ஊரெங்கும் பொங்கல் திருவிழா கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. பொன்னியும் சிவாவும் துறுதுறுவென வீட்டில் சுற்றிக்கொண்டிருக்க, அவர்களுடைய அம்மாவும் அப்பாவும் பரபரப்பாக விருந்து தயாரித்துக்கொண்டிருந்தனர்.

“சரி, ஊர்ல சமத்துவ பொங்கல் வைக்கப்போறாங்க. விளையாட்டுப் போட்டிகளும் குழந்தைகளுக்கு வைக்கப்போறாங்களாம். மைக்ல சொல்லிக்கிட்டு இருக்காங்க. சீக்கிரம் ரெண்டு பேரும் கிளம்புங்க செல்லங்களா” என்று வாசலில் பொங்கல் வைப்பதற்காகத் தயாராகிக்கொண்டிருந்தார் அம்மா.

“பொன்னி குளிச்சிட்டு முடியைக் காய வைச்சிட்டுக் கிளம்பறதுக்குள்ள எனக்கு நேரம் ஆகிடும். நான் கிளம்பறேன். அவ பின்னாடி வரட்டும்மா” என்று சிவா சொல்ல, “அவளுக்கு அழகே அவளோட நீளமான முடிதான். குளிச்சிட்டு, காயவைச்சிட்டு வந்துடுவா. இருந்து கூட்டிக்கிட்டுப் போ” என்று அம்மா சொல்ல, அரைமனதோடு காத்திருந்தான் சிவா.

பொன்னிக்கும் அவள் நீண்ட கூந்தலைப் பராமரிப்பதில் தனி ஈடுபாட்டை ஏற்படுத்தியிருந்தனர். பலரும் அவள் முடியைக் கண்டு ஆச்சரியப்படுவர். அவளுக்கோ பெருமிதம் தாளாது. அவள் அம்மாவும் தன் மகளின் நீண்ட கூந்தலை எண்ணி பெருமிதமடைவார்.

அம்மா பொன்னியைக் குளிக்க வைத்து, முடியை உலரவைத்து, பின்னி, பூ வைத்து அலங்காரம் பண்ணுவதை நெடுநேரம் பார்த்த சிவாவுக்கு எரிச்சலாக இருந்தது . “ம்… பாப்பாவைக் கூட்டிக்கிட்டு போ” என்று அம்மா சொன்னதும் கிளம்பினான் சிவா.

“இன்னும் தொடங்கிருக்காது. ரெண்டு பேரும் சீக்கிரம் போங்க” என அம்மா சொல்ல இருவரும் விழா நடக்கும் இடத்திற்குச் சென்றனர்.

“சமத்துவப் பொங்கல் விழா தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொங்கல் வைக்க ஆரம்பிக்கலாம். சாதி, மதம், ஏழை, பணக்காரர் என எந்தப் பாகுபாடில்லாது அனைவரும் சேர்ந்து வைத்து மகிழும் பொங்கலே சமத்துவப் பொங்கல். பொங்கல் தமிழர்களின் அறுவடைத் திருநாள். தமிழ் புது வருடம் பிறப்பதும் கூட இன்றுதான். அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். பொங்கல் வைத்து முடித்ததும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருக்குது. பெரியவங்க, பெண்கள் என அனைவருக்கும் போட்டிகள் இருக்கு. வெற்றி பெற்றவங்களுக்குப் பரிசும் இருக்கு” என விழா ஏற்பாட்டாளர்கள் மூச்சுவிடாமல் குதூகலத்துடன் ஒலிவாங்கியில் கூறிக்கொண்டு இருந்தனர். பொன்னி உன்னிப்பாக அறிவிப்புகளைக் கவனிப்பதைச் சிவா கவனிக்கத் தவறவில்லை.

இருவரும் மகிழ்வோடு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றனர். வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தனர்.

“அம்மா, முடி நீளமா இருக்கறதால விளையாடும்போது சிரமமா இருந்துச்சுமா. வேகமா ஓட முடில. பல போட்டிகளில் பரிசு வாங்க முடியாம போச்சுமா” என்று வருத்தத்தைப் பகிர்ந்தாள் பொன்னி.

“பொண்ணுக்கு முடிதான் அழகு. அதுவும் உனக்கு யாருக்கும் இல்லாத அளவுக்கு நீளமா இருக்கு. அதைப் போய் இப்படிச் சொல்றீயே… அவங்கவங்க முடியே இல்லன்னு வருத்தப்படறாங்க. உனக்கு இயற்கை அளித்த வரம்டா. அப்படில்லாம் பொண்ணு சொல்லக் கூடாதுடா குட்டி. முடியோடவே பரிசு வாங்கப் பழகணும். பொண்ணு நினைச்சா முடியாதது ஒண்ணுமில்ல. அடுத்த முறை பரிசு நிறைய வாங்கலாம். கவலைப்படாதடா செல்லம்” என்றார் அம்மா.

“அண்ணன் என்னைவிட நிறைய பரிசுகள் வாங்கியிருக்கான். எனக்கு இந்த முடியை வைச்சுக்கிட்டு விளையாட சிரமமா இருக்குதுன்னு சொன்னா கேட்க மாட்டிங்கிறீங்க” என்றாள் பொன்னி.

“சரி, வாங்க சோறு சாப்பிடலாம். விளையாடிட்டுப் பசியோட வந்திருப்பீங்க” என்று அம்மா பொன்னியின் மனதை மடைமாற்றம் செய்ய அவளும் சாப்பிடக் கிளம்பிவிட்டாள்.

அதற்குப் பிறகு பொன்னியும் முடியைப் பற்றி எதும் சொல்லவில்லை. வழக்கம்போல பள்ளி செல்வதும் வருவதுமாக இருந்தாள்.

ஒருநாள் எட்டாம் வகுப்பில் அவளது உடற்கல்வி ஆசிரியர் அழைத்து, “நீ கபடி நல்லா விளையாடற. பயிற்சியெடுத்தா மாவட்ட, மாநிலம்னு போட்டிகள்ல கலந்துகிட்டு வெற்றி பெறுவ. பயிற்சி எடு கபடி வசப்படட்டும்” எனச் சொன்னதும் கால்கள் வானத்தைத் தொட்ட உணர்வு. அதை அப்படியே அம்மாவிடம் சொல்லிப் பூரித்தாள்.

“காலையும் மாலையும் பயிற்சி எடுக்கணும்மா. ஆசிரியர் சொல்ற உணவு முறைகளைப் பின்பற்றணும். நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்க்கச் சொல்லியிருக்கார்” என்று பட்டியலிட்டாள் பொன்னி.

பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்பா பொன்னி உடல் வலுவிற்காக நிறைய முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளை வாங்கிவந்தார்.

பயிற்சியின் போது தனது நீண்ட முடியைச் சுருட்டிக் கட்டிக்கொண்டே விளையாடுவாள். கபடி பயிற்சி, படிப்பு எனக் கடும்நேர நெருக்கடியில் உழன்றபோதும் நீண்ட முடியைப் பராமரித்தே காலம் நகர்த்தியிருந்தாள் பொன்னி.

அன்று வட்டார அளவிலான போட்டிக்குச் சென்றிருந்தனர். பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் எப்போதும் பொன்னியின் கையே ஓங்கியிருக்கும். பொன்னி இருக்கும் அணி வெற்றி வாகை சூடும் என்பது எழுதப்படாத விதி ஆனது.

முதல்முறையாக அந்த விதியைத் தகர்த்தது வலுவான இன்னொரு பள்ளி அணி. தன் பள்ளி வெற்றி பெறக் கடுமையாகப் போராடினாள் பொன்னி. இறுதியில் ஓர் ஆட்டத்தின் போது தனது முடியை இழுத்து எதிர் அணி பொன்னியை அவுட்டாக்கி இருந்தது. தோல்வியே கண்டிராத பொன்னிக்கு, முடியால் தோற்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்த கட்டப் பயிற்சிகளைத் தீவிரமாகத் தொடங்கினாள்.

“இன்று மாநில அளவில் வென்ற கபடி வீரர் லோகேஸ்வரி வந்து, உங்களுக்குப் பயிற்சி அளிக்கப் போறாங்க. அவங்க என்னோட முன்னாள் மாணவர்தான். அனைவரும் பயிற்சிக்கு வந்துடுங்க” என்று ஆசிரியர் சொன்னதும் குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

லோகேஸ்வரி மாநில கபடி அணியில் பங்குபெற்று தொடர்ந்து வெற்றிகளை ஈட்டிவருபவர். அரைக்கால் சட்டை, டீ சர்ட் அணிந்து குட்டை முடியுடன் வந்திருந்தார்.

கபடி விளையாட்டின் நுணுக்கங்களைக் குழந்தைகளுடன் விளையாடி, கற்றுக் கொடுத்தது நம்பிக்கையை அளித்திருந்தது.

“நீங்க ரொம்ப அருமையா ஆடறிங்க! உங்க ஆட்டத்துல சின்ன தயக்கம்கூட இல்லாம எதிர் ஆட்டக்காரர்களை அலாக்காகப் பிடித்துவிடறீங்க. நீங்களும் எதிர் ஆட்டக்காரர்களிடம் சிக்காம நழுவிடறீங்க. நீங்க எங்களுக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். வட்டார அளவில நடந்த போட்டில நாங்க தோத்துட்டோம். இறுதி ஆட்டத்துல என்னோட முடி சிக்கி நான் அவுட் ஆகிட்டேன். அப்படியே படிப்படியா எங்க அணி அவுட் ஆகி தோத்துட்டோம். நீங்க இப்படிக் குட்டையா முடி வெட்டியிருக்கீங்களே, உங்க வீட்ல எப்படி விட்டாங்க?” என்றாள் பொன்னி.

“நானும் ஒரு சாதாரண, விளையாட்டுப் பற்றியெல்லாம் அறிமுகம் இல்லாத குடும்பத்தில் பிறந்தவதான். எனக்கு முடியைக் குட்டையா வெட்டிக்கிட்டா பல விஷயங்களில் இருந்து பெண்கள் விடுபடலாம்ன்னு தோணுச்சு. ஒரு நாள் திடீர்ன்னு முடியைக் குட்டையா வெட்டிக்கிட்டு எங்க அம்மா முன்னாடி போய் நின்னேன். அவ்ளோதான், அன்னிக்கு என்னை அவங்க பேசினது ஒருபுறம்னா என் சொந்தக்காரங்க என்னென்னவோ பேச என்னைச் சமூக ஒதுக்கலுக்கே கொண்டு போய்ட்டாங்க தெரியுமா? அவங்க சொன்னதெல்லாம் கேட்டு என் நெஞ்சே வெடிச்சிருச்சு பொன்னி. மாற்றம் எளிதா வந்திடறதில்லதான்” என்று சொன்ன லோகேஸ்வரியைப் பார்த்து பொன்னி, “முடியைக் குட்டையா வெட்றதுல இவ்ளோ சிக்கல் இருக்கா? ஆண்களெல்லாம் குட்டையாத்தான முடி வைச்சிக்கிறாங்க. பொண்ணுன்னா முடியை அடையாளமா இந்தச் சமூகம் விதி ஒண்ணை வைச்சிருக்கு. ஆண், பெண் வேறுபாடு எப்படிக் கண்டுபிடிக்கறதுன்னும் சொல்றாங்க. முடியைக் குட்டையா வெட்டிக்கிட்டா பொண்ணே இல்ல ஆண் மாதிரி ஆயிட்டன்னு சொல்லிடறாங்க. நீங்க வெட்டியிருக்கிற கட்க்கு பேரே பாய்கட்தானே! அப்புறம் உங்களைச் சும்மாவா விட்டுட்டாங்க உங்களைப் பெத்தவங்களும் சொந்தக்காரர்களும்” என்றாள் பொன்னி.

“நான் என்னோட விளையாட்டுக்கும் எனக்கும் விருப்பப்பட்டபடி, செளகரியமாக முடியை வெட்டிக்கிட்டேன். ஆனா, நான் சந்திச்ச பிரச்னைகள் சொல்லி மாளாது” என்று பெருமூச்சுவிட்டார் லோகேஸ்வரி.

(தொடரும்)

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.