எப்போதுமே ஒரு நாட்டின் ராணி பதவி அலங்காரமாகவே வைக்கப்படும். அவர்களுக்கென்று எந்தவிதமான உரிமைகளும் பொறுப்புகளும் கிடையாது. அலங்கரிக்கப்பட்ட பொம்மை போலத்தான் இருப்பார்கள். ஆனால், வெளியில் இருந்து பார்க்கும் மக்களுக்கு அவர்கள் சகல சுக போகங்களை அனுபவித்து வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்கள் என்று தோன்றும்.          

தங்கக் கூண்டில் அடைபட்ட கிளி பாதுகாப்பாக, உணவுக்குப் பஞ்சமின்றி இருப்பதாகத்தான் தோற்றமளிக்கும். ஆனால், அதன் வெட்டப்பட்ட சிறகுகள் குறித்த பிரக்ஞை யாருக்கும் இருப்பதில்லை. அந்தக் கிளி உள்பட. நம் ஆதிகுடி மக்கள் தாய்வழிச் சமூகமாகத்தான் இருந்தார்கள். காலப்போக்கில் அது தந்தை வழிக்கு மாறிற்று. இருந்தாலும் பதவிகளில் பெண்ணை ஒப்புக்குதான் வைத்திருந்தார்கள்.

இதற்குச் சிறந்த சமகால எடுத்துக்காட்டாக மறைந்த இங்கிலாந்து ராணியைச் சொல்லலாம். அவர் அந்தச் சிம்மாசனத்தை அலங்கரித்தவர் மட்டுமே. அவரது இருப்பு பெரிதாகத் தெரியவில்லை. இறப்பும் அப்படியே. ஆனால், அவரது மருமகள் டயானா சர்ச்சைகளின் நாயகியாக இருந்தார். சாமானியக் குடும்பத்தில் பிறந்ததால் அவர் சாமானியர்களை நேசித்தார். மக்களும் அப்படியே. டயானா மீது அன்பைப் பொழிந்தார்கள். அரண்மனையின் கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் டயானாவுக்குக் குறுக்கே நிற்க முடியவில்லை. அவரைக் கட்டுப்படுத்த எலிசபெத்தால்கூட இயலவில்லை.           

இங்கிலாந்து மட்டுமல்ல. உலகின் எல்லா நாடுகளுமே பெண்களின் கையில் அதிகாரத்தைத் தர மறுத்தன. வீட்டு அதிகாரமே அவள்‌ கையில் இல்லாதபோது நாட்டு அதிகாரம் எப்படி அவளுக்கு வந்தடையும்? எங்காவது ஆண் வாரிசு இல்லையென்றால் மட்டுமே அங்கு பெண் அதிகாரம் படைத்தவள் ஆகிறாள். அதுவும் அந்த இடத்துக்குரிய ஆண் வாரிசு வந்தவுடன் அவருடைய பொறுப்புகள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்படுகின்றன. இப்படிச் சரித்திரத்தில் காணாமல் போன ராணிகள் ஏராளம்…

குறிப்பிட்ட சிலரைத் தவிர ஏராளமான ராணிகள் அந்தப்புரத்திலேயே முடக்கப்பட்டார்கள். அவர்களது அழகு மட்டுமே ஆராதிக்கப்பட்டது. அவர்களின் அறிவு அன்றைய அரசர்களுக்குத் தேவைப்படவில்லை. விழாக்காலங்களில் அரசருடன் நகர் உலா செல்லவும் கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்ளவும் மட்டுமே ராணிகள் பணிக்கப்பட்டார்கள்.            

போர்க்காலங்களில் கணவனைப் போருக்கு அனுப்பிவிட்டு, இறைவனைத் தொழுது கிடந்தார்கள். போரில் அரசன் இறந்து விட்டால் உடன்கட்டை ஏறினார்கள். அல்லது ஏற்றப்பட்டார்கள். எதிரி கோட்டைக்குள் நுழைந்ததும் தீ வளர்த்து உயிர் துறந்தார்கள். அவர்களது அந்தரங்க வாழ்க்கை மிகவும் கடினமானது.

இப்படித்தான் ஏறத்தாழ எல்லா இந்திய மன்னர்களும் மகாராணிகளை நடத்திவந்தார்கள். கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை. ஆனால், வெளியில் பார்ப்பவர்களுக்கு மகாராணி என்ற ஒரு கம்பீரம்தான்‌ கண்ணில் படும்.

நமது சமகால ராணி எலிசபெத் காலத்திற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டார். அதனாலேயே அவரால் நெடுங்காலம் ராணியாக நிலைத்திருக்க முடிந்தது. அவரது வாகனம் தனிச்சிறப்பு பெற்றது. பதிவெண் இல்லாதது. அவருக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. அவர்மீது யாரும் எந்தவிதமான வழக்குகளும் பதிய இயலாது. இப்படிப் பல்வேறு தனிப்பட்ட சலுகைகள் இருந்தாலும் அத்தனைக்கும் அவர் கொடுத்த ஒரே விலை தனது சுதந்திரத்தையும் முடிவெடுக்கும் உரிமையையும்தான்.

அவரது தூக்கமும் விழிப்பும் பிறரால் கட்டுப்படுத்தப்பட்டன. அவரது உடைகள் பிறரால் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவரது உணவு பிறரால் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. அவர் யாரைச் சந்திக்க வேண்டும், யாருடன் பேச வேண்டும், யாருடன் கைகுலுக்க வேண்டும் என்று மற்றவர்கள்தாம் தீர்மானித்தார்கள். அவர் சிரிப்பது, நடப்பது, பேசுவது என்று யாவற்றையும் பிறர்தான் கையாண்டார்கள். இது தனிமையில் எப்படிப்பட்ட மன அழுத்தத்தை அவருக்குத் தந்திருக்கும் என்று யாரும் யோசித்திருக்கிறார்களா என்ன? ஆனால், அத்தகைய சூழலையும் எதிர்கொண்டு அவர் தனது கம்பீரமான ஆளுமையையே வெளிப்படுத்தினார்.  

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.