கேள்வி

குழந்தைகளிடம் நிறையப் பேச வேண்டும் என்கிறார்களே! ஏன்?

பதில்

தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றுக்குள் Parental Lock போடுகிறோம் அல்லவா! குழந்தைகளிடம் நிறையப் பேசுவது தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றுக்கு இயற்கையான பூட்டு!

அவர்களை சீரிய விதத்தில் வளப்படுத்தும் சக்தி பேச்சுக்கு உண்டு. நிறையப் பேசும் பெற்றோர்களிடம் குழந்தைகள் ஈஸியாக Gel ஆகிவிடுவார்கள். இதில் இன்னொரு சௌகரியமும் உண்டு. குழந்தைகள் மனதுக்கும், எண்ணங்களுக்கும் அணுக்கமாக நாம் இருந்தால், பயமின்றி எதையும் இவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம் மிகவும் இயற்கையாக குழந்தைக்கு ஏற்படும்.

 சமீபத்தில் ஒரு பகல் நேர ரயிலில் சுமார் 6 மணி நேரம் பயணித்தேன். 10-12 வயதுடைய ஒரு பெண் தன் பெற்றோர்களுடன் எங்களுடன் பயணித்தாள். ஏறியவுடன் சிறிது நேரம் சாப்பிட்டார்கள். குறைந்த அளவு பேச்சுக்களே. அதன் பிறகு அப்பா, அம்மா படுத்து விட்டார்கள். அப்போது செல்லைப் பார்க்க ஆரம்பித்த பெண், நாங்கள் இறங்கும் வரை, அதாவது சுமார் 5 மணி நேரம் தொடர்ந்தாள். நான் அதிர்ந்து போனேன்.

ரயில் பயணம் என்பது எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான அனுபவம். பகல் நேர பயணம் எத்தனை காட்சிகள் எத்தனை புது நபர்கள் அவர்களது குணங்களின்  வெளிப்பாடு ஆகியவற்றைத் தரக்கூடியது? ஒரு பயணம் பல புது செய்திகளை நமக்கு அள்ளித் தரும்.

90-களின் ஆரம்பத்தில் இருந்து சுமார் 15 வருடங்களுக்கு எங்கள் இரு பெண் குழந்தைகளுடன் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பயணம் செய்திருக்கிறோம். செஸ் போர்டு  அல்லது கதை புத்தகங்கள், தாங்கள் படிக்க, நான் படித்துச் சொல்ல, Business என்ற ஒரு வகை விளையாட்டுக்கான அட்டை, பலவித Colouring Books, வெள்ளை தாள்கள் என்று பொழுது போக்குவதற்கான பல சமாச்சாரங்களுடன் ஒரு தனி பையே இருக்கும்.

நீண்ட தூர பயணங்களில் தூங்கலாம் என்றோ, நல்ல ஓய்வு என்றோ என்னாலும் என் கணவராலும் இருக்க முடியாது. கேள்விகள் கேள்விகள்தான். இருவரும் தொடர்ந்து கேள்வி கேட்பார்கள். பதில் சொல்லி மாளாது! விளையாட்டுகளிலும் நாங்கள் பங்கு பெற வேண்டும் என்று கேட்பார்கள். பயணத்திற்காக கட்டி எடுத்து வரப்பட்ட நெய் பொடி தடவிய  இட்லி, சப்பாத்தி தக்காளி தொக்கு, தாளிச்ச தயிர் சாதம்  இவற்றைப் புகழ்ந்தபடி சிரித்து பேசி நிறைய சாப்பிடுவதை பார்த்து நாங்கள் மிகவும் ரசித்திருக்கிறோம்.

 பஸ்சில் சுமார் 3 மணி நேரம் பயணித்து என் மாமியாரின்  கிராமத்திற்கு செல்ல வேண்டும். அதில் இந்த சிறு குழந்தைகளை சமாளிப்பது  பெரிய சவாலாக  இருந்தது. அப்போது ஆரம்பித்த  பேச்சுதான். “பாப்பா… பக்கத்து சீட்டில் பையன் பஸ் ஸ்டாப்பில் வடை வாங்கி தர அடம்பிடிக்கிறான் பார்த்தாயா! அது திறந்து வைத்து விற்கப்படுகிறது. தூசு படிந்து இருக்கும். அதை எடுத்து கொடுப்பவர் கைகளில் அழுக்கு இருக்கலாம் . இதை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படலாம். அதனால்தான் அவன் அம்மா வாங்கி தரவில்லை”, இப்படி பேச்சு போகும்.

குழந்தைகளுக்குப் படிக்க தெரியாத வயதில் எந்தெந்த கலரில்  வீடுகள்  பெரிதாக இருக்கிறதா, சின்னதாக இருக்கிறதா என்பதெல்லாம் ஒரு விளையாட்டு. மஞ்சள் கலர் வீடு வந்து விட்டால் நாம் இறங்கும் இடம் என்று சொல்லி வைப்பேன். இருவரும் ஆரம்பித்து விடுவார்கள். “பச்சை வீடு போ போ! மஞ்சள் வீடு வா வா! சிவப்பு வீடு போ! மஞ்சள் வீடு வா வா!” என்று  பாடுவார்கள். நடுவில் மஞ்சள் வீடு வந்து விட்டால், “இது சிறிய வீடு, நான் சொன்னது பெரிய வீடு முன்புறம் மாடு கட்டி இருக்கும். வேறு மஞ்சள் வீடு வந்தால் இறங்கலாம்” என்று சொல்லி சமாளித்தாக வேண்டும்.

 6 -7 வயதான எங்கள் முதல் பெண்ணுக்கு ஒரு பஸ் பயணத்தில்தான் கடிகாரத்தில் பெரிய முள், சின்ன முள் மற்றும் நேரம் பார்ப்பது எல்லாவற்றையும் புரிய வைத்தேன். இதுக்கும் இப்போது டிஜிட்டல் வந்துவிட்டது. இரண்டு முட்கள், மணி, நிமிடம் என்ற மூளை திறனும் சின்ன கணக்கும் தேவை இல்லாமல் போய்விட்டது. கடிகாரமே அரிதாக இருக்கிறது. எல்லாம் செல் அல்லது Smart Watch தான்.

 குழந்தைகளிடம் பேச செய்திகளா இல்லை? புகைவண்டியில் போகும்போது பஸ், கார் ஆகியவற்றுடன் ரயிலை ஒப்பிட்டு அவர்களையே பேச வைக்கலாம். ரயில்வே ஸ்டேஷனில் என்னென்னவெல்லாம் இருக்கும். ரயில்வே ஸ்டேஷனை நாம் எப்படி உபயோகிக்கலாம். என்னென்ன வசதிகள் இருக்கும் என்று இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்களைப் பற்றி பேசலாம்.

 தெருவில் பலவகை போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கும் அல்லவா! அவற்றைப் பற்றி பேசலாம். உதாரணமாக ஒரு பெரிய ஷாப்பிங் சென்டர் இருந்தால் அதில் என்னென்ன பொருட்கள் கிடைக்கும்  என்பது பற்றி பேசலாம்.

 ஒரு திருமணத்திற்கு போயிருக்கும் போதும், திரும்பி வந்த   பிறகும் அவர்களிடம் பேச செய்திகள் கொட்டிக் கிடக்கின்றனவே! சொந்தங்கள் என்றால் என்ன? யார் யார் என்ன உறவு என்று சொல்லித் தரலாம். எல்லோரும் ஏன் வாழ்த்த வேண்டும், எல்லோரும் ஏன் பரிசு அளிக்கிறார்கள், எல்லோருக்கும் ஏன் வடை பாயாசத்துடன் விருந்து கொடுக்கிறார்கள், விருந்தில் என்ன புதிதாக வைத்தார்கள் என்று பல விஷயங்கள் பேசலாமே!

ஈகைத்  திருநாளாம்  பக்ரீத் சமீபத்தில் வந்தது. இதுபோன்ற விழாக்காலங்களில் குர்பானி, கூட்டு குர்பானி இத்தனை ரூபாய் என்றெல்லாம் விளம்பரங்கள் பார்க்கலாம். அந்த சமயத்தில் சந்தையில் ஆடு, மாடு, ஒட்டகங்கள் விற்கப்படும் வியாபாரம் நடக்கும். இதையெல்லாம் வாங்கி மற்றவர்களுக்கு அளித்து கூடியிருந்து மனம் மகிழ்ந்து உண்பதே பண்டிகை என்று சொல்லி புரிய வைக்க வேண்டும்.

கோடை காலத்தில் கோயில்களில் சிறு விழாக்கள், திருவிழாக்களில் அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், கேளிக்கைகள்,கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் என்றெல்லாம் தடபுடலாக நடக்கும். இவற்றில் முக்கியமானது ஒன்றுகூடி கொண்டாடி உண்டு மகிழ்வதுதான்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நமது நாட்டில், கோடை காலத்தில் விவசாய வேலைகள் குறைவு. அந்த நேரம் ஒரு பொழுதுபோக்காக, மனமகிழ்வாக உறவினர்களுடன் கூடியிருந்து கழிப்பதற்காகத்தான் திருவிழாக்கள் வந்தன. ‘தொல்லைக்’காட்சிகள், வெள்ளித்திரை, சின்னத்திரை, கைத்திரை, ஊடகங்கள் என்ற உபத்திரவங்கள் இல்லாமல் இருந்த காலத்தில், திருவிழாக்களும், திருமணம், காதுகுத்து, பண்டிகைகள் போன்றவைகள் தான் பெரிய மன மகிழ்ச்சிக்கான பொழுதுபோக்காக இருந்தன. பல உறவினர்களையும் சந்தித்து கூடி இருந்து பல கதைகளைப் பேசி இருப்பார்கள். ஒவ்வொரு பண்டிகைக்கும், நிகழ்வுக்கும் தனித்தனி சடங்குகள், உணவு முறைகள் இருக்கும். அதையெல்லாம் குழந்தைகளுக்கு பேசி புரிய வைக்கலாமே!

 கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களைப் பார்க்கும் போது எந்த உயர்தர தொழில்நுட்பமும் இல்லாத காலகட்டத்தில் இவ்வளவு உயரமாக சிறந்த அழகுடன் பெரிய கோபுரங்களுடன் எப்படிக் கட்டி இருப்பார்கள் என்று அவர்களை கேட்டு சிந்திக்க வைக்கலாம்!

காய்கறிகள், பழங்கள் விற்கும் கடைக்குக் கூட்டிச் சென்று அல்லது நம் வீட்டிற்கு வாங்கி வரும் காய்கறிகளை வைத்து வாரம் 2-3 முறை குழந்தைகளுடன் பேசலாமே? பல நிறங்கள், பல உருவங்கள், சிறிது பெரிது என்ற காய்கறிகள், பழங்களை வைத்து பேசுவதால் மிகப் பெரிய ஆச்சரியத்தை அவர்களிடம் தூண்ட முடியுமே…  அத்தோடு இவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளையும் சொல்லி புரிய வைக்கலாமே?

பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் இவை அனைத்தும் மாட்டிலிருந்து கிடைக்கும் என்ற செய்தியே குழந்தைகளுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை கொடுக்குமே! பால் குடிக்கிறபோது, தயிர்சாதம் சாப்பிடும்போது இதைப் பற்றி பேசி, பால், தயிர், மோர், நெய் சாப்பிடுவதின் அவசியம், உடலில் விட்டமின்-D தேவை என்ன என்று நிறையச் செய்திகளை கூறலாமே..!

 நீர் நிலைகளைக் கடந்து செல்லும் போது குளம், ஏரி, ஆறு, கடல் பற்றி எல்லாம் பல செய்திகளை பேசலாம். அவற்றைச் சுத்தமாக பராமரிப்பதின் அவசியத்தை உணர்த்தலாம். அத்துடன் தண்ணீர் சிக்கனத்தையும் Every Drop Counts என்பதை பற்றியும் பேசி அவர்கள் மனதில் ஆழமாக பதியும்படி செய்யலாம் அல்லவா?

மரங்களைப் பார்க்கும் போது மரங்கள் எப்படி எல்லாம் நமக்கு பயன் தரும் என்று அவர்களிடமே கேள்வி கேட்கலாம். அவற்றை பாதுகாப்பதன் அவசியத்தைக் கூறலாம்!

 பேசும் போது கண்ணோடு  கண் பார்த்து பேச வேண்டும். அவர்கள் பேசுவதையும் அப்படியே கவனிக்க வேண்டும். கூடியவரை அவர்களுக்கு ஆர்வம் உண்டாகும் வகையில் மிகைப்படுத்தாமல் பொருத்தமான முக பாவனைகளுடன், உடல் மொழிகளுடன் பேச வேண்டும். அவர்கள் பசியோடு இருந்தால், களைப்பாக இருந்தால் அப்போது அறிவுரைகளைத்  தர வேண்டாம். தூக்கம் வரும்போது கதைகள்தான் சொல்லவேண்டும். அவர்கள் கவனம் உங்களிடம் இல்லையென்றால், அவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

 நாம் பேச்சை ஆரம்பித்து விட்டு பிறகு குழந்தையை நிறைய பேச விட வேண்டும். பேசுவதற்கும், கேள்வி கேட்பதற்கும் குழந்தையை ஊக்குவிக்க வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெரிந்த அளவு பதில் சொல்ல வேண்டும். பொய்யாகவோ, கற்பனையாகவோ பதில் சொல்லக்கூடாது. நாம் அலுப்பாக இருக்கும்போது குழந்தை பேச வந்தால் சிறிது நேரமாவது  பேசிவிட்டு பிறகு தள்ளிப் போக வேண்டும். எதிர்பார்த்து வரும் குழந்தையை ஏமாற்றக்கூடாது.

 குழந்தைகளுடன் நிறைய பேசுவதால் ஏற்படும் நன்மைகள்:

  1. குழந்தைகளுக்குப் பேச்சு திறன் அதிகரிக்கும். பேசுவதால் குழந்தைகள் மொழியை கற்றுக் கொள்கிறார்கள். வார்த்தைகள் உச்சரிப்பு இலக்கணம் எல்லாம் புரிந்து கொள்கிறார்கள். குழந்தைகளுடன் தாய் மொழியில் தான் பேச வேண்டும்.
  2.  அதிகமாக பேசுவதும், அவர்களை பேச வைப்பதும் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை, நம்மிடம் அதிக இணக்கத்தை ஏற்படுத்தும்.
  3.  குழந்தைகளுக்கு பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு முடிவு எடுப்பது, தானாகவே ஆழமாக சிந்திப்பது ஆகிய திறன்கள் அதிகரிக்கின்றன.
  4.  உணர்வுபூர்வமான உரையாடல்கள் குழந்தைகளின் உணர்வுகளை, உணர்வுகளின் ஓட்டத்தை செம்மைப்படுத்தி, அவற்றை சரியாக கையாள உதவுகின்றன.
  5.  சிறந்த பேச்சு திறன், அவர்கள் சமூகத்தில் எளிதாக இணைவதற்கு உதவுகிறது. தன்னுடைய கருத்துக்களைப் பேசி புரிய வைக்கவும் அடுத்தவர்களின் கருத்துக்களை புரிந்து கொள்ளவும் உதவுகிறது.
  6.  சிறு குழந்தைகளிடம் பாடுவதும், பாட்டுகளால் புரிய வைப்பதும் மிகவும் சரியாக இருக்கும்.
  7.  குழந்தைகளிடம் கேள்வி கேட்கும் போது ஆம்/ இல்லை என்ற பதில் வரும் கேள்விகளை தவிர்க்க வேண்டும். உதாரணமாக காலையில் சாப்பிட்டாயா என்றால் ஆம் இல்லை என்ற பதில் தான் கிடைக்கும். மாறாக காலையில் என்ன சாப்பிட்டாய், தொட்டுக்கொள்ள என்ன இருந்தது என்று கேட்டால் (Open Ended Question) குழந்தை நிறைய பேசும், பேசுவதற்கு குழந்தைக்கு வாய்ப்பு கிடைக்கும்.
  8.  நாம் உபயோகிக்கும் மொழியும் வார்த்தைகளும் பண்பட்டதாகவும், புரியும் படியாகவும் விளக்கமாக விவரிக்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
  9.  குழந்தைகளிடம் பொறுமையாக, பேச வேண்டும். அவர்கள் புரிந்து கொண்டு திரும்பி பேச ஆரம்பிக்க ஊக்கம் அளிக்க வேண்டும். அவர்களுக்கு நிறைய நேரம் தர வேண்டும். உரையாடலை இனிமையானதாக ஆக்க முயற்சிக்க வேண்டும்.
  10.  பேசுவதன்மூலம் தன் தேவைகளை தெளிவாக வெளிப்படுத்த குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்.
  11.  நண்பர்களை சேர்த்துக் கொள்ளவும்,புரிந்து கொள்ளவும் உரையாடல் உதவுகிறது.

பெற்றோர்கள் இருவரும் பணியில் இருக்கும் போது பேச நேரம் எங்கே என்று நீங்கள் முணுமுணுப்பது  கேட்கிறது. நேரத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நேரத்தை திட்டமிட்டு ஒதுக்குங்கள். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மாலை , இரவு என்று வைத்துக் கொள்ளுங்கள். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என்று யார் இருந்தாலும் மாற்றி மாற்றிப் பேசுங்கள்.

படைப்பாளர்

மரு. நா. கங்கா

நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.