மிஸ்ஸியம்மா 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில், எடுக்கப்பட்டத் திரைப்படம். இதற்கு முன் பாதாள பைரவி 1951-ம் ஆண்டு இவ்வாறு எடுக்கப்பட்டாலும், இரண்டிலும் நடிகர் நடிகர் பெரும்பாலும் ஒருவரே. ஆனால் இந்தத் திரைப்படம், இரு வேறு நாயகர்கள் கொண்ட திரைப்படம்.
தமிழில் ஜெமினி கணேசன் என்றால், தெலுங்கில் என்.டி. ராமாராவ். தமிழில் தங்கவேலு தெலுங்கில் நாகேஸ்வர ராவ்; தமிழில் கே. சாரங்கபாணி தெலுங்கில் ரேலங்கி, தமிழில் நம்பியார் தெலுங்கில் ரமணா ரெட்டி என நடித்து இருக்கிறார்கள்.
ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் 1957-ம் ஆண்டு மிஸ் மேரி என்ற பெயரில் இந்தியில் இந்தக் கதையை எடுத்தது. ஜெமினி கணேசன்தான் அதிலும் நாயகன். ஜமுனாதான் இரண்டாவது நாயகி.

விஜயா ப்ரொடக்ஷன் லிமிடட் அளிக்கும் மிஸ்ஸியம்மா.
கதை சக்கரபாணி
வசனம் பாடல்கள் தஞ்சை ராமையாதாஸ்
நடிக நடிகைகள்
ஆர் கணேசன்
கே. சாரங்கபாணி
கே.ஏ. தங்கவேலு
எஸ்.வி. ரங்கராவ்
எம்.என். நம்பியார்
வி.எம். ஏழுமலை
அ. கருணாநிதி
துரைசாமி
எம்.ஆர். சந்தானம்
சாவித்திரி
ஜமுனா
ருஷ்யேந்திரமணி
மீனாட்சி
இசை அமைப்பு எஸ். ராஜேஸ்வர ராவ்
பின்னணிப் பாடல்கள் லீலா, ராஜா, சுசிலா
டை ரக்ஷன் பிரசாத்
தயாரிப்பு பி. நாகி ரெட்டி & சக்ரபாணி
பாலு மற்றும் மேரி வேலையில்லா பட்டதாரிகள். நகரத்தில் வாழ்பவர்கள். பாலுவிற்கு வாழ்க்கையை ஓட்டுவதற்கு வேலை வேண்டும் என்றால், தனது படிப்பிற்காக டேவிட்டிடம் அப்பா வாங்கின கடனை அடைக்க மேரிக்கு வேலை வேண்டும். டேவிட், மேரியைத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் பணம் கொடுத்தவன்.
இந்தக் காலக்கட்டத்தில் ஆண்டிபேட்டை என்ற ஊரிலிருந்து ஒரு பள்ளியின் உரிமையாளர் கணவன் மனைவியாக வரும் இருவருக்கு வேலை இருப்பதாக செய்தித்தாளில் விளம்பரம் கொடுக்கிறார். இவர்கள், ஓரிரு மாதமாவது ஏமாற்றிச் சமாளிக்கலாம் எனக் கணவன் மனைவி எனச் சொல்லி வேலையில் சேருகிறார்கள்.
ஊரின் ஜமீன்தார், தொலைந்து போன தங்கள் மகள் மகாலட்சுமியின் பெயரில் பள்ளியை நடத்துவதால், பள்ளியின் வளர்ச்சி என்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டவர். அன்பும் பண்பும் இணைந்த குடும்பம். இப்போது மேரி யார் எனத் தெரிந்து விட்டதா? ஆனாலும் கவலைப்படவேண்டாம். தொடர்ந்து திரைப்படத்தைப் பார்க்கலாம். அவ்வளவு இனிமையான திரைப்படம்.
மேரி, பாலுவுக்கு உரிய மரியாதை, வசதி, சம்பளம் எல்லாம் இடத்தில் கிடைக்கிறது. ஆனால் இவர்கள் கணவன், மனைவி என்று நினைத்து, அவர்கள் செய்யும் செயல்கள் இவர்கள் இருவரிடமும் கருத்து வேறுபாடு, கோபதாபம் போன்றவற்றை உருவாகுக்கிறது. இவை எல்லாம் நீங்கி குடும்பம் எப்படி இணைகிறது என்பதுதான் கதை.
மகாலட்சுமி ஆரம்பப்பள்ளி என்ற பலகையுடன் திரைப்படம் களைகட்டத் தொடங்குகிறது. பள்ளியில் ஆசிரியர்தான் தங்கவேலு. பள்ளியின் தாளாளரின் அக்கா மகன். அதனால் அவர் பள்ளியில் பாடம் நடத்துவதை விட்டுவிட்டுத் தனது துப்பறியும் அறிவை அங்கு வைத்துப் பறைசாற்றிக் கொண்டு இருக்கிறார். ஒருவர் பால் மாட்டைக் காலையிலிருந்து காணவில்லை என வருகிறார். “மாடு தானாக எங்கும் போகவில்லை. தானாகப் போயிருந்தால், பால் கொடுக்கும் மாடு என்பதால் கன்றுவின் பசியை உணர்ந்து வந்து இருக்கும். அப்படி வரவில்லை என்பதால் அது பவுண்டியில் அடைக்கப் பட்டு இருக்கிறது” – இது தான் அவர் கொடுக்கும் விளக்கம்.
விளக்கம் சரியாகவும் இருக்கிறது. பவுண்டி என்றால் மாடுகளின் சிறை. ஊருக்குள் சுற்றித் திரியும் மாடுகளை அடைக்கும் இடம். உரிமையாளர்கள் அதற்கான அபராதம் கட்டி, மாடுகளைத் திரும்பப் பெறலாம். இப்படி ஒரு அமைப்பு ஒவ்வொரு ஊரிலும் இருந்தது. எங்கள் ஊரில் (கள்ளிகுளத்தில்) இன்னமும் அது சிதிலமைடையாமல் இருக்கிறது. எண்பதுகள் வரை கூட அது இயங்கிக் கொண்டிருந்தது.
இப்படி அறிமுகமாகும் தங்கவேலு, தான் சிறந்த நகைச்சுவை நடிகர் என இந்தத் திரைப்படத்தில் உறுதி செய்து இருக்கிறார்.
நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த தங்கவேலு, எம் ஜி ஆர் அறிமுகமான அதே சதிலீலாவதியில் தான் சிறு வேடத்தில் அறிமுகமாகியிருக்கிறார். இவர் எம் ஜி ஆரை விட இரண்டு நாள்களுக்கு (15- 1-1917) மூத்தவர் என்பது கூடுதல் தகவல். பிறகு ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் மணமகள் திரைப்படத்தில் சிறு வேடத்தில் வருகிறார். பல திரைப்படங்களிலும் நாயகன்/ நாயகியின் அப்பாவாக, மறைமுக வில்லனாக, வயதானவராக வந்து கொண்டு இருந்தார். சுகம் எங்கே திரைப்படத்தில் தான் ‘டணால் டணால்’ எனப் பேசிக்கொண்டு நாயகியின் அப்பாவாக தங்கவேலு வருகிறார். அதனால் அத்திரைப்படத்திற்குப் பின் தான் டணால் தங்கவேலு என்று அவர் பெயர் மாறியிருக்க வேண்டும். பிற்காலத்தில் மனைவி எம். சரோஜாவுடன் இணைந்தும், தனியாகவும் பல நூறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மிகவும் இளமை ததும்பும் பாத்திரங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார். இளமை திரும்பிய நடிகர் என இவரைச் சொல்லலாம்.
இந்தத் திரைப்படத்தில் இளமை என்றால் அப்படி இளமையாக இருக்கிறார். மேரி தான் மகாலட்சுமி என சந்தேகம் கொள்ளும் அவர், தனது உதவியாளர் கருணாநிதியுடன் செய்யும் வேலைகள் அனைத்தும் லாஜிக் இல்லாத அதே நேரம் விரசம் துளியுமில்லாத நகைச்சுவை. தங்கவேலுவின் பயணத்தில் மிஸ்ஸியம்மா ஒரு மைல் கல்.
சாமி தர்மம் தலை காக்கும்
தர்மம் செய்தால் புண்ணியம் உண்டு
கர்மம் தொலையுமே சாமி
கோடி வித்தைகளும் வயத்துக்காகவே
கூனுதே உடல் பிச்சை கேட்கவே
பார்வையில்லாம பாக்கப் பிடிக்கல
பாடுபட இனி வழியும் தெரியல
ஐஸ்க்ரீம் தின்றால் பசியடங்காது
காசிருந்தாலே வயிற் நிறையாது
ஐயா அம்மா அப்பனே
செய்யும் காரியம் சிறிதென்றாலும்
தீராத வினையும் சேருமே சாமி
ஐயா கொடுக்கவும் அடியேன் வாங்கவும்
என்னா பூர்வீக பந்தம் சாமி
பிச்சை ஓட்டினை நீ மறந்தாலும் -பிரம்மாவும்
நோட்டில் வரவு வைக்கிறான்
என கையில் திருவோடு பொருத்திய ஆர்மோனியப் பெட்டியுடன் சாரங்கபாணி அறிமுகமாகிறார். பார்வையற்றவராக நடித்துக் கொண்டிருக்கும் அவரும் ஜெமினியும் அறிமுகமாவதே ஒரு சுவாரசியம் தான்.
அடுத்து இவர்கள் சந்திக்கும் இடம் அன்றைய People’s Park என நினைக்கிறேன். இப்போது அந்த இடம் இருந்ததற்குப் பூங்கா நகர் என்ற பெயர் அடையாளமாக இருக்கிறது என்கிறார்கள் வரலாற்றாளர்கள். பிச்சை எடுத்துக் கொண்டு அதை வாழ்விடமாக இவர் கொண்டிருக்க, அஞ்சல் நிலைய அலுவலரின் முகவரிக்குத் தனக்குக் கடிதம் வருமாறு ஏற்பாடு செய்துவிட்டு, பூங்காவில் நேரத்தைச் செலவழிப்பவராக ஜெமினி இருக்கிறார்.
படிக்கும்போது நானும் ஸ்போர்ட்ஸ் காலம் தான் பார்ப்பேன் மிஸ்டர். இப்போது தான் வான்டெட் காலம் பார்க்கிறேன், என்று சொல்லிக் கொள்ளும் செய்தித்தாளைப் பார்க்கும் வேலையில்லா பட்டதாரி ஜெமினியிடம், கையில் ஒரு உண்டியல் ஏந்தினால் பணத்துக்குப் பஞ்சமில்லாமல் இருக்கலாம் எனச் சொல்லி நட்பாகிறார், சாரங்கபாணி. சாவித்திரி முடியாது என சொன்னதற்கு “முடியும் என்றால் படியாது படியும் என்றால் முடியாது” என ஜெமினி சொல்ல, அதையே பாடலாக்கி அவர்கள் தொடங்கும் ஆட்டம் இறுதிவரை களைகட்டுகிறது.
முடியுமென்றால் படியாது
படியுமென்றால் முடியாது
வஞ்சியாரின் வாழ்க்கையிலே
அர்த்தமே வேற தான்
அர்த்தமெல்லாம் வெறு தான்
அகராதியும் வெறு தான்
அலுக்கி குலுக்கி ஒதுங்கி டுங்கி நின்றால்
அருகில் ஓடி வாருமென்றே
வலிய பேசி வருமென்றால்
வந்த வாழிய பாருமென்றே
வெரப்பும் மொரப்பும் இருப்பதெல்லாம்
விஷயம் அதிலே விருப்பமென்றே
சிரித்து சிரித்து பேசினாலும்
சரசம் இனியும் போதுமென்றே
எதற்கெடுத்தாலும் ‘வெள்ளையப்பனைத் தள்ளுங்கள்’ என கையூட்டு பெறுவதாகட்டும் பெற்ற கையூட்டுக்குத் தகுந்தாற்போல் கதை விடுவதும் என திரைப்படத்தை அவ்வளவு நகைச்சுவையாகக் கடத்திச் செல்கிறார்.
ஆணுக்கு 200 சம்பளம் என்றும் பெண்ணுக்கு 250 என்றும்தான் விளம்பரம் கொடுக்கிறார்கள். அன்றைய நிலை அதுவா, பெண் ஆசிரியர் கிடைப்பது சிரமமா எனத் தெரியவில்லை. ஒரு பெண்ணின் மீது ஒரு குடும்பம் செலுத்தும் அன்பும், அதனால் அவர்கள் செய்யும் சடங்குகளால் ஏற்படும் மனக்குழப்பமும், அதையும் அக்குடும்பம் தங்கள் பாசத்தால் நிவர்த்தி செய்ய முயன்றுத் தோல்வியுறுவதும், இவர் இனி என்னை மிஸ்ஸியம்மா என கூப்பிடுங்கள் என கத்துவதும் என அழகாக கதையை இயக்குனர் நகர்த்தி இருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் ஆங்கிலோ இந்தியப் பெண்களை மிஸ்ஸியம்மா என அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.
சமீப காலம் வரை கூட ஆம்பூர் மருத்துவர் ‘ஆலீஸ் ஜி.பிராயர்’ ‘மிஸ்ஸியம்மா’ என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.
பட்டினத்தில் பாதி இடம் அவரதுதான் என லைட் ஹவுஸ், ஹை கோர்ட், இப்படி பீப்பிள்ஸ் பார்க் என்றும் சொல்கிறார். அந்தக் காலக்கட்டச் சென்னை நகரம் முதலில் காட்டப்படுகிறது. உடுப்பி ஓட்டல், மேனன் கடை, அஞ்சலகம், கொடியின் படம்போட்ட துணிப்பை, பேருந்து, கார், டிராம் வண்டியின் தண்டவாளம் எனப் பலவற்றைக் காண முடிகிறது. பேருந்தில் இருக்க இடமில்லை என்றால் நடத்துநர் ஏற்ற மாட்டேன் என்கிறார். ரயிலில் பெண்கள் பெட்டி இருந்திருக்கிறது. இப்படி அன்றைய சென்னையைப் படம்பிடித்துக் காட்டுகிறார்கள்.
திரைப்படத்தின் பெரிய தூண்கள் என பாடல்களைச் சொல்லலாம். தஞ்சை ராமையா தாஸ் எழுத, எஸ். ராஜேஸ்வர ராவ் இசையமைத்துள்ளார். ஊடல், கூடல், வெகுளித்தனம் என அனைத்தும் பாடல் வழியே கடத்தப்படுகின்றன. குறிப்பாக ஏ எம் ராஜா, லீலா இருவரும் திரைப்படத்தை இன்னொரு உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள்.
பி.சுசீலா பாடிய பாடல்
அறியா பருவமடா
மலர் அம்பையே வீசாதடா- மதனா
மாலையில் தென்றலில்
மருவிடும் மலர் போல்
மனமே மகிழ்ந்ததடா
வாழ்வில் புது நிலை காணுதடா -மதனா
கொஞ்சிடும் கிளி போல்
குலவிடவே மனம்
மிஞ்சியே தாவுதடா அதனால்
மேனியும் சிலிர்க்குதாடா
இதய காவினிலே இசை குயில் தானே
இனிமையாய் கூவுதடா- மதனா
இப்படி ஜமுனா ஆடிப்பாடினால் உடனே சாவித்திரி இப்படிப் பாடுகிறார்.
பி. லீலா பாடிய ‘தெரிந்து கொள்ளணும் பெண்ணே’ பாடல் வரும் சூழ்நிலை Good Touch Bad Touch என்பதை உணர்த்தும் விதமான பாடல் என சொல்லலாம்.
தெரிந்து கொள்ளணும் பெண்ணே
நிலை மாறிடும் ஆடவருடன் நெருங்காமலே பழகவே
தெரிந்து கொள்ளணும் பெண்ணே
அதைப்போல் நடந்து கொள்ளணும் பெண்ணே
தனக்கு உதவி வேண்டினாலும் தானாகவே போகாதே…
இனிக்க பேசி அவதூறாய் ஏளனமே செய்வாரென்று
பல வார்த்தைக்கு ஒரு வார்த்தையும் பதிலே சொல்ல கூடாது…
பல பொருள் பட இல்லாததை பறை சாற்றவே துணிவாறென்று
சாவித்திரிக்குப் பதில் சொல்லும் விதமாக ஜெமினி இப்படி எசப்பாட்டு பாடுகிறார். இப்படிப் பாடல்கள் வழியே கதையை நகர்த்தினாலும் அலுப்பு ஏற்படவில்லை என்பது தான் சிறப்பு. நடனம், ஆடை அலங்காரம், வீட்டின் அமைப்பு என எல்லாமே தேர்ந்தெடுத்துச் செய்திருக்கிறார்கள்.
தஞ்சை ராமையாதாஸ் எழுதிய பாடலைப் பாடியவர் ஏ.எம். ராஜா
பழக தெரிய வேணும்
உலகில் பார்த்து நடக்க வேணும் பெண்ணே
பழக தெரிய வேணும்
பழங்காலத்தின் நிலை மறந்து
வருங்காலத்தை நீ உணர்ந்து
பிடிவாதமும் எதிர் வாதமும்
பெண்களுக்கே கூடாது
பேதமில்லா இதயத்தோடு
பெருமையோடு பொறுமையாக -பழக
கடு கடுவென முகம் மாறுதல்
கர்நாடக வழக்கமன்றோ
கன்னியர்கள் ஆடவரை
புன்னைகையால் வென்றிடவே -பழக
பி.லீலா பாடிய கிறிஸ்தவர் இடையில் மிகவும் புகழ் பெற்ற பாடல் இது.
எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
என்றும் துணை நீயே மேரி மாதா
பரிசுத்த ஆவியாலே
வர புத்திரன் ஈன்ற தாயே
பிரபு ஏசுநாதன் அருளால்
புவியோரும் புனிதம் அடைந்தார்
நிலை மாறி வந்ததாலே
நகைப்பானதே என் வாழ்வே
கணமேனும் சாந்தி இலையே
அனுதினமும் சோதியாதே
பாடியவர்: A.M.ராஜா
இணை எதும் இல்லை விசால சிருஷ்டியிலே
விசித்திரங்கள் எல்லாம் எனதாகுமே
எல்லாம் உனக்கே தருவேனே
இனிமேல் உரிமை நீ தானே
தளுக்கு தளுக்கெனவே தாரகய் மின்னிடும்
நீல வானகமும் எனதாகுமே
எண்ணிலா மாந்தர்க்கு இதய வேகம் தரும்
குளிர்ந்த வெண்ணிலாவும் எனதாகுமே .
மனோகரமான குதுகூலம் தரும்
வசந்தா ருதுவும் எனதாகுமே…
மலரோடு சேர்ந்து விளையாடியே வரும்
மலய மருதமும் எனதாகுமே
பாடலாசிரியர்: தஞ்சை N.ராமையாதாஸ் பாடியவர்கள்: A.M.ராஜா & P.சுசீலா
பிருந்தாவனமும் நந்தகுமாரனும்
யாவருக்கும் பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ
புல்லாங்குழலிசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா
ராகத்திலே அனுராகமவினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா
கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திட செய்யாதா
ஏனோ ராதா இந்த பொறாமை
யார்தான் அழகால் மயங்காதவரோ
ஏ.எம்.ராஜா, பி.லீலா பாடிய பாடல்
வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையே
அகம்பாவம் கொண்ட சதியால்
அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதிபதி விரோதம் மிகவே
சிதைந்தது இதம் தரும் வாழ்வே
வாக்குரிமை தந்த பதியால்
வாழ்ந்திட வந்த சதி நான்
நம்பிட செய்வார் நேசம்
நடிப்பதெல்லாம் வெளி வேஷம்.
தன் பிடிவாதம் விடாது
என்மனம் போல் நடக்காது
தமக்கென எதுவும் செல்லாது
நம்மையும் பேச விடாது
அனுதினம் செய்வார் மோடி
அகமகிழ்வார் போராடி
இல்லறம் இப்படி நடந்தால்
நல்லறம் ஆமோ நிலவே
P. லீலா அவர்கள் பாடிய பாடல்
மாயமே நானறியேன் ஓ…
தண் மதி ராஜா வெண்ணிலா ராஜா
அழகு நிலாவே உனது மகிமையை
அறிந்திருந்தாலும் அனுபவியேனே
மறைந்தே தூவிடும் கலையின் ஜோதியே
மறைமுக மாகவே நானறிவேனே
கண்ணில் கலக்கமிடும் கதிரலையாலே
கரைந்திட உள்ளமே கனிந்தேனே
அன்பையே கோரி அருகினில் யாரோ
அழைப்பது போலே நான் உணர்ந்தேனே
எனப்பாடல்கள் அனைத்தும் அவ்வளவு இனிமை.
ஜெமினியும் சாவித்திரியும் பாத்திரத்திற்கு அவ்வளவு பொருந்தி இருக்கிறார்கள். சாவித்திரி போட்டுக்கொள்ளும் சட்டைகள் அவ்வளவு விதம் விதமாக உள்ளன.
ஹிட்லர் மீசை வைத்துக்கொண்டு, ‘வில்லன்போல’ நம்பியார் வருகிறார்.
வீட்டில் இருக்கும் கலகலப்பான தாத்தா போன்று ரங்காராவ் வருகிறார்.
ஆனாலும் அனைவரிலும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் ஜமுனாதான். மிகவும் சிறுமி போன்ற தோற்றத்தில் இருக்கிறார். ஒரு வெகுளிப்பெண்ணின் இயல்பை அவ்வளவு அழகாக சொல்லுகிறார். பணம் படுத்தும் பாடு என்ற படத்தின் மூலம் தமிழில் ஜமுனா அறிமுகமானாலும் அவரைப் பிரபலமாக்கியது மிஸ்ஸியம்மா தான்.
தொலைந்து போன மகள் மீண்டும் கிடைத்த போது, ஜமீன்தார், “உங்களிடம் இருந்ததால் என் மகள் படித்து விட்டாள். நான் வளர்த்து இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாள்” என இயல்பாக சொல்லுவது சிரிப்பை வரவழைத்தது மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தது. அப்போது ஜமுனாவின் முகத்தில் தோன்றும் உணர்வுகள் அவ்வளவு அழகு.
கருப்பு வெள்ளைப்படம், பழையப்படம் என்ற முன்முடிவை நம் எண்ணத்தில் இருந்து நீக்கிவிட்டுப் பார்த்தால், இன்றைய தலைமுறையும் ரசித்துப் பார்க்கத் தகுந்த திரைப்படம். இதனால் டிவிடி காலகட்டத்திலும் மிகவும் பிரபலமாகி இருந்த திரைப்படம்.
தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.