இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை எதிர்பார்ப்பு சமூகத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்படுதல் என்பதே. அதீத சாதிப் பற்று கொண்ட சென்ற தலைமுறை ஆட்களோ அல்லது அத்தனைக்கும் ஸ்டோரி வைக்கும் இன்ஸ்டா தலைமுறையோ, இவர்களின் அடிப்படைத் தேவை சமுதாயத்தில் தன் இருப்பை உறுதிப்படுத்துவதும், அதைச் சமூகம் அங்கீகரிப்பதுமே. ஒரு புதிய உயிர் பிறக்கும்போது அதன் எதிர்பார்ப்பு உணவும் பாதுகாப்பும் மட்டுமே. அது எந்த வரவேற்பையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், வளர்ந்தவுடன் அது தன் அடையாளத்திற்கும், இருப்பிற்கும் சமூக அங்கீகாரம் தேடி நிற்கிறது. இது மனிதராகத் தன்னை உணர்வதற்கான அடிப்படை உரிமை என்று கூறலாம். ஆனால், அதுகூடப் பாலின அடிப்படையில் வடிக்கட்டிதான் சமுதாயத்தால் வழங்கப்படுகிறது. ஆணாகப் பிறந்துவிட்டாலே அள்ளித் தரப்படும் இந்த அங்கீகாரம் பெண்களுக்குக் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.
ஆண் குழந்தையின் ஆசைகள், சுதந்திரம், தேர்வுகள் போன்றவை பெரும்பாலான நேரத்தில் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, கூடுதலாக உற்சாகமும் ஊக்கமும் வழங்கப்படுகின்றன. ஆனால், பெண் குழந்தைக்கு அந்த அங்கீகாரம் பெரும்பாலும் எளிதில் கிடைப்பதில்லை; அதை அடைய வேண்டும் என்பதே ஒரு தொடர் முயற்சியாகவே அமைந்துவிடுகிறது.
மாநிறத்தில் டீன் ஏஜ் வயதில் இருக்கும் ஆண்களிடம் யாரும் தன் நிறத்தைப் பற்றிக் கவலை கொள்ளும் விதமாகப் பேசுவதில்லை. என்ன இருந்தாலும் ஆண் சிங்கம் என்று தலையிலேற்றி வைக்கிறார்கள். ஆனால், பெண் குழந்தை என்றால் கல்யாணச் சந்தையில் விலை போகா சரக்காகக் கவனத்தில் கொள்ளப்பட்டு ஆலோசனைகள் அள்ளித் தெளிக்கப்படுகின்றன. தன் நிறத்தைக் குறித்த தாழ்வு மனப்பான்மையுடனே வளரும் இந்தப் பிள்ளைகள் வாழ்க்கையில் சமூகத்தின் அங்கீகாரத்திற்காகப் போராடுவதற்குத் தள்ளப்படுகின்றனர்.
இந்தச் சமூக அங்கீகாரத்தைப் பெற பெண் குழந்தைகள் மேற்கொள்ளும் பயணம் சீரானதல்ல. அது மிக நுட்பமான வலையினால் பின்னப்பட்டது. இந்தப் பயணத்தின் வழியே, சாதியின் மூலம் பின்னப்பட்ட பாரம்பரியம், மதங்களின் வழியே கடத்தப்படும் பெண்ணடிமைத்தனங்கள் என்று எதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் பெண்கள் கடைசி வரை என்ன செய்தாலும் கிடைக்காத அந்தச் சமூக அங்கீகாரத்திற்காகக் கையேந்திதான் நிற்கிறார்கள்.
உடுத்தும் உடையிலிருந்து உட்காரும் முறை வரை பெண்களுக்கு என்று தனி அகராதியையே கண்டறிந்து வைத்திருக்கும் சமூகம், அவை அனைத்தையும் திருமணம் மற்றும் பிள்ளை பேற்றில் கொண்டு சென்று முடிந்து வைக்கும். பெண்களாகப் பிறவி எடுப்பதன் நோக்கமே திருமணமும் பிள்ளைப் பேறும் மட்டுமே என்று திரும்பத் திரும்ப சொல்லி, இதன் மூலமே பெண்களுக்குச் சமூக அங்கீகாரம் கிட்டும் என்கிற பிம்பத்தைக் கட்டமைக்கின்றனர். பேசும் மொழி, சிரிக்கும் அளவு, வெளியே செல்ல வேண்டிய இடம் மற்றும் நேரம் இப்படி அனைத்துக்குமே பெண்களுக்கு என்று ஓர் அளவீடு உள்ளது. இந்த அளவீடுகளை மீறும் பெண்களுக்குச் சமூக அங்கீகாரம் மொத்தமாகவே மறுக்கப்படுகிறது.
இத்தகைய அளவீடுகளில் தாங்கள் அடைக்கப்பட்டதைப் பெண்கள் உணர்ந்துகொள்ளும்போது அதை விட்டு வெளியேறும் முயற்சிகளை எடுக்கின்றனர். ஒவ்வொரு முறை இத்தகைய முயற்சிகளைப் பெண்கள் மேற்கொள்ளும்போதும், பாரம்பரியம், குடும்பக் கட்டுப்பாடு, பெண்களுக்கு என்றே எழுதி வைக்கப்பட்டிருக்கும் ஒழுக்க விதிகள் இவை எல்லாவற்றையும் சிலபஸ் ஆக்கி மொத்த சமுதாயமும் சேர்ந்து பாடம் எடுக்கும். நீ இதன் மூலம் சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெறவே முடியாது என்று பயமுறுத்தும். கடலில் அலைகள் உருவாகும் இடத்தை ஆழி என்பார்கள். ஆழியைத் தாண்டுவது கடினம்தான். ஆனால், தாண்டிவிட்டால் மொத்த கடலையும் அனுபவிக்கலாம்.
இப்படி வாழ்க்கைக் கடலை அனுவிக்க ஆழி தாண்டிய பெண்கள் நம்மிடையே வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டுள்ளனர். அதற்கான ஒரு சமீபத்திய உதாரணமாக எழுத்தாளர் சல்மாவைச் சொல்லலாம். பதிமூன்று வயதில் தோழிகளுடன் சென்று திரைப்படம் பார்த்த காரணத்திற்காகப் படிப்பு நிறுத்தப்பட்டு, பதினேழு வயதில் திருமணம் செய்துவைக்கப்பட்டார். குடும்ப வாழ்க்கையில் தன்னுடைய ஆசைகளையும், தனித்துவத்தையும் ஒதுக்கி வைத்த ஒரு பெண், மீண்டும் தன்னைத்தானே எழுத்தின் மூலமாக கண்டறிகிறார். கவிதைகளும் கட்டுரைகளும் அவர் வாழ்வியல் அனுபவங்களையும், பெண்களின் சமூக நிலையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. தொடர் எழுத்துப்பணி அவரை, மக்கள் பணி என்னும் தளத்திற்கு உயர்த்தியது. இன்று மாநிலங்களவையில் மக்களின் பிரதிநிதியாக உயர்ந்து நிற்க தன்னைத் தயார்படுத்திக் கொண்டுள்ளார்.
சல்மாவைப்போல இன்னும் எத்தனையோ சாதாரணப் பெண்கள், இயல்பான உடை அணிந்ததற்காக, ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த காரணத்திற்காக, தனியாக சினிமா பார்த்ததற்காக, சுற்றுலா சென்றதற்காக, தன் தலைமுடியைத் தன் விருப்பம் போல வெட்டிக் கொண்ட காரணங்களுக்காகவெல்லாம் படிப்பு நிறுத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது போன்று ஒரு கதையை ஆண்களால் கூற முடியுமா?
சமூக அங்கீகாரத்தை அடையப் பெண்கள் மேற்கொள்ளும் இந்தப் பயணம், வெறும் தனிப்பட்ட போராட்டமல்ல. அது அடுத்து வரும் ஒவ்வொரு தலைமுறையையும் பாதிக்கும் அடுக்கடுக்கான சமூகவியல் பிணைப்புகளுக்குள் சிக்கிய கதை. இப்போதும் பல பெண்கள், ‘நீ யாராக இருக்க விரும்புகிறாய்’ என்கிற கேள்விக்குப் பதில் சொல்லும் முன், ‘நீ யாராக இருக்கக் கூடாது’ என்கிற நீண்ட பட்டியலைச் சமூகம் அச்சடித்து கையில் வழங்குகிறது. ஒரு பெண் இயல்பான வாழ்வையும், விருப்பங்களையும் தேர்ந்தெடுப்பதற்காகப் போராடும்போது, அதைத் தடுமாற்றம் என்றே பெயரிடுகிறது சமூகம். ஆனால், அந்தத் தடுமாற்றமே ஒரு புதிய பாதையைத் திறக்கிறது. அந்தப் பாதையில் செல்வது சுலபமல்ல; வழியில் அவமானமும் எதிர்ப்பும் பல நேரத்தில் தனிமையும் நிறைந்திருக்கும். ஆனால், அந்தப் பயணத்தின் முடிவில் அவர் சந்திக்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் வழிகாட்டும் ஒளியாக மாறுகிறார்.
சமூகத்தின் இந்தப் பிம்பங்களை உடைக்க ஆரம்பிக்கும் பெண்கள்தான் மாற்றத்திற்கான விதையை விதைப்பவர்கள். அவர்கள் சமூகத்திற்குச் சொல்ல விரும்பும் செய்தி, ’நான் யாரென்பதை சமூகம் தீர்மானிக்காது. அதை நான்தான் தீர்மானிக்கிறேன்.’ உள்ளிலிருந்து உருவாகும் இந்த உறுதியில்தான் மாற்றத்திற்கான முன்னோட்டம் உருவாகிறது. அது முழுமையடையும் போது, வெளியில் இருந்து வழங்கப்படும் எந்த ஓர் அங்கீகாரத்தையும் அது வேண்டி நிற்பதில்லை.
அந்த உறுதி உருவாக, பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழல், ஊக்கம், முன்னோடிகள் தேவைப்படுகின்றனர். இன்று பள்ளிகளிலும், வேலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் பெண்கள் தங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் பரவலாகத் திறந்த வெளியில் பகிர ஆரம்பித்துள்ளனர். இது ஒரு புதிய சிந்தனைப் போக்கின் தொடக்கமே. இந்தத் தொடக்கத்தின் அடுத்த நிலை, தங்களை நோக்கி வீசப்படும் சமூகக் கட்டுப்பாடுகளை எதிர்த்துக் கேள்வி எழுப்புவது.
பெண்கள் தங்கள் வாழ்வில் கட்டுப்பாடுகளை மீறி, சுய தேர்வுகளை மேற்கொள்ளும் விதம், சமுதாயத்தின் விருப்பத்திற்கேற்ப அல்லாமல், தங்களின் விருப்பத்திற்கேற்ப அமைய வேண்டும் என்பதுதான் பெண்ணுரிமை பேசுபவர்களின் குரலாக இருக்கிறது. தங்கள் வாழ்க்கையின் கட்டுப்பாடுகளை நிர்ணயிக்க நினைக்கும் ஒவ்வொரு சமூகக் கட்டமைப்பிற்கும் எதிராக, தங்கள் சுய விருப்பத்தைக் குரலாக எழுப்ப வேண்டியது ஒவ்வொரு பெண்ணிற்கும் அவசியமாகிறது. மெதுவாகவும் மிகவும் உறுதியாகவும் இந்தப் புரட்சியின் குரல் காலம் காலமாகச் சமுதாயத்தில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. இந்தக் குரல்கள் வேதனையுடன் தொடங்கினாலும், முடிவில் நம்பிக்கையையும் வழிகாட்டுதலையும் தருவதோடு மட்டுமல்லாமல் நாளைய பெண்களுக்கு ஒளிவிளக்காக இருக்கும்.
உண்மையான சமூக அங்கீகாரம் என்பது பெண்கள் தங்கள் அடையாளத்தையும் உரிமையையும் தாமாகவே நிர்ணயிக்கும் போதுதான் ஆரம்பிக்கிறது. இந்த மாற்றத்தின் தொடக்கம், அவர்களுடைய குரல்களையும் தேர்வுகளையும் மதிப்பது என்பதில்தான் ஆரம்பிக்கிறது. இப்படி ஒரு ஆரம்பப் புள்ளியை சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் வைக்க வேண்டும்.
(தொடரும்)
தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.