6. ஜெய்பூர் அரசு (Jaipur State) 

ஜெய்பூர் அரசு இன்றைய இராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த அரசு. 1727-ம் ஆண்டு வரை இதை ஆமேர் அரசு என அழைத்தனர்.

இதன் மன்னர் பார்மல் கச்வாகாவின் மகள்தான் அக்பர் திருமணம் செய்த ஜோதா. ஜோதா அக்பர் திரைப்படம் இவர்களின் கதைதான். ஒரு சில ஆய்வாளர்கள் ஜோதாவை அக்பரின் தந்தை ஹுமாயூன் மணமுடித்தார் என்று சொல்வதும் உண்டு. முகலாயப் பேரரசுக் காலத்தில் ஆமேர் அரசு சிறப்புற்று இருந்தது. ஆமேர் கோட்டை இவர்களின் தலைமையிடமாக இருந்தது. 

முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்த காலத்தில் ஆமேர் மன்னர் இரண்டாம் மான் சிங் ஆட்சிக் காலத்தில், ஆமேரின் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்ட 1727ம் ஆண்டு ஜெய்பூர் நகரம் நிறுவப்பட்டது. அதன் பின் இந்த ஆட்சியின் பெயர் ‘ஜெய்பூர் அரசு’ ஆனது. ஜெய்பூர் உலகின் உலகின் முதல் திட்டமிடப்பட்ட நகரம் என்கிறார்கள்.  1876ம் ஆண்டில், வேல்ஸ் இளவரசர் அங்கு வந்தபோது, ​​​​நகரம் முழுக்க இளஞ்சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டது. பின் அதுவே நகரின் வண்ணமாக 1877ம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது. 

1790ம் ஆண்டு பதான் போரில், மராத்தியப் பேரரசின் படைகள் ஜெய்பூர் அரசை வீழ்த்தின. மராத்தியர்கள் ஆங்கிலேயரிடம் தோற்றபின் 1818ம் ஆண்டு ஜெய்பூர் அரசு, கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டது; தன்னாட்சி பெற்ற நாடானது. 

விடுதலைக்குப் பின் ஜெய்பூர் மன்னர், தனது அரசை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் 1948ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்திட்டார். ஜெய்பூர் அரசின் தபால் தலைகள் சில:

7. ஜிந்த் அரசு (Jind State) 

ஜிந்த் அரசு, 1763ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது மராட்டியப் பேரரசின் சிந்தியா அரசிற்கு கப்பம் கட்டி வந்தது. இரண்டாம் மராட்டியப் போரின் போது, ஜிந்த் அரசர் ஆங்கிலேயருடன் இணைந்தார். ஜிந்த் அரசு ஆங்கிலேயரின் பாதுகாப்பு அரசாக மாறியது. இது பம்பாய் மாகாணத்தின் கீழ் செயல்பட்டது.

இதன் மன்னர் ராஜா ஸ்வரூப் சிங் (1864-1887) சதி, அடிமைத்தனம், பெண் சிசுக்கொலை போன்றவற்றை நீக்கினார். சீக்கியப் போர்களிலும், சிப்பாய் புரட்சியிலும் ஆங்கிலேயருக்கு துணையாக இருந்தார். 

ஜிந்த் அரசு, இந்திய விடுதலைக்குப் பின் 20 ஆகஸ்டு 1948 அன்று பஞ்சாப் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

ஜிந்த் அரசு, சில வேறு அஞ்சல்தலைகளை வெளியிட்டு இருந்தாலும், ஆங்கிலேய இந்தியாவின் அஞ்சல்தலைகளின் மீது Overprint செய்தும்  பயன்படுத்தியது.  

8. நாபா அரசு (Nabha State)

இது இன்றைய பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டிருந்தது. 

மராத்தியப் பேரரசின் சிற்றரசாக இருந்த நாபா மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றது.  விடுதலைக்குப் பின், பஞ்சாப் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. நாபா அரசு, ஆங்கிலேய இந்தியாவின் அஞ்சல்தலைகளின் மீது Overprint செய்த அஞ்சல்தலைகளைப் பயன்படுத்தியது. 

9. பாட்டியாலா அரசு (Patiala State) 

1761ம் ஆண்டு மூன்றாம் பானிபட் போரில் மராட்டியர்களை ஆப்கானியர்கள் வென்றனர். இந்தக் காலகட்டத்தில் பாட்டியாலா அரசு, 1763ம் ஆண்டு பாபா ஆலா சிங் என்பவரால் நிறுவப்பட்டது. இவர்தான் கிலா முபாரக் என்ற கோட்டைக்கான அடிக்கல்லை 1808ம் ஆண்டு நட்டவர். பட்டியாலா அரசர் லாகூரின் இரஞ்சித் சிங்கிற்கு எதிராக ஆங்கிலேயருடன் இணைந்தார். பின் அவர்களின் மேலாண்மை இயல்பாகவே வந்துவிட்டது. 

1948ம் ஆண்டு பாட்டியாலா மன்னர், இந்தியாவுடன் இணைவதற்கான உடன்பாட்டில் ஒப்பமிட்டார்; தற்போதைய ராஜா கேப்டன் அமரிந்தர் சிங், 2002 முதல் 2007 வரை பஞ்சாபின் முதலமைச்சராக இருந்தவர். இவ்வாறு இன்றும் செல்வாக்குடன் மன்னர் பரம்பரை இருக்கிறது. 

10. சௌராஷ்டிரா Saurashtra

மராத்தியப் போருக்குப் பின் துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பல அரசுகள் இன்றைய குஜராத் பகுதியில் இருந்திருக்கின்றன. இவை கத்தியவார் முகமையின் கீழிருந்து அரசுகள். இவற்றின் பெயர்கள் – பரோடா, பாவ்நகர், ஜுனாகத், மோர்வி, நவநகர், போர்பந்தர், ரதன்பூர், கொண்டல், ஜாப்ராபாத், வான்கனேர், வாத்வான், தாரங்கதாரா, ராஜ்கோட், பாலிதானா, லிம்படி, மற்றும் துரோல்.  

நவநகர் 1540ம் ஆண்டில் நிறுவப்பட்டது அரசு. இதன் மன்னர் ரஞ்சித் சிங் (K. S. Ranjitsinh ) இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் பிரபலமான கிரிக்கெட் வீரராக இருந்தவர்.  இங்கிலாந்திற்காக டெஸ்ட் கிரிக்கெட் ஆடியவர். அவரது நினைவாகத்தான் 1934ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்  (பிசிசிஐ) Board of Control for Cricket in India (BCCI) தொடங்கப்பட்டு, ரஞ்சி கோப்பை ஆட்டங்கள் நடைபெறத் தொடங்கின. 

இந்திய சுதந்திரத்தின்போது மன்னராக இருந்த திக்விஜய்சிங், கதியாவாட்டின் முதல் ராஜ்முக் ஆக பணியாற்றினார். பின்னர் ஐக்கிய நாடுகள் சபையில் பிரதிநிதியாக இருந்தார். 

ஜூனாகாத் மட்டும் பிற்காலத்தில் 1949 ஜனவரி மாதம், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஜூனாகத் அரசின் இறுதி மன்னர் மூன்றாம் முகம்மத் மகபத் கான் ஜூனாகத் அரசை பாகிஸ்தான் நாட்டுடன் இணைக்க முடிவு செய்தார். அதனால் ஏற்பட்ட குழப்பத்தால், இத்தாமதம் ஏற்பட்டது. 

ஏனைய அரசுகளின் மன்னர்கள் ஒன்று சேர்ந்து, இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் 24 சனவரி 1948 அன்று கையெழுத்திட்டனர். இணைந்த பகுதி ஒன்று சேர்க்கப்பட்டு 15 பிப்ரவரி 1948 அன்று சௌராஷ்டிர மாநிலம் நிறுவப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று சௌராஷ்டிரா மாநிலம் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1 மே 1960 அன்று புதிதாக நிறுவப்பட்ட குஜராத் மாநிலத்துடன் இப்பகுதி இணைக்கப்பட்டது.

இது 1930ம் ஆண்டு வெளியிடப்பட்ட கிர் சிங்கத்தின் படத்துடன் கூடிய அஞ்சல்தலை. வேட்டையினால் அழிவின் பாதையில் செல்ல இருந்த கிர் சிங்கங்களுக்கென கிர் காட்டில் ஜூனாகத் நவாப் சரணாலயம் ஒன்றை நிறுவினார். 

இது ஜூனாகாத் நகரின் தோற்றம் தொடர்பான அஞ்சல்தலை.

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.