நல்ல தங்கை 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். ‘மந்திரி குமாரி’ ‘வாராய் நீ வாராய்’ புகழ் எஸ். ஏ. நடராஜன் தனது forward ஆர்ட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். அவரே திரைப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். 

பிற்காலத்தில் நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருமால் பெருமை, திருமலை தென்குமரி அகத்தியர், காரைக்கால் அம்மையார், என அனைத்துக் கடவுள்களையும் தமிழ் சமூகத்திற்கு அறிமுகம் செய்த  ஏ. பி. நாகராஜன், இந்தத் திரைப்படத்திற்குக் கதை வசனம் எழுதியிருக்கிறார். 

1953ஆம் ஆண்டில் இவரது ‘நால்வர்’ நாடகம் படமானபோது, அதில் திரைக்கதை, வசனம் எழுதி, நாயகனாக நடிக்கவும் செய்தார். இதனால்,  நால்வர் நாகராஜன் என அறியப்பட்டிருக்கிறார். ‘திருவிளையாடல்’ படத்தில், நக்கீரராக நாம் இவரைப் பார்த்திருக்கிறோம்.  ஆனால் அப்போது எனக்கு இவரின் பெயர் தெரியாது ஆனால், 

வெண்ணிலவைக் குடைபிடித்து,

வீசுதென்றல் தேரேறி

மென்குயில் தான் இசை முழங்க,

மீன் வரைந்த கொடியசைய

கண்கவரும் பேரழகி,

கனக மணிப் பொற்பாவை

அன்னநடை ரதியுடனே,

அழகு மதன் வில்லேந்தி

தண்முல்லை, தாமரை, மா,

தனிநீலம், அசோகம் எனும்

வண்ண மலர் கணை

தொடுத்தான் வையமெல்லாம்

வாழ்கவென்றே..!

என கண்காட்சி திரைப்படத்தில் வரும் ‘அனங்கன் அங்ககன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா’ என்ற பாடலுக்கு முன் AP நாகராஜன், தனது அழகிய கரகரத்த குரலில் ஒரு தொகையறா சொல்லுவார். அதன் மூலம் அவரின் குரல் எனக்கு அறிமுகம். இனிமையான பாடல் அது. 

பாரதியார் பாடல் ஒன்று இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அமரக்கவி பாரதியார் (கூலி கேட்பார்) என எழுத்து போடும்போது போடுகிறார்கள். இதற்கு முன் பல திரைப்படங்களில் பாரதியாரின் பாடல்கள் பயன்படுத்தப் பட்டாலும் அவர் பெயரை எந்த திரைப்படத்திலும் குறிப்பிட்டு நான் பார்க்கவில்லை. விடுதலைக்கு முன் அவரது பாடல்களுக்குத் தடை இருந்ததால், பெயரைப் போடாமலேயே பயன்படுத்தி இருக்கிறார்கள். அது பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது. 1981-82 பாரதியாரின் நூற்றாண்டு விழா வரை பாரதியாரின் பாடல்களுக்கு உரிமை ஏ வி எம் நிறுவனத்திடம் இருந்ததாகவும் அவர்கள் அரசுடைமையாக்க என கொடுத்ததாகவும் செய்தி உண்டு. பாடல்களின் உரிமையை செல்லமா பாரதி யாருக்கும் விற்பனை செய்தாரா எனத் தெரியவில்லை.

G. ராமநாதன் பாடும் பாடலுக்கு குமாரி சுசிலா நடனமாடுகிறார். இசையமைப்பாளர் G. ராமநாதன் பாடியிருக்கும் சில பாடல்களுள் இதுவும் ஒன்று.

கூலி மிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்

வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்

ஏனடா நீ நேற்றைக்கு இங்கு வரவில்லை என்றால்

பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்

வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்

உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம்பலத்துரைப்பார்

எள் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்

சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு, கண்டீர்

சேவகரில்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை

இங்கிதனால் நானும் இடர் மிகுந்து வாடுகையில்

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் -கண்ணன் 

மாடு கன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன்

சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே

அழாதபடி பார்த்திடுவேன்

காட்டு வழியானாலும் கள்ளர் பயமானாலும்

இரவிற் பகலிலே எந்நேரமானாலும்

தேவரீர் தம்முடனே சுற்றுவேன் 

கற்ற வித்தை ஏதுமில்லை காட்டு மனிதன் ஐயே!

ஏது பெயர்? சொல் என்றேன்

ஒன்றுமில்லை கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான்

கட்டுறுதி உள்ள உடல் கண்ணிலே நல்ல குணம்

ஒட்டுறவே நன்றாய் உரைத்திடும் சொல் ஈங்கிவற்றால்

தக்கவனென்றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்

மிக்க உரை பல சொல்லி விருது பல சாற்றுகிறாய்

கூலி என்ன கேட்கின்றாய்? கூறு என்றேன் ஐயனே!

தாலி கட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதுமில்லை

நானோர் தனியாள் நரை திரை தோன்றாவிடினும்

ஆன வயதிற்களவில்லை ஆதரித்தாற் போதும் 

நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் 

காசு பெரிதில்லை என்றான்

பண்டைக் காலத்துப் பைத்தியத்தில் ஒன்றெனவே- கண்டு கண்ணனை நான் ஆளாகக் கொண்டுவிட்டேன் 

நாளாக நாளாக கண்ணனுக்கு நம்மிடத்தே

பற்று மிகுந்து வரல் பார்க்கின்றேன் கண்ணனால்

பெற்று வரும் நன்மை எல்லாம் பேசி முடியாது

கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம்

வண்ணமுறக் காக்கின்றான் 

வீதி பெருக்குகிறான் வீடு சுத்தமாக்குகிறான்

தாதியர் செய் குற்றமெலாம் தட்டி அடக்குகிறான்

நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்

பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் -கண்ணன் 

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!

கண்ணனை ஆட்கொண்டேன் – நான்

கண்கொண்டேன்! கண்கொண்டேன்!

கண்ணனை ஆட் கொள்ளக் காரணம் உள்ளனவே!

பாரதியாரின் கவிதையில் சிறு மாற்றங்கள் செய்துள்ளார்கள். அவரின் பிரபலமான ‘எங்கிருந்தோ வந்தான்’ பாடல் அனைவரும் அறிந்தது தான். ஆனால் அதற்கு முன் வேலையாட்கள் குறித்த அவரது உள்ளத்து வருத்தத்தை எழுதியிருப்பது இப்பாடல் கேட்ட பின்பு தான் எனக்குத் தெரிந்தது. எள்ளலுடன் கூடிய நல்ல கவிதை. 

ஏனைய பாடல்களை கா. மு. ஷெரிப், அ. மருதகாசி, கே. பி. காமாட்சிசுந்தரம், ஆர். லட்சுமண தாஸ் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.  

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். ஜி. ராமநாதன், டி.எம். சௌந்தரராஜன், திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், (ஜிக்கி) கிருஷ்ணவேணி,  ராதா ஜெயலட்சுமி, பி. லீலா, டி. வி. ரத்தினம், ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர். 

நடிகர்கள் 

எம். என். நம்பியார்

டி. எஸ். பாலையா

எஸ். ஏ. நடராஜன்

ஏ. கருணாநிதி

புளிமூட்டை 

K சாயிராமன் 

எதார்த்தம் பொன்னுசாமி 

எம். எம். ஏ. சின்னப்ப தேவர்

TR நடராஜன் 

CK சவுந்தரராஜன் 

DK சின்னப்பா 

MV ராஜு 

PK ராகவன் 

மற்றும் பலர் 

நடிகைகள் 

மாதுரி தேவி

P R சுலோச்சனா

CR ராஜகுமாரி 

MSM பாக்கியம்

SK வேணுபாய் 

K சாந்தாதேவி 

SN லட்சுமி 

லலிதா 

புஷ்பா 

சுந்தரம்மா 

மற்றும் பலர்

அக்கா தங்கை இருவர். அக்கா மோகனா படித்தவர். தங்கை சுகுணா படிக்காதவர். அக்காவிற்குப் படிக்காத கணவரும், தங்கைக்குப் படித்த கணவர் சுந்தரும் அமைகிறார்கள். அக்கா, கிராமத்திலும் தங்கை நகரத்திலும் வாழ்கிறார்கள். இரு வீடுகளிலும் இருக்கும் பெரியவர்கள், மருமகள் சொல்லுக்கு மறுசொல் சொல்லாத அன்பானவர்கள்.

படித்த அக்கா, தனது கணவர் கைலாசத்திற்குப் படிப்பு சொல்லிக் கொடுக்கிறார். 

அதேபோலவே சுந்தர், தனது மனைவிக்கு ஒரு ஆசிரியை வைத்துப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இவரும் திருக்குறள் முதல் அனைத்தும் கற்கிறார். ஆசிரியையாக வருபவர் (மிகச்சமீப காலம் வரை நடித்து மறைந்த SN லட்சுமி பாட்டி).

இப்படிக் கதை சரி பாதி நேரம் போகிறது. இப்போது தான் வில்லன் ராமு அறிமுகமாகிறான். அதன்பிறகு, சுந்தர் குடித்துச் சீட்டாடிவிட்டு வருகிறான். வீட்டில், தான் தனியாகத் தொழில் தொடங்க என சிற்றப்பாவிடம் பணம் கேட்கிறார். பணம் வாங்கி, ராமுவை நம்பிக் கொடுக்கிறார். சுந்தரத்தின் பணக்காரப் பெற்றோர் இறந்து விட சிற்றப்பா தான் இவரை வளர்க்கிறார். அவர் சிக்கனத்தின் சிகரம். எதற்கும் கணக்கு கேட்பவர். நினைச்சேன் நினைச்சேன் என பணக்கணக்கு செய்யும் சிற்றப்பாவாக வருபவர் புளிமூட்டை ராமசாமி. திரைப்படத்தில் நன்றாக நடித்திருப்பவர் என இவரைச் சொல்லலாம். 

சுகுணாவிற்குப் பாடம் சொல்லித் தரும் ஆசிரியை, ஒரு மோசக்காரனை நம்பித் தனது அண்ணன் சொத்து முழுவதையும் இழந்ததைச் சொல்கிறார். அந்த மோசக்காரன் யார் எனச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை. 

வீட்டு வேலை எல்லாம் தானே செய்தால் தான் திருப்தி.என சுகுணா வாழ்கிறார். ‘உத்தமப் பொண்ணு அவள் பத்தினிப் கண்ணு’ என அவரின் வாழ்க்கைத் தொடருகிறது. கணவனை எப்போதும் போல் அத்தான் என அழைக்கிறார். அன்பு மிகுந்து விட்டால் மனைவியை அப்பா என அழைக்கலாம் என்கிறார் கணவர். இது ஒரு புது மொழி (பாஷை) என்கிறார். இப்படி, கணவன் இங்கும் கொஞ்சுகிறார். அங்கும் வேறு பெண்ணுடன் இருக்கிறார்.

அக்கா மோகனா வீட்டில், கணவர் கைலாசம் படித்து, ஆங்கில செய்தித்தாள் வாசிக்கும் அளவிற்கு வந்து விட்டார். கையில் சிகரெட், மடியில் கைக்குட்டை விரித்துக் கொண்டு சாப்பிடுவது போன்ற ‘நாகரீகங்கள்’ அனைத்தும் கற்றுக் கொண்டார். 

இப்படிப் பட்ட நேரத்தில், கைலாசம் நகரத்திற்குச் செல்ல விரும்புகிறார். கணவன் மனைவி இருவரும் சுகுணா வீட்டிற்குச் செல்கிறார்கள். மோகனா ராமுவுடன் சென்னையைச் சுற்றிப் பார்க்கிறார். இது குறித்து சுகுணா எச்சரிக்கிறார். மோகனா கேட்கவில்லை. மாறாகத் தங்கையை அடிக்கிறார். 

இந்த நேரத்தில் ஆசிரியை ராமுவிடம் சிக்கிக் கொள்கிறார். ராமுவின் உண்மை குணம் தெரிந்த சுந்தர், கொடுத்த பணத்தை வாங்கச் செல்கிறார். ராமு இங்கு சுகுணாவிடம் வருகிறான். “உல்லாச டம்பக்காரா உப்பில்லா கஞ்சிக்காரா” என சுகுணாவின் வேலைக்காரப் பெண்மணி, நன்றாக மொத்த, போலீஸ் வருகிறது. 

சுகுணா நாட்டுக்கே கிடைத்த நல்ல தங்கை எனத் திரைப்படம் நிறைவு பெறுகிறது. 

க.மு. ஷெரிஃப் எழுதி, பி.லீலா, ஜிக்கி இணைந்து பாடிய பாடல் இது. அக்கா தங்கை உறவின் இனிமையைக் காட்டும் பாடல்.

என்னைப்போலே பாக்கியசாலி 

இனி யாரே இவ்வுலகிலே 

எண்ணம் போல் யாவுமே 

வாழ்வில் தினம் தினம் நடந்தே 

இன்பமே ஏகுதே  என் மனம் தினம் மகிழ்ந்தே 

இணை யாரே உலகிலே 

அழகோடு அன்பும் வாய்த்தவர் தானே 

துரை என வந்தேமாலை சூட்டிடுவாரே!

சுகம் பெறுவேன் என்றும் மகிழ்வாக 

ஆடுவேன் பாடுவேன் ஆங்கிலம் தனைக் கலந்து 

பேசுவேன் பேசுவார் ஜாடையாய் மனம் மகிழ்ந்து 

உந்தன் மனம் போலே வாழ்வில் 

வந்திடுவாரே விரும்பிய தெல்லாம் 

நாளும் நீ பெறலாமே!

இருவருமே என்றும் பிரியாது 

அன்புடன் இன்பமாய் நாளும் 

குணமுடன் நடந்தே 

ஆனந்தம் பொங்கவே வாழ்வீர் நலமிணைந்து 

இணை யாரே உலகிலே

உன்னைப்போலே பாக்கியசாலி 

இனி யாரே இவ்வுலகிலே 

‘மாப்பிள்ளை மக்கு மாப்பிள்ளை’ எனப் பாடல் ஒன்று வருகிறது. ஆலாத்தி என தான் இப்பாடலின் முடிவில் சொல்கிறார்கள். பெண் வீட்டார் மாப்பிள்ளையைக் கேலி பேசுவதும் மாப்பிள்ளை வீட்டாரை பெண்ணைக் கேலி பேசுவதுமாக பாடல் இருக்கிறது. 

எங்கள் ஊரில் பெண் வீட்டில் மட்டும் இன்னமும் இது இருக்கிறது. ஆலந்தி என சொல்லுவார்கள். பெண்ணின் தங்கை இதை செய்வார். பதிலுக்கு மாப்பிள்ளை சேலை வைக்க வேண்டும். 

மாப்பிள்ளே மக்கு மாப்பிள்ளே நம்ம மாப்பிள்ளே 

மாமரத் தோப்பிலே மாடு மேய்க்கும் ஆம்பளே

குப்பை  வண்டியோட்ட லாயக்காக வந்து வாச்ச மாப்பிள்ளே 

நாட்டுப் பொண்ணு நவநாகரீக் கண்ணு 

மேனாட்டிலே வாழும் சீமாட்டி போல் பேசும் 

வாயாடியாய் வந்து வாச்சுதம்மா 

ஆட்டம் ஆட ஆரம்பிச்சா 

கோட்டை கொத்தளம் தவிடு பொடி

பாட்டுப் பாட வாய் திறந்தா காத்து செவிடு ஆகுமடி 

சாட்டை போலே ஜடையுமில்லே சாண் அளவு பின்னலடி 

ஜாக்ரதையா இல்லாவிட்டால் அண்ணா பாடு ஆபத்தடி

பெண்சாதி தன்னை இவர் திண்டாட விடுவார் 

பித்தாகி தாசி மனை தேடிப் போவார் காலில் வீழ்வார் 

குண்டோதரன் கூட சாப்பாட்டிலே 

இந்த கோமாளிக்கீடாக மாட்டானடி 

மண்டூகம் எண் சுவடி வாய்ப்பாடு என்றார்

இந்த மண்டூகம்

மணி என்ன விலை என்று கேள்வி கேட்பார்

ஆந்தைப் போல் முழிப்பார் 

வந்தாரடி நம்ம மாப்பிள்ளையாய்

வாலு இல்லாத கிஷ்கிந்தை வாசி இவரே

பட்டுக் கட்டும் ஒய்யாரி புட்டா மாவு சிங்காரி 

துட்டுக்குத்தான் சேதம் இந்த சுந்தரி – இது 

வெக்கம் மானம் இல்லாமே வேலை வெட்டி பார்க்காமே 

பக்கம் வந்து அண்ணா கிட்டே பல்லை பல்லை காட்டுமே

அதிகம் படிச்சுவிட்ட தெம்பு 

 நம்ம அண்ணாகிட்டே பேசுமடி வம்பு – இதன்   

அட்டகாசத்தை அவர் மட்டம் தட்டுவார் 

அஞ்சமாட்டார் கெஞ்ச மாட்டார் மிஞ்சாதே அம்மாளு

சந்தான பாக்கியமும் சகல சுகபோகம் 

உண்டாக வாழ்த்துகிறோம் 

வாழீ நலம் சூழ

‘சலசலவென்றே சாலையில் ஓடும் காளைகளைப் பாராய்’ என்ற பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. காணொளி கிடைக்கவில்லை. பாடலை இயற்றியவர் கே பி காமாட்சி என்கிறார் கலைஞானம். அவர் அந்தப் பாடல் எழுதும் போது உடன் இருந்திருக்கிறார். 

சலசலவென்றே சாலையில் ஓடும் 

காளைகளைப் பாராய்

கல்யாணப் பெண்ணும் மாப்பிள்ளையும் மனம் 

களிக்கிறாங்க ஜோரா 

உழுது நட்டிடும் பயிர்களைப் போலே 

உயரே ஓங்கிடவே 

உணவில்லாமல் வருந்திடும் மக்கள் 

துயரம் நீங்கிடவே 

வளரும் மேகலை கண்ணகி 

மங்கம்மாள் செயல்களைப் போலே 

மாநிலம் மீதினிலே 

மகிழ்ந்திடவே உயர்ந்திடவே புகழ்ந்திடவே 

இல்லறமே மிக நல்லறமாகும் தானே! 

என்ற நீதியை வள்ளுவன் வகுத்தான் தானே!

அந்த நல்லவர் சொல்லை நம்பி வாழ்வது 

நம்மவர் கடமை தானே!

நானிலம் வாழ்ந்திடவே 

உயர்ந்திடவே மகிழ்ந்திடவே புகழ்ந்திடவே 

லட்சுமண தாஸ் எழுதிய பாடல் ஒன்று உள்ளது. 

“துயில் நீங்கி எழுந்திடுவாள் தூபம் கொளுத்திடுவாள்

உயிரான கணவன் பதம் உளம் மகிழ்ந்து தொழுதிடுவாள்

உத்தமப் பொண்ணு அவள் பத்தினிப் கண்ணு

வாசல் மனை பெறுக்கி மாக்கோலம் போட்டிடுவாள்

பாசி அறப் பாத்திரங்களை பக்குவமா துலக்கிடுவாள்

பாரதப் பொண்ணு  ஆச்சாரத்தில் கண்ணு

ருசி உள்ள கறி வகைகள் நொடிப் பொழுதில் சமைத்திடுவாள்

உசிதம்போல் உண்பவர்தம் உளமறிந்து உபசரிப்பாள்

உயர்குலப் பொண்ணு நல்ல செயலடி கண்ணு

பூஜை மிகச் செய்திடுவாள் புண்ணியங்கள் தேடிடுவாள்

வாசமலர் சூடி என்றும் வல்லானை வணங்கிடுவாள்

மறக்குலப் பொண்ணு தமிழ் மக்களின் கண்ணு

கணவனின் குற்றங்களை கணப்பொழுதில் மறந்திடுவாள்

குணத்தாலே வசப்படுத்தி குடும்பத்தை விளங்கச் செய்வாள்

குலநலப் பொண்ணு இந்த உலகத்தின் கண்ணு

வீட்டிலுள்ள குறைபாட்டை வெளியிடவே மறுத்திடுவாள்

காட்டுவெள்ளம் போல் எவர்க்கும் கருணை மிகச் செய்திடுவாள்

நாட்டுக்கேத்த நங்கை அவ பேரு நல்ல தங்கை”

மருதகாசி எழுதி, திருச்சி லோகநாதன், நடிகர் கருணாநிதி இணைந்து பாடும் இப்பாடல் சில இடங்களில் ‘அறிஞர் அண்ணா’வைக் கேலி செய்கிறது. இந்தத் திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியிருக்கும் ஏ. பி. நாகராஜன் அவர்கள் ம பொ சி அவர்களின் அன்பர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தரப்பிலிருந்து இருந்து வரும் பாடல் என இதைக் கருதலாம். தத்துவ மோதல்களும் தனிமனிதத் தாக்குதல்களும் அன்றே இருந்துள்ளன என்பதற்கு இது ஓர் எடுத்துக் காட்டு.

ABCD படிக்கிறேன் EGFGH எழுதறேன் 

Officer போல நடிக்கிறேன் என் 

Husband சொன்னது போல செய்கிறேன்

ஏனிந்த படிப்பு நமக்கு -இதில் 

என்னா நன்மை இருக்கு?

ஆம்பள பொம்பள சொல்லக் கேட்பதா 

அவமானமாக இருக்கு -நினைச்சா 

பத்தாம் பசலி மனுஷனாகவே 

பட்டிக்காட்டில் இருந்தேன் -பணப் 

பெட்டி காத்துக் கிடந்தேன் 

படிச்ச ஹஸுபண்டா நாகரீகமும் தெரிஞ்சிகிட்டேன் 

எக்ஸ்ட்ரா பாஷையும் புரிஞ்சுக்கிட்டேன்.

மெத்த படிச்சவர் போலே நீங்க 

வெளுத்து வாங்குறீங்க -’அண்ணா’ 

வேஷம் போடுறீங்க 

வெத்து வெட்டுக விடவேணாங்க 

அர்த்தம் என்னாங்க 

அட பட்டிக்காட்டு countryfruit 

படிச்சிருந்தா தான் தெரியும் -நீ 

இங்கிலீசு பாஷையில் எஸ்க்கு இல்லை என்றும் 

நோவுக்கு சரி என்றும் அர்த்தம் 

அர்த்தம் அனர்த்தம் எல்லாம் தெரிஞ்ச 

அறிஞராயிட்டீங்க -அண்ணா 

அறிஞராயிட்டீங்க -ஆனா 

அதிகம் படிச்ச பெண்ணைக் கட்டியே 

அடிமையாயிட்டீங்க -மூளையை 

அடகு வச்சுட்டீங்க 

இடியட்டு நீயும் பொண்ணப் பத்தி 

எடபட்டுப் பேசாதே -என்கிட்டே 

அடிபட்டு சாகாதே -நமக்கு 

இட்லி சாம்பார் இன்பம் செய்தெல்லாம் 

கொடுப்பது பொண்ணு- அவ 

தாண்டா நமது கண்ணு.

மருதகாசி எழுதி டி.வி. ரத்தினம் அவர்கள் பாடிய பாடல் இது. 

ஓ சீமானே 

திரும்பிப்பார்க்கும் ராஜா 

சிரித்துப் பேசும் ரோஜா -இதை 

விரும்பி ஏங்க வேண்டாம் 

வெறும் வாயை மெல்ல வேண்டாம் 

அப்பாவி வண்டு வெறும் நப்பாசைக் கொண்டாட 

தப்பாகத்தான் போடுங்க -இந்த 

சிப்பாயி வைக்கும் குறி 

துப்பாக்கி எப்போதும் தப்பாதுங்க 

மைனர் ரொம்ப ஜாலி 

மணி பர்ஸு மட்டும் சோலி 

பெண்கள் தம்மைக் பின் போவதெங்கே ஜோலி 

படித்த பெண், தனக்குத் தகுந்தவாறு மணமகன் பார்ப்பார் என நினைத்து ஏமாந்து போகிறார். தூக்குப் போட்டுக் கொள்வேன் எனத் தந்தை மிரட்டியதால், சம்மதிக்கிறார். தங்கை, மாப்பிள்ளைக்குப் படிப்பு மட்டும் தானே இல்லை. மற்றபடி, வயதானவரா, இரண்டாம் மூன்றாம் தாரமா, ஏழையா ….இப்படி அடுக்குகிறார். வயதானவர், இரண்டாம் மூன்றாம் தாரம் எனத் திருமணம் செய்து கொடுப்பதென்பது அப்போது அவ்வளவு இயல்பாக இருந்திருக்கிறது. புத்திசாலியாகக் கணவரை ஆக்கு என அறிவுரை சொல்கிறார். அப்படி அவர் ஆக்குவதுதான் கதை என போகிறது.  

நாகரீகம் என்பது புகைப்பதுடன் இணைத்துப் பேசப்படுகிறது. படித்தவர்கள் எனக் காட்டப்படும் அத்தனை ஆண்களும் புகைக்கிறார்கள். இப்படித்தான் புகைக்கும் வழக்கத்தை மக்களிடம் புகுத்தியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். 

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.