பொருள் 20 : குவான்யின்

குவான்யின் ஒரு பெண் போதிசத்துவர். இந்தச் சீனப் பெயரின் பொருள் உலகிலிருந்து வரும் ஒலிகளையெல்லாம் கேட்பவர். அதாவது, பிரார்த்தனைகளைக் கூர்ந்து கவனித்து நிறைவேற்றுபவர். சில இடங்களில் இவர் 11 தலைகளுடன் காட்சியளிக்கிறார். குழந்தை வரம் தரும் தெய்வம் என்னும் நற்பெயரும் இவருக்கு இருக்கிறது. கருணை, அன்பு, நேசம் ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படும் குவான்யின் பெண்களின் விருப்பத்துக்குரிய கடவுளாக முன்னிறுத்தப்படுகிறார்.

சீனாவில் உள்ள கோயில்களில் குவான்யினின் சிலைகளே அதிகம் இடம்பெற்றிருக்கின்றன. அழகின் இலக்கணமும் இவரேதான். பொதுவாக எல்லாக் கடவுள்களும் நம்மிடம் இருந்து பக்தியை மட்டுமல்ல, பயத்தையும் சேர்த்தே எதிர்பார்க்கிறார்கள். பக்தியுடன் தொழுதால் வேண்டிய வரம் சித்திக்கும்; தவறிழைத்தால் தண்டனை உறுதி. இந்த விதி குவான்யினுக்குப் பொருந்தாது. அவருக்கு அன்பு செலுத்த மட்டுமே தெரியும், தண்டிக்க வராது.

இன்னொரு மகாயான போதிசத்துவர் இருக்கிறார். அவர் பெயர் அவலோகிதர். சூரியனும் சந்திரனும் இவருடைய இரு கண்களில் இருந்தே தோன்றின என்பது ஐதீகம். சிவன், பிரம்மா, விஷ்ணு, சரஸ்வதி போன்றவர்களும் இவரிடமிருந்தே தோன்றினார்கள். இவருக்கும் தட்சிணாமூர்த்திக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அகத்திய முனிவருக்கு இவரே தமிழ் கற்றுத் தந்தார் என்றும்கூடச் சிலர் சொல்கிறார்கள். திபெத், சீனா, இந்தியா என்று தொடங்கி பல நாடுகளில் அவலோகிதர் வழிபடப்படுகிறார். இந்த அவலோகிதர் சீனாவுக்குச் செல்லும்போது பெண் வடிவத்தை எடுத்துவிட்டார். அந்தப் பெண் வேறு யாருமில்லை, குவான்யின்தான்.

குவான்யின் எப்படி போதிசத்துவராக மாறினார் தெரியுமா? அவருடைய அம்மா குவான்யினுக்கு மாப்பிள்ளைத் தேடிக்கொண்டிருந்தபோது குவான்யின் அம்மாவின் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார். எனக்குத் திருமணத்தில் விருப்பமில்லை, நான் வாழ்நாள் முழுக்க தனியாகவே இருக்கப்போகிறேன் என்று அறிவித்தார். அம்மாவுக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் மகளின் பேச்சை மீற முடியவில்லை. தான் சொன்னவாறே வாழ்நாள் முழுக்க குவான்யின் திருமணமே செய்துகொள்ளவில்லை. அதனால் கன்னி மேரியுடன் அவர் ஒப்பிடப்படுவதும் உண்டு. இன்னொரு பண்பையும் குவான்யின் வளர்த்துக்கொண்டார். வாழ்நாள் முழுக்க மாமிசம் உண்பதில்லை என்று முடிவெடுத்து மரக்கறி உணவை மட்டும் உட்கொள்ளத் தொடங்கினார். குவான்யினின் தெய்வீக அழகு, அமைதி, இறைபக்தி, அர்ப்பணிப்பு, சக மனிதர்கள்மீது அவர் வெளிப்படுத்திய கருணை ஆகியவை அவரை ஒரு போதிசத்துவராக உயர்த்தியது.

குவான்யின்

குவான்யின் தனது மரணத்துக்குப் பிறகு நிர்வாண நிலை எய்தி சொர்க்கத்துக்குச் சென்றாராம். சொர்க்கத்தின் கதவுகளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார். கதவு திறக்கப்படும் ஓசை கேட்கிறது. அதே நேரம், கீழே பூலோகத்தில் இருந்து அழுகுரல் ஒன்றும் உரத்துக் கேட்கிறது. கருணையே வடிவான குவான்யின் கலங்கிப்போகிறார். எனக்குச் சொர்க்கம் வேண்டாம், கீழே வேலையிருக்கிறது என்று சொல்லி மீண்டும் பூமிக்கு வந்துவிடுகிறார். சொர்க்கத்தின் கதவு பிறகு அவருக்காகத் திறக்கப்படவில்லை. ஆனால், அது அவருக்குத் தேவைப்படவும் இல்லை. துயரமும் அழுகையும் அதிருப்தியும் இந்த உலகில் நிறைந்திருக்கும்வரை குவான்யின் மேலுலகம் செல்ல வேண்டியிராது.

அதனால்தான் பெண்களின் பெரும் விருப்பத்துக்குரிய ஒரு கடவுளாக குவான்யினால் நீடிக்க முடிகிறது. இப்போதும் குவான்யினின் கூர்மையான காதுகள் பெண்களின் ஏக்கப் பெருமூச்சுகளைத் தவறவிடுவதில்லை. யார் எங்கே துயரப்பட்டாலும் குவான்யின் அங்கே விரைந்து சென்றுவிடுகிறார். அவருடைய பரிவு அனைவருக்குமானதாக பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. தொலைந்து போனவர்களைக் குவான்யின் கண்டடைந்து கொடுக்கிறார். நோயுற்றவர்களை அக்கறையுடன் கவனித்து குணமாக்குகிறார்.

சீனாவில் குவான்யின் ஆயிரம் வடிவங்களை எடுத்திருக்கிறார். மனிதகுல மேன்மைக்கு அவர் ஆற்றும் பணிகள் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவை. குவான்யின், எனக்கு ஆண் மகனைக் கொடு என்று யாரெல்லாம் வேண்டுகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. ஒருவேளை பெண் குழந்தை வேண்டும் என்று கேட்டால் அழகிய பெண் மகளை அவர்களுக்கு குவான்யின் அளிப்பார். கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு குவான்யினே நட்சத்திரமாக இருந்து வழிகாட்டுகிறார். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

மெரிலின் பிரெஞ்ச் குவான்யினின் பாத்திரத்தைக் கூர்மையான ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். அன்பும் அழகும் அடக்கமும் கொண்ட இந்தப் போதிசத்துவரைச் சீனர்கள் எப்போது வழிபடத் தொடங்கினார்கள் என்னும் கேள்வியுடன் தொடங்குகிறது அவருடைய தேடல். சோங், லியோ, சியா, யுவான், மிங், கிங் என்று அரசக் குடும்பங்கள் ஆட்சிசெய்துவந்த பிற்கால அரச மரபு (960 முதல் 1895 வரை) முழுக்கவும் குவான்யினின் புகழ் படர்ந்து பரவியதை மெரிலின் கண்டுகொண்டார். இந்த நீண்ட காலகட்டத்தில் சீனா எப்படி இருந்தது?

நகரங்கள் துரிதகதியில் வளர்ந்துகொண்டிருந்தன. நாகரிக வளர்ச்சியும் உடன் சேர்ந்துகொண்டது. பெண்கள் பலர் வீட்டைவிட்டு வெளியில் வந்து பல வணிக முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களை வீட்டோடு பிணைத்து வைத்திருந்த மதிப்பீடுகள் நகரமயமாக்கல் காரணமாகத் தளர்ந்திருந்ததால் இது சாத்தியப்பட்டது. ஆண்களுக்குச் சரிசமானமாகப் பெண்கள் சந்தைகளுக்கு வந்த மீன்கள், காய்கனிகள் விற்பனை செய்தனர். சிறிய கடைகளை அமைத்து தொழில்முயற்சிகளில் ஈடுபட்டனர். செல்வந்தர்களும் அரண்மனைவாசிகளும் அதிக அளவிலான பெண்களை வீட்டுவேலைகளுக்காக நியமித்தனர். சமையல் பணிகளில் பெண்கள் ஈடுபட்டனர். கூடவே பாலியல் தொழிலும் பரவியது. மொத்தத்தில் பெண்கள் அதிக அளவில் பொதுவிடங்களில் நடமாடத் தொடங்கினர்.

சீனச் சமூகம் மாறத் தொடங்கியது. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பத் தொடங்கினர். பெண்கள் படித்து வேலைக்குப் போக ஆரம்பித்தால் குடும்பத்தின் துயரங்கள் நீங்கும் என்று அவர்கள் நம்பத் தொடங்கினார்கள். இதனால் எழுதப் படிக்கத் தெரிந்த பெண்களின் எண்ணிக்கை அரிகரித்தது. கன்பூசியத்தின் ஆதிக்கத்தில் இருந்து சீனா வெளிவரத் தொடங்கியது. சமூக, குடும்ப மதிப்பீடுகள் மாற்றம் கண்டன. பெண்கள் குறித்து புத்தகங்கள் வெளிவரத் தொடங்கின. கதைகள் பெண்களையும் உயர்வாகக் காட்சிப்படுத்த ஆரம்பித்தன. ஆண்களும் பெண்களும் சமம் என்றுகூடச் சில நூல்கள் துணிச்சலாக அறிவித்தன.

ஆடவர் உலகம் இந்த மாற்றங்களால் கலக்கமடைந்தது. சமூகத்தை ‘பழையபடி’ திசைமாற்ற வேண்டியதன் அவசியத்தை ஆண்கள் வலியுறுத்தத் தொடங்கினார்கள். பெண்களுக்குக் கிடைத்துவந்த அபரிமிதமான சுதந்திரம் பெண்களோடு சேர்த்து ஆண்களையும் பாதிப்பதை அவர்கள் ‘கண்டுபிடித்தார்கள்’. உடனடியாகச் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மீண்டும் பெண்களை வீட்டுக்குள் அடைக்கத் தொடங்கினார்கள். சொத்துரிமை கோரக் கூடாது என்று தடை விதித்தார்கள். குழந்தை பருவத்திலே பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவர்களுடைய நடமாட்டம் கணவன்களால் கட்டுப்படுத்தப்பட்டது.

மதிப்பீடுகள் மீண்டும் மாற்றம் கண்டன. ஒரு பாலியல் பலாத்காரம் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட பெண்ணே அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. 1646ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின்படி ஒரு பெண் தன்னுடைய கன்னித்தன்மையை எப்பாடுபட்டாவது காத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார். தவறினால் அது அவளுடைய குற்றம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ‘அசுத்தமடைந்த’ பெண்கள் தற்கொலை செய்துகொள்ளுமாறு தூண்டப்பட்டனர். அவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர்கள் போற்றப்பட்டனர். அதேபோல், தன் கற்பைக் காப்பதற்காகப் போராடி உயிர் நீத்த பெண்களும் தியாகிகளாகக் கருதப்பட்டனர்.

மொத்தத்தில் மன்னராட்சி மதிப்பீடுகள் பலவும் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டன. நகரமயமாக்கல் பெருகினாலும் நிலப்பிரபுத்துவச் சமூகமுறை மாறாமல் இருக்குமாறு பார்த்துக்கொண்டார்கள். இதனால் பெண்கள் பெரும் மனச்சோர்வுக்குத் தள்ளப்பட்டார்கள். அபூர்வமாக அவர்களுக்குக் கிடைத்த சிறிதளவு சுதந்தரமும் மறுக்கப்பட்டதில் அவர்கள் விரக்தியடைந்தனர். அவர்களுடைய ஏக்கப் பெருமூச்சுகளைத் தணிக்க அறிமுகப்படுத்தப்பட்ட அருமந்துதான் குவான்யின்.

குவான்யினைப் போல் இரு. குவான்யினை வழிபடு. ஒரு குவான்யினாக மாறிவிடு. அடக்கமும் அமைதியும் உன் அடையாளமாக மாறட்டும். யாரிடமும் வெறுப்பைக் காட்டதே; அனைவரையும் நேசிக்கக் கற்றுக்கொள். உன்னாலும் இந்தத் துயரமிகு வாழ்விலிருந்து வெளியேற முடியும்; உனக்கும் முக்தி கிடைக்கும். ஆனால், அதற்கு நீ உன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். குவான்யினைப் போல் தூய்மையைக் கடைப்பிடி. துறவு வாழ்க்கையை முயன்று பார். மரக்கறி சாப்பிடுவதை ஒரு விரதமாக மேற்கொள். திருமணம் செய்துகொள்ளாமல் இருந்துபார். அகத்தூய்மை, புறத்தூய்மை கடைப்பிடி. முடியவில்லையா? குவான்யினிடம் சரணடைந்துவிடு. அவளை வழிபடு! அவள் உன்னைப் பார்த்துக்கொள்வாள்! உன் கவலைகள் யாவும் நீங்கும்.

குவான்யின் பெண்களுக்கான கடவுளாக முன்னிறுத்தப்பட்டதன் காரணம் இதுதான் என்கிறார் மெரிலின் பிரெஞ்ச். தங்களுடைய பிரச்னைகளை மட்டுமல்ல, அவற்றுக்காக வழங்கப்பட்ட தீர்வுகளையும் பெண்கள் கவனமாகவே ஆராய வேண்டியிருக்கிறது. காரணம், இந்தத் தீர்வுகள் பல நேரத்தில் பிரச்னைகளைத் தோற்றுவிக்கும் சமூக அமைப்பைத் தக்கவைக்கவே உதவுகின்றன.

பொருள் 21 : ஹன் வம்சத்து நூல்கள்

பொயுமு 206 வாக்கில் சீனாவில் கிங் வம்சம் முடிவடைந்து ஹன் வம்சம் ஆரம்பமானது. கன்பூசியத்தின் செல்வாக்கு அரசவையிலும் அரசவைக்கு வெளியிலும் வலுவாகப் பரவியிருந்த நேரம் அது. கன்பூசியத்தின் அடிப்படையிலேயே தத்துவம், வாழ்வியல் நெறி, ஆன்மிகம் ஆகியவற்றை அப்போதைய அறிவுஜீவிகள் அணுகினார்கள். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றுவது இயல்புதான் என்றாலும் எல்லோரும் ஒப்புக்கொண்ட பொதுவான சமூக விதி ஒன்று இருந்தது. மனிதகுலம் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. யின், யாங். இந்த இரண்டும் சமூகத்தின் இரு அத்தியாவசிய அலகுகள். ஆண்கள் என்றும் பெண்கள் என்றும் யின், யாங்கைப் பிரித்துப் பார்க்கலாம். யின் என்பது உள்புறம். யாங் என்பது வெளிப்புறம். உட்விவகாரங்களுக்குப் பெண். வெளிவிவகாரங்களுக்கு ஆண். பெண்கள் வீட்டையும் ஆண்கள் நாட்டையும் ஆள வேண்டும் என்பது இதன் பொருள்.

ஹன் வம்சத்து நூல்கள்

ஒரு நல்ல பெண்ணின் இலக்கணம் என்ன என்னும் கேள்வி ஹன் அறிவுஜீவிகளுக்கு முக்கியமானதாகப் பட்டிருக்கிறது. என்னென்ன பண்புகளெல்லாம் ஒரு பெண் பெற்றிருக்க வேண்டும் என்று பட்டியலிடுவதைவிட, அத்தகைய பண்புகளைப் பெற்றிருக்கும் பெண்களை அறிமுகப்படுத்துவது சரியாக இருக்கும் என்று அவர்களில் சிலர் நினைத்தனர். சில வாழ்க்கை வரலாறுகளை அவர்கள் எழுதவும் செய்தனர். உதாரணப் பெண்டிர் என்பவர் இப்படித்தான் இருப்பார், நீங்களும் அவரையே பின்பற்றுங்கள் என்னும் செய்தி இத்தகைய நூல்களின் அடிநாதமாக இருந்தது.

பெண்கள் ஏதேனும் ஓர் அதிகாரத்துக்குக் கட்டுப்பட வேண்டும் என்கின்றன இந்நூல்கள். அந்த அதிகாரம் என்பது அரசு என்னும் வெளிப்புற அமைப்பாக இருக்கலாம் அல்லது குடும்பம் என்னும் உட்புற அமைப்பாக இருக்கலாம். சீனச் சமூகம் என்பது இந்த இரு அமைப்புகளால்தான் ஆளப்பட்டு வந்தது. இரண்டையும் ஆண்களே ஆண்டனர். மற்றபடி, கன்பூசியமே பெண்களுக்கேற்ற அறநூல் என்று இந்த எழுத்தாளர்கள் வலியுறுத்தினார்கள்.

ஆண்களுக்கும்கூட கன்பூசியமே அறத் தத்துவம் என்றாலும் ஆண்கள் தங்களுடைய வசதிக்கேற்ப அவ்வப்போது கன்பூசியத்தைத் திருத்தியும் மாற்றியும் அமைத்துக்கொண்டார்கள். உதாரணத்துக்கு, எந்தச் சூழலிலும் ஒரு பெண் மறுமணம் செய்துகொள்ளக் கூடாது என்னும் விதியை ஆண்கள் சில நேரம் மீறினார்கள். எப்போது என்றால், கணவனை இழந்த ஒரு பெண்ணை சுயவிருப்பத்துடன் மணம் செய்யவேண்டிய சூழல் வரும்போது மட்டும். ஆனால், இத்தகைய மறுமணங்கள் விதிவிலக்காகவே பார்க்கப்பட்டன. இப்படி, பெண்களுக்காகத் தனியே சமூகவிதிகளும் அறம் சார்ந்த விழுமியங்களும் திருத்தப்படவில்லை என்பதை நோக்க வேண்டும். சமூக விதிகளும்கூட ஆணுக்காக மட்டுமே வளைந்துகொடுத்தன.

தவிரவும், இந்த மறுமணங்களும்கூட எந்த வகையிலும் ஒரு பெண்ணுக்குப் புதிய வாழ்வை அல்லது சுதந்தரத்தை அளித்துவிடவில்லை. முந்தைய கணவனுக்குப் பதிலாக இன்னொருவன்; அவனுக்குக் கட்டுப்படுவதற்குப் பதில் இவனுக்கு என்பதாகவே அந்த ஏற்பாடு இருந்தது. ஆக, ஒரு சமூகச் சீர்திருத்தமாக மலர்ந்திருக்க வேண்டிய மறுமணம் ஆண்களின் ஆதிக்கத்தைத் தக்கவைப்பதற்கான ஓர் உபாயமாக மட்டும் சுருங்கிப்போனது.

சமூக வழக்கத்தை உடைப்பதும் எழுதப்பட்ட விதிகளை மீறுவதும் ஒரு பெண்ணுக்கான இலக்கணம் அல்ல என்றார்கள் ஹன் அறிவுஜீவிகள். அதிகாரத்துக்கு உடன்பட்டு, எதிர்க்குரல் எழுப்பாமல் இருப்பதே சிறந்த பண்பு என்று இவர்கள் வலியுறுத்தினார்கள். இவர்களுடைய அறநூல்கள் அனைத்திலும் தற்கொலை புகழப்பட்டிருந்தது. கணவனை இழந்த பெண்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டால் அவர்களுடைய பாவங்கள் கரைந்துவிடுமாம். உணவைத் துறந்த பட்டினி கிடப்பது, கழுத்தை அறுத்துக்கொள்வது, கிணற்றில் குதிப்பது ஆகிய வழிமுறைகளை அவர்கள் சிபாரிசு செய்தனர். இதில் எந்த வழியை வேண்டுமானாலும் பெண்கள் சுதந்தரமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

தற்கொலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று ஹன் பெண்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். இளம் வயதில் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண் தனக்கு வாய்த்த கணவன் பிடிக்ககாமல் போகும்போது அவனைப் பழிவாங்க தற்கொலையை நாடினார். திருமணத்தின்போது அணிந்த சிவப்பு கவுனை அணிந்தபடி இறந்துபோனால் கணவனும் அவனுடைய சொந்தக்காரர்களும் வாழ்நாள் முழுக்க அச்சுறுத்தப்படுவார்கள் என்றோர் ஐதீகம் நிலவியதுதான் இதற்குக் காரணம். இதை நம்பி பல இளம்பெண்கள் தற்கொலைச் செய்துகொண்டனர். தற்கொலை என்பது சுயதண்டனை என்பதை அவர்கள் உணரவேயில்லை. அவ்வாறு அவர்கள் உணராமல் போனதற்குப் பல கட்டுக்கதைகளைப் பரப்பிவிட்ட அப்போதைய அறிவுஜீவிகளும் ஒரு காரணம்.

அந்த அறிவுஜீவிகளின் சில வழிகாட்டுதல்களைப் பார்ப்போம். ஒரு பெண் தன் அப்பாவிடமிருந்தே கற்க வேண்டும், அம்மாவிடமிருந்து அல்ல. ஓர் ஆண் பல பெண்களை மணப்பதும், மணக்காமலேயே பல பெண்களுடன் நெருங்கிப் பழகுவதும் அப்படியொன்றும் தவறான செயலல்ல என்கிறது இன்னோர் அறிவுரை. முக்கியமான வேலைகள் ஆண்களுக்கானவை. அதே நேரம் ஒரு பெண் சமையல், வீட்டு வேலை போக வீட்டு வருமானத்தைப் பெருக்க உதவும் வகையில் துணி தைப்பது போன்ற சிறு தொழில்களில் ஈடுபடலாம். அல்லது வயல் வேலைகளில் ஆண்களுக்கு உதவலாம். மற்றபடி, சமூகம் பெண்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றைத்தான். ஆண்களின் நிழலாக இருந்து அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள். மற்ற நல்ல பண்புகள் அனைத்தும் உங்களை நாடிவரும்.

சிமா டேன் என்னும் அறிவுஜீவி கூறுகிறார். ‘மனிதர்கள் அடிப்படையில் அறவுணர்வு அற்றவர்கள். அவர்களைக் கடுமையான சட்டங்கள் கொண்டு நல்வழிப்படுத்த வேண்டும். ’ இருந்தும், ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமான சட்டத்திட்டங்களும் ஒழுக்கக் கையேடுகளும் ஏன் இருக்கின்றன என்பதற்கு இவரிடமும் மற்ற ஹன் அறிவுஜீவிகளிடமும் பதிலில்லை. அறிவுஜீவிகள்தாம் என்றாலும் ஆண் அறிவுஜீவிகள் அல்லவா?

(தொடரும்)

படைப்பாளர்:

மருதன்

எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.