வாழ்க்கை என்பது தொடர் போராட்டங்களால் நெய்யப்பட்ட ஓர் ஆடை. அதை உடுப்பதும் கிழித்து எறிவதும் அவரவர் கையில் தான் இருக்கிறது. ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், மூச்சு விடுகிறோம் என்று வாழக் கூடாது. இருக்கும் ஒரே ஒரு வாழ்வை அழகாக வாழ வேண்டும். இந்த உலகத்தில் தீர்க்க முடியாத பிரச்னைகள் என்று எதுவுமே கிடையாது. சாவிகள் இன்றிப் பூட்டுகள் மாத்திரம் தயாரிக்கப்படுவதில்லை.           

இன்றைய சமுதாயத்தில் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. இது மக்களின் கடும் மனச்சிதைவையே வெளிக்காட்டுகிறது. தன் சுய விருப்பத்தின் பேரில் தன் உயிரைத் தானே போக்கிக்கொள்வது தற்கொலை என்று சொல்லப்படுகிறது. இந்த உலகத்திற்கு நாமாக விரும்பி வரவில்லை. அதேபோல் இந்த உயிரையும் நாமாக மாய்த்துக்கொள்ள நமக்கு அனுமதி இல்லை. தோல்விகளையும் அவமானங்களையும் சந்திக்கத் துணிவிராத கோழை மனம்தான் தற்கொலையை நாடுகிறது. உலகில் மனிதர்களைத் தவிர எந்த ஓர் உயிரினமும் தற்கொலை செய்துகொள்வதில்லை. அடுத்த வேளை உணவுக்கு நிச்சயமில்லாத இந்த வாழ்வை எப்படியாவது எதிர்கொள்ளும் வகையில், அந்த ஐந்தறிவு உயிரினங்களுக்கு இருக்கும் தெளிவுகூட இன்று ஆறறிவு மானிடர்க்கு இல்லை என்பது வருத்தமானது.

  

இன்று நிறையப் பேரிடம் தைரியம் இல்லை. மன அழுத்தம், மன உளைச்சல், ஆளுமைச் சிதைவு, குடிப்பழக்கம், கூடாநட்பு, கடும் உடல்நலக் குறைவு என்ற காரணங்களால் தற்கொலையை நாடுகிறார்கள். நேஷனல் க்ரைம் ரெகார்ட்ஸ் பீரோ (NCRB) புள்ளிவிவரப்படி, 2015ஆம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கை 1,33,623. இவர்களில் 93,586 பேர் (70% பேர்) ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள்.

  உலக சுகாதார நிறுவனம், உலகில் கிட்டத்தட்ட 8,00,000 பேர் ஒவ்வோர் ஆண்டும் தற்கொலையால்  இறப்பதாகக் குறிப்பிடுகிறது. மேலும் 15-29 வயதுக்கிடைப்பட்டோரில், தற்கொலையே இறப்பிற்கு இரண்டாவது பெரிய காரணமாக அமைவதாகவும், 78%  தற்கொலைகள் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே நடப்பதாகவும் குறிப்பிடுகிறது. சுமார் 0.5% முதல் 1.4% மக்கள் தற்கொலை மூலம் இறக்கிறார்கள். ஓர் ஆண்டிற்கு 100,000 நபர்களில் 12 பேர் இத்தகைய முடிவுக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு 40 நொடியிலும் நாம் ஓர் உயிரைத் தற்கொலையினால் இழக்கிறோம். உலகில் மூன்றில் இரண்டு தற்கொலைகள் வளரும் நாடுகளில் ஏற்படுகின்றன. பெண்களைவிட ஆண்களே தற்கொலை முடிவை அதிகமாக எடுக்கின்றனர். ஆனாலும் உலக அளவில் தற்கொலை செய்துகொள்ளும் பெண்களில் 40% பேர் இந்தியப் பெண்கள். அதாவது தற்கொலையால் இறக்கும் 5இல் 2 பெண்கள் இந்தியப் பெண்கள். உலக அளவில் பதின்மப் பருவத்தினர் தற்கொலை செய்துகொள்வதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இது குறித்து நமது இந்தியச் சமூகம் சிறிதுகூட அலட்டிக்கொள்ளவில்லை என்பது கசப்பானது.

தற்கொலைகள் ஏதோ அந்த நேரத்து முடிவு போலத் தோன்றினாலும் அது முழுக்க உண்மையல்ல. சமூகப் புறக்காரணிகள் தரும் அழுத்தமே அவர்களை உயிரைப் போக்கிக்கொள்ளத் தூண்டுகிறது. குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களைத் தற்கொலையால் இழந்தால், மற்றவர்களுக்கும் அதே எண்ணம் ஏற்படுவதற்கான மரபணு சார்ந்த ஆபத்து உண்டு. இதற்கான உளவியல் ரீதியான காரணங்கள் ஆராயப்பட வேண்டியது அவசியம். உலகளவில் தற்கொலைகள் கடந்த நாற்பத்தியைந்து ஆண்டுகளில் அறுபது சதவீதம் அதிகரித்துள்ளது. மனச்சோர்வின் இறுதி நிகழ்வாகவே தற்கொலைகள் அமைகின்றன. 

வீழ்ச்சிக்கான எண்ணம் இருந்தாலும் வாழ்வதற்கான ஒரு சிறிய பிடிப்பு இருந்தால்கூடப் போதும். தற்கொலைகள் தவிர்க்கப்படும் என்பது நிச்சயமான ஒன்று. சமீபத்தில் எனது நெருங்கிய உறவினர் ஒருவரைத் தற்கொலையால் இழந்தோம். வாழ்வில் எத்தகைய துயரையும் எதிர்கொள்ளத் திராணியற்று, மனதில் இருப்பதைப் பகிர்ந்துகொள்ளக்கூட ஆளின்றி நிகழ்ந்த மரணம் அது. இறந்தவர் நிறையப் புத்தகங்கள் படிப்பவர். பலவித மேற்கோள்களைக் காட்டிப் பேசுவார். வாழ்க்கையைப் புரிந்துகொண்டதாக அவர் தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டிருந்திருக்கிறார். தனிப்பட்ட வாழ்வில் நடந்த கசப்பான நிகழ்வுகள் அவரை இந்த முடிவுக்குத் துரத்தியதாகத்தான் நினைக்கிறோம். அவர் இறப்பிலிருந்து நான் கற்ற பாடம் எதுவும் நம்மிடம் நிரந்தரமாக இருப்பதில்லை. அது துயரங்களானாலும் கூட என்பதுதான். கோடைகாலம் முடிந்தால் மழைக்காலம் வருவது போல் வாழ்வில் துயரமான நிகழ்வுகளுக்கு அடுத்து நிச்சயம் நல்ல நிகழ்வுகள் வரும் என்று அவருக்கு வாழ்க்கை போதித்திருக்கவில்லை. ஒரு பிரச்னை வரும்போது இறப்பதென்று முடிவெடுத்துவிட்டால் அப்புறம் இந்த உலகம் பிணக்காடாகத் தானே இருக்கும்?

 

மேலைநாடுகளில் ஆன்மிகத்தின் பெயரில் குழு மரணங்களை ஊக்குவித்த ஒரு சாமியார் அறுபதுகளில் மிகப் பிரபலமாக இருந்தார். சார்லஸ் மான்சன் என்பது அவரது பெயர். திருமணத்திற்கு முன்பே கூடா உறவால் பிறந்ததால் தன்னை இயேசு கிறிஸ்து என்று எண்ணிக்கொண்டார். இளைஞர்களுக்கு எல்.எஸ்.டி. போதை மாத்திரைகள், மெஸ்மரிசம் என்று மெல்ல மெல்ல தன்வயப்படுத்தினார். சாத்தானும் தேவனும் கலந்த கலவை என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்டார். அவருடைய போதனைகள் இளைய சமுதாயத்தை ஈர்த்தன. ஒரு நல்ல நாளில் தேவனைக் கண்டடையும் அழைப்பு சாமியாரிடம் இருந்துவந்தது. கூடிய கூட்டத்தை மூளைச்சலவை செய்து தற்கொலைக்குத் தூண்டினார். மதிமயங்கிய நிறையப் பேர் சயனைடு கலந்த நீரை அருந்தி இறந்தனர். பயந்து ஓட முற்பட்டவர்கள் அவருடைய சீடர்களால் மண்டை பிளக்கப்பட்டு இறைவனிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த அளவுக்குத் தற்கொலை இயக்கம் அப்போது ‘மும்முரமாக’ இருந்தது.

      

எந்தக் கல்வி அமைப்புகளும் தற்கொலை எண்ணம் ஏற்படாமல் வாழ்க்கையை எவ்வாறு கையாளுவதென்று சொல்லித் தருவதில்லை. சமூக அமைப்பும் மனச் சோர்வுக்கு ஆளானவர்களுக்கு எதிராகத் தான் இருக்கிறது.  பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை தற்போது அதிகரித்துள்ளது. படிப்பு தரும் அழுத்தங்கள், மதிப்பெண் கிடைக்காமை, பதின்பருவ எதிர்பால் ஈர்ப்புகள், இணைய விளையாட்டுகளால் நிகழும் விபரீதங்கள், நட்பு முறிவு, மொழிப்பிரச்னை, சாதி வேறுபாடுகள், ஆசிரியர்கள் காட்டும் பாகுபாடு போன்ற காரணங்களால் மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

* 2014ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த மாணவர்கள் தற்கொலை – 853

* 2015ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த மாணவர்கள் தற்கொலை – 955

* 2016ஆம் ஆண்டில் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை – 981 தமிழகத்தில் ஒரு நாளைக்குச் சராசரியாக 2.68 மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை கடும் மன அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் கல்விமுறை சமுதாயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத போது இன்னும் அதையே கட்டிக் கொண்டு அழுவானேன்? 

மன உளைச்சல் ஏற்படும் போது அதிலிருந்து நமது சிந்தனைகளை முதலில் மடைமாற்றம் செய்ய வேண்டும். இதுதான் மிகவும் முக்கியமானது. தனிமையைத் தவிர்க்க வேண்டும். பின்பு தமக்கு நெருக்கமானவராகத் தோன்றும் அல்லது நாம் சொல்வதைக் கவனிக்கக் கூடிய ஒருவரிடம் பிரச்னையைப் பற்றிக் கூற வேண்டும். தவிர்க்க இயலாத சூழ்நிலையில் மனநல மருத்துவரிடம் ஆலோசனைகள் பெறலாம். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு மன அமைதி பெற விழையலாம். தற்கொலை என்பது பிரச்னைகளுக்குத் தற்காலிகத் தீர்வே. அதைச் செய்து குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு நிரந்தரப் பிரச்னையை ஏற்படுத்திவிடக் கூடாது.

“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். அதை மனதில் வைத்து தலைதூக்கும் தற்கொலை எண்ணங்களை ஓட ஓட விரட்டுவதோடு அத்தகைய எண்ணத்தில் இருக்கும் ஒருவரையாவது மீட்டெடுக்க முயற்சிப்போம்.

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.