ஹலோ தோழமைகளே, நலம் நலம்தானே?

இந்த அத்தியாயத்தில் நாம் மன நலம் காப்பது பற்றிப் பேசப் போகிறோம். சுய நேசம் இருந்தாலும் மன நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா என எண்ண வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் மன நலம் பாதிக்கப்படலாம். சுய நேசம் அதிலிருந்து துரிதமாக வெளிவர உதவும். ஆனால், பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் மட்டுமே அதற்கான தீர்வை நோக்கிச் செல்ல முடியும். ஆனால், மனம் சம்பந்தபட்ட விஷயங்களில் அவ்வளவு சீக்கிரம் தெரிய வராது. எல்லாமே நன்றாகப் போவது போல் இருக்கும். திடீரென ஒரு நாள் வெடித்துக் கிளம்பும். அவ்வளவு தூரம் சென்ற பிறகு அதைச் சரி செய்வதும் நாளாகும்.

அதனால் நாம் நன்றாக இருக்கும் போதே, அல்லது அவ்வாறு நம்பும் போதே சில மன நலன் காக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுதல் நலம். இந்தப் பழக்கம் ஒரு வேளை எப்போதாவது மன நலத்தில் சிக்கல் வந்தால், முதலில் அது மனச்சிக்கல் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இல்லாவிடில் அதைப் புரிந்து கொள்ளவே பல நாள் ஆகும். அதற்குள் பாதிப்புகள் அதிகமாக வாய்ப்புள்ளது.

முதல் படி உடற்பயிற்சி :

இது என்ன மன நலன் காக்க உடற்பயிற்சியா என்று வியக்க வேண்டாம். உடற்பயிற்சி செய்யும் போது மூளையில் சுரக்கும் சில வேதிப் பொருட்களான டோபமைன், செரடானின், ஆக்ஸிடோசின், என்டோர்பின் இயல்பான மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். மனதில் உள்ள தேவையற்ற குப்பைகளை மறக்கடித்து உற்சாகப்படுத்தும்.

நம் அனைவருக்கும் எந்த வயதில் இருந்தாலும் முடிந்த உடற்பயிற்சி அவசியம். அது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் ஆரோக்கியம்.

மனதிற்குப் பிடித்த செயல்களில் ஈடுபடுதல் :

மனதிற்குப் பிடித்த செயல்களைச் செய்யும் போது அதனால் கிடைக்கும் மன நிறைவும், மற்றவரின் பாராட்டும் டோபமைனைச் சுரக்க வைக்கும். மகிழ்ச்சியை உள்ளிருந்து மலர வைக்கும்.

நிறைவான தாம்பத்தியம் :

நிறைவான மகிழ்ச்சியான தாம்பத்தியதிலும், காதலுடன் அணைக்கும் போதும் ஆக்சிடோஸின் சுரக்கிறது. குழந்தைக்கு மகிழ்ச்சியும் பால் கொடுக்கும் போதும் அதே ஆக்சிடோஸின் சுரக்கிறது. அதுமட்டுமல்லாமல், காதலின் எந்தச் செயலிலும் ஆக்ஸிடோஸின் தாராளமாகச் சுரக்கிறது.

விஸ்வரூபத்தில் வரும் பாடல்,

உனைக் காணாது நான் இங்கு நானில்லையே… வரும் வரிகள்.

அவ்வாறு நோக்கினாள்
எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன்நின்று
பார்த்துக் கொண்டேன்
ஒன்றாகச் செய்திட
ஒரு நூறு நாடகம்
ஒத்திகைகள் செய்து
எதிர்பார்த்து இருந்தேன்
எதிர்பாராமலே… அவன்
எதிர்பாராமலே அவன்
ஓஓஓ பின்னிருந்து வந்து எனைப்

பம்பரமாய் சுழற்றி விட்டு
உலகுண்ட பெரு வாயில் எந்தன்
வாயோடு வாய் பதித்தான்

இங்கு பூலோகம் என்று
ஒரு பொருள் உள்ளதை
இந்தப் பூங்கோதை மறந்தாளாடி

இந்தப் பாடலைக் கேட்கும் அனைவருக்கும் ஆக்ஸிடோஸின் சுரந்து ஒரு பரவச உலகிற்குச் சில நொடிகளாவது சென்று வந்திருப்பர். காதலின் சக்தி அது. நிகழும் போது மட்டுமல்ல, மகிழ்ச்சியுடன் நினைக்கும் போதும் ஆக்ஸிடோஸின் சுரக்கும். எந்த வயதிலும் காதலிப்பது இந்த ஹாப்பி ஹார்மோன்களைச் சுரக்க வைத்து நம்மை எப்போதும் மகிழ்ச்சியாக, இளமையாக வைத்திருக்கும்..

சூரிய ஒளி

மகிழ்ச்சிக்கான வேதி பொருட்கள் சுரப்பதில் சூரிய ஒளிக்கு முக்கியப் பங்குண்டு.

தியானம்

மனதைத் தியானத்தினால் அமைதி படுத்தும் போதும் இந்த வேதிபொருட்கள் சுரக்கின்றன.

நல்ல உணவு

நல்ல உணவென்பது பார்ப்பதை எல்லாம் வயிறு நிறைய உண்பதல்ல. நம் வயிற்றைப் பதம் பார்க்காமல், செரிமானத்திற்குச் சுலபமான, சத்தான உணவு வகைகள். இவை மகிழ்ச்சிக்கான வேதிப் பொருட்களைத் தாராளமாகச் சுரக்க வைக்கிறது.

இதைத் தவிர நல்ல எண்ணங்கள், பிறருக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்வது போன்ற தன்னலமில்லா செயல்களும் இந்த ஹாப்பி ஹார்மோன்கள் சுரக்க உதவுகின்றன.

இந்த வேதிப் பொருட்கள் மூளையில் சுரக்காவிடில் என்ன ஆகும் ?

  • நமக்கு எந்தச் செயலையும் செய்ய ஓர் உத்வேகம் இருக்காது.
  • எல்லாவற்றையும் தள்ளிப்போடுவோம்.
  • எதிலும் பெரிதாக விருப்பமிருக்காது.
  • எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும் நாம் தனியாக இருப்பது போல் தனிமை உணர்வு தோன்றும்.
  • சுய மதிப்பு குறைந்துவிடும்.
  • மூட் ஸ்விங்க்ஸ் எனப்படும், மாறி மாறி வரும் உணர்வுகள்.
  • எதிலும் நம்பிக்கையற்ற தன்மை
  • எதிலும் மனதை ஆழமாகச் செலுத்த முடியாமல் போகும்.
  • எவரிடமும் எதிலும் மனம் ஒட்டாது.

ஆக மொத்தத்தில் வாழ்வில் சலிப்பும் வெறுப்புமே மிஞ்சி இருக்கும். இது போன்ற சமிக்ஞைகள் உங்களுக்கு இருந்தால் உடனே செயலில் இறங்குங்கள்.

ஆகவே தோழமைகளே நம் மன நலனைக் காக்க சிறிய சிறிய முயற்சிகளை எடுக்க ஆரம்பியுங்கள். அதில் பெரிய பெரிய பலன்களைக் காண்பீர்கள்.

உங்களை நீங்கள் நேசிக்கும் போது, உங்கள் மன நலனைக் காக்க இந்தச் சிறிய முயற்சிகளை எடுக்க மாட்டீர்களா என்ன?

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.