தலைநகரில் இனக்கலவரங்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த அதே நேரத்தில் மலையகம் உள்பட நாட்டின் அத்தனை இடங்களிலும் தமிழர்கள் விரட்டி விரட்டி கொல்லப்பட்டனர். அந்த ஆவேசம் சிறைச்சாலைகளிலும் எதிரொலித்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையின் அந்த அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் ரகசியமாகத் திட்டம் ஒன்று தீட்டப்பட்டது. இலங்கையின் மிகப்பெரிய சிறைச்சாலையான கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றிய ரெஜஸ் என்ற துணைத் தலைமை சிறை அதிகாரி, சிறை அதிகாரி சமிதரத்ன, காவலதிகாரி பாலித ஆகிய மூன்று சிறை அதிகாரிகள்தாம் அந்தத் திட்டத்திற்கான சூத்திரதாரிகள். அந்தச் சிறையின் A3 பிரிவிலிருந்தவர்கள் பயங்கரக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சிங்களக் கைதிகள். அன்று அவர்களுக்கு மதுவும் சிறப்பு உணவும் சிறை நிர்வாகத்தின் சார்பாகக் கொடுக்கப்பட்டன. கொண்டாட்ட மனநிலையிலிருந்த அவர்களின் இனவெறிக்குத் தீனி போடும் வகையில், தமிழ்க் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கதவுகள் திறந்து விடப்பட்டன.

புரட்சிகர டெலோ அமைப்பைச் சேர்ந்த குட்டிமணி, தங்கதுரை போன்றவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பி3 என்ற சிறைப் பிரிவிலிருந்து தொடங்கியது அவர்களது வெறியாட்டம். “அந்தப் பகுதியிலிருந்து வந்த மரண ஓலங்கள் சகிக்க முடியாததாக இருந்தது. அந்தக் குரல்களைத் தவிர வேறொன்றையும் எங்களால் பார்க்க முடியவில்லை” என்று பதிவுசெய்திருக்கின்றனர் பிற பகுதியிலிருந்த கைதிகள். கொல்லப்பட்ட உடல்களையும் அரைகுறை ஊசலாடிக்கொண்டிருந்த உடல்களையும் இழுத்துவந்து அருகிலிருந்த மண்டபத்தில் புத்தர் சிலையடியில் குவிப்பதை எச் மண்டபத்தின் இரண்டாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக ஜெயக்கொடி என்ற சிறைக்கைதி பார்த்துக்கொண்டிருந்தார். குட்டிமணியின் உடல் இழுத்து வரப்பட்டபோது அவரின் உடலில் அசைவுகள் இருந்ததாகவும் தெரிவித்தார். “தமிழ்க் கைதிகளின் தலைகள் பிளக்கப்பட்டன, கண்கள் தோண்டப்பட்டன, இதயங்கள் கிழிக்கப்பட்டன. குடல்கள் உருவப்பட்டன, குரல்வளைகள் அறுக்கப்பட்டன” என்று தான் பார்த்த கொடுமைகளை அவர் ஒரு நூலாகவே வெளியிட்டுள்ளார். குட்டிமணியின் கண்கள்கூடத் தப்பிவிடக் கூடாது என்பதில் வெறியாக இருந்திருக்கின்றனர். ஏனெனில் குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு இலங்கை அரசால் மரண தண்டனை கிடைத்த வேளையில், “நான் தமிழீழத்திலேயே தூக்கிலிடப்பட வேண்டும், எனது உடல் உறுப்புகள் தேவைப்படுவோருக்கு வழங்கப்பட வேண்டும், எனது உடல் யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்துக்கு வழங்கப்பட வேண்டும், எனது மரண தண்டனையை நிறைவேற்றும் முன் எனது கண்களைப் பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள், நான் காண இயலாத தமிழ் ஈழத்தை எனது கண்களாவது காணட்டும்” என்று நீதிமன்றத்தில் கூறியிருந்தவர் குட்டிமணி. அவர் விரும்பியதை எல்லாம் நிராசையாக்கும் வண்ணம், அவர் உடலைச் சிலையடியில் போட்ட பின்னர், “அவர் கண்கள் இரண்டையும் கூரிய ஆயுதம் கொண்டு தோண்டியெடுத்தனர், ஒருவன் அக்கண்களை காலால் மிதித்தான், இன்னொரு வெறியன் குட்டிமணியின் ஆண்குறியை வெட்டி வீசினான், பிற கைதிகள் அவரின் உடலைக் குத்திக் கிழித்தனர். பிறகு அக்கைதிகள் குட்டிமணியின் ரத்தத்தைத் தமது உடலில் பூசிக் கும்மாளமடித்தனர். இதே மரியாதைதான் தங்கதுரை, ஜெகன் உடல்களுக்கும் நடந்தது. ஏனைய தமிழ் இளைஞர்களின் தலைகளை, கைகளை, கால்களை என உறுப்புறுப்புகளாக வெட்டி புத்தர் சிலையடியில் குவித்தனர்” என்று தனது நூலில் கூறுகிறார் ஜெயக்கொடி. இவ்வாறாக, வெலிக்கடை சிறையின் பி3 பிரிவிலும், டி3 பிரிவிலும் தங்கதுரை, ஜெகன், குட்டிமணியோடு சேர்த்துப் படுகொலை செய்யப்பட்ட 35 தமிழ்க் கைதிகளின் உடல்களைச் சிறைச்சாலை முற்றத்திலிருந்த புத்தர் சிலைக்கு முன்னால் போட்டு ஆனந்தக் கூத்தாடினர். கறுப்பு ஜூலை வன்முறைகளின் உச்சக்கட்ட நிகழ்வுகள் இவை.

தங்கதுரை, குட்டிமணி

இப்படுகொலைகள் நடைபெற்ற தினத்துக்கு முதல் நாள் பௌத்தர்களின் புனித நாளான போயா தினம். போயா தினத்தில் உபவாசம் இருந்து “சில்” அனுபவித்தவர்கள் தான் மறுநாள் இக்கொலையில் ஈடுபட்டனர். ‘சண்டே சில், மண்டே கில்’ என்று வர்ணித்துக்கொண்டனர். இக்கொலைகளை நிகழ்த்திய கைதிகளுக்கு அரசின் ஆசிர்வாதத்துடன், அவர்கள் விரும்பிய அத்தனையும் கிடைத்தன. சிறைச்சாலை வாகனத்தில் அந்த உடல்கள் நிர்வாணமாகப் போடப்பட்டு எடுத்துச் சென்றபோது, உடல்களின் மத்தியில் சிறுசிறு முனகல்கள் கேட்க, கம்பியால் குத்தி அந்த ஒலிகளை நிரந்தரமாக நிறுத்திய பிறகே அமைதியானார்கள். மீதமிருந்த தமிழ்க் கைதிகளையும் கொன்று ஒழிக்க அந்த இனவெறிக்கூட்டம் இரும்புக் கதவுகளை உடைத்தபோது, அங்கிருந்த சில உயர் அதிகாரிகள், “இன்று இவ்வளவு போதும், சென்று ஓய்வெடுங்கள்” என்று அறிவுரை கூறினர். மறுநாள் 26.07.83 அன்று விசாரணை நடத்த வந்த நீதிபதியிடம், சி3 பிரிவில் இருந்த தமிழ் கைதிகள் தங்களை வேறு சிறைச்சாலைக்கு மாற்றிவிடுமாறு கோரிக்கை விடுத்தபோது, இனி இது போல் நடக்காது என்று உறுதிகூறி உயர் அதிகாரிகளுடன் தேநீர் விருந்து முடித்து மகிழ்வுடன் புறப்பட்டுச் சென்றார் அந்த நீதிபதி.

ஆனால், ஒரு நாள் கழித்து மீண்டும் ஜூலை 27ஆம் திகதி பிற்பகல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட நேரத்தை கொலைவெறித் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுத்தனர். யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்த சிங்களச் சிறை அதிகாரிகளும் கைதிகளும் தமிழ்க் கைதிகளினால் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற வதந்தியைச் சிறை அதிகாரிகளே பரப்பினர். விளைவாக, அடுத்த கட்ட கொலைகள் சிறப்பாக நடந்தேறின. மீண்டும் அதே காட்சிகள்… அதே ரத்த ஆறு… தாக்குதல் தொடங்கி 45 நிமிடங்களுக்குள் டாக்டர் ராஜூசுந்தரம் உட்பட 18 பேர் கொல்லப்பட்டு மொத்த எண்ணிக்கை 53 ஆக உயர்த்தப்பட்டது. இறுதியில் ராணுவம் கைதிகளுடன் மோதி கண்ணீர்புகை வீசி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததால், டக்ளஸ் தேவானந்தா உள்பட 19 தமிழ் கைதிகள் அதிபயங்கர காயங்களுடனும் அனுபவங்களுடனும் தப்பினர்.

இன்றுவரை அந்தக் கொலைக் கைதிகளுக்கு எதிராகவோ, அதனை செய்யத் தூண்டிய சிறைப் பாதுகாவலர்கள், அதிகாரிகளுக்கு எதிராகவோ எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. கொல்லப்பட்ட ஈழப் போராளிகளின் உடல்களை அவர்களது உறவினர்கள் யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் விருப்பத்திற்கு மாறாக சிங்கள மண்ணில் அந்த உடல்கள் சங்கமமாயின.

அந்த ஜூலை மாதத்தில் எரிக்கப்பட்டும், இடம்பெயர வைத்தும், வெட்டிக் கொலை செய்தும், கடத்தி காணாமல் ஆக்கப்பட்டும், அகதிகளாக்கப்பட்டும் தமிழர்களின் தளங்கள் இலங்கை அரசினால் இல்லாமலாக்கப்பட்டன. வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு தமிழர்களின் கடைகள், வீடுகள் தொழிற்சாலைகளின் முகவரியைத் தேடித் தேடி வன்முறைக் கும்பல் அலைந்ததாகக் கூறுகிறார் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர். இருபத்தைந்து அகதிகள் முகாம்கள் திறக்கப்பட்டன. கொழும்பு தீயணைப்புப் பகுதியின் குறிப்பேட்டின்படி குறைந்தது 1003 இடங்களில் தீயணைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. இக்கலவரத்தைத் தொடர்ந்து கொள்ளையர்களிடமிருந்து வெள்ளவத்தை போலிஸாரால் ஐந்து லட்சம் அமெரிக்க டாலருக்கும் மேற்பட்ட ஏராளமான பணம், ஆபரணங்கள் மீட்கப்பட்டன என்கிறது குறிப்புகள். அப்படியாயின் மீட்கப்படாத தமிழர் சொத்துகளின் மதிப்பு எவ்வளவாக இருக்கும்?

தமிழர்களின் வீடுகள் சூறையாடப்படுகின்றன, பாதிக்கப்பட்டவர்கள் அலறுகிறார்கள், கொலைகளும் கொள்ளைகளுமாக நாடு பற்றி எரிகிறது, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை வெளிநாட்டு ஊடகங்கள் உலகிற்கு அறிவித்துக்கொண்டே இருந்தன. அதிர்ச்சியுற்று கண்டனம் தெரிவித்த நாடுகளுக்கு, “எங்கள் வேலை எங்களுக்குத் தெரியும்” என ஜனாதிபதி எகத்தாளமாகப் பதில் அளித்தார். “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்றும் அறைகூவல் விடுத்தார்.

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தனது வெளியுறவு அமைச்சர் பி.வி. நரசிம்மராவை கொழும்புவுக்கு விசேட தூதராக அனுப்பிய ஜூலை 28இல் வன்செயல்கள் சற்று தணியத் துவங்கின. இந்தியா அனுப்பிய ‘சிதம்பரம் கப்பல்’ கொழும்பில் தங்கியிருந்த மக்களை ‘அகதிகளாக’ யாழ்ப்பாணம் கூட்டிச் சென்றது. இந்தப் படுகொலைகளை தமிழ்நாட்டின் பத்திரிகைகளும் இந்திய ஒன்றியத்தின் பத்திரிகைகளும் தலைப்புச் செய்திகளாக்கின. தமிழகம் கொந்தளித்தது. இலங்கை அரசுக்கெதிராக பேரணி, ஊர்வலம், ஆர்ப்பாட்டம், ஜெயவர்த்தனே கொடும்பாவி எரிப்பு எனத் தங்கள் தமிழீழ உறவுகள் கொன்றொழிக்கப்பட்டதை எதிர்த்து மக்கள் திரண்டனர். சர்வ தேசமும் கண்டனம் தெரிவித்தது.

ஒரு வாரத்திற்குப் பின்னர் நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜனாதிபதி, “அந்த வன்செயல்கள் நாட்டுப்பிரிவினைக்கு எதிரான சிங்கள மக்களின் இயல்பான கொந்தளிப்பு” என ‘விளக்கமளித்தார்’. ஏன் வன்முறைகளைக் கட்டுப்படுத்த உத்தரவுகளைப் பிறப்பிக்கவில்லை என்று அவரிடம் கேட்டபோது, “கடுமையான புயல் வீசும்போது மரம் சாய்ந்து கொடுக்க வேண்டுமே தவிர, எதிர்த்து நிற்பதில் பயனில்லை” எனக் கூறியதாகப் பல பிரதமர்களுக்கும் ஜனாதிபதிகளுக்கும் ஆலோசகராக இருந்த மூத்த நிர்வாக சேவை அதிகாரி பிரட்மன் வீரக்கோன் தனது சரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

கறுப்பு ஜூலை என்பது தமிழர்களுக்கு மாத்திரமன்றி. சிங்களவர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்திய சம்பவம் என்பதை மறுக்க முடியாது. அதற்குப் பின்னர் சிங்கள மக்களை சர்வதேச சமூகம் தவறான கோணத்தில் பார்க்கத் துவங்கியது. இந்த நாட்டிலே இருவேறு இனங்கள் இணைந்து இனி வாழ முடியாது என்பது உறுதியாயிற்று. லண்டன் பிபிசியின் பதிவேட்டில் பிரான்சிஸ் ஹரிசன் கூறுகையில், “இலங்கையின் கடுமையான உள்நாட்டுப் போருக்கு அஸ்திவாரம் இட்டதே இந்த கறுப்பு ஜூலைதான்” என்று கூறியுள்ளார். அதுவரை உள்நாட்டுப் பிரச்னையாக இருந்த ஈழத்தமிழர் பிரச்னை சர்வதேச பிரச்னையாக மாறியது. பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தரித்த விடுதலைப்போரில் சேர உந்தித் தள்ளியது. அதன்பின்னான 30 ஆண்டுகால யுத்தம் மக்களின் வாழ்வாதாரத்தைப் புரட்டிப்போட்டது. யுத்தகாலத்தில் தொடர்ச்சியாக மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குப் போனார்கள். அவர்களின் சொத்துகள் இல்லாது போனது. இரண்டு பக்கமும் லட்சக்கணக்கானோர் பலியாயினர். இவை அத்தனையும்விட யுத்தத்தின் உளவியல் தாக்கம் அளவிட முடியாததாக இருந்தது. தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாது என்ற மனநிலையில், பெரும்பாலானோர் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கினர். உலகின் பல நாடுகளையும் நோக்கி அகதிகளாகப் படையெடுத்தனர். மேற்கத்திய உலகிற்குக் குறிப்பாக கனடா மற்றும் ஐரோப்பாவிற்கு அதிக அளவில் புலம்பெயர்ந்தனர். அந்த நாடுகளும் தமிழர்களுக்காகத் தங்கள் எல்லைகளைத் திறக்கும் அளவுக்குத் தாராளமாகவும் இருந்தன. இன்று யாழ்ப்பாணத்தைவிட அதிகமான தமிழர்கள் கனடாவில் வாழ்கின்றனர்.

“ஜூலை கலவரத்தை அரசியல் ரீதியில் நிறுத்தியிருந்தால் இன்று இலங்கைக்கு இவ்வளவு பெரிய அழிவு வந்திருக்காது” என்று கொழும்பு மாநகரசபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் பிபிசி தமிழுக்குச் சமீபத்தில் பேட்டி கொடுத்தார். 39 ஆண்டுகளைக் கடந்தும், இரு இனங்களுக்குமிடையே எந்த நல்லிணக்கமும் ஏற்படாமலே போய்விட்டது.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.