இந்தியச் சமுதாயத்தில் திருமணம் என்பது மிகவும் புனிதமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கற்காலத்தில் இப்படி எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் அவரவர் விருப்பத்தின் பேரில் புணர்ச்சிகள் ஏற்பட்டன. அதன் பின்னர் வந்தவர்கள் சமுதாயம் என்ற ஓர் ஒழுங்கான அமைப்பை ஏற்படுத்தப் பலவிதமான முறைகளைக் கட்டமைத்தனர். கற்காலத்தில் பெண்ணைத் தலைமையாகக் கொண்ட சமுதாயம் காலப்போக்கில் ‘விழித்துக்’ கொண்ட ஆண்களால் அவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது.

ஆனால், இப்படிக் கட்டமைக்கப்பட்ட திருமணமோ அல்லது காதல் கடிமணமோ எதுவாயினும் ஏழு வருடங்களில் ஒரு சலிப்பும் வெறுப்பும் கசப்பும் வருவது இயல்புதான். இது ஆங்கிலத்தில் ‘செவன் இயர் இட்ச்’ என்று அழைக்கப்படுகிறது. “ஐயையோ… அப்படிலாம் இல்லை… நாங்க ரொம்ப வருஷமா ஒண்ணா பிரியமாத் தான் இருக்கோம்” என்று சொல்வீர்கள் எனில் ஒன்று நீங்கள் அதை அறியாமல் இருக்கலாம். அல்லது உங்கள் துணை அந்தச் சூழலைத் திறமையாகக் கையாண்டிருக்கலாம். இல்லையெனில் நீங்கள் சர்வ நிச்சயமாகப் பொய் சொல்கிறீர்கள்.

திருமணமான ஆரம்ப காலங்களில் ஒருவருக்கொருவர் புதிதென்பதால் நல்ல பக்கங்களை மட்டுமே வெளிப்படுத்துவர். அடுத்தவரின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நல்ல விதமான செயல்களில் ஈடுபட்டுத் தாங்கள் ரொம்ப நல்லவர் போல் காட்டிக்கொள்வர். மேலும் உடல்ரீதியான சந்தோஷங்களில் இருப்பதால் சின்னச் சின்னக் குறைகள் ‘கண்டுகொள்ளப்படாமல்’ விடப்படுகின்றன. அப்புறம் எல்லாம் தெளிந்து கண்ணைத் திறந்து பார்க்கும் போதுதான் கட்டில் மேல் ஈர டவல் போடுவதும் பாத்ரூம் விளக்கை அணைக்காமல் வருவதும் சாம்பார் சுவையற்றிருப்பதும் வீடு பெருக்கப்படாமல் கிடப்பதும் உறுத்தலாக இருக்கும்.

திருமண நாட்களின்‌ ஆரம்பத்தில் இருக்கும் குதூகலம் மெல்ல மெல்ல வடியத் துவங்கும் காலத்தில் அப்போதுதான் ஒருவருக்கொருவர் தனிச்சுயம் என்று ஒன்றிருப்பதே புரியத் தொடங்கும். அதற்குள் ஒன்றிரண்டு குழந்தைகள் பிறந்துவிடுவர். அப்புறம் மிச்சமிருக்கும் காலம் அவர்களுக்கென ஓடும். இப்படித்தான் பெரும்பாலானவர்களின் காலங்கள் கழிகின்றன.

இந்தியத் தேசிய திருமணப் புள்ளிவிவரங்கள்கூடத் திருமணங்கள் 7.2 வருடங்களில் ஒரு வெறுப்பை உண்டாக்குகின்றன என்று கூறுகின்றன. இதற்கு முக்கியக் காரணம் தம்பதியர் இடையே தேடுதல் குறைந்து போவதுதான். அதுவுமின்றி ஆரம்பக் கட்டத்திலேயே ஒருவரையொருவர் முழுமையாக அதீத ஆர்வத்தில் வெளிப்படுத்திக் கொள்வதால் அப்புறம் தெரியப்படுத்த ஒன்றும் இல்லாமல் போகிறது.

அடுத்தவரின் பிடித்தங்கள் என்ன, தேவைகள் என்ன என்றெல்லாம் ஆர்வமாக இருக்கும் மனசு ஒரு கட்டத்தில் மொத்தமாக வறண்டு விடுகிறது. தமது ரசனையுடன் ஒத்துப் போகாத துணையின் மீது லேசாக ஒரு சலிப்பு ஏற்படுகிறது. தனக்கென எதுவும் செய்துகொள்ளாது, அடுத்தவரின் ஆசைக்கேற்ப வாழ்கிறோமோ என்ற சந்தேகம் மெல்ல எழும். எவ்வளவு அந்நியோன்யமான, ஆதர்ச தம்பதியினராக இருந்தாலும் ஒரு மெல்லிய இடைவெளி இருக்க வேண்டும். அவரவருக்கான ஒரு தனியுலகில் கொஞ்ச நேரத்தையாவது கழிக்கவிட வேண்டும். அவ்வாறின்றி இணையைத் தனது தேவைகளைப் பூர்த்தி செய்பவராக மட்டுமே கருதி, அடக்கி வைக்கக் கூடாது. அப்போதுதான் அடுத்த பெண்ணின் மீதோ அல்லது ஆணின் மீதோ நாட்டம் வருகிறது. இது தேவையற்ற பிரச்னைகளையும் கூட்டி வருகிறது.

உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் ஒரு தனித்துவம் கொண்டது. ஒருவரிடம் இருக்கும் ஒரு குணமோ, ரசனையோ அடுத்தவரிடம் இருக்காது. தனக்கு ஒத்துப் போகும் ஒரு குணத்தை அடுத்தவரிடம் காணும் போது இயல்பாக மனம் அந்தப் பக்கம் சாயும் தான். என்றாலும் அதற்கு இடம் கொடாமல் தனது இணையை நன்கு பார்த்துக் கொள்வதுதான் இருபாலருக்குமான ஒரு சவாலாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் இதில் தேறுவதில்லை.

ஆதி மனித மனத்தின் மிச்சங்கள் இன்னும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கின்றன. தனக்கு வேண்டிய ஒன்று கிடைக்கவில்லை என்றால் அது கிடைக்கும் இடத்தை நாடாது தன்னிடமிருப்பதையே தனக்கேற்றவாறு மாற்றிக் கொள்பவர்கள் வெகு சிலரே. அவ்வாறு பொறுமையில்லாதவர்கள் அல்லது புதிதான அனுபவங்களை நாடுபவர்களை ஒன்றும் சொல்ல இயலாது. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் இணையரைக் கவர புதிது புதிதாக எதையேனும் செய்துதான் ஆகவேண்டும்.

வாழ்க்கை என்பது பல கட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒருகாலத்தில் மிகவும் விரும்பிய ஒன்று இன்னொரு நேரத்தில் வெறுக்கப்படுகிறது. இது வழமையான ஒன்றுதான். என்றாலும் உயிரற்ற அஃறிணைப் பொருட்களுக்கும் உயிருள்ள உறவுகளுக்கும் பெருத்த வேறுபாடு இருக்கிறது அல்லவா?

மணமான புதிதில் பேசிப் பேசி தன்னையுமறியாது தனது பலவீனங்களை வெளிப்படுத்தி விடுகிறார்கள். அவையெல்லாம் பின்னாளில் ‘கண்ணிவெடி’களாக மாறி தன்னையே பதம் பார்க்கையில் தான் உறவுப் பாலத்தில் விரிசல்கள் ஏற்படுகின்றன. இவையெல்லாம் மிகச் சரியாகப் புள்ளி வைத்தாற் போல் ஏழாவது வருடத்தில் தான் நடக்க வேண்டும் என்பதில்லை. புரிதல் இல்லாத மனிதர்களிடையே சில மாதங்களில் அல்லது நாட்களில்கூடத் தோன்றலாம்.

இல்வாழ்க்கையில் எந்தவிதப் பிரச்னைகளும் இல்லாத ஒருவர்கூட ஒரு ‘த்ரில்’லுக்காக வேறு ஒரு துணைக்குத் தூண்டில் போடலாம். மனித மனத்தின் புதிரான போக்கிற்கு எப்போதும் காரணங்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்க முடியாது.

ஒருவர் இன்னொருவரை ஈர்க்க நினைக்கும் போது மூளை டோபமைன் என்னும் ஹார்மோனை வெளியிடுகிறது. கூடவே சுரக்கும் செரோடோனின் அளவும் அதிகரித்து ஆக்ஸிடாஸின் என்னும் இன்னொரு மகிழ்ச்சி தரும் ஹார்மோனும் சுரந்து தள்ளுகிறது. இந்த ஆக்ஸிடாஸினால் மன இறுக்கம் தளர்கிறது. தாய்மை உணர்வு அதிகரிக்கிறது. நேர்மறையான எண்ணங்களை வளர்க்கிறது. இந்த ஹார்மோன் செயல்பாடு குறைந்தாலும் இத்தகைய பிரச்னைகள் ஏற்படலாம்.

தம்பதியினருக்கு இன்னொருவர் மீதான ஈர்ப்பு குறையும் போது அதை அதிகரிக்கும் விதமான நிகழ்வுகளைச் செயற்கையாகவேனும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது இன்னொருவருக்கும் இந்த உறவைத் தொடரும் எண்ணம் இருந்தால் தான் இது பலனளிக்கும். ஆனால், நமது இந்தியச் சமூகத்தில் பெண்கள் தங்களது கணவர் மீதான ஈர்ப்பு குறைந்து விட்டது என்று சொல்லக்கூட வேண்டாம், நினைத்தாலே திருமண பந்தத்தின் புனிதம் கெட்டு விடுகிறது என்று கூப்பாடு போடுகிறார்கள். இந்த லட்சணத்தில், “எனக்கு உன்னிடம் இன்னின்ன விஷயங்கள் பிடிக்கவில்லை… கொஞ்சம் மாற்றிக்கொள்” என்று சொன்னால் அவ்வளவுதான். அவள்‌ நடத்தை கெட்டவள் என்று கணவராலேயே முத்திரை குத்தப்படுகிறாள். இதுதான் உண்மை. ஆனால், இந்தியக் கணவர்கள், தன் மனைவி மீது ஈர்ப்பு குறைந்து விட்டது என்று அடுத்த பெண்ணிடம் தனக்கான ரசனையைக் கண்டறிந்தேன் என்று புல்லரிக்க முடிகிறது. புளகாங்கிதம் அடைய முடிகிறது. அதைப் பற்றிப் பெருமையாகக் கட்டுரை, கவிதை, சினிமா என்று அமர்க்களப்படுத்துகிறார்கள். அதை ரசிக்கவும் சில்லறைகளைச் சிதற விடவும் ஆண்கள் க்ரூப் எப்போதும் காத்திருக்கிறது.

தொடர்ந்து ஒரே முகத்தைப் பார்த்துப் பழகிக்கொண்டிருப்பது சலிப்பைத் தரும் என்பது உளவியல் ரீதியாகப் பார்த்தால் உண்மைதான். ஒரே மாவில் இட்லி, தோசை, ஊத்தப்பம், பணியாரம், குணுக்கு, போண்டா என்று விதவிதமாகத் தயாரித்தால் தான் சாப்பிட முடிகிறது. ஆனால், அடிப்படை இட்லி மாவுதான். அது போலவே அதே முகங்களுடன் உள்ள உறவை ஒவ்வொரு நாளும் சுவாரசியங்கள் சேர்த்துப் பேணினால் குடும்பம் உடைவது தடுக்கப்படும். அவரவர் இணையைப் பொறுத்துதான் அது வெற்றி அடையுமா என்று தெரியும். ஆண்களுக்கு மட்டும்‌ இல்வாழ்க்கையில் சலிப்பு ஏற்படும் என்றில்லை. பெண்களுக்கும் ஏற்படும் என்பதை இந்த இந்தியச் சமுதாயத்தில் ஆண்கள் அல்ல பெண்களே முதலில் ஏற்றுக்கொள்வதில்லை. இது யாரோ வாழ்வில் வரும் என்று தேமேவென்று இருக்காமல், வந்தால் எப்படித் தவிர்ப்பது என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

உடல்நலனை நன்கு பேண வேண்டும். அதோடு மனநலனையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, யோகா, தியானம், நடனம், இசை, நடைபயிற்சி என்று எதை வேண்டுமானாலும் ஒன்றாகச் செய்யலாம். அதை வேண்டா வெறுப்பாக வற்புறுத்தலுக்காகச் செய்யாமல் தம்பதியர் உறவு வலுப்பெறவும் மூன்றாவது நபர் குடும்பத்துக்குள் நுழைந்து மன அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காமல் இருக்கவும் இயல்பாக விரும்பிச் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனைகள் பெறலாம். வாய்ப்புகள் இருந்தால் இரண்டாவது தேன்நிலவு சென்று வரலாம். அது தம்பதியினர் மட்டும் சென்று வந்தால் நலம்.

இது எல்லாவற்றையும்விட ஒரு சிறந்த ஆலோசனை உண்டு. அது தம்பதியினர் சலிப்புற்றிருந்தாலும் ஒருவருக்கு மட்டும் ஈர்ப்பு குறைந்திருப்பதாகத் தோன்றினாலும் ‘ஈகோ’வைக் கைவிட்டு இருவரும் மனம்விட்டுப் பேசுங்கள். அது தீர்க்காத பிரச்னைகளே இல்லை. பேசினால் தான் பிரச்சினையே என்பவர்களுக்கு ஒன்றும் சொல்ல இயலாது.

மனசு விட்டுப் பேசுவதே மாமருந்து என்பதைப் புரிந்து கொண்டு வாழ்ந்தால் ஏழு வருடங்கள் என்ன, எழுபது வருடங்கள் ஆனாலும் இட்ச் என்பது போயே போச்சு… போயிந்தே… இட்ஸ் கான்!

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.