இனிமேல் தான் தன் அன்புக் கணவனை, தன் குழந்தையை அடைவது முடியவே முடியாது. ஓர் இரவுக்கு ஒருவனை மணந்து மீண்டும் இந்தக் கணவனை அடைய வேண்டும். இவ்வளவிற்கும் இங்கு தான் என்ன குற்றம் செய்தோம்? பால்குடிக்கும் கைக்குழந்தையை எடுத்துக் கொண்டுபோய், தலாக் கொடுத்து தன்னை வஞ்சித்தவர்கள், கொடுமைப்படுத்தியவர்கள் மற்றவர்கள் தாம். இருந்தும் இன்னும்கூட தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பவள் நான் தான். இது என்ன நியாயம்? ஆண் என்ன செய்தாலும் அதற்குரிய தண்டனை பெண்ணுக்கு. ஓர் இரவைத் தன் கணவனே வேறொருத்தியோடு கழிக்க வேண்டுமென்றால் எப்படியிருக்கும்? உம்… ஆணுக்கென்ன? சந்தோஷமாகவே ஏற்றுக்கொள்வானே? ஆண்களுக்கு அதனால் எந்த அழுக்கும் தீட்டும் ஒட்டிக் கொள்ளாதே? ஆனால் பெண்ணுக்கு, அப்படியிருக்க முடியுமா?

ஒருவேளை தான் ஏதாவது இதற்குச் சம்மதித்தாலும் தன் கணவனுக்குத் தன் மீது அசூயை, அதிருப்தி ஏற்படாது என்பதற்கு என்ன ஆதாரம்? ஓர் இரவு இன்னொருவனுடன் இருந்தவள் என்பதை சகித்துக்கொண்டு அருவெருப்பில்லாமல் அவன் தன்னை ஏற்றுக்கொள்வானா? முன்பிருந்ததைப் போலவே, தூய்மையான அன்பும் புனிதமான தாம்பத்திய உறவும் அங்கு நிலவுவது சாத்தியமா? ஒருவேளை மறுநாள் தன் கணவன் அருவெருப்பினால் தன்னை மறுபடியும் மணந்துகொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டால் அப்போது மௌல்வி என்ன சொல்வார்? அப்போது எல்லாமே வீணாகப் போய் விடுமே? அப்போது மௌல்வி ‘போகட்டும், பரவாயில்லை’ என்பாரா? இந்த ஆண்கள் சொல்கிறபடி ஓர் இரவு ஒருவனோடு இருக்கவும் ஒருபொழுது தன் உடலை ஒருவனுக்கு ஒப்படைக்கவும் தான் என்ன ஆடுமாடா? உள்ளம் உணர்வு ஏதுமில்லாத ஒரு மிருகம் என்பதைப் போலல்லவா இவர்கள் என்னைக் கருதுகிறார்கள்? பெண் ஒரு மனிதப் பிறவியே இல்லை என்பதைப் போலல்லவா இவர்கள் நடந்துகொள்கிறார்கள்? என்னவானாலும் சரி, யாரோ ஒருவனுடன் ஓர் இரவைக் கழிக்க, அவன் சட்டவிதிகளின் படியே தன்னை நிகாஹ் செய்துகொண்டவனேயானாலும் அவனுடன் ஓர் இரவைக் கழிக்க தன்னால் முடியவே முடியாது.

இப்போது ரஷீத் மீது அவளுக்கிருந்த இனிமையான உணர்வுகள் ஒரேயடியாக எரிந்து சாம்பலாகிவிட்டதைப் போலாயிற்று. தன் தந்தை கேட்டவுடனே அவன் ஏன் ‘தலாக்’ கொடுத்திருக்க வேண்டும்? தன்னிடம் விசாரிக்காமலேயே தன்னைக் கேட்காமலேயே முன்பின் எண்ணிப் பாராமல் மூன்று முறை தலாக் என்று சொல்லிவிட்டால், எல்லாப் பிணைப்புகளும் பந்தங்களும் அறுந்துப் போனதாகி விடுமா? தன் ரத்தம் – ஊணையெல்லாம் பகிர்ந்து கொண்டு பத்து மாதம் வயிற்றில் தாங்கி, பிறப்பு-இறப்புகளுக்கிடையில் போராடி பெற்றெடுத்த குழந்தையின் மீது தனக்கெந்த உரிமையுமில்லை. தன் இன்பத்திற்காக, தன் காம உணர்வுகளைத் தீர்த்துக்கொள்வதற்காக மனைவியைப் பயன்படுத்திக்கொண்ட கணவனுக்கு அந்தக் குழந்தை மீது உரிமை; மனைவிக்குத் தலாக் கொடுத்த நாளிலிருந்து அந்தக் குழந்தைக்கு அவனே உரிமையாளன். குழந்தை, கணவன் யாருமே தன்னுடையவரல்ல. தனக்கு இன்னும் இந்த வாழ்க்கையில் எதுவுமே தேவையில்லை. தான் பெருமைப்பட்டுக் கொண்ட தன் அன்பிற்குரிய கணவனின் வீட்டிற்குப் போக முடியாமல், வீட்டுக்குச் சொந்தக்காரியாக உரிமையோடு வாழ முடியாதபோது தான் வாழ்ந்துதான் என்ன பயன்? எல்லோருமாகச் சேர்ந்து என்னை நிம்மதியாகச் சாகவிட்டால் போதும்.

மஹமத்கானின் நோய் அதிகமாகத் தொடங்கியது. துறைக்குப் பக்கத்திலிருந்த மசூதிக்குக்கூடப் போய்வர முடியவில்லை. வீட்டிலேயே நமாஜ் செய்து கொண்டிருந்தார். வீட்டுப் பொருளாதார நிலைமை மேலும் மோசமாயிற்று. நன்றாகப் பால் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு நல்ல ஆட்டையும் அதன் இரு குட்டிகளையும் விற்று வந்த பணத்தைக் கொண்டு, வீட்டிற்கே வைத்தியரை வரவழைத்து கணவனுக்கு மருந்து, பத்தியம் என்று செலவு செய்தார் பாத்திமா. மஹமத்கான் மகள் ஜமீலாவை ஒருமுறை பார்க்க ஆசைப்பட்டபோது, தங்கள் உறவினர் ஒருவரை ஜமீலாவின் வீட்டிற்கு அனுப்பி அவளை அழைத்துவரச் செய்தார் பாத்திமா. கணவனின் வியாதி, மகளின் கருகிப்போன வாழ்க்கை, குடும்பத்தின் பொருளாதாரத் தொல்லைகள் ஆகியவற்றால் அவர் ஏற்கெனவே மிகவும் நொடிந்து போயிருந்தார்.

தங்கையைப் பார்த்ததும் நாதிரா, பாலைவனத்தின் நடுவில் ஒரு குளிர்ந்த நீரூற்றைக் கண்டதைப் போல் மகிழ்ந்து போனாள். தனது கஷ்டத்தையும் சோகத்தையும் தான் ஒருத்தியாகவே எண்ணியெண்ணி மருகி உள்ளுக்குள்ளாகவே விழுங்கிவிழுங்கிச் சோர்ந்து போயிருந்த அவள், தங்கையைப் பார்த்ததும் சற்று நிம்மதியடைந்தாள். ஜமீலா வந்தவுடன் தந்தையின் அருகில் சென்று அவரின் உடல் நலம் விசாரித்தாள். வியாதியினால் வாடி வற்றிப் போயிருந்த தந்தையின் உடம்பைப் பார்த்து அவள் விக்கித்துப் போய்க் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். சற்று நேரம் தந்தையினருகில் இருந்துவிட்டு பிறகு மெதுவாக வந்து அக்காவின் அருகில் உட்கார்ந்தாள்.

Muslim girl paying respect to mother

நாதிரா பீடித் தட்டைக் கீழே வைத்துவிட்டு தங்கையின் முகத்தைப் பார்த்தாள். அந்தக் கண்களில் முன்பு இருந்த ஒளி இல்லையே? தங்கையின் கன்னங்கள் வாடிப் போயிருக்கின்றனவே? அவள் பார்வை தங்கையின் உடம்பின்மீது உலவித் தங்கையின் கைகளில் வந்து நின்றது.

”ஜமீலா, உங்கையில் ஒவ்வொரு வளையல் தானே இருக்குது? இன்னொரு ஜோடி வளையல் என்ன ஆச்சு?” என்று படபடப்போடு அவள் தங்கையிடம் கேட்டாள்.

ஜமீலா சற்றுநேரம் தலை தாழ்த்தியவாறு உட்கார்ந்திருந்தாள். பிறகு தலையை நிமிர்த்தி அக்காவின் முகத்தைப் பார்த்தாள். அவள் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றிருந்தது.

“சொல்லு ஜமீலா, என்ன ஆச்சு?” நாதிரா கட்டாயப்படுத்தினாள்; ஜமீலா மெதுவாக உள்ளேயிருந்த தாய்க்குக் கேட்காதவாறு சொல்லத் தொடங்கினாள்.

”என் சின்ன நாத்தனார் முனிரா இருக்கா இல்லியா? அவள் கல்யாணத்துக்கு முன்னால என் மாமியார் ரெண்டு ஜோடி வளையல் போடறோம்னு ஒத்துகிட்டிருந்தாங்களாம். இவங்களால இதுவரைக்கும் சொன்னபடி போட முடியலே. இப்போ ரெண்டு கொழந்தைங்க ஆன பின்னால அவள அவ புருசன் வீட்டுக்காரங்க எங்க வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. வளையல் போடலேன்னா தலாக் குடுத்துடுவோம்ன்னு மெரட்டத் தொடங்கினாங்க. எங்க வீட்டுல இப்பவே நெறைய பேரு இருக்கிறாங்க. இன்னும் இவளையும் இவளோட ரெண்டு புள்ளைங்களையும் காப்பாத்தறவங்க யாரு? அதுக்காகத்தான் எங்க மாமி என் வளையலைக் கொடுக்கச் சொல்லி என்னெ கட்டாயப்படுத்தினாங்க. எங்க வீட்டுக்காரரும் அதே புடிவாதம் புடிச்சாரு. இனிமே நான் என்ன பண்றது? கழட்டி குடுத்துட்டேன். அப்புறம்தான் அவ புருசன் வீட்டுக்குப் பொறப்பட்டுப் போனா” என்று சொல்லி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

”இது நல்லாயிருக்குது. உம்மாவும் வாப்பாவும் கஷ்டப்பட்டு செய்து உன்கைக்குப் போட்ட நகை உனக்கே இல்லேன்னு ஆயிடுச்சே?” என்று மருகினாள், நாதிரா. பிறகு யாரும் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தனர். ஒவ்வொருத்தருடைய எண்ணமும் ஒவ்வொரு திசையில் ஓடியது. நாதிராவின் மனம் அதற்குள்ளாகவே காவள்ளிக்குப் பறந்து சென்று அவளது மாமியாரைச் சுற்றிசுற்றி வந்தது.

அப்போது பாப்பு இன்னும் பிறந்திருக்கவில்லை. நாதிராவின் பக்கத்து வீட்டுத் தோழியொருத்தி காலுக்கு வெள்ளிக்கொலுசு செய்து கொண்டு வந்து நாதிராவிற்குக் காட்டினாள். நாதிரா அதைக் கையில் பிடித்தபடி இப்படியும் அப்படியுமாகத் திருப்பித்திருப்பிப் பார்த்து மிகவும் பாராட்டிக் கொண்டிருந்தாள். தன் மாமியாருக்கும் காட்டி
மிகவும் நன்றாக இருக்கிறது என்றாள். தனக்கும் அப்படியொன்று வேண்டுமென்றுகூட எதுவும் சொல்லவில்லை.

ஆனால், அன்று இரவு ரஷீத் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தாய் வந்து மகனின் அருகில் அமர்ந்து பேச்சைத் துவக்கினாள்.

”பாரு… ரஷீது, அந்தப் பக்கத்துவூட்டுப் பொண்ணு காலுக்கு வெள்ளி கொலுசு பண்ணிப் போட்டுகிட்டிருக்கிறா… நம்ம நாதிராவுக்கும் அந்த மாதிரி பண்ணிடனும். ரொம்ப நல்லாயிருக்கும்.”

”இப்போ எங்கிட்ட பணம் எதுவுமில்லம்மா. பின்னால எப்பவாவது பண்ணலாம்.” மகன் தாயின் கோரிக்கையை அவ்வளவு விரைவாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.

”இப்போ நான் உங்கிட்ட பணத்தப் பத்தியா கேட்டேன்? நம்ம ரெண்டு ஆட்டுக்குட்டிங்க இருக்கு இல்ல, ரெண்டுமே கடாகுட்டிங்க. அதுங்கள வச்சுகிட்டு என்னா பண்றது? அதுங்கள வித்து வர்ற பணத்துல வெள்ளி வாங்கி அவளுக்கொரு கொலுசு பண்ணிடலாம்.”

தாய் அதற்குள்ளாகவே தீர்மானித்து விட்டிருந்தார். அவருடைய ஆசைப்படியே வெள்ளிக் கொலுசுகளும் நாதிராவின் கால்களை அலங்கரித்து அழகு செய்தன.

அன்று இரவு நாதிரா வீட்டு வேலையெல்லாம் முடித்து விட்டுத் தங்களுடைய அறைக்கு வரும்போது ரஷீத் கட்டிலில் படுத்துக்கொண்டு விளக்கு வெளிச்சத்தில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தான். நாதிரா வந்து கட்டிலில் அவன் அருகில் அமர்ந்ததும் அவன் கையிலிருந்து பத்திரிகை நழுவிற்று. ஒருகை அவள் இடுப்பை வளைத்தது. இன்னொரு கை மெதுவாக அவளைத் தன் மார்பு மீது சாய்த்துக்கொண்டு அவளது தலையை வருடிக் கொடுத்தவாறே, ”சொல்லு, வெள்ளிக் கொலுசு பண்ணிப் போட்ட துக்கு எனக்கு என்ன குடுக்கப்போறே?” குறும்புத்தனத்தோடு கேட்டான் அவன்.

அவனது நெஞ்சில் தலைவைத்து அவன் இதயத்துடிப் பின் லயத்தில் ஆழ்ந்திருந்தவள் தலையை நிமிர்த்தி, கண்களை விரித்து குழந்தையைப் போல் முகத்தை மலர்த்தி, ”எங்கிட்ட என்னயிருக்குது உங்களுக்குக் குடுக்கிறதுக்கு?” என்று கேட்டதும், அவன் அவளை இறுக அணைத்து இதழ்களின் மீது முத்தமழை பொழிந்தான். அந்தக் கணத்தில் அவள் இந்த உலகையே மறந்து அவன் மார்பில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். பிறகு ‘மெதுவாகத் தலைநிமிர்த்தி, ” நீங்களும் மாமியும் என்னென்னைக்கும் என்னெ இப்படியே வச்சிருந்தா போதும். எனக்கு வேற ஒண்ணும் வேண்டாம்” என்றாள்.

ரஷீத் தலாக் கொடுத்த பிறகு அவள் எல்லாப் பொருட்களோடு அந்தக் கொலுசையும் அவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டாள்.

“அக்கா, எங்கெ இருக்கிறே?” தங்கையின் அழைப்புக் கேட்டு நாதிரா உணர்வு பெற்றாள். பிறகு மௌனமாக சிரித்தவாறே, ”அங்கே, தூரத்துல இருக்கிற காவள்ளிக்குப் போயிருந்தேன்” என்றதும் தங்கை அக்காவின் தோளில் தலைசாய்த்துத் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே, ”அக்கா, உன்னையும் பாப்புவையும் நெனைச்சிகிட்டா என் வயித்துல நெருப்ப அள்ளிக் கொட்டின மாதிரி இருக்குது” என்றாள்.

நாதிராவின் கண்ணீர் வற்றிப் போயிருந்தது. ”நீ எதுக்கு வீணா வேதனைப்படறே? அதெல்லாம் அந்த எல்லாம்வல்ல அல்லா என் தலையிலெ எழுதினது. தலையெழுத்த மாத்த முடியுமா?” என்று தங்கையைச் சமாதானப்படுத்தினாள்.

அன்று இரவு சாப்பிட்டு முடிந்ததும் இருவரும் நாதிராவின் அறையில் கட்டிலில் படுத்திருந்தனர். அப்பா வயிற்று வலி தாங்காமல் படுக்கையில் புரண்டுகொண்டிருப்பது தெளிவாகக் கேட்டது. இருவரும் பேசிக்கொண்டே படுத்திருந்த போது தொலைவில் எங்கிருந்தோ பாட்டுக்குரல் கேட்டது. ”அக்கா, தோணியில் கல்யாண ஊர்வலம் போகுது போலத் தெரியுது. வா ஆத்தங்கரைக்குப் போலாம்.” ஜமீலா நாதிராவைக் கூப்பிட்டாள்.

இருவரும் எழுந்து ஆற்றங்கரைக்கு வந்து தாங்கள் சிறுவயதில் உட்கார்ந்து கொள்ளும் பாறையின் மீது உட்கார்ந்து தண்ணீரில் கால்களைத் தொங்கவிட்டனர். பௌர்ணமி இரவாயிருந்ததால் அலை அலையாகப் பொங்கி எழுந்த ஆற்று நீர் பாறையின் அடிப்பகுதியை மூழ்கடித்தது. இரண்டு பேருடைய புடவைகளும் முழங்கால் வரை நீரில் நனைந்து கொண்டிருந்தன.

தெளிவில்லாமல் காதில் விழுந்து கொண்டிருந்த பாட்டு, தெளிவாகக் கேட்கத் தொடங்கியது. அதே பாட்டு, ராஜகுமாரி – மந்திரிமகனின் காதல் கதை. நாதிராவுக்கு இந்தப் பாட்டுகளென்றால் மிகவும் விருப்பம். இரண்டு பேரும் சிறுமியராக இருந்தபோது பாத்திமா இந்தப் பாட் டுகளைப் பாடிக் குழந்தைகளுக்கு அதில் வரும் கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்பார். ராஜகுமாரியின் காதல் ஏக்கப் பாட்டை பாத்திமா நன்றாகப் பாடுவார். அப்பொழுதெல்லாம் அதைக் கேட்டு நாதிராவுக்கு அழுகை வந்துவிடும். பிறகு, ராஜகுமாரியும் மந்திரி மகனும் மீண்டும் சந்தித்து ஒன்று சேரும் பாட்டை அம்மாவைப் பாடவைத் துக் கேட்ட பிறகுதான் மனம் சமாதானம் அடையும்.

இப்போது பாட்டு மிகவும் தெளிவாகக் கேட்டது. தோணிகள் அருகிலேயே வந்து கொண்டிருந்தன. மூன்று தோணிகளில் ஆண்களும் ஒரு தோணியில் பெண்களும் நிறைந்திருந்தார்கள். ஒரு தோணியிலிருந்த ஆண்கள் கையால் தாளம் போட்டுக் கொண்டு ராஜகுமாரியும் மந்திரி மகனும் மீண்டும் சந்தித்து ஒன்றுசேரும் கட்டத்தை மிக இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தனர். தோணியிலிருந்த பெட்ரோமாக்ஸ் விளக்கின் ஒளிபட்டு ஆற்றுநீர் பளபளத்து நடனமாடியது. பாட்டைக் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்த வீடுகளில் இருந்தவர்களும் ஆற்றங்கரைக்கு வந்து இந்தத் திருமண ஊர்வலத்தைப் பார்க்கத் தொடங்கினார்கள்.

தோணிகள் மெதுவாக முன்னேறி வடக்குத் திசையில் புறப்பட்டுப் போயின. பாட்டுச் சத்தம் தெளிவற்றதாகி பிறகு நின்றே போய்விட்டது. ஆற்றங்கரைக்கு வந்தவர்களெல்லாம் தத்தம் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர். நாதிராவும் ஜமீலாவும் இன்னமும் அங்கேயே உட்கார்ந் திருந்தனர்.

ஜமீலா அக்காவின் அருகில் நகர்ந்து மெதுவாக, ”அக்கா, அத்தான் எவ்வளவு நல்லவங்க இல்லியா… அவங்க இன்னும் வேற கல்யாணம் பண்ணிக்கலையாமே?” நாதிராவின் மறுதிருமணம் குறித்து ஏதுமறியாத ஜமீலா கவலை தோய்ந்தவளாக இப்படிக் கேட்டதும், அதுவரை இதயத்தைக் கனக்கச் செய்திருந்த வேதனை, அடக்கி வைத்திருந்த துக்கம் எல்லாம் அந்தக் கணத்தில் நாதிராவின் சுயக்கட்டுப்பாட்டையும் மீறி மடை திறந்த வெள்ளமாகப் பாய்ந்து அழுகையாக வெளிவந்தது. தங்கையைத் தழுவிக் கொண்டு அவளது தோளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு மனம்விட்டு அழுதாள் நாதிரா. அக்காவின் துக்கத்தில் தங்கையும் பங்காளியானாள். இதயமே நொறுங்கிப் போகும்படி இருவரும் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு அழுது கொண்டிருக்கும்போது சந்திரகிரி ஆறு ஊமைப் பார்வையாளியாகத் தன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தாள்.

(தொடரும்)

படைப்பாளர்

சாரா அபுபக்கர்

கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் ஏராளமாக எழுதியிருக்கிறார். ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்…’ மிகவும் புகழ்பெற்ற நாவல். சமூகத்தை நோக்கிக் கேள்விகளை அள்ளிவீசிய நாவல். மொழிபெயர்ப்பாளர். 85 வயதிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.