கன்னடத்தில் வெளிவந்த மிக முக்கியமான நாவல். ‘ஸ்நேகா’ பதிப்பகத்தின் அனுமதியோடு ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் வெளிவருகிறது.

தமிழில்: சி.சு. சதாசிவம்

11


ஜமீலா தந்தையைப் பார்க்க வந்தவள் சில நாட்கள் தாய் வீட்டிலிருந்துவிட்டுப் புறப்பட்டுப் போனாள். இன்னும் சில நாட்கள் இருக்கும்படி பாத்திமா கட்டாயப்படுத்தியதைக் கேட்ட நாதிரா, ”ஏன், என்னெ மாதிரியே அவளையும் பண்ணணுமா என்ன?” என்று கடுமையான குரலில் தாயைப் பார்த்துக் கேட்டாள்.

இப்போது, இரவு பகலாக பாத்திமாவும் மஹமத் கானும் நாதிராவின் மனதை மாற்றப் படாத பாடுபட்டனர். ’’ஒரு ராத்திரி ஒருத்தனுக்குப் பெண்டாட்டி ஆவறதனால கெட்டுப்போனவளாயிடப் போறதில்ல. குர்-ஆன் கிதாப்புல இருக்கிறதுதானே? அது தப்பாயிருந்தா திருமறையில அப்பிடிச் சொல்லியிருக்குமா? இதுவரைக்கும் யாரும் பண்ணாததா என்ன? அடிக்கடி இல்லேன்னாலும் எப்பவாவது ஒரு தடவை, எங்கெயாவது ஒரு எடத்துலெ முஸ்லீம் சமூகத்துல இந்த மாதிரி நடக்கிறது உண்டுதான். அது அபூர்வமாயிருந்தாலும் நடக்காதது, நடக்கக் கூடாததுன்னு ஒண்ணும் இல்ல. பொம்பளைங்க இதுக்கு ஒத்துக்காமப் போனதுனால மறுபடியும் சேத்துவைக்க முடியாமப் போன கல்யாணங்க நிறையவேயிருக்கு. புருசன விட்டுவந்த பொண்ணா, இல்லேன்னா வயசானவனக் கட்டிகிட்ட பொண்டாட்டியா பின்னால அவ படக்கூடாத பாடெல்லாம் பட வேண்டியதாயிடும். அப்படிப் படாத பாடெல்லாம் படறதவிட யாரோ ஒருத்தனுக்கு ஒரு ராத்திரிக்குப் பொண்டாட்டியா இருந்துட்டு அப்புறம் என்னென்னைக்குமா புருசன் கொழந்தைகளோட சொகமா இருக்கலாமில்ல ? அல்லா கருணை வச்சா பின்னால வேற புள்ளைங்களையும் கொடுப்பான். தகப்பனுக்கும் ஒடம்பு சொகமில்ல ; எந்த மருந்துலயும் அவருக்குக் குணமாகற மாதிரி தெரியல. அவருக்கு ஏதாவது ஆயிட்டா மகளுக்கு யாரு கதி? ஒருநாளு இல்லேன்னாலும் ஒரு நாளைக்குத் தாயும் சாக வேண்டியவதானே? அதுக்கு அப்புறம்? அதனால, நாதிரா எப்பிடியாவது பல்லைக்கடிச்சிட்டு ஒரு நாளைக்கு இந்தக் கசப்ப முழுங்கிக்கத்தான் வேணும். இப்படிச் செய்தாவது மறுபடியும் அவளையே கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ரஷீத் தயாராயிருக்கிறான். ஆம்பளைக்குச் சம்மதம்னா சரி. பொம்பள எல்லாத்துக்கும் தயாராயிருக்கணும்!” இது தாய் தந்தையரின் புலம்பல், போதனை.

தாய்-தந்தையரின் இந்தப் போதனைகளைக் கேட்டுக் கேட்டு நாதிராவுக்குத் தலையே வெடித்துவிடுவதுபோலாகி விடும். தாயின்மீது எரிந்துவிழுவாள். ஆனால், நோயினால் நொந்துபோய் எதுவும் செய்யமுடியாதவராகிப் பரிதாபத்தோடு வேதனையில் தவித்துக் கொண்டிருந்த தந்தையோடு எதிர்வாதாடவோ எரிந்துவிழவோ அவளால் முடியவில்லை.

முன்புபோலவே, இப்போதும் அவள் பீடி சுற்றுவாள், சுற்றிய பீடியைக் கொண்டு போகவும் பணமும் பீடிஇலையும் வாங்கிக் கொண்டு வரவும் பக்கத்துவீட்டுப் பையனொருவன் வந்துபோவான். அவளது தகப்பனால் இப்போது எதையும் செய்ய முடிவதில்லை.

அன்று இரவெல்லாம் பயங்கரமான இடி, மின்னல்களோடு கூடிய மழை. முதல் மழையின் முன் அறிகுறி. இந்த இடியோசைகளென்றாலே சிறுவயதிலிருந்தே நாதிராவிற்குப் பயம். அப்போதெல்லாம் தாயைத் தழுவிக் கொண்டு படுத்துக் கொண்டுவிடுவாள். சற்றுப் பெரியவளானதும் திருமணமாகும்வரை தங்கையோடு படுத்துக் கொண்டு இடியோசையைக் கேட்டவுடனே தங்கையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு விடுவாள். அக்காவின் பயத்தைக் கண்டு தங்கை சிரிப்பாள். திருமணமான பிறகு அவள் ரஷீதின் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டு படுத்துக்கொள்வாள். அவன் கைகள் அவளைத் தழுவிக் கொண்டு தன் உடலோடு அவளை இறுகச் சேர்த்துக்கொள்ளும். அப்படிப்பட்ட ஒரு நாள் காலையில் அவன் அவளிடம், ”வருசம் பூரா மழைக்காலமாயிருந்து, ராத்திரியெல்லாம் இடியும் மின்னலுமா இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்!” என்று சொன்னான்.

“எதுக்கு?” ஒன்றும் புரியாமல் அவள் கேட்டாள்.

”நீயாவே எம்பக்கத்தில வந்து என் ஒடம்போடு சேர்ந்து படுத்துக்கிற பாரு, அதுக்காகத்தான் ” குறும்புத்தனத்தோடு புன்னகை தவழ அவன் சொன்னான்.

“தூ… கொஞ்சங்கூட வெக்கமேயில்ல.” மாமிக்கு ஏதாவது கேட்டிருக்குமோ என்று எண்ணி அவள் முகம் சிவந்துபோய் அங்கிருந்து ஓடிவிட்டாள். திருமணமான புதிதில் மாமியாரின் முன்பு, கணவனோடு பேசுவதற்கே அவளுக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. விடிந்தபின் எழுந்து வெளிச்சத்தில் குளிப்பதற்கும்கூட அவளுக்கு மிகவும் கூச்சமாயிருந்தது. அதனால் மாமியார் எழுவதற்கு முன்பாகவே அவள் எழுந்து விடிவதற்குள் குளிர்ந்த நீரிலேயே குளித்து விடுவாள். அப்படிக் குளித்ததினால் காய்ச்சல் வரவழைத்துக்கொண்ட ஒருநாள் மாமியாரே சொன்னார், ”ஏன் இவ்வளவு வெக்கப்படறே? புருசன் பொண்டாட்டின்ன பின்னால இதெல்லாம் இருக்கிறதுதான். கல்யாணம் பண்ணிக்கிறதே அதுக்குதானே! காலையிலே எழுந்து இனிமே தண்ணிய காயவச்சி சுடுதண்ணியிலேயே குளி.’’

அதன்பிறகு மாமியாரே அவளுக்கு முன்பு எழுந்து தண்ணீர் அடுப்பைப் பற்றவைத்துவிடுவார். அப்போதெல்லாம் அவர் எவ்வளவு நல்லவராக இருந்தார்?

உ.றக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்ததினால் நாதிராவின் உடலெங்கும் வலியெடுக்கத் தொடங்கிற்று. இடியோசை கேட்டதும், தலையணையில் முகம் புதைத்து கைகளால் காதைப் பொத்திக் கொண்டு படுத்துக் கிடந்தாள். ‘இந்த எண்ணங்களிலிருந்தும் வேதனையிலிருந்தும் தனக்கு என்றும் மீட்பே இல்லையா?’

மறுநாள் காலை, தந்தை மீண்டுமொருமுறை நாதிராவை அழைத்து அறிவுரை கூறத் தொடங்கினார்: ‘’பாரும்மா, மறுபடியும் மழைக்காலம் தொடங்கிடுச்சு. இந்த மழக்காலம் முடியறவரைக்கும் நானு இருப்பேனோ இல்லையோ? உனக்கு ஒரு ஏற்பாடு ஆயிடிச்சின்னா நான் கொஞ்சம் நிம்மதியா கண்ண மூடுவேன் கொழந்தே!”

கேட்டுக்கேட்டு அலுத்துப்போன, தலையே வெடித்துப் போகும்படியான அதே புராணம். ‘ஒருவனை ஒரு இரவுக்காக மணந்துகொள்ள வேண்டும். மூன்று மாதங்கள் கழிந்தபின்னால் ரஷீதை மீண்டும் மணந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் நீ புதுவீட்டுச் சலீமையாவது மணந்துகொள். எப்படியோ நீ ஏதாவதொரு முடிவிற்கு வந்தேயாக வேண்டும்.’ ஒடுங்கிப்போன கன்னங்கள், குழி விழுந்த கண்கள், வெளிறிப்போன குறுந்தாடி-மீசைகளோடு இப்பொழுதோ இன்னும் சற்று நேரத்திலோ எந்த நேரத்திலும் இறந்து போகலாம் என்றிருந்த தந்தை விநயமாக இவ்வாறு கூறியதும் கண்ணீர் கரைபுரண்டது. அவள் அங்கே நிற்காமல் மெதுவாக வந்து தாழ்வாரத்தில் உட்கார்ந்துகொண்டு பீடித்தட்டை மடி மீது எடுத்து வைத்துக் கொண்டாள். விநயமே உருவெடுத்தாற்போல் குழைந்து, எதுவும் செய்ய முடியாதவராகத் தன்னைத் தனது தந்தை வேண்டிக்கொண்ட காட்சி அவள் கண்களிலிருந்து மறையாமலிருந்தது.

இரவு மழைக்கு பலாமரம் தடாரென்று முறிந்துவிழுந்தது. ஆடும் ஆட்டுக்குட்டிகளும் மாடுகளும் கன்றுகளும் அதைச் சுற்றி சேர்ந்து இலைகளைத் தின்றுகொண்டிருந்தன. பசுக்கள் விழுந்துகிடக்கும் இலைகளைப் பார்த்ததும் கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்தே கத்தத் தொடங்கின. அவற்றின் பரிதாபமான கதறலைக் கேட்டுக் கொண்டிருக்க முடியாமல் நாதிரா எழுந்து போய் அவற்றுக்கும் கொஞ்சம் இலைகளைக் கொண்டு வந்து போட்டாள். தாய், இரவு பலாமரத்திலிருந்து விழுந்துகிடந்த காயை எடுத்துவந்து கறிசமைக்க அரிந்து கொண்டிருந்தார்.

நாதிரா மீண்டும் வந்து தாழ்வாரத்தில் உட்கார்ந்தாள். இப்போது அவளது மன ஆழத்தில் ஊசலாட்டம் தொடங்கியது. அப்பா சொல்வதும் உண்மைதான். அப்பாவுக்குப் பிறகு . நம் வீட்டில் ஆண் துணை என்று யார் இருக்கிறார்? நாம் என்னவோ பீடிசுற்றிப் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், வீட்டுக்கொரு ஆண் துணை வேண்டுமல்லவா? நாம் வயசுப்பெண், அம்மாவோ உலகத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத பட்டிக்காட்டுப் பெண். இனிமேல் எப்படி நாளைத் தள்ளுவது? அப்பா சொல்லிய இந்த இரண்டு வழிகளில் நாம் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டும். இருந்தாலும் முதல் வழியைக் காட்டிலும் இரண்டாவது பரவாயில்லை. ஊஹும்… அதுவும் முடியாது. நம் அப்பா வயது இருக்கின்ற அந்தச் சலீமை நினைத்தாலே வாந்தி வருவதைப்போல் இருக்கின்றது. இந்தத் தொல்லை தாங்க முடியாமல் உயிரையே விட்டுவிடலாம்போல் இருக்கின்றது.’

வாசலில் காலடியோசை கேட்டு தலை நிமிர்ந்து பார்த்தாள் நாதிரா. பார்த்ததும் அவளுக்குத் தன்னைத்தானே நம்ப முடியவில்லை. ரஷீதின் தாய் ஆமினா பாப்புவை இடுப்பில் வைத்துக்கொண்டு அவளெதிரில் நின்றிருந்தார். பாப்பு அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயிருந்தான். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு ‘நாலுகாலில்’ தவழ்ந்து கொண்டிருந்தவன் இப்போது ஓடியாடும் சின்னஞ் சிறு பையனாகியிருந்தான்.

நாதிரா பீடித்தட்டைத் தன்னையறியாமல் கீழே வைத்தாள்; அவள் பார்வை பாப்புவின் மீது நிலைத்திருந்தது. மனதின் அடியாழத்திலெங்கோ நூற்றுக்கணக்கான ‘ நகரா’க்களின் பம்பம் முழக்கம் ஒரே நேரத்தில் முழங்கியதைப் போன்றிருந்தது. எழுந்து மாமியாரின் அருகில் வந்து குழந்தையை நோக்கி கையை நீட்டினாள்.

”வா பாப்பூ ” கண்களில் கண்ணீர் சிந்தினாலும் உதடுகள் மலர்ந்து புன்னகையை உதிர்த்தன. ஆனால், மகன் தாயை மறந்துவிட்டிருந்தான். ஒரு வருடத்திற்கு முன்பு கண்ட முகம். ஒன்பது மாதக் கைக்குழந்தையாக இருந்தபோது கண்ட அந்த முகத்தை இப்போது நினைவில் வைத்திருக்க முடியுமா? அவன் பாட்டியை வலுவாகத் தழுவிக் கொண்டு முகத்தைப் பக்கவாட்டில் சாய்த்துக் கொண்டான்.

நிறைவேறாத ஆசையில் அவளது கைகள் தானாகவே கீழிறங்கின. இதயம் வேதனையில் துடித்தது. ஒரு நொடியில் சமாளித்துக் கொண்டு, ”வாங்க” என்று மாமியாரை உள்ளே அழைத்தாள். ‘வாங்க மாமி’ என்று அழைக்க அவளது நாக்கு ஒத்துழைக்கவில்லை.

முன்பொரு முறை அவர்கள் வந்தபோது நடந்ததையெல்லாம் பாத்திமா மறந்துவிட்டார். உற்சாகமாக ஓடியாடி, வந்தவர்களுக்குத் தேநீர் தயாரித்தார். பேரனை எடுத்துக்கொள்ள முயற்சி செய்தார். ஆனால், அவன் பாட்டியை வலுவாகத் தழுவிக் கொண்டுவிட்டான்.

கடைசியில், நாதிரா அவன் அழ அழ வலுக்கட்டாயமாக அவனை எடுத்துக்கொண்டு, தன் தந்தையின் அருகில் சென்றாள். பேரனைப் பார்த்ததும் பாட்டனுக்கு முகம் ஒரு முறை மகிழ்ச்சியினால் மலர்ந்து போனது. பேரனை எடுத்து வைத்துக்கொள்ள அவர் கட்டிலில் தான் உட்கார்ந்த இடத்திலிருந்தே கை நீட்டினார். குழந்தை தான் அழுவதை மறந்து பாட்டனின் முகத்தையே மலங்க மலங்கப் பார்த்தான்.

Happy muslim girl sit on swing illustration

சற்று நேரம் அங்கிருந்துவிட்டு நாதிரா குழந்தையை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரையெங்கும் சுற்றிவந்தாள். அவனும் அழுவதை மறந்து ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தான். நதியில் போய்க் கொண்டிருந்த தோணிகளை மகனுக்குக் காட்டினாள். கரையோரமாகக் கூட்டங் கூட்டமாக வந்த சிறுசிறு மீன்களைக் காட்டினாள். மாமரத்தடியில் இரவு காற்றுக்கு விழுந்திருந்த ஒரு பழத்தை எடுத்துக் குழந்தையின் கையில் கொடுத்தாள். மகனின் நெற்றி, கன்னங்களில் முத்தமிட்டுக் குழந்தையை ஆரத் தழுவி அணைத்துக்கொண்டு கொஞ்சி மகிழ்ந்தாள்.

”நாதிரா” தாயின் அழைப்பைக் கேட்டுத் திடுக்குற்றாள் நாதிரா. வானத்தில் பறவையைப் போல பறந்து கொண்டிருந்தவளுக்கு, முகில்களைப் போல் மிதந்துகொண்டிருந்தவளுக்குத் திடீரென்று பூமியில் வந்து விழுந்ததைப் போலாயிற்று. முகம் வாடிப் போயிற்று. அவள் மெதுவாக அடியெடுத்து வைத்து வீட்டுக்குள் போனாள். அதுவரை அழுகையை நிறுத்தியிருந்த குழந்தை பாட்டியைப் பார்த்ததும் அழத்தொடங்கினான். தாயின் கையிலிருந்து நழுவிப் பாட்டியின் அருகே ஓடினான்.

“பாருங்க உம்மா, எவ்வளவு சொன்னாலும் இவ இந்த ரெண்டாவது கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்றா. ஒரு ராத்திரிக்கான கல்யாணம் இல்லாம இவங்க புருசன்-பொண்டாட்டி ஒண்ணா சேர்றது முடியவே முடியாதே? திருமறையில சொன்னத மீறிப் போக முடியுமா? அவளுக்கு நீங்களே கொஞ்சம் புத்தி சொல்லுங்க.” பாத்திமா சம்பந்தியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

” திருமறைய எப்பிடி மீறிப் போக முடியும்? அது என்ன மௌல்வி சாஹிபுதானே சொன்னதா? குர்-ஆன்ல அப்படியிருக்குதுன்னா அதும்படி நடந்துதானே ஆகணும்? ஒரு ராத்திரிக்குதானே? எப்படியாவது இத ஒத்துக்கம்மா. ரஷீதுக்கு ஒண்ணும் தடையில்ல. அப்புறம் உங்க புருசன் பொண்டாட்டிய யாரும் பிரிக்கவே முடியாது.” தாய் தந்தையுடன் மாமியாரும் சேர்ந்து கொண்டார்.

என்னவோ, இன்றைக்கு முன்புபோல ஒரேயடியாக `முடியவே முடியாது ‘ என்று சொல்லிவிட நாதிராவால் முடியவில்லை; நாக்கே புரளவில்லை. அவள் தலை தாழ்த்தி உட்கார்ந்துவிட்டாள்.

“பாரும்மா, இந்தக் கொழந்தைக்காகவாவது யோசனை பண்ணிப் பாரு” என்று சொல்லிக்கொண்டே ஆமினா எழுந்து குழந்தையை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டதும் நாதிராவுக்குக் குடலே புரண்டு வாய்க்கு வந்துவிட்டதைப் போலிருந்தது.

(தொடரும்)

படைப்பாளர்

சாரா அபுபக்கர்

கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் ஏராளமாக எழுதியிருக்கிறார். ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்…’ மிகவும் புகழ்பெற்ற நாவல். சமூகத்தை நோக்கிக் கேள்விகளை அள்ளிவீசிய நாவல். மொழிபெயர்ப்பாளர். 85 வயதிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.