் தள்ள, அம்மாவின் வீட்டுக்குத் திரும்பிவிட்டார் அந்தப் பெண்.

உணர்வுப்பூர்வமான ஆதரவோ பொருளாதார வசதியோ இந்தப் பெண்ணுக்கு இல்லை. படிப்பை முடிக்க இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன. கர்ப்பத்துடன் வேலையும் செய்ய முடியாது. நீதிமன்றத்துக்குச் சென்றார் அந்தப் பெண்.

‘கருக்கலைப்புக்குக் கணவனின் அனுமதி தேவை இல்லை. குழந்தைப் பேறு பெண்ணின் உடல்நிலை, மனநிலை இரண்டிலும் அழுத்தம் கொடுக்கும் செயல். திருமணம் போன்று வாழ்க்கையை மாற்றிப் போடும் செயல். திருமண உறவு சரியில்லாத சூழலில் கருக்கலைப்புக்குக் கணவனின் அனுமதி தேவை இல்லை’ என்று தீர்ப்பு கொடுத்திருக்கிறது.

பேறுகாலம் என்ற அந்தப் பத்து மாதங்கள் பெண்களுக்கு வாழ்க்கையை மாற்றும் அனுபவம். உடல் ரீதியாக அனைத்தும் மாறும். சிலருக்குப் பார்வைக் குறைபாடுகூட ஏற்படுமாம். இந்தியாவில் குழந்தை உண்டாகிவிட்டால் தாய் என்பவள் முக்கியமல்ல. அவள் விருப்பங்கள் முக்கியமல்ல. அனைத்தும் குழந்தையைச் சுற்றித்தான் இருக்கும். ஏன் அந்தக் குழந்தை சம்பந்தப்பட்ட சிறு முடிவைக்கூட அந்தப் பெண் எடுக்க முடியாது. அதிலும் ஆயிரம் கருத்துகளைத் தூக்கிக்கொண்டு வர ஆள்கள் அருகில் இருப்பார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் இந்தத் தீர்ப்பு பெண்களுக்கு முக்கியமானது. பெண்ணின் உடல் சம்பந்தப்பட்ட முடிவை பெண்ணே எடுக்க வேண்டும் என்று உறுதிப்படுத்தும் விதத்தில் இந்தத் தீர்ப்பு இருக்கிறது.

MY BODY. ITS MY RIGHT. NOR MY HUSBAND OR SOCIETY HAVE NO REGARDS IN THIS.

படைப்பாளர்:

மனோஜா. ஆசிரியராக இருக்கிறார். உளவியல் முதுகலை அறிவியல், முதுகலை தமிழ் இலக்கியம் படித்தவர். திருப்பூரில் வசிக்கிறார்.