எல்லாருக்குமே வாழ்க்கையில் மிகப் பெரிய கனவு அல்லது ஆசை இருக்கிறது. பெரும்பாலானவர்கள் அவர்களுக்கு வரக்கூடிய தடங்கல்களை, தோல்விகளைச் சந்தித்து சமாளித்து வாழக் கற்றுக்கொள்கின்றனர். ஆனால், ஒருசிலர் இந்தத் தடைகளைக் கடந்து போக முடியாமல் தற்கொலை எண்ணத்திற்கு முயற்சி செய்கின்றனர்.

உலகத்தில் ஒரு வருடத்தில் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்வதாக ஐ.நா. அறிக்கையின் புள்ளிவிபரம் கூறுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் 60 சதவீதம் அளவுக்குத் தற்கொலை செய்யக்கூடிய எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போயிருக்கிறது. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இருபத்தைந்து மடங்கு அதிகமாக யோசித்தால்தான் குறைக்க முடியும் என உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்திய அளவில் தமிழகத்தில் தற்கொலை மரணங்கள் நடப்பது கடந்த 2 ஆண்டுகளில் 10% அதிகரித்துள்ளது. தற்கொலை மரணங்களில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தைப் பிடிப்பது தமிழகம்தான். இந்தியாவில் நடைபெறும் தற்கொலைகளில் 11.5 சதவீத தற்கொலைகள் தமிழ்நாட்டில் நடைபெறுவதாக 2021 NCRB (National Crime Record Bureau) கொடுத்திருக்கிறது.

NCRB மத்திய குற்றப் பதிவேடு ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள கணக்கின்படி ஒரு நாளைக்கு 31 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்த பள்ளி மாணவியர் தொடர் தற்கொலை குறித்து சில விபரங்கள். கோவை மாவட்ட மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். இது கடந்த 2021 டிசம்பரில் நாம் பார்த்தது. இதன் முக்கியக் காரணம் பாலியல் தொல்லை காரணமான ஆசிரியரைப் பற்றிக் கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்தார். இந்தச் சம்பவம் தனியார் பள்ளியில் நிகழ்ந்தது.

ஜனவரி 2022இல் அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா தஞ்சாவூரில் தனியார் பள்ளி விடுதி ஒன்றில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம், படிப்பின் மீதான சுமை , மத மாற்ற முயற்சி எனப் பல விஷயங்கள் கூறப்படுகின்றன.

ஜூலை 21ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார், காரணம் ஆன்லைன் விளையாட்டு.

இந்த ஜூலை மாதத்திலேயே பள்ளி மாணவியர் பலரது மரணம் நம்மை அளவில்லாத கவலைக்குள் அழைத்துச் செல்கிறது .

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் +2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை என்ற செய்தியையும் பார்த்திருப்போம்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள மேச்சேரி பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதியின் மரணம் தற்கொலையா, கொலையா என்ற விவாதம் இன்னும் முடியவில்லை. ஆனாலும் நீதித்துறை தற்கொலை என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

கடலூர் மாவட்டக் கல்லூரி மாணவி குளிக்கும் போது வீடியோ எடுத்து மிரட்டுவதாகக் கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டது மார்ச் 2022 செய்தி.

கோவையைச் சேர்ந்த மாணவி ஸ்வேதா நீட் பயிற்சிக்காக  கோவில்பட்டி தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் போது தற்கொலை செய்து கொண்டது ஏப்ரல் 2022.

ஜூலை 16ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் மாணவி ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு பயத்தினால்தான் தற்கொலை செய்துகொள்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்தது செய்தி.

ஒரே மாதத்தில் இத்தனைத் தற்கொலைகள்… நீட் தேர்வின் அழுத்தம் ஐந்து வருடங்கள் முன் அனிதா மரணம் முதல் நேற்று திருவள்ளூர் மாவட்ட லட்சனா ஸ்வேதா வரை தற்கொலை வரலாறுகளாக நீளுகிறது.

பல்வேறு நிலைகளில் தற்கொலைக்கான காரணங்கள் இருந்தாலும் படிக்கும் மாணவர்களின் குறிப்பாகப் பெண் குழந்தைகளின் தற்கொலைகள் என்பது நம்மை அச்சம் கொள்ள வைக்கிறது இந்தச் சமூகத்தின் மீது.

இந்த நொடிப் பிரச்னையினால் உடனே தற்கொலை என்று எடுத்துக்கொள்வதா அல்லது தொடர்ந்து அவர்களுக்குள் ஏற்படும் மன அழுத்தங்களால் தற்கொலை எண்ணம் வருகிறது என எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை.

பெண் குழந்தைகள் தேர்வைச் சந்திக்க பயம், தேர்வு எழுதினாலும் மதிப்பெண்கள் குறைந்துவிடும் என்ற பயம், ஆன்லைன் விளையாட்டு, உடல் நோய் என்று பல காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஆனால், எல்லாக் காரணங்களை விடவும் மிக முக்கியமாக அவர்கள் பாதிக்கப்படுவது பாலியல் சுரண்டல்களால் ஏற்படும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. நம் சமூகமும் நிரூபிக்கிறது.

உலகின் எங்கோ ஒரு மூலையில் 40 நொடிக்கு ஒரு தற்கொலையும் இந்தியாவில் பத்து நிமிடங்களுக்கு ஒரு தற்கொலையும் நடக்கின்றன. 15 -19 வயதிற்கு இடைப்பட்டவர்களின் இறப்புகளில் தற்கொலை நான்காவது காரணமாக இருக்கிறது என்கிறார் உளவியல் ஆலோசகர் சுனில் குமார். மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, 15 முறையாவது அதற்கான முயற்சிகளை எடுப்பர், ஆனால் அவற்றில் தோல்வியுற்றுவிடவே செய்கின்றனர். சமீபக் காலமாகத்தான் 2018 இல் அரசு தற்கொலைகளுக்கு முயற்சி செய்பவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதை நிறுத்தியது (Decriminalize) என்கிறார். இதை ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும். ஒரு தற்கொலையை உளவியல் ரீதியாக, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக எனப் பல கோணங்களில் பார்க்க வேண்டும். சமூகப் பார்வையும் ஒரு தற்கொலையின் மீது இருக்க வேண்டும் .

எல்லாத் தற்கொலைகளையும் மன நோய் என்ற ஒற்றைக் காரணத்திற்குள் அடக்கி விடக் கூடாது. தேர்வு நேரத்திலோ தேர்ச்சி முடிவுகள் வரும் சமயத்திலோ ஏற்படும் தற்கொலைகளை மன நோய் என்பதற்குள் அடக்கிவிடக் கூடாது. கூட்டுக் கலவைப் பிரச்னைகளால் உருவாவதுதான் தற்கொலை. தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவோர்களிடம் நடத்தை ரீதியான மாற்றங்களும் உருவாகும் என்பதைக் கவனிக்க வேண்டும்.

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை பாதுகாப்பு என்பது சமூகத்தில் இல்லை. வீடுகளிலும் கிடைப்பதில்லை பள்ளி-கல்லூரி என எங்குமே பாதுகாப்பு கிடைப்பதில்லை. இந்த நிலை மாறவேண்டும். தற்கொலை முயற்சி குழந்தைகளிடம் வருவதைக் கண்டறிய, களைய உரையாடல்களே அவசியம். குழந்தைகளிடம் குறிப்பாகப் பெண் குழந்தைகளிடம் பாலியல் ரீதியான பிரச்னைகளை உருவாக்கக்கூடிய நபர்களைக் குறித்து வெளியில் சொல்வதற்கான தைரியத்தை வரவழைக்கக்கூடிய உரையாடல்கள் பள்ளிகளில் அவசியம்.

வீடுகளில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேச வேண்டும். அவர்களுக்கான பிரச்னைகளை அன்றாடம் காதுகொடுத்து கேட்கவேண்டும்.

விடுதி அமைப்புகள் பள்ளிகளில் இருக்கக் கூடாது, அருகமைப் பள்ளிகள் இருக்கும் பொழுது இது போன்ற தற்கொலை முயற்சிகள் ஏற்படாது. தேர்வுகளின் மீதான அழுத்தமும் பாடச் சுமையைக் குறைக்க வேண்டும். குழந்தைகள் விரும்பும் கல்வி மகிழ்ச்சியான கற்றலைக் கொடுப்பதற்கு அரசும் கல்வி முறையும் தயாராக இருக்க வேண்டும்.

ஆசிரியர் பெற்றோர் மாணவர் என்ற மூன்று தரப்பிலும் சரியான உரையாடல்கள் தொடர்ந்து நிகழும்போது பெண் குழந்தைகளுக்கான பிரச்னைகள் பெரும்பாலும் தவிர்க்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

பள்ளிகளும் சக நண்பர்களும் மற்ற ஆசிரியர்கள் அனைவரும் கூடுதலாகப் பெண் குழந்தைகளின் மீது கவனம் செலுத்தி, அவர்களுக்கான வழிகாட்டுதல்களைக் கொடுக்க வேண்டும்.

பள்ளி நடைமுறைகள் குழந்தைகளுடைய போக்கு ஆகியவற்றை வெளிப்படையாகக் கவனிக்கும் முறையும் அவர்கள் மீது அக்கறை கொண்ட சமூகமும் இங்கு தேவை. சிறு குழந்தைகள் என்றாலும் கல்லூரி மாணவர் என்றாலும் பெரிய வயதுடைய பெண்கள் என்றாலும் நம் சமூகத்தில் பாதுகாப்பு என்பதில்லை.

தற்கொலைகளைத் தடுப்பதற்கான முயற்சிகளை அரசும் பொதுநல அமைப்புகளும் தொடர்ந்து எடுத்துவருகின்றன. தற்போது நீட் தேர்வு எழுதிய மாணவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க 38 மாவட்டங்களிலும் மன நல ஆலோசகர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, நீட் தேர்வு முடிவுகள் வந்த உடன் நேற்று அறிவித்துள்ளது.

பெண்களுக்கான தீர்வு மையம் – 1091.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலோ அதனை மாற்ற, மாநில உதவி மையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044 24 64 0050 எனத் தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்களும் சமீபக் காலமாக அதிகரித்து வருகின்றன.

எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் பள்ளி குழந்தைகளைக் குறிப்பாகப் பெண் குழந்தைகள் தற்கொலைகளைத் தடுப்பதற்காக அரசும் மக்களும் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலப் பெண் குழந்தைகளுக்குச் சமூகத்தின் மீதும் மனிதர்களின் மீதும் நம்பிக்கை வரும். சுதந்திரமாக அவர்களது வாழ்க்கையைத் தொடர வழிகாட்டும்.

(தொடரும்)

படைப்பாளர்:

சு உமாமகேஸ்வரி

உமாமகேஸ்வரி , அரசுப் பள்ளியில் ஆசிரியர் , கல்வி முறை குறித்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். பாடப்புத்தகம், பாடத்திட்டம் ஆகியவற்றைத் தாண்டி குழந்தைகளது மன உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் மதித்து, அதற்கு ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முயற்சி மேற்கொள்பவர்.