“மறுபடியும் எப்போ வேலைல ஜாயின் பண்றது?” என்று கேட்டேன்.

“பாப்பாக்கு இப்போதான அஞ்சு மாசம் ஆகுது, அதுக்குள்ள மறுபடியும் வேலையா?”

“டெலிவரிக்கு முன்னாடி இருந்தே நான் லீவுலதான இருக்கேன். ஆறு மாசம் பெயிட் லீவு முடிஞ்சது. வேணுனா இன்னொரு அஞ்சு ஆறு மாசம் லீவு போட்றேன். பாப்பாக்கு ஒரு வருஷம் ஆகும் போது சேர்ந்துக்கவா?”

சில நிமிடங்கள் அமைதி.

குழந்தை பிறந்த பின் எத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் பணியில் சேர்ந்தீர்கள்?

ஓர் ஆண்டுக்குப் பின் – 29.1%

மூன்று ஆண்டுகளுக்குப் பின் – 18.2%

ஐந்து ஆண்டுகளுக்குப் பின் – 3.6%

வேலையைத் தொடர முடியவில்லை – 49.1%

11.03.2025 அன்று அவள் விகடனில் வெளிவந்த விகடன் ஆன்லைனில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு சர்வே முடிவுகளில் சொல்லப்பட்டவை.

குழந்தை பிறந்த பின்பு மீண்டும் எப்போது வேலையில் சேர்வது, வீட்டில் உள்ளவர்கள் என்ன சொல்வார்கள், குழந்தையை யாரிடம் விட்டுச் செல்வது இப்படிப் பல கேள்விகள்.

இதனால்தான் பாதிக்குப் பாதி பெண்கள் வேலையை விட்டுவிடுகிறார்களா?

மீண்டும் இரண்டு நாட்கள் கழித்து வீட்டில் பேச ஆரம்பித்தேன்.

நான் பொதுத்துறை ஒன்றில் பணியாற்றி வந்தேன். அதனால் என்னை வேலையை விட்டுவிடச் சொல்ல மாட்டார்கள் என நம்பினேன். நடுத்தர வர்க்கம்தான், எப்படியும் என் ஊதியம் இன்றைய சூழலின் செலவை எதிர்கொள்ள நிச்சயம் தேவை. என் வேலையின் மேல் என் கணவருக்கும் அக்கறை உண்டு.

மீண்டும் வீட்டில் பேசினேன்.

“ஏன் உனக்கு வீட்ல இருந்தே வேலை செய்ற மாதிரி வேலை தரமாட்டாங்களா? ஆபீஸ் போய்தான் ஆகணுமா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்கள் வீட்டார்கள்.

“இல்லை, என் வேலைல அப்படிப்பட்ட வாய்ப்புலாம் இல்லை. நேர்ல போய்தான் ஆகணும்” என்றேன் ஏளனப் பார்வைதான் பரிசாகக் கிடைத்தது.

வீட்டில் இருந்து வேலை செய்யும் பெண்களின் நிலை மட்டும் எப்படி இருக்கிறது… ஏற்கெனவே சாப்பிட, தூங்க நேரம் கிடைக்காது. இதில் வீட்டிலிருந்தே வேலை என்றால் இன்னும் மோசம். குறைந்தபட்ச சந்தோஷம் குழந்தையைக் கண் பார்வையில் வைத்துக் கொண்டே வேலையை விடாமல் தொடரலாம்.

“வேலைய வீட்டுப் பக்கத்துலயே மாத்திக் குடுக்க மாட்டாங்களா?” அடுத்த கேள்வியை எதிர்கொண்டேன்.

நான் அந்த வேலையை வாங்க எவ்வளவு போராடினேன். நினைவுகள் ஓடின.

அனைவருக்கும் சொல்லப்படுவது போல் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

அந்தக் கட்டங்களைத் தாண்டி பட்டப்படிப்பு முடிந்ததும் அடுத்து என்ன என்கிற தேடலில் போட்டித் தேர்வுகள் பல எழுதி, பல முயற்சிகளுக்குப் பின் கிடைத்த வேலை இது.

வேலைக்குச் சேர்ந்ததும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் உழைத்துள்ளேன்.

எல்லா வேலைகளுக்குப் பின்பும் இப்படி ஒரு கதை இருக்கும். எல்லா வேலைகளுக்குப் பின்பும் பல போராட்டங்கள் இருக்கும். அவரவர் வேலை அவரவருக்கு உயர்வுதான்.

இதை எதையுமே உணர்ந்து கொள்ளாமல் குழந்தைப் பெற்ற பின் மீண்டும் வேலைக்குச் சேர்வதற்கு அனுமதி கேட்கும்போது என்னவெல்லாம் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

“உன்னை விட்டுட்டு யார் கிட்டயும் போக மாட்றா. எப்படித்தான் நீ விட்டுட்டு வேலைக்குப் போவியோ?”

“உன்கிட்ட மட்டும்தான் சாப்பட்றா.. எப்படி நீ இல்லாம சாப்டுவாளோ?”

இந்த மாதிரியான கேள்விகளை எதிர்கொள்ள கடினமாக இருந்தது.

எல்லாரின் மீதும் கோபம்தான் எழுந்ததது. அந்தக் கோபம் நியாயம் இல்லாததாகக்கூட இருக்கலாம்.

இன்னொரு புறம் இன்னும் பல சிந்தனைகள். நம் குழந்தையைப் பார்த்துக்கொள்ள நமக்குப் பிறரின் துணை நிச்சயம் தேவைதானே. அப்படி எதிர்பார்க்கும் போது அவர்கள் கேட்கும் கேள்விகளையும் எதிர்கொண்டுதானே ஆக வேண்டும். 

என் அத்தையும் அம்மாவும் பார்த்துக் கொள்வார்கள்தான். ஆனால் முழு நேரம் என் மகள் என்னைவிட்டுப் பிரிந்து இருப்பாளா?

முழு நேரம் அவர்களால் பார்த்துக்கொள்ள முடியுமா?

வேலைக்குச் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு…

இன்னும் சில நாட்களில் குழந்தைக்கு ஒரு வயது ஆகப் போகிறது. விடுமுறைக்கு விண்ணப்பித்த நாட்களும் முடிவடையப் போகிறது.

இப்போது வீட்டில் உள்ளவர்களும் ஒரு மாதத்தில் நான் வேலையில் சேரப் போகிறேன் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனால், அடுத்தப் பிரச்னை என் மகளை நான் எப்படித் தயார் செய்வது?

அவள் விரும்பும்போது என்னிடம் தாய்ப்பால் குடிப்பாள். என் அருகிலேயே சுழல்வாள். என்னைக் காணவில்லை என்றால் தேடுவாள். என் இடுப்பில் அமர்ந்தே உண்பாள். அப்படி இருக்கும் என் உயிரிடம் நான் வேலைக்குச் சென்று வருகிறேன் என்று எப்படிக் கூறுவேன்?

எல்லாம் பழகப் பழகச் சரியாகிவிடும் என்றது இன்னொரு மனம்.

எல்லாவற்றிற்கும் ஒரு மாற்று உள்ளதுதானே? ஒரு வருடம் என் முழுமையையும் அவளுக்குக் கொடுத்திருக்கிறேன். இனியும் என்னால் இயன்றதைக் கொடுக்கத்தான் போகிறேன் ஆனால் வேலைக்குச் செல்லும் தாயாக.

வேலைக்குச் சென்றால் அங்கே என்ன மாதிரியான நிலை இருக்கும். இத்தனை நாட்கள் வீட்டில் சும்மா இருந்துவிட்டு வருகிறேன் என்று நினைப்பார்களா, இல்லை சகஜமாக வேலையில் இணைத்துக் கொள்வார்களா?

பல யோசனைகள் தினம் தினம் என்னைச் சூழ நாளை வேலையின் முதல் நாள்…

(தொடரும்)

படைப்பாளர்:

ரேவதி பாலாஜி

சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.