கோடை விடுமுறைக்காலம். திரையரங்குக்கு செல்வோம் என்று குழந்தைகள் அடம்பிடிக்கிறார்கள். கூட்டிச் செல்லலாமா?

பதில்:

கோடைகாலத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் ஒரு நாள் சினிமாவுக்கும் மறுநாள் கடற்கரைக்கும் செல்லவேண்டும் என்றுதானே குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள். எப்படிப்பட்ட படம் என்பதுதான் முக்கியமானது. உங்களது கேள்வி, என் மகள் என்னிடம் ஆதங்கத்துடன் பகிர்ந்த ஒரு செய்தியை ஞாபகப்படுத்துகிறது.

ஒரு பிரபல நடிகரின் திரைப்படம். சிறு வயதில் அவர் சந்தித்த வன்முறைகளும் எதிர்மறை செயல்களும் அவருடைய வாழ்க்கைப் பாதையை எப்படி பாதித்தன, அவர் மீண்டு வருகிறாரா என்பதைப் பற்றிய படம். இவள் அருகில் 6 வயது, 8 வயது உடைய இரண்டு ஆண் குழந்தைகள். ஒவ்வொரு காட்சியையும் வைத்த கண் வாங்காமல் பார்த்து தங்கள் மனதில் தோன்றியவற்றைப் பேசிக்கொண்டு இருந்தார்களாம். ஒரு சில மோசமான வன்முறைக் காட்சிகள் வந்த போது இவள் அவர்களைத் திரையிலிருந்து திசை திருப்ப முயற்சி செய்தபோதும் அவர்கள் கவனிக்கவே இல்லையாம்.

குழந்தைகளின் மனது நல்ல பதமான களிமண். மிக எளிதில் எல்லா கருத்துக்களும் பகிர்ந்துவிடும். நல்லவை, தீயவை இரண்டும்தான். எதைப் பார்த்தாலும் இப்படியும் நடந்துகொள்ளலாம் என்று எண்ணிக்கொள்வார்கள். ஐந்தில் விளைந்ததுதான் ஐம்பதிலும் விளையும். வன்முறை, வன்முறையை மட்டுமே தூண்டும் பண்புடையது.

இந்த அளவிற்கு அறிவியல் ரீதியாகக் குழந்தைகள் வளர்ப்பை நாம் அறிந்திருக்கும் காலகட்டத்துக்கு முன்பே எழுத்தாளர் சுஜாதா ஒரு பதிவை எழுதினார். அப்போது மிகவும் பிரபலமாக இருந்தது டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன். அதில் நகைச்சுவை காட்சிகள்தானே இருக்கின்றன, அதைப் பார்த்தால் என்ன தவறு என்ற கேள்விக்கு அவர்  அளித்த பதில் மிகவும் ஆழமாக சிந்திக்கவைக்கக் கூடியது.

நாயைப் பூனை துரத்துகிறது, பூனை எலியைத் துரத்துகிறது, எலி தப்பிக்கிறது. இதில் என்ன கெடுதல் இருக்கிறது என்றுதானே யோசிப்போம். அவருடைய விளக்கம் மனதில் அதிர்வை ஏற்படுத்தியது. பூனையைவிட வலிமையுள்ள நாய், பூனையைத் துரத்தி விரட்டுகிறது. பயந்துபோய், எலியைவிட வலிமையுள்ள பூனை, தன்னைவிட வலிமை குறைந்த எலியைத் துரத்தி விரட்டுகிறது. அதைத் துரத்த முடியாத எலி நாயையும் பூனையையும் ஏமாற்றித் தப்பிக்க முயல்கிறது. நாயும் பூனையும் உடல்ரீதியான வன்முறை செய்கின்றன. பூனை உணர்வுரீதியான வன்முறை செய்கிறது. இப்படி நாமும் செய்யலாம் என்று குழந்தைகள் மனதில் எடுத்துக்கொண்டு செயல்படுத்துவார்கள். பயமாக இருக்கிறதல்லவா?

அப்போதைய டாம்-அண்ட் ஜெர்ரி கார்ட்டூனே இப்படி என்றால் இன்று வரும் சில கார்ட்டூன்கள்? சொல்லவே வேண்டாம்.

வன்முறையைத் தொடர்ந்து பார்ப்பதால் மூர்க்கத்தனம் அல்லது முரட்டுத்தனம் (Aggression) அதிகரிக்கிறது. இந்த மூர்க்க குணத்தால் அவசரத்தில் தவறான முடிவுகளை எடுத்தல், பொறுமையின்றி செயல்படுதல், பின்விளைவுகளை சிந்திக்காமல் செயல்படுவது ஆகியவையும் ஏற்படும்.

வன்முறை இருக்கத்தான் செய்யும் என்ற அலட்சியம், கவலை இல்லாமல் இருத்தல் ஆகியவை ஏற்படும். இதனால் இரக்க குணம் குறையும். சக மனிதரின் கஷ்டத்தை உணராமல் இருக்கத் தோன்றும்.

இவை யாவும் வன்முறையைப் பார்க்கும் எல்லாருக்கும், சிறு குழந்தையிலிருந்து சுமார் 30 வயது வரை உள்ளவரிடையே பொதுவாக ஏற்படக்கூடும். ஆனால் சிறு வயதிலேயே வன்முறையைக் கண்டு வளரும் குழந்தைகள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு மிகவும் அதிகம். ஆண் மற்றும் பெண் குழந்தைகளிடையே இந்தத் தாக்கங்கள் சமமாகவே உள்ளன. ஈஸ்ட்ரோஜன் காரணமாகப் பெண்களுக்கு ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் இரக்க குணம், அன்பு செலுத்துதல் ஆகிய நற்குணங்களும் இவ்வாறு வன்முறையைப் பார்ப்பதால், கேட்பதால் அழிந்து போகின்றன.

வன்முறைக் காட்சிகளைப் பார்ப்பது ஒரு போதை (Addiction) போல மாறி மீண்டும் மீண்டும் சின்னத்திரை, பெரிய திரை, கைத்திரை என்று அதையே நாடத் தொடங்குவார்கள். அதனால் அவர்களுக்கு நடத்தைக் கோளாறுகள் ஏற்படலாம். போதை மருந்துகள், மது, அளவுக்கதிகமான பாலுணர்வு, குற்றச் செயல்களில் ஈடுபடுதல், சமூக விரோத உணர்வுகள் ஆகியவை ஏற்படும். கல்வி கற்பது பாதித்து உணர்வுகளை அடக்கி வாசிக்கத் தெரியாமல் வீணாகி விடுவர். மனதில் தன்னைப் பற்றியும் சமுதாயத்தைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் எதிர்மறை எண்ணங்கள் ஆழ்ந்து பதியும். இளமையை இழந்துவிடுவார்கள்.

சில திரைப்படங்களில் வன்முறையை நியாயப்படுத்துவார்கள், வன்முறை செய்பவருக்கு தண்டனை கிடைக்காமலேயே போவதுபோலக் காட்டுவார்கள். இன்னும் சில படங்களில் வன்முறை செய்தால் தலைவனிடமிருந்து பாராட்டு கிடைப்பதுபோலக் காட்டுவார்கள். இவை குழந்தைகளின் மனதை வெகுவாக ஆக்கிரமிக்கின்றன. இதை ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. தாங்கள் கண்ட காட்சிகளில் இருந்தே தங்களுக்கான கதைகளை (Scripts) உருவாக்கிக் கொண்டு திரையில் வரும் வன்முறை நாயகனுடன் தங்களை ஒப்பிட்டு பெருமைப்படுகிறார்கள். செயல்படுத்த முயற்சி செய்கிறார்கள். அதிர்ச்சி தரும் இன்னொரு ஆய்வு முடிவு தெரியுமா? ஐ.க்யூ அதிகமான குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல!

இது ஒரு பொதுநலன் சார்ந்த அச்சுறுத்தலா என்ற கேள்விக்கு ஆமாம் என்று பதிலளிக்கிறார்கள் குழந்தை நல மற்றும் மனநல ஆராய்ச்சியாளர்கள். புகைபிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் உண்டாகுமே, அதற்கு இணையான அபாயம் என்கிறார்கள். அரசுகள், படத் தயாரிப்பாளர்கள், நடிக நடிகையர், பலவகை ஊடகத்தினர், சமூகம் ஆகிய எல்லாரும் சேர்ந்துதான் இவற்றைத் தடுக்க முடியும் என்பது உண்மைதான்.

இதற்குக் காத்திருப்பதைவிட குழந்தைகளின் பெற்றோர் உதவலாமே. படத்தின் தன்மை அறிந்து பார்க்கவைக்கலாம். வீட்டில் உள்ள தொலைக்காட்சியிலும் சமூக வலைத்தளங்களிலும் கட்டுப்பாட்டு ஏற்பாடுகளை செய்யுங்கள். அவர்கள் கூடவே அமர்ந்து அவ்வப்போது அவர்களது உணர்வுகளை மடைமாற்றிவிடலாம். எந்த விதத்திலும் வன்முறை தவறு என்பதைத் தக்க உதாரணங்களுடன் விளக்கலாம். வீட்டில் உள்ள பெரியவர்கள் முன்னுதாரணமாக இருக்கலாம் அல்லவா!

பெற்றோர்களே! இந்த மிகப்பெரிய அச்சுறுத்தலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உடனடியாக அடி எடுத்து வையுங்கள்.

கேள்வி: கோடை வெயில் சுட்டெரிக்கிறது. குழந்தைகளுக்கு பழ ஜூஸ்கள் தரலாம் என்றால் சளி பிடித்துவிடும் என்று என்னுடைய மாமியார் பயமுறுத்துகிறாரே..

பதில்:

Panoramic food background with assortment of fresh fruits and vegetables juices in rainbow colors

கத்தரி வெயில் அக்கினி நட்சத்திரமாக சுட்டெரிக்கிற காலம் இது. ஆனால் வருண பகவானின் அருளால் மழை பொழிகிறது. டெல்டா மாவட்டங்களில் வாழைமரங்கள் சாயும் அளவுக்கு மழை! ஆனால் அடுத்து வரும் 4-5 மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலையாளர்கள் பயமுறுத்துகிறார்கள்.

வெப்பத்தைத் தணிக்கப் பழச்சாறுகள் கட்டாயம் தேவை. புதிதாக அவ்வப்போது தயாரிக்கப்படும் பழச்சாறுகள் (Fresh juices) உண்மையில் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவற்றைக் குறைக்க மிகவும் உதவுகின்றன. சுகாதாரமான முறையில் கூடியவரையில் ஐஸ் போடாமல், குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல் வீட்டில் தயாரிக்கப்படும் பழச்சாறுகள் உடலுக்கு நல்லது செய்கின்றன.ஆனால் பழச்சாறுகளாலும் பழங்களாலும் சளி பிடிக்கும், ஆஸ்துமா அதிகமாகும் என்ற பொருத்தமில்லாத கருத்து மிகவும் பரவலாக மக்களிடையே பரவியிருக்கிறது என்பது வேதனைக்குரியது. இது எங்கிருந்து, எப்போது தொடங்கியது என்பது தெரியவில்லை. இந்த எண்ணம் அறிவியல் படித்த இளம் தலைமுறையினரிடமும் இருக்கிறது என்பது வியப்புதான்.

ஜலதோஷம், சளி, இருமல் ஆகியவை ரைனோவைரஸ்கள் எனப்படும் ஒருவகை ஆர்.என்.ஏ வைரஸ்களால் தொற்றுகின்றன. பழங்கள் செரிக்கும்போது ஏற்படும் சில உயிர்வேதிப் பொருட்கள் இந்தக் கிருமிகளுக்கு எதிராக நோயெதிரிகளை (Antibodies) உற்பத்தி செய்கின்றன. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.

சிட்ரஸ் வகை (ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்றவை) பழங்களை அடிக்கடி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி உறுதி. பழங்களும் காய்கறிகளும் வைரஸ்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன என்பது கோவிட்-19 கொள்ளைநோய்க் காலத்தில் நிரூபிக்கப்பட்டது.

எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி, மாதுளை போன்றவற்றை சாப்பிட்ட்டால் சளி/ஜலதோஷம் ஏற்படும் சமயத்தில் சுமார் நாற்பது சதவிகிதம் இருமல் குறைகிறதாம். தர்பூசணி, ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம் ஆகியவை சளித்தொல்லைக்கு நிவாரணம் தருகின்றன.

பழங்களில் இருக்கும் வைட்டமின் சி, லைக்கோபீன் என்ற சிவப்பு நிறமி போன்றவையே இந்த நோய் எதிர்ப்பு சக்திக்குக் காரணம், பழங்கள் சுவாசப்பாதையில் வைரஸ்கள் ஏற்படுத்தும் அழற்சியைக் குறைப்பதால் இருமல், ஆஸ்துமா போன்றவை குறைகின்றன. எனவே கோடைக்காலத்தில் வெப்பத்தையும், தாகத்தையும் சமாளிப்பதற்கும், சளி இருமல் வராமல் தடுக்கவும் வந்த சளி சீக்கிரம் குறையவும் பழங்களும் பழச்சாறுகளும் மிகவும் முக்கியம். அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்கள், முக்கியமாக நாட்டுப் பழங்களைப் பழமாகவோ சாறாகவோ குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

பழங்களையும் கைகளையும் நன்கு கழுவி, சுத்தமான முறையில் சாறு எடுத்து சிறிது உப்பு, நாட்டு சர்க்கரை/தேன் கலந்து குழந்தைகளுக்கு தினமும் இரண்டு முறை கொடுக்கலாம். வீட்டில் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகளே சிறந்தவை. ஐஸ்கட்டி போடாமல், குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல் தருவது நல்லது.

GERD எனப்படும் ஒருவகை அமிலப் பின்னோட்டம் (Acid reflex, அசிடிட்டியால் ஏற்படும் நெஞ்சு கரிப்பு) உள்ளவர்களுக்குப் புளிப்பான பழச்சாறுகள் இருமலை அதிகப்படுத்தலாம். இந்த நோய் குழந்தைகளிடம் அதிகம் இல்லை.

சளி பிடித்த பிறகு இந்த புளிப்புச் சுவை நாக்கில் பட்டால் நடுக்காதுக் குழாயைத் (Eustachian tube) தூண்டி ஒரு சில குழந்தைகளுக்குக் காதுவலி ஏற்படலாம். அந்தக் குழந்தைகளுக்கு எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப்பழச்சாறுகளைத் தருவதைத் தவிர்க்கலாம்.

பழங்கள் சளியை உண்டாக்குவது இல்லை. மாறாக சளியின் தீவிரத்தைக் குறைக்கின்றன. சளி பிடிக்காமல் பாதுகாக்கின்றன. குழந்தைகளுக்கு தினம் ஒரு பழச்சாறு தருவீர்! சளியிலிருந்து பாதுகாப்பீர்!

படைப்பாளர்

மரு. நா. கங்கா

நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.