The bells of St. Mary’s

Ah, sweetly they’re callin

Awakening all brightness

And laughter and cheer

என்று தொடங்கும் கல்லூரிப் பாடலை கல்லூரி விழாக்களில் பாடும்போது ஒருவித உற்சாகம் ஒட்டிக் கொள்ளும். அனைவரும் சத்தமாக ஒருங்கிணைந்து பாடுவோம். பாடும்போது ஒருவித பெருமிதம் உருவாகுவது என்பது தவிர்க்க இயலாதது. பெருமிதப் பாடலின் அடிநாதம் ரோச் ஆண்டகை மற்றும் பி. எஸ். சூசைநாதர் அடிகளார் (Fr. B.S. Soosainathar). ஆம். கல்லூரி அவரால்தான் தொடங்கப் பட்டது.

முழுப்பெயர் பெஞ்சமின் சந்தியாகு சூசை நாதர். கல்லூரியில் தான் அவரது கல்லறை உள்ளது. கல்லூரி தொடங்கியதில் அன்றைய மறைமாவட்ட ஆயர் திபூர்சிஸ் ரோச் அவர்களின் (Msgr. Francis Tiburtius Roche SJ (Bishop of Thoothukudi) பெருமுயற்சியும் அடங்கியிருக்கிறது. 1923-ம் ஆண்டு, தூத்துக்குடி மறைமாவட்டம் உருவானபோது, இவர் அதன் முதல் ஆயரானார். இவர்தான் கத்தோலிக்க சபையின் ஆயர்களில் முதல் இந்திய நாட்டைச் சார்ந்தவர். இதற்கு முன் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தான் ஆயராக இருந்திருக்கிறார்கள். 

ஆயரின் திருநிலைப்பாட்டின் நூற்றாண்டு விழா மலரில், பீட்டர் அல்போன்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார். “தியாக சீலர் மாசிலாமணி பிள்ளையும் அவரது துணைவியார் ஜெபமணி அவர்களும் (தமிழ் நாட்டின் முதல் கிறிஸ்துவப் பெண் சட்டமன்ற உறுப்பினர்) தங்களது சத்தியாகிரக போராட்டங்களைத் துவக்கு முன்னர் பனிமாதா திருத்தலத்தில் ஆராதனை செய்துவிட்டு, … ஆலயத்தின் முன்பிருந்து தான் அனைத்து போராட்டங்களையும் துவக்கினர்… ஆங்கில அரசு ஆயர் அவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் எச்சரிக்க முற்பட்டது. As an Indian, I support the nation in all it’s legitimate aspirations என்று சொல்லியிருக்கிறார். 1936 இல் நாட்டின் விடுதலைக்காகக் கிறிஸ்தவர்கள் தங்களை அர்ப்பணிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.”

இவ்வாறு கல்லூரியின் இணையதளம் சொல்கிறது. புதிய இந்தியாவில், விடுதலை பெற்று ஓராண்டு நிறைவு பெருமுன்னரே கல்லூரி தொடங்கப் பட்டுள்ளது. Intermediate வகுப்புகள் மட்டும் பள்ளியின் மேல் மாடியில் நடந்திருக்கின்றன என்கிறது ஆயரின் நூற்றாண்டு விழா மலர். ஆனால், Pre University Course எனப்படும் புதுமுக வகுப்பு கல்லூரியில்  1956-ம் ஆண்டுதான் தொடங்கியிருக்கிறார்கள். அதுவரை, மாணவிகள் வேறு கல்லூரியில் PUC படித்திருக்க வேண்டும். 

‘பையன் படித்தால் பயன்பெறுவது ஒருவனே 

பெண் படித்தால் பயன்பெறுபவர் பலராவர்’ 

என ஆயர் அடிக்கடி சொல்வாராம். அவர் தான் கல்லூரியை நிறுவி, அதைக் கண்காணிக்க ‘monsignor’ ஆன BS சூசைநாதரை நியமித்திருக்கிறார். ‘Monsignor’ என்பது அருள்தந்தைக்கும் ஆயருக்கும் இடையிலான நிலை. 

1925-ம் ஆண்டு, புனித ஞானப்பிரகாசியார் (St Aloysius) பள்ளியையும் ரோச் ஆண்டகை தான் தொடங்கியிருக்கிறார் என்கிறது அவரின் நூற்றாண்டு மலர். இது மட்டுமல்ல, அவர் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயராக இருந்த காலகட்டத்தில், பெண்களுக்கான ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை இருபத்தைந்திலிருந்து நூற்று முப்பதாக உயர்ந்துள்ளது.

கல்லூரி Mother of Sorrows Servants of Mary (Servite Sisters) எனப்படும் வியாகுல மாதா அருள்சகோதரிகளால் நடத்தப்படுகின்றது என இப்போதைய கல்லூரி இணையதளம் சொல்கிறது. ஆனால் நாங்கள் படிக்கும்போது கல்லூரி செவன் டாலர்ஸ் (seven dolours) எனத் தான் எழுதியிருப்பார்கள். மாதாவின் ஏழு துன்பங்களைக் குறிப்பதுவே செவன் டாலர்ஸ். இரண்டின் பொருளும் ஒன்றுதான். Dolours என்பது லத்தீன் சொல். 

முதலில் மதர் தெரசிட்டா மேரி முதல்வராக இருந்திருக்கிறார். அவரது வழிகாட்டுதலாலும், பேராசிரியர்களாலும் தரமான கல்லூரி என்ற சிறப்பினைக் கல்லூரி அப்போதே பெற்றுவிட்டது. நான் பி யூ சி படிக்கும்போது சிஸ்டர் யூகரிஸ்டா மேரி முதல்வராக இருந்தார்கள். அவர்கள் முனைவர் பட்டம் பெற ஸ்காலர்ஷிப் பெற்று, படிக்கச் சென்று விட்டார். எனவே நான் முதலாம் ஆண்டு படிக்கும்போது விலங்கியல் துறையில் தலைமை பேராசிரியராக விளங்கிய சிஸ்டர் விட்டலினா மேரி முதல்வர் ஆனார்.

எங்கள் கல்லூரியில் இளங்கலையில் பெரும்பான்மையான துறைகள் இருந்தன. முதுகலையில் தாவரவியல், (பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தும் போதே இங்கும் அறிமுகமானது)இருந்தது. ஆண்டுதோறும் பலர் எங்கள் கல்லூரியிலிருந்து ‘யுனிவர்சிட்டி ரேங்க்’ வாங்குவார்கள். பேராசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். மிகச் சிறப்பாக நோட்ஸ் கொடுப்பார்கள்.

படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் கல்லூரி நிர்வாகத்தினர் மிகுந்த ஆர்வம் காட்டினர். பேட்மிட்டன் விளையாட்டில் அடிக்கடி எங்கள் கல்லூரி வெற்றி பெறும். மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள், தூத்துக்குடியில் நடைபெறும் பலவித விளையாட்டுப் போட்டிகள், தூத்துக்குடி துறைமுகம் நடத்தும் போட்டிகள் என அனைத்து இடங்களுக்கும் சென்று, பங்கேற்று பரிசுகள் பெற்று வருவார்கள்.

கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் பேச்சுப்போட்டி, நடனப் போட்டி கட்டுரைப் போட்டி,  தனி நடிப்பு, ரங்கோலி போன்ற போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பல பெறுவர். நுண்கலை வாரம் (Fine arts week) என்று ஒரு வாரம் முழுவதுமே கல்லூரியில் கொண்டாடுவோம் (இதைப் பற்றி தனியாக இன்னொரு பகுதியில் பார்ப்போம்). 

மேலும் தமிழ் மன்றம், இங்கிலீஷ் லிட்ரரி அசோசியேஷன், சயின்ஸ் அசோசியேஷன், ஹிஸ்டரி அசோசியேஷன், காமர்ஸ் அசோசியேஷன், குயிஸ் கிளப், NSS, NCC,  NAEP (National Adult Education Program தேசிய முதியோர் கல்வித் திட்டம்) போன்றவையும் திறம்பட செயல்பட்டன. இந்த குழுக்களுக்கெல்லாம் தனித்தனியாக, தலைவர், உபதலைவர், செயலாளர் இருப்பர். அவர்களைப் பேராசிரியர்கள்தான் தேர்ந்தெடுப்பர். 

கல்லூரி யூனியன் தேர்தலும் பெரிய அளவில் தேர்தலாக நடைபெற்றதாக நினைவில்லை. மூன்று மாணவிகளைக் கல்லூரி நிர்வாகமே தேர்ந்தெடுத்து அறிவிப்பார்கள். ஒரு சீட்டு தருவார்கள். அதில் நமக்குப் பிடித்தவரின் பெயரை எழுதி ஒரு பெட்டியில் போட வேண்டும். யார் அதிக வாக்குகள் பெற்றார்களோ அவர் சேர்மன், அடுத்த இடம் பெற்றவர் வைஸ் சேர்மன்;  மூன்றாவது இடம் பெற்றவர் செக்ரெட்டரி; அவ்வளவுதான் தேர்தல். இவர்கள் பைன் ஆர்ட்ஸ் வீக், கல்லூரி ஆண்டுவிழா போன்றவற்றில் கல்லூரி நிர்வாகத்திற்கு உதவி புரிவார்கள்.

கல்லூரி சார்பில்  ஆண்டு தோறும் லூசியா பிளைன்ட் சென்டரைச் (blind centre) சார்ந்தவர்களை வரவழைத்து ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். கல்லூரி நிர்வாகம் அவர்களுக்குப் பரிசளிப்பார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட படுக்கை விரிப்புகள், டவல், கைக்குட்டை போன்ற பொருள்கள் விற்பனைக்கு வரும். எல்லோரும் ஏதாவது ஒரு பொருளை வாங்குவோம்.  

தமிழ் மன்றம், ஆங்கில மன்றம் மூலம் பேச்சுப்போட்டிகள் நடைபெறும். பெரிய பேச்சாளர்களை வைத்துச் சிறப்புச் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்றவை நடைபெறும். ஒரு முறை இந்திரா பார்த்தசாரதி சிறப்புச் சொற்பொழிவாற்ற வந்திருந்தார். இவர் டெல்லி பல்கலைக்கழகத்திலும்,போலந்து வர்ஷா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றியவர். சிறந்த எழுத்தாளர். சாகித்திய அகாதமி, பத்மஶ்ரீ விருதுகள் பெற்றவர். இன்னொருமுறை நாஞ்சில் நெடுமாறன் கலந்துகொண்ட வழக்காடு மன்றம் நடைபெற்றது. 

அறிவியல் மன்றத்தில் பெரும்பாலும் வினாடி வினா போட்டிகள் நடைபெறும். அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்களின் சிறப்புச் சொற்பொழிவுகளும் நடைபெறும். முதன் முதலாக 1979 – 80-ம் ஆண்டு, NSS-ல் மாநில அளவில் கேடயம் (shield) வாங்கிய முதல் பெண்கள் கல்லூரி எங்கள் கல்லூரிதான். 

மாணவர்களின் எழுத்துத் திறமையை வெளிக்கொணரப் பொங்கல் விடுமுறை முடிந்து வரும்போது ஒவ்வொரு துறையும் இதழ் (மேகசின்) ஒப்படைத்தாக வேண்டும். மூன்றாம் ஆண்டு வகுப்பு தலைவிகளின் பொறுப்பு இது. இந்த இதழ் 100 பக்கங்கள் இருக்க வேண்டும். ஆனால் அவ்வளவு பக்கங்கள் வராது. யாராவது ஒருவர், பிறரின் பெயரில் எழுதி, சமாளிப்போம். நாங்கள் கொடுக்கும் அந்த நூறு பக்கங்களில் சிறந்த படைப்புகள் கல்லூரி ஆண்டு இதழில் இடம்பெறும்.1980 -81க்கான இதழ் போட்டியில் நாங்கள் (வேதியியல்) வென்றோம். 81- 82 போட்டியில் ஆங்கிலத்துறை வெற்றி பெற்றது. 

கல்லூரி இதழ் அட்டை முதல் பக்கம்

சிஸ்டர் ஜெசிக்கா தட்டச்சு செய்தது.

இதழில் எனக்குப் பிடித்த ஒரு படைப்பு இங்கே.

ஜி. மாரியம்மாள் என்ற பி. எஸ்சி. தாவரவியல் மாணவி எழுதியது.

 உப்புமா

கதாநாயகன் – ரவை அவர்கள்

கதாநாயகி –  எல்லா படங்களிலும் பாங்குடன் நடிக்கும் தண்ணீர்

மாபெரும் வில்லன் – மிளகாய்

வில்லி  –  உப்பு

வில்லன் தலைவன்  – நெருப்பு

நகைச்சுவை நடிகர் – கறிவேப்பிலை

நகைச்சுவை நடிகை – வெங்காயம்

மற்றும் பேபி கடுகு, மாஸ்டர் எண்ணெய், மிஸ் உளுந்தம் பருப்பு, மிஸ்டர் அகப்பை நடித்த உன்னத சித்திரம் கிச்சன் தியேட்டரில் நடக்கிறது; காணத் தவறாதீர்.

கதாநாயகன், வில்லர் தலைவன் முன் போராடி வெற்றி கண்டு, பிரிந்து நிற்கும் மற்ற கதாபாத்திரங்களை ஒன்று சேர்க்கிறார். எல்லா படங்களிலும் வில்லன் பாத்திரத்தை திறத்துடன் முடிக்கும் மிளகாய், கதாநாயகனுடன் போராட வருகிறார். வில்லர் தலைவன் நெருப்புடனே போரிட்டு வெற்றி கண்ட ரவை அவர்களுக்கு மிஸ்டர் மிளகாய் எம்மாத்திரம்! வெளுத்துக் கட்டுகிறார்!             

அந்நேரம் ஹீரோவின் நண்பர் மிஸ்டர் அகப்பை விரைந்துவந்து நண்பருக்குப் பேருதவி புரிகிறார். வில்லி உப்பு, நல் மனம்  பெற்று திருந்தி அவர்களுள் ஒருத்தி ஆகிறாள். வில்லன்கள் மரிக்கின்றனர். நகைச்சுவை நடிகர் கறிவேப்பிலையும், நகைச்சுவை நடிகை வெங்காயமும், பேபி கடுகு, மிஸ்டர் எண்ணை, மிஸ் உளுந்தம் பருப்பு ஆகியோருடன்  சேர்ந்து உண்டாக்கும் சிரிப்பு சத்தம் நம் வயிறுகளை வலிக்கச் செய்துவிடும்.

நல்ல கதையும் நகைச்சுவையும் மேனியினை புல்லரிக்கச் செய்யும் சண்டைக் காட்சிகளும் ஒருங்கே நிறைந்த படம் உப்புமா.

அனைவரும் வருக! காண்க!  கண்டு மகிழ்க!!! 

1981- 82-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பாரதியார் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. எங்கள் கல்லூரியிலும் பாரதியார் நூற்றாண்டு விழா டிசம்பர் 9 முதல் 14 வரை கொண்டாடப்பட்டது. பிற்பகல்களில் பேச்சு, பாட்டு, கட்டுரை, கவிதை,  நடனம், நாடகம் போன்ற போட்டிகள் நடைபெற்றன. 

எங்கள் வேதியியல் துறைதான் முதலிடம் பிடித்தது. எனக்குக் கவிதைப் போட்டியில் முதல் பரிசாக ‘பெ. தூரன்’ எழுதிய ‘பாரதியும் பெண்மையும்’ நூல் கிடைத்தது. நான் எழுதிக் கொடுத்த நாடகத்திற்கு நாடகப் பிரிவில் முதல் பரிசு கிடைத்தது. ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே’ பாடலுக்கு வித்தியாசமான மெட்டமைத்து குழு நடனம் ஆடியவர்களுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. மற்றொரு போட்டியிலும் பரிசு பெற்றோம். எது என்று நினைவில்லை, இறுதி நாள் திரு பழனி கிருஷ்ணன், திரு செந்தில் நாயகன், திரு நாஞ்சில் நெடுமாறன் கலந்து கொண்ட வழக்காடு  மன்றமும் நடைபெற்றது.

தொடரும்…

படைப்பாளர்

பொன் ஜெய இளங்கொடி

MSc. Chemistry. MSc. Psychology. B.Ed. PGDGC. வயது 62. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இவர் PUC மற்றும் BSc. புனித மரியன்னை கல்லூரி, தூத்துக்குடியில் 1978 முதல் 1982 வரை படித்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்களை இந்தத் தொடரில் எழுதியுள்ளார். இது இவரின் முதல் முயற்சி.