‘1983, ஜூலை JULY’ என்று எந்த மொழியில் எழுதினாலும், குருதி கொப்பளிக்கும் கொலைக்காட்சிகள் ஆறாத ரணங்களையும் தீராத வலிகளையும் கிளறிக்கொண்டே இருக்கின்றன தமிழர்களுக்கு. 1983ஆம் ஆண்டின் அந்த ஜூலை மாதம் கண்ணீரையும் இழப்பையும் பரிசாகக் கொடுத்துச் செல்லும் என எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சிங்களப் பேரினவாதத்திற்கும், தமிழ் சிறுபான்மையினருக்குமான ஆயுத மோதல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதி. மாறி மாறி அவ்வப்போது நடக்கும் தாக்குதல்களுக்கு மக்களும் பழகியிருந்தனர்.

அந்தக் கறுப்பு ஜூலை வன்முறைகளுக்குப் பின்னால், ஒரு ஃப்ளாஷ்பேக் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் தெற்கில் வாழ்ந்த தமிழர்கள் பொருளாதார வளத்திலும் சிறப்பான வாழ்வு மரபுகளிலும் மேலாண்மை கொண்டவர்களாக இருந்தனர். மே மாதத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ‘தமிழர்கள் பங்கேற்க வேண்டாம்’ என்று தமிழீழ விடுதலைப்புலிகள் கொடுத்த அழைப்பின் பேரில் தமிழர் பகுதியில் 98 சதவீதமானோர் தேர்தலை முற்று முழுதாகப் புறக்கணித்தனர். விடுதலைப்புலிகளின் தலைமையிலான இந்த அரசியல் மாற்றம் ஜனாதிபதி ஜெயவர்த்தனேயைக் கடும் கோபம் கொள்ளச் செய்தது. அந்தத் தேர்தலுக்குப் பிறகு தமிழர் பகுதியில் வவுனியா, திரிகோணமலை வரைகூடக் கொலைகள் தினம் தினம் வாடிக்கையானது. நீண்ட காலமாகவே ஒரு சில அமைச்சர்கள் கலவரத்துக்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தனர் என்றும், அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு சிங்களப் பகுதியில் தமிழர்கள் வாழும் இடங்களின் விவரங்கள் எடுத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் சொல்லப்படுகிறது. தமிழர்கள் மீதும் அவர்களின் சொத்துகள் மீதும் மிகப்பெரும் வன்செயல்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கு ஒரு வலுவான காரணத்தை எதிர்நோக்கி அரசியல்களம் காத்திருந்தது. அப்படி ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு விரைவிலேயே கிடைத்தது.

நாள்: 1983, ஜூலை 23, சனிக்கிழமை இரவு, 11.30 மணி.

இடம்: யாழ்ப்பாணத்திற்கு அண்மையிலுள்ள திருநெல்வேலி.

விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் சார்ள்ஸ் அன்ரனி ராணுவத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதற்குப் பதிலடி கொடுக்க விடுதலைப்புலிகள் இயக்கம் திட்டமிட்டிருந்தது. திருநெல்வேலியில் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் உள்ள பலாலி வீதியின் தபால்கட்டைச் சந்தியில் ராணுவ ரோந்து வாகனங்கள் மீது விடுதலைப்புலிகள் மறைந்திருந்து நடத்திய நிலக்கண்ணி வெடித்தாக்குதலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட துப்பாக்கிச் சமரிலுமாக மாதகல் ராணுவ முகாமைச் சேர்ந்த 13 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதன்பின் அந்த எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இந்தச் சம்பவமே நாடெங்கும் வன்செயல்களைக் கட்டவிழ்த்து விடப்படுவதற்குச் சாட்டாக மாறியது.

கொல்லப்பட்ட ராணுவத்தினரின் உடல்களை யாழ்ப்பாணத்திலேயே அடக்கம் செய்ய ராணுவம் விரும்பியபோதும், ஜெயவர்த்தனே அவர்களது உடலை கொழும்புவில் சிங்கள மக்கள் மத்தியில் பார்வைக்கு வைத்து அரசியல் அறுவடை செய்ய விரும்பினர். பாலிதீன் பைகளில் இறந்த உடல்களைக் கட்டிவைத்து, இரவு வரை தாமதப்படுத்தி கொழும்புவிலிருந்த சிங்களவர்களிடம் கொதிப்புணர்வைத் தூண்டினார். தென்னிலங்கை ஊடகங்களும் அரசுக்குச் சாதகமாகவே செயல்பட்டன. தமிழர்கள், பௌத்த பிக்கு ஒருவரை உயிருடன் எரித்து விட்டார்கள் என்றும், விடுதலைப்புலிகள் கொழும்புவில் தாக்குதல் நடத்த வந்துவிட்டார்கள் எனவும் வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டன. ராணுவத்தினர் மரணம் இனவெறி தூண்டும் நிகழ்வாகத் திட்டமிட்டு மாற்றப்பட்டது. அந்த இரவிலேயே கலவரம் துவங்கிவிட்டது.

ஜூலை 24. கறுப்பு ஜூலையின் தொடக்க நாளாக மாறியது. கலவரம் தொடங்கியமை தெரியாமல் கிருலப்பனை சந்தியில் ஸ்கூட்டரில் வந்துகொண்டிருந்த தமிழர் ஒருவர் சின்னாபின்னமாக வெட்டிக்கொல்லப்பட்டதே இக்கலவரத்தின் முதல் கொலையாகப் பதிவாகியுள்ளது. சிங்கள இனவாதிகளின் அரக்கத்தனமான செயல்பாடுகள் முதலில் கொழும்புவை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் பின்னர் ஏனைய நகரங்கள், மத்திய மலை நாட்டுப்பகுதிகள் எனப் பரவின. தமிழர்களை ‘எதையும்’ செய்யும் அனுமதியை அரசு அமைதியாக வழங்கியிருந்தது. வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்களைத் தேடித் தேடி தாக்கினர். தமிழர் என்ற அடையாளமே சிங்கள வெறியர்களுக்கு வெறியேற்றிக்கொள்ள போதுமானதாக இருந்தது.

ஆறு நாட்கள் சிங்கள வெறியர்களின் கையில் கொழும்பு நகரமும் தென்னிலங்கையும் இருந்தது. தமிழர்களின் வர்த்தக நிலையங்கள், வாழ்விடங்கள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டன. தமிழர்கள் நிரந்தரமாக வாழ்ந்த கலாச்சார அடையாளங்களைக்கொண்ட இடங்கள் அழிக்கப்பட்டன. குடும்பம் குடும்பமாகத் தமிழர்கள் வெட்டிக்கொல்லப்பட்டனர். பொருளாதார மையங்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன. ஏனெனில் தமிழர்களை ஏதுமற்றவர்களாக்குவதும் அவர்களின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. 3000 பேர் வரை படுகொலை செய்யப்பட்டனர் என தரவுகள் கூறினாலும், உண்மை நிலை அதைவிட அதிகம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமில்லாமல் கொன்று குவித்தனர். ஆண்களை மாறி மாறி கத்தியால் குத்தி அங்கமங்கமாகக் கிழித்தெறிந்தனர். பெண்களின் நகைகளைப் பறித்தனர். கழற்ற முடியாத நகைகளை காதுகளோடும் மூக்குகளோடும் கழுத்துகளோடும் சேர்த்து அறுத்தனர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். பெண்கள் கதறி ஓடினர். பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு ஓடிக் களைத்த பெண்கள், இயலாத சூழலில் குழந்தைகளை அணைத்துக்கொண்டு அருகில் தென்பட்ட கிணறுகளில் குதித்து மாண்டனர். குழந்தைகள் கொதிக்கும் தாரில் அமிழ்த்தப்பட்டார்கள். இதயமே விறைத்து விடுமளவிற்கான பயங்கரங்கள் நடந்தேறின. கோழி, ஆடு, மாடு எனக் கண்ணில் கண்ட அத்தனையும் நாசமாயின. மாரியம்மன் கோயில் கோபுரத்தில் சிங்கக்கொடி பறக்க விடப்பட்டது. ராணுவம் வந்தது, காவல்துறை வந்தது, ஆக்ரோஷமாக இறங்கியது, அடிபட்டு, அறுபட்டுக் கிடந்த தமிழர்களைத் தன்பங்கிற்கு அதுவும் தாக்கியது.

இக்கலவரம் நடப்பதற்கு இரு வாரங்கள் முன்னதாக, ஜூலை 11 அன்று ‘டெய்லி ரெலிகிராவ்’ என்ற பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி ஜெயவர்த்தனே இப்படிக் கூறியிருந்தார். “I am not worried about the opinion of the Jaffina Tamil people now. Now we cannot think of them. Not about their lives or of their opinion about us. The more you put pressure in the north, the happier the Sinhala people will be here… really if I starve the Tamils, Sinhala people will be happy…” (யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை, அவர்களைப் பற்றி எங்களால் இப்போது சிந்திக்க முடியாது. அவர்களின் உயிர்களைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியோ எமக்கு அக்கறையில்லை, வடக்கு மீது நாம் எவ்வளவுக்கு நெருக்குதல்களைக் கொடுக்கிறோமோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். உண்மையில் நான் தமிழர்களைப் பட்டினி போட்டேனென்றால், சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.)

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ‘அத்த’ என்கின்ற நாளிதழில் பணியாற்றிய சந்திரகுப்த அமரசிங்க என்ற சிங்களரால் 24.07.22 அன்று அதிகாலையில் எடுக்கப்பட்ட படம், 83 கறுப்பு ஜூலை கலவரத்தின் குறியீடாக நிற்கிறது. பொரளை சந்தியில், எரித்துக் கொல்லப்படுவதற்குமுன், சிங்களக்காடையர்களின் முன்னால் நிர்வாணமாகக் கூனிக்குறுகி அடிபணிந்து தலையில் கைவைத்து மரணத்தின் முன்னால் ஒடுங்கி நிற்கும் அந்த மனிதன், தான்சார்ந்த இனத்தின் மோசமான நிலையினை உலகிற்கு உணர்த்திவிட்டு எரிந்து போனான். இனக்கலவரம் என்பதைவிட இனச்சுத்தகரிப்பின் கோர முகத்தை வெளிப்படுத்தும் குறியீடாக அந்தப் படம் உலக மக்களின் மனசாட்சியை உலுக்கியது.

இனக்கொலை பற்றி மைக்கல் றொபேர்ட்ஸ் எழுதிய Visual Evidence I: Vitality, Value and Pitful – Borella Junction 24/25 July 1983 என்ற நெஞ்சினை அதிர வைக்கும் கட்டுரை இப்படுகொலைகள் குறித்த உண்மையை உலகிற்குக் கொண்டு சென்றது. சிங்கள வழக்கறிஞரான பாஸில் ஃபெர்னாண்டோவின் Yet Anotherr Incident in July 1983 ( தமிழில் ‘ஜூலை 1983 மேலும் ஒரு சம்பவம்’ – கவிஞர் சேரன்) என்ற கவிதையின் ஒருபகுதி இப்படி விவரிக்கிறது:

காருக்குள் நாலுபேர், பெற்றோர் நான்கு அல்லது ஐந்து வயதில் ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள், ஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ அப்படித்தான் இந்த காரையும் தடுத்து நிறுத்தினார்கள். பிறகு செயலில் இறங்கினர். வழமை போல் பெட்ரோல் ஊற்றுவது, பற்ற வைப்பது போன்ற விடயங்கள் ஆனால், திடீரென யாரோ ஒருவன் காரின் கதவுகளைத் திறந்தான். அழுது அடம் பிடித்து பெற்றோரைவிட்டு விலக மறுத்த இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான். துரிதமாக இயங்கிய இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான். சூழ வர எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு இந்த நெருப்பும் சேர்ந்து கொண்டது. அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். சமாதான விரும்பிகளாக மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர். அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர் கார் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார். சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கெனவே தீ பற்றிவிட்டிருந்தது. குனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார். எங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவைச் செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார். கதவை மூடினார். தனித்துவமான அந்த ஒலியை நான் கேட்டேன். எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது. ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில் மாநகர சபை அதனை அகற்றக்கூடும். ஏனெனில் தலைநகரின் தூய்மையே ஆட்சியாளர்களின் தலையாய் பணி…

வாசிக்கும்போதே எலும்புகளை உறைய வைக்கும் இந்தக் கவிதை கண்ணால் பார்த்த சாட்சியால் எழுதப்பட்டது. இதுபோன்ற உயிருடன் கொளுத்திய சம்பவங்கள் வெகு சாதாரணமாக இடம்பெற்றன என்கிறார் சிங்கள வழக்கறிஞரான பாஸில் ஃபெர்னாண்டோ.

“சிங்களர்கள் தனித்துவமானவர்கள், நாகரீகமற்ற காடையர்களால் சீரழிக்கப்படும் முன் ஒளிமயமான இந்த அழகியத் தீவு ஆரிய சிங்களர்களால் ஒரு சுவர்க்க பூமியாக உருவாக்கப்பட்டிருந்தது” என்றார் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பிதா என்றழைக்கப்பட்ட அநாகாரிக்க தர்மபாலா. திராவிட பழங்குடி இனமான நாகர்களின் தேசத்தில் இடையில் வந்து, பூர்வகுடிகளான தமிழர்களை ஒடுக்க, சிங்களர்களுக்கு வெறியூட்டும் வரலாற்றுத் திரிபுகளை இவர் போன்றவர்களே இலங்கை வரலாற்றில் அவ்வப்போது வடிவமைக்கின்றனர்.

அந்தத் துயரத்தில் பாதிக்கப்பட்டு, செல்வங்களை இழந்து, சொந்தங்களை இழந்து மரத்துப்போன மனங்களோடு வாழ்வைக் கடத்தும் தமிழர்களின் மனங்களின் ஆழ இடுக்குகளில் இன்னும் இறுகிக் கிடக்கிறது ஆறாவடுக்கள். மரவள்ளித் தோட்டத்தில் தன் வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருக்கும் அந்த முதிய பெண்மணி சொல்கிறார், “83 ஆம் ஆண்டு கலவரத்தில் அடிபட்டு யாழ்ப்பாணம் வந்திட்டம், நாங்கள் அப்ப இரும்புக்கடை வச்சிருந்தனாங்கள், இரும்புச் சாமாங்கள் செய்யிற தொழிற்சாலையும் இருந்தது, எங்கட கடையில் வேலை செய்த சிங்கள ஆக்கள்தான் கலவரம் தொடங்கின உடனே கம்பியளோடும், கத்தியளோடும் முதலில் கொள்ளையடிக்க வந்தவையள், 3 நாள் காட்டுக்குள்ளாற மறைஞ்சி இருந்த பின்னால், கப்பலால அகதிபோல யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டோம், கடையில அவ்வள சாமாங்களும் 18 லட்சம் காசும் சொந்தமா வீடும் இருந்தது, அத்தனையும் விட்டுப்போட்டு வந்திட்டம், கலவரத்தால அவரும் செத்துப்போயிட்டார், வசதியாயிருந்த நாங்கள் இத்தன வருசமா 7 பிள்ளையள வைச்சிப் பட்ட கஷ்ரங்கள் கொஞ்சமில்ல” என்ற வார்த்தைகளில் வலியின் மிச்சம் இன்னும் இருக்கிறது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் அமைப்பைச் சார்ந்த தோழி இவாஞ்சலின் மஹேந்திரா உயிர் துடித்த அந்தக் கணங்களைப் பகிர்ந்துகொள்கிறார். “நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஒரு சிங்களர். கலவரம் தொடங்கியதுமே, அவர்களும் பயந்து விட்டனர். எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க விரும்பவில்லை. அவர் மட்டுமல்ல, எவரும் எங்களுக்கு அடைக்கலம் தர விரும்பவில்லை. குழந்தைகளோடு தப்பியோடி புனித மேரி ஆலயத்திற்குள் அடைக்கலமானோம். ஏராளமான மக்கள் எங்களைப்போல் உயிர் பிழைக்க அங்கு தஞ்சமடைந்திருந்தனர். அதன்பின் ரத்மலானா கேம்ப் அழைத்துச் செல்லப்பட்டோம். பாலுக்கும் நீருக்கும்கூட வழியின்றி ஒரே நாளில் மிகக் கடினமாகியது அதுவரை அரசுப் பணியிலிருந்த எங்கள் வாழ்க்கை. ரத்மலானா முகாம், பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டப அகதிகள் முகாம், அருகிலிருந்த காடுகள் என உணவின்றி, உறக்கமின்றி, வாழ்வு பற்றிய எந்த நம்பிக்கையுமின்றி ஆங்காங்கே உயிர்பயத்தோடு பதுங்கியிருந்தோம். கலவரம் முடிந்த நாளில் அரசு எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கானோரை கார்கோ கப்பலில் ஏற்றி வலுக்கட்டாயமாக அகதிகளாய் யாழ்ப்பாணம் அனுப்பியது. உடைமைகளை அப்படியப்படியே விட்டு உயிருக்குப் பயந்து சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக ஓடினோம்… அரசும் அதைத்தான் எதிர்பார்த்தது” என்கிறார் உயிரற்ற குரலில்.

இலங்கை வரலாற்றின் பக்கங்களில் ரணங்களால் நிரப்பப்பட்ட அந்த ஜூலை, இலங்கை இனி எப்போதும், முன்னெப்போதைப்போலவும் இருக்க வழியில்லை என்பதை உணர்த்திச் சென்றது. வலிகள் மிகுந்த அந்த மாதத்தைப் பிரபல பத்திரிக்கையாளர் மேர்வின் டி சில்வா கறுப்பு ஜூலை என்று வர்ணித்தார். ஜூலை 23 இல் இருந்து 27ஆம் திகதி வரை திட்டமிட்டு நடத்தப்பட்ட வெறியாட்டங்கள் சந்திகளிலும் வீடுகளிலும் மட்டுமல்ல, இலங்கையின் மிகப்பெரிய சிறைச்சாலையொன்றிலும் நிகழ்த்தப்பட்டது அறிந்து உலகே உறைந்து போனது. அந்த நாள் 1983 ஜூலை 25.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.