அயர்ச்சியில் கண்களை மூடிய ரேகா அப்படியே உறங்கிவிட்டாள். சில நிமிடங்களுக்குத்தான் என்றாலும் ஏதோ பல மணிநேர ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தது போன்ற உணர்வைத் தந்தது.
அவள் விழிகளைத் திறந்த போது மகளும் கணவனும் அருகே இருந்தார்கள். அவர்களைப் பார்த்ததுமே அவளுடைய சோர்வும் தவிப்பும் விலகியது.
“அப்பா… அப்பா, அம்மா எழுந்துட்டாங்க” என்று ஆர்வமாகக் கூறிக் கொண்டே அருகே வந்து நின்ற மகளை, “மலரு…” என்று வாஞ்சையாகப் பார்த்து, “பாப்பாவை பார்த்தியாடா செல்லம்..?” என்று கேட்டாள்.
“பார்த்தேன், குட்டியா அழகா இருக்கும்மா” என்று மகள் கைகளை அசைத்துச் சொன்ன விதத்தை ரசித்த ரேகா, “நீயும் இப்படிதான் குட்டியா அழகா இருந்த, தங்கச்சி பாப்பாவும் அப்படியே உன்னை மாதிரியே இருக்கா” என்றாள்.
“நிஜமாவா ம்மா..?”
“ஆமான்டி தங்கம்” என்றபடி அவள் மெல்ல எழுந்து உட்கார முயன்றாள்.
“ஏன் எழுந்திருக்கிற… படுத்துக்கோ?” என்றான் யோகேஷ்.
“ரொம்ப நேரம் படுத்திருக்கவும் முடியல” என்றதும், அவன் தலையணையை முதுகுப்புறம் சாய்த்து அவள் வசதியாக அமர்ந்து கொள்ள உதவி செய்தான்.
“வந்து ரொம்ப நேரமாச்சா மாமா?”
“இல்ல இப்பதான் வந்தேன்”
“யாரு சொன்னது… மோகன் அண்ணாவா?”
“உன் நம்பருக்குதான் முதல்ல கூப்பிட்டேன்… நீ எடுக்கலன்னுதான் அவருக்கு கூப்பிட்டேன்” என்றவன் அவளிடம், “நான் கிளம்பும் போதே வலி வந்திருச்சா?” என்று கேட்டான்.
“ஆமா நான்தான பொய் வலியா இருக்குமோனு அசட்டையா இருந்துட்டேன்”
இவர்கள் உரையாடலுக்கு இடையில் குறுக்கிட்ட மலர், “பாப்பா எழுந்திருக்கவே மாட்டேங்குது, எப்போ என்னை கண்ணை முழிச்சு பார்க்கும்?” என்று தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தபடி ஏக்கமாக வினவினாள்.
“தூங்குற பாப்பாவை எழுப்பக் கூடாது. நீ இங்கே வா” என்று யோகேஷ் மகளை அருகில் அழைத்தான்.
“நான் பாப்பாவை எழுப்பலப்பா. சும்மாதான் பார்க்குறேன்” என்றாள். மகளின் தலையை தடவிக் கொடுத்த ரேகா, “இனிமே பாப்பா உன்கூடதான் இருக்க போகுது, நீ எவ்வளவு நேரம் வேணா விளையாடலாம். ஆனா அதுக்கு பாப்பா இன்னும் கொஞ்சும் பெருசா வளரணும்” என்றாள்.
“ஆமாம்மா, பாப்பா ரொம்ப குட்டியா இருக்கு… கை கால் எல்லாம் இவ்வுளூன்டுதான் இருக்கு” என்ற மலர் சொன்னதை கேட்டு புன்னகை செய்தான் யோகேஷ்.
“நீங்க குழந்தையை தூக்குனீங்களா மாமா” என்று ரேகா அவனிடம் கேட்க, “லோடை இறக்கிட்டு அப்படியே மலரை போய் ஸ்கூலில் இருந்து கூட்டிக்கினு நேரா வந்துட்டேன். வீட்டுக்குகூட போகல. குளிச்சிட்டு அப்புறமா வந்து தூக்கிக்குறேன்” என்றான்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல மாமா” என்று அவள் குழந்தையைத் தூக்கிக் கொடுக்க எத்தனிக்க, “இருக்கட்டும் ரேகா, குழந்தை தூங்கட்டும்” என்றான்.
அவன் அப்படி மறுத்தது அவளுக்கு உறுத்தலாக இருந்தது.
அவன் தொடர்ந்து, “ இங்க ஒரு அக்கா இடியாப்பம் செஞ்சு எடுத்துட்டு வருவாங்களாம். நைட்டு டிபனுக்கு நான் அவங்ககிட்ட சொல்லிடுறேன்” என்றான்.
“சரி மாமா”
“உனக்கு மாத்து டிரஸ், பாப்பாவுக்கு துணி ஏதாச்சும் எடுத்துட்டு வரணுமா?”
“அதெல்லாம் நான் வரும் போதே எடுத்து வைச்சுன்னு வந்துட்டேன்”
“அப்படினா சரி… நான் என் போனோட சார்ஜரை வைச்சுட்டு போறேன்… நீ ஏதாவது வேணும்னா போன் போடு… நான் காலையில டிபன் எடுத்துட்டு வரேன்” என்றவன் எழுந்து நின்று கொண்டான்.
அவள் அதிர்ச்சியானாள். எதற்கு இத்தனை அவசரமாக கிளம்புகிறான்? ஏன் அவன் முகத்தில் குழந்தை பிறந்ததற்கான சந்தோஷம் துளி கூட இல்லை? அதுவும் குழந்தையின் முகத்தைக்கூட அவன் அருகே வந்து சரியாக பார்க்கவில்லை. குழந்தையை தூக்கவும் இல்லை என்று அவள் குழம்பிக் கொண்டிருக்கும் போதே, “மலரு… வா போலாம்” என்றான்.
“நான் பாப்பாவை விட்டு எங்கேயும் வர மாட்டேன்” என்று மலர் அவன் கையை உதறிவிட்டாள்.
“நம்ம இங்க இருக்க முடியாது மலரு, அதுவும் இல்லாம நம்ம அம்மாவுக்கு போய் சாப்பாடு எல்லாம் எடுத்துட்டு வரணும் இல்ல?”
“நீ போய் எடுத்துட்டு வாப்பா, நான் பாப்பாகூட இருக்கேன்”
ரேகா ஏதோ யோசனையில் ஆழ்ந்திருக்க, “ரேகா… மலர்கிட்ட சொல்லு” என்று யோகேஷ் கூற, அவள் தன் சிந்தனையிலிருந்து மீண்டு, மகளை ஏறிட்டாள்.
அவள் தீவிரமாக அடம் பிடிக்க, “அப்பா கூட போடா செல்லம். இரண்டு நாள்தான? அப்புறம் அம்மாவும் பாப்பாவும் வீட்டுக்கு வந்துருவோம்” என்று தன் பங்குக்கு சமாதானம் கூறினாள்.
“உஹும்… முடியவே முடியாது, நானும் பாப்பா கூடவேதான் இருப்பேன்” என்று அவள் அந்த சுகாதார நிலையம் அதிருமளவுக்கு ஆர்ப்பாட்டம் செய்தாள்.

மகள் அழுவதை பார்த்த ரேகாவின் கண்கள் கலங்கிவிட்டன.
“பாப்பாவை கூட்டிட்டு அம்மா சீக்கிரம் வந்துடுறேன். நீ இப்போ அப்பா கூட போ” என்று என்ன சொல்லியும் மலர் மசியவில்லை.
“அப்படி எல்லாம் இருக்க கூடாது. டாக்டர் திட்டுவாங்க” அங்கிருந்த ஒருத்தர் மலரை பயமுறுத்த அவள் முகம் மாறியது.
அதேசமயம் அங்கே வந்த தேவிகா, “என்ன சத்தம்?” என்று அதட்ட, அவள் கப்சிபென்றானாள்.
“நர்ஸம்மா ஊசி போட்டுடுவாங்க” என்று யோகேஷ் மகள் காதோடு சொன்னதில், அவள் அழுகை நின்றது. அதன் பின் மறுவார்த்தை பேசவில்லை. இதுதான் சமயம் என்று அவளை அழைத்துக் கொண்டு அவன் நகர்ந்துவிட்டான்.
ரேகாவிற்கு மருந்தேற்றிய தேவிகா, “என்ன உன் வூட்டுகாரும் போயிட்டாரு… யாரு உன் கூட இருப்பா” என்று விசாரித்தாள்.
“பாப்பாவை பார்த்துக்க யாரும் இல்ல க்கா. அதான் அவரை வீட்டுக்கு போக சொல்லிட்டேன்.”
“உங்க அம்மா அப்பா அவரு அம்மா அப்பான்னு யாரும் இல்ல?”
“அவரு எனக்கு தாய் மாமாதான். தாத்தா பாட்டி போன பொறவு அம்மாதான் அவரை வளர்த்தது. அம்மாவும் போன வருஷம் நெஞ்சு வலில செத்துப் போச்சு”
“கூட பொறந்தவங்க?”
“ஒரே ஒரு அண்ணன் இருக்கு. அம்மா போன பொறவு சொத்து தகராறுல என் வூட்டுகாரருக்கும் அண்ணனுக்கும் சண்டை வந்திருச்சு. இரண்டு பேருக்குள்ளேயும் இப்போ பேச்சு வார்த்தையே இல்ல.”
“நீ உன் அண்ணன்கிட்ட பேசுவ இல்ல. போன் போட்டு புள்ள பொறந்த விசயத்தை சொல்லு. இந்த மாறி நேரத்துல யாராச்சும் சொந்த பந்தம் துணைக்கு இருக்கணும். சத்தா சமைச்சு போட்டு பார்த்துக்க ஒரு ஆளு வேணாமா? என்ன புரிஞ்சுதா? உறவுக்குள்ள சண்டை எல்லாம் வரும் போகும். அதுக்காக உறவு வுட்டு போகுமா? இந்த மாதிரி நேரத்தை பயன்படுத்தி சண்டை சச்சரவு எல்லாம் பேசி சரி பண்ணிடனும்” என்றாள் தேவிகா.
ரேகா தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டாலும் இதெல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று அவளுக்குத் தெரியவில்லை.
“சரி பாப்பா ஒழுங்கா பால் குடிக்கிறாளா?”
“இல்ல க்கா… அப்ப குடிச்சுதுதான்… இன்னும் குடிக்கல”
“என்ன நீ… முதல பாலை கொடு… ஓய்… போதும் தூங்குனது முழிச்சுகோ, பாலை குடி” என்று தேவிகா குழந்தையை தூக்கி ரேகா மடியில் வைத்து குழந்தையைச் சீண்டிவிட்டாள். வீலென்று குழந்தை அலறியது.
ரேகா குழந்தையை தன் மார்போடு அணைத்து பிடித்த கணத்தில் முலையைக் கப்பென்று பிடித்து பாலை குடித்தது.
மலரைப் பால் குடிக்க வைப்பதே பெரிய போராட்டமாக இருக்கும். சின்னது பட்டென்று பிடித்துக் கொள்கிறது என்று ஆச்சரியப்பட்டாள்.
“தூங்குறானு அசட்டையா இருக்காத. நேரத்துக்கு பாலை கொடு. அப்புறம் நீயும் நல்லா தண்ணி குடிக்கணும்” என்று அறிவுரைகளை வழங்கி விட்டு அடுத்த நோயாளியிடம் செல்ல இருந்த தேவிகா மீண்டும் திரும்பி வந்து, “ஆமா கேட்க மறந்துட்டேன். குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேஷன் பண்ணிடலாம் இல்ல?” என, ரேகா திருதிருவென்று விழித்தாள்.
“என்ன யோசிக்குற? ஏற்கனவே பேசுனதுதானே..?”
“இல்ல க்கா. அவரை கேட்டுக்கிட்டு…”
“ஏன் இப்போ கேட்கலயா?”
“இல்ல, மறந்துட்டேன்”
“என்ன பொம்பள புள்ளன்னு யோசிக்குறியா?”
“அது வந்து…”
“எந்த காலத்துல இருக்கீங்க..? ஆம்பள புள்ள பொம்பள புள்ளனு… இரண்டும் பெண் குழந்தையா இருந்து குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிட்டா கவர்மென்ட்ல பணம் கொடுப்பாங்க. இதெல்லாம் அந்த ஆபிசர் அக்கா உன்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கும்தானே?”
“சொன்னா…ங்க” என்று இழுத்தாள்.
“அப்புறம் என்ன யோசனை, பேசாம ஆப்பரேஷனை பண்ணிக்கோ” என்று விட்டு தேவிகா அடுத்த படுக்கைக்கு நகர்ந்தாள். ரேகா யோசனையில் ஆழ்ந்தாள்.
மலர் பிறந்த சில நாள்களில், ‘நமக்கு ஒரு ஆம்பள புள்ள இருந்தா நல்லா இருக்கும்’ என்று யோகேஷ் சொல்ல, இரண்டாவது குழந்தை பெற்று கொள்ளலாம் என்று அப்போதே இருவருமாக முடிவு செய்தார்கள். என்ன காரணமோ? ஏழு வருடத்திற்கு பிறகுதான் அவள் மீண்டும் கருத்தரித்தாள்.
அதுவும் முந்தைய வருடம் யோகேஷ் பார்த்த ஒரு ஜோசியக்காரன், “நிச்சயமா உன் ராசிக்கு ஆம்பள புள்ள ஒன்னு இருக்கு” என்று கூறியதில், இது ஆண் குழந்தை என்று இருவரும் ஊர்ஜிதமாக நம்பினர்.
போதாக்குறைக்கு அக்கம்பக்கத்தினர் வேறு அவள் வயிற்றை பார்த்து, ‘இது ஆம்பள புள்ளதான்’ என்று அவர்கள் ஆசைக்கு மேலும் தூப போட்டு விட்டதில், பெண் குழந்தையாக இருக்கும் என்று சந்தேகமே எழவில்லை. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு எல்லாம் இன்று மொத்தமாக பொய்யாகிவிட்டது.
தன்னை விடவும் தன் கணவனுக்குத்தான் இதில் ஏமாற்றம் அதிகமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அதனால்தான் அவன் குழந்தையைத் தூக்கக் கூட இல்லையோ? யோசிக்கும் போதே அவள் கண்களில் ஆறாகக் கண்ணீர் வழிந்தோடியது.
பால் குடித்து கொண்டிருந்த அந்த பிஞ்சு முகத்தைப் பார்த்தவள், “அப்பாவுக்கு உன் மேல கோபம் எல்லாம் இல்லடா தங்கம். கொஞ்சம் வருத்தம்தான். அது சரியானதும் உன்னை தூக்கிப்பாரு” என்று ஆறுதல் கூறினாள்.
உண்மையில் குழந்தைக்கு சமாதானம் கூறுவதாக எண்ணி அவள் தனக்கு தானே அந்த சமாதானத்தை உரைத்துக் கொண்டாள். அடுத்த நாள் காலை யோகேஷ் மட்டும் தனியாக வந்திருந்தான்.
“மலரு வரலயா மாமா?”
“எதுக்கு..? வந்தா கிளம்ப மாட்டேன்னு அடம் பிடிப்பா. அதான் பேசி எப்படியோ ஸ்கூல விட்டு வந்துட்டேன். ஆமா நைட்டு சாப்பிட்டியா? அந்த அக்கா இடியாப்பம் எடுத்துட்டு வந்து தந்தாங்களா?”
“தந்தாங்க மாமா, சாப்பிட்டேன்”
“சரி இந்தா, கடைல இருந்து இட்லி வாங்கிட்டு வந்தேன். அப்புறம் மோகன் அண்ணன் வீட்டுல இருந்து இந்த கருப்பட்டி காபியை கொடுத்து வுட்டாங்க” என்று எல்லாவற்றையும் மேஜை மீது எடுத்து வைத்தான்.
அப்போதுதான் குழந்தைக்கு பால் கொடுத்து முடித்திருந்தாள். வாயை அழுந்த துடைத்துவிட்டவள், “முழிச்சிட்டுதான் இருக்கா… வைச்சுக்குறீங்களா?” என்று அவனிடம் தயக்கமாக நீட்ட, எதுவும் பேசாமல் வாங்கி கொண்டான்.
‘அப்பாடா’ என்று இருந்தது அவளுக்கு. காலை உணவை சாப்பிட்டுக் கொண்டே மெதுவாக, “அண்ணாவுக்கு போன் பண்ணி சொல்லலாமா?” என, அவன் முகம் கடுப்பானது.
எதுவும் பேசாமல் அவன் இறுக்கமாக அமர்ந்திருக்க, “மாமா” என்றாள்.
அவன் உடனே, “உனக்கு சொல்லணும்னா சொல்லிக்கோ. ஏன் என்னை கேட்குற? உங்க அண்ணன்தானே?” என்றான்.
“இல்ல மாமா, சொல்லலாமா…னுதான் கேட்டேன்”
“அதான் உன் இஷ்டம்னு சொல்லிட்டேன் இல்ல” என்றவன் குரல் உயர்ந்தது. அதற்கு மேல் அவள் எதுவும் பேசவில்லை. சாப்பிட்டு முடித்து கை கழுவிக் கொண்டாள்.
அவன் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தான்.
‘நல்ல வேளை, பொம்பளப் புள்ளனு மாமா எதுவும் நினைச்சுக்கல’ என்று அவள் ஆசுவாசமடைந்தாள். ஆனால் அவன் சில நிமிடங்களில், “நான் வரும் போது குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் பத்தி நர்ஸ் பேசுனாங்க” என்றான்.
“ஆமா நேத்து என்கிட்டயும் கேட்டாங்க… உங்களை கேட்டுட்டு சொல்லாம்னு” என்றதும் அவன்,
“இப்போதைக்கு வேண்டாம்னு சொல்லிடு” என்று சாதாரணமாகச் சொன்னான்.
தொடரும்…
செயற்கை நுண்ணறிவு படங்கள்: மோனிஷா
படைப்பாளர்

மோனிஷா
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.