அம்மா, தம்பி, நான் மூவரும் 2002ஆம் ஆண்டு பல்லடத்திற்கு அருகிலுள்ள பொங்கலூரிலிருந்து சத்தியமங்கலத்திற்குக் குடிபெயர்ந்தோம். காடு வளர்ப்பது, இயற்கை வேளாண் ஆய்வகம் அமைப்பது, தாய்த்தமிழ்ப் பள்ளி நிறுவுவது, அருங்காட்சியகம் ஒன்று அமைப்பது ஆகியன எங்கள் திட்டமாக இருந்தது. ஆனால், காடு வளர்ப்புத் தவிர வேறு எதுவும் செய்ய இயலவில்லை.

காடு வளர வளரப் பறவைகள் நிறைய வரத் தொடங்கின. நாகணவாய் (மைனா) இணையொன்று மாட்டுக் கொட்டகையிலும், வீட்டிற்கருகிலும் கூடமைக்க இடந் தேடிக்கொண்டிருந்தது. அவற்றின் தேடலும் கூடு கட்டப் பொருள்களைச் சேர்ப்பதும் மும்முரமாகத் தொடர்ந்தது. எங்கள் அம்மாவுக்கு அவற்றைக் காண்பது மிகுந்த விருப்பமாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தது.

சில நாள்கள் தேடலுக்குப் பின் வீட்டருகில் கூடமைக்க அவை முடிவு செய்து அதற்கான பொருள்களைச் சேர்த்துக் கொண்டிருந்தன. அவை பெரும்பாலும் அட்டைகள், தாள்கள் போன்றவற்றையே எடுத்துச் சென்றன.

ஒருநாள் என்ன நினைத்ததோ விரைந்து வந்த ஒன்று மின்மானி இருந்த பெட்டிக்குள் புகுந்து அங்கிருந்த மின்னட்டையைக் கவ்விப் பறந்தது. பார்த்துக் கொண்டிருந்த அம்மா அதை விட்டியதில் சற்றுத் தொலைவில் அட்டையைக் கீழே போட்டுவிட்டுப் பறந்துவிட்டது. அம்மா அதை எடுத்து வந்தார்.

அன்று அதற்கு அம்மாவிடம் நன்றாகத் திட்டு விழுந்தது. அடுத்த நாள் முதல் அதைக் காணோமென்றால் அம்மா தேடத் தொடங்கிவிடுவார். அவையும் வழக்கம் போல் வந்து சென்றன. மின் பெட்டியை மட்டும் நாங்கள் சந்தியி ன்றி நன்றாகப் பூட்டி விட்டோம். அன்று அம்மா பார்க்காமல் இருந்திருந்தால் நாங்கள் மின் அட்டையைக் கண்டுபிடித்திருக்கவே முடியாது.

இப்படியாகக் குருவிகள் எங்கள் குடும்ப உறுப்பினராகி விட்டன. மழை நாளில் எங்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது என்பதை அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை!

வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் ஓங்கி உயர்ந்த ஒரு மருத மரம் இருந்தது. பதினைந்து ஆண்டுகளில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்ததால் அது மிகப் பெரிதாக வளர்ந்திருந்தது. பல பறவைகளின் புகலிடமாக இருந்த அது 2016 ஆம் ஆண்டு நிலவிய கடும் வறட்சியில் பட்டுப்போனது. (அது வீழ்ந்தபோது நாங்கள் பட்ட துயருக்கு அளவில்லை.)

ஒரு நாள் மழைக் காலத்து மாலை நேரத்தில் கருமுகில்கள் சிறு மழையொன்றைச் சிந்தியிருந்தன. அதைத் தொடர்ந்து மருத மரத்தில் நிறையப் பறவைகள் வந்து சேரத் தொடங்கின. முதலில் கருங்கொண்டை நாகணவாய்கள் (rosy starling) வந்தன. அவை மிக அழகாக இருக்கும். அவை எப்போதும் இங்கிருப்பன அல்ல. குளிர்காலத்தில் வலசை வருவன.

அடுத்ததாகக் கரிக்குருவிகள் வந்தன. அவை வீரம் மிகுந்தவை. பருந்து, காகம் போன்றவற்றையும் மிக்க வீரத்துடன் விரட்டிச் செல்லும். பாதுகாப்பை நாடும் சிறு பறவைகள் கரிக்குருவியின் வீரத்தைச் சார்ந்து அவை கூடமைக்கும் இடத்தில் தாமும் தங்குமெனப் படித்திருக்கிறேன்.

கரிக்குருவி இனத்தைச் சேர்ந்த வெள்ளை வயிற்றுக் கரிக்குருவியும் வந்துவிட்டது. அதன் அழைப்பொலி மிக இனிமையாக இருக்கும்.

பின்னர் சின்னான்கள் வந்தன. கொள்ளையழகுப் பஞ்சுருட்டான்கள் கூவித் தாவி அமர்ந்தன. ஐரோப்பியப் பஞ்சுருட்டான்கள் வலசை வருவன; பச்சைப் பஞ்சுருட்டான்கள் இங்கேயே இருப்பன.

அடுத்ததாக வெண்தொண்டைச் சில்லைகள் வந்து சேர்ந்தன. (அவை ஒருமுறை எங்கள் பலகணியில் (சன்னலில்) கூடமைத்துக் குஞ்சு பொரித்துச் சென்றன. அவை குஞ்சுகளுடன் வெளியேறும் வரை நாங்கள் பலகணியைத் திறக்க இயலவில்லை.)

அதன் பிறகு கருஞ்சிட்டு இணை ஒன்றும், நாகணவாய்கள், வால் காக்கை, காட்டுக் கீச்சான் ஆகியனவும் வந்து சேர்ந்தன.

அனைத்தும் ஓரிடத்தில் கூடிய காட்சி மிக அழகாக இருந்தது. கூடலுக்கான காரணம்தான் அப்போது எங்களுக்குத் தெரியவில்லை.

சற்று நேரத் தேடலுக்குப் பின்னர்தான் புரிந்தது: மழைக்குப் பின் புற்றீசல்கள் நிறைய வெளியேறிப் பறவைகளுக்கு விருந்தாகிக் கொண்டிருந்தன.

பறந்தும் இசைத்தும் வயிறார உண்டும் களித்ததோடு, பறவைகள் கண்கவர் விருந்தை எங்களுக்கும் அளித்தன. இயற்கைப் படைப்பின் உணவுச் சங்கிலி உடையாதிருப்பதன் அருமையைப் பறவைகள் இணக்கத்துடன் உணர்த்தின.

படைப்பாளர்:

அர. செல்வமணி. சத்தியமங்கலத்திற்கு அருகிலுள்ள சிற்றூரில் காடு வளர்ப்பும் சிறு அளவில் இயற்கை வேளாண்மையும் செய்கிறார். அவருடைய அறிவியல் ஆசிரியர் பல்லடத்தில் தொடங்கிய தாய்த்தமிழ்ப் பள்ளி மூலம் புதுவைப் பேராசிரியர்கள் திருமுருகன், ம. இலெ. தங்கப்பா இருவரும் இவருக்கு அறிமுகமாயினர். தமிழார்வத்தை அவர்கள் ஊக்கினர். அதன் பின்னர் மரபுப் பாடல்களை எழுத ஆரம்பித்தார். காட்டில் நிறையப் பறவைகள் வரத் தொடங்கியதால் பறவை ஆர்வலரும் ஆனார். பறவையியல் முனைவரான நண்பர் உதவியுடன் இங்கு இதுவரை நூறு வகைப் பறவைகளுக்கு மேல் கண்டு பதிவு செய்திருக்கிறார்.