பேராசிரியர் சுசான் ஜே. ஷூர்மன், அட்ரியன் ஈ. ஈட்டன் ஆகியோரின் ‘Informal Workers and Collective Action: A Global Perspective’ என்கிற நூல் பணியிடங்களில் நடக்கும் அநீதிகளுக்கு எதிரான தொழிலாளர்களின் ஒன்றிணைந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த நூலில் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் மற்றும் உலகளவில் நடந்துள்ள பல்வேறு தொழிற்சாலை அத்துமீறல்கள், குறிப்பாக நைக் தொழிற்சாலைகளில் பெண்கள் அனுபவித்த துன்பங்கள், பணியிட வன்முறையின் கொடூரத்தை எடுத்துக்காட்டுகின்றன. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், சிறார்கள் என்றில்லை, கூலித் தொழிலாளிகள், கேளிக்கைத் துறையில் இருக்கும் பெண்கள், ஆண்கள் மற்றும் எல்லாத் துறைகளிலும் அதிகாரம் உள்ளோர் தங்கள் கீழே இருக்கும் பணியாளரிடம் செலுத்தும் ஆதிக்க வன்முறை அதிகம்.
Global Alliance அமைப்பின் அறிக்கையின்படி, இந்தோனேசியா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் உள்ள நைக் தொழிற்சாலைகளில் பணியாளர்கள் தினசரி உடல், பாலியல் மற்றும் வாய்மொழி துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். 9 தொழிற்சாலைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நைக் ஊழியர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல்களில், தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள் பெண் ஊழியர்களைப் பாலியல் உறவுக்கு வற்புறுத்துவது மற்றும் அசெம்பிலி லைனில் வேலை செய்யும்போது அவர்களைத் தொட்டுத் தொந்தரவு செய்வது போன்ற சாட்சியங்கள் பதிவாகின.
ஆய்வில் பங்கேற்ற 56 சதவீத ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள் சக பணியாளர்களை வாய்மொழியாகத் துன்புறுத்துவதைக் கண்டதாகவும், 15.7 சதவீதம் பேர் முறையற்ற தொடுதல்களை அவதானித்ததாகவும், 13.7 சதவீதம் பேர் உடல் வன்முறையைப் பார்த்ததாகவும் தெரிவித்தனர்.
தொழிற்சாலை தண்டனைகளில் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது மற்றும் தொழிற்சாலை வளாகத்தைச் சுற்றி ஓடுவது போன்றவை அடங்கும். PT Pou Chen Group தொழிற்சாலையில், தவறு செய்த பெண் தொழிலாளர்களைச் சூரிய வெளிச்சத்தில் நிற்க வைப்பது போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. “அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். இரண்டு மணி நேரம் வெயிலில் நின்ற பிறகு மட்டுமே அவர்களின் வேலையைத் தொடர அனுமதிக்கப்பட்டார்கள்” என்று அங்கு பணியாற்றிய 47 வயதான உஜாங் சுஹேந்தி கூறினார்.
நைக்கின் சொந்த ஆய்வில், நிறுவனத்தின் பாதி தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை மறுக்கப்படுவதும், கழிப்பறை பயன்பாட்டிற்கான அணுகல் மறுக்கப்படுவதும் கண்டறியப்பட்டது. பல தொழிலாளர்கள் வாரத்திற்கு 60 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர், சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியத்தைக்கூடப் பெறவில்ல.
தாய்லாந்தில் உள்ள Hong Seng Knitting தொழிற்சாலையில், பர்மிய புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுக்குச் சட்டப்படி செலுத்த வேண்டிய $600,000 ஊதியத்தைத் ’தானாக முன்வந்து’ கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டனர். நான்கு ஆண்டுகளாக நைக் இந்த வேலை திருட்டை மறுத்து வருகிறது.
பணியிடங்களில் அதிகாரங்கள் உள்ளவர்கள் செய்யும் வன்முறைகளைப் பலரும் அறிந்தே இருப்பார்கள். எல்லாவற்றையும் மனிதவள துறைக்குச் சென்று புகார் அளிக்க பல வசதிகளும் முறைகளும் இருக்கும். ஆனாலும் அவற்றால் பெரும்பான்மையான இடங்களில் பலன் இருக்காது. மீறிப்போனால், புகார் அளித்தவருக்கு வேறு துறை அல்லது நல்ல புகழ் அல்லது முன்னேற்றம் கிடைக்கக்கூடிய திட்டங்களில் பங்குகொள்ள வாய்ப்பு கிடைக்காது. எனவே அவருக்கு ஆதரவாக இருப்போருக்கும் அந்தப் பழி வரும் என்பதால் பொதுவாகப் பலரும் விலகியே இருக்க நினைப்பார்கள்.
பல பெண்களுக்கு வீட்டிலும் ஓரிரு நேரத்தில் ஆதரவு கிடைத்தாலும் நாளாவட்டத்தில், “உன்னால் சாமர்த்தியமாகச் சமாளிக்கத் தெரியவில்லை. இதனால்தான் முற்காலத்தில் பெண்களைப் பணிக்கு அனுப்பவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு அழுகை” என்று சொல்லிவிடுவார்கள்.
இடைநிலை பணியாளர்கள், தலைமைப் பதவியில் இருக்கும் பணியாளர்கள் என்றில்லை. கடைநிலைப் பணியாளர்களுக்கும் இதே நிலைதான். பல பெண்கள் அவர்கள் கணவர்களின் கண் எதிரேயே பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதைப் பேராசிரியர் சுசன் ஷூர்மன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், எதிர்த்து நின்றால், அவர்கள் பணியை இழக்க நேரிடும். அதனால் அவர்கள் குடும்பம் வறுமையில் வாடும். குழந்தைகள் பசியில் துன்புறும்.
பணியிடம் இப்படி எனில், கல்லூரி வளாகங்களிலும் நிலை மோசமானது. பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் மாணவ மாணவியர்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவது, கல்வி வாய்ப்புகளைப் பணயமாக வைத்து அவர்களை மிரட்டுவது போன்ற நிகழ்வுகள் பரவலாக உள்ளன.
Right To Be அமைப்பு பார்வையாளர் தலையீட்டிற்கான ஐந்து D உத்திகளை உருவாக்கியுள்ளது – Distract (கவனச்சிதறல்), Delegate (பொறுப்பு மாற்றம்), Document (ஆவணப்படுத்தல்), Delay (தாமதம்), மற்றும் Direct (நேரடி தலையீடு).
1. கவனச்சிதறல் (Distract)
இது ஒரு நுட்பமான மற்றும் ஆக்கபூர்வமான தலையீட்டு முறை. இதன் நோக்கம் துன்புறுத்தலைக் குறுக்கிடுவதன் மூலம் சம்பவத்தை நிறுத்து. நல்ல கவனச்சிதறல் உத்தியின் முக்கிய அம்சங்கள்:
1. துன்புறுத்துபவரைப் புறக்கணித்து, துன்புறுத்தப்படுபவருடன் நேரடியாக உரையாடுவது. 2. நடந்து கொண்டிருக்கும் துன்புறுத்தலைப் பற்றி பேசாமல், முற்றிலும் தொடர்பற்ற வேறு விஷயத்தைப் பற்றி பேசுவது.
- வழி தெரியாதது போல் நடித்து, துன்புறுத்தப்படுபவரிடம் திசைகளைக் கேட்பது.
- நேரத்தைக் கேட்பது.
- சாதாரண உரையாடலில் ஈடுபடுத்துவது.
2. பொறுப்பு மாற்றம் (Delegate)
சில நேரத்தில் மக்கள் ’துன்புறுத்தலில் தலையிட காவல்துறையை அழைக்கலாமா?’ என்று கேட்கிறார்கள். எங்கள் பதில் என்னவென்றால், துன்புறுத்தப்படும் நபரிடம் சோதித்து, அவர்கள் தங்கள் சார்பாகக் காவல்துறையை அழைக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கேட்காத வரை நீங்கள் காவல்துறையைத் தொடர்புகொள்ளக் கூடாது.
பாதுகாப்பான பொறுப்பு மாற்ற வழிகள்:
- நிர்வாகத்திடம் தெரிவிப்பது
- HR துறையை அணுகுவது
- யூனியன் பிரதிநிதிகளை அணுகுவது
- நம்பகமான மூத்த ஊழியர்களை அறிவிப்பது
3. ஆவணப்படுத்தல் (Document)
ஆவணப்படுத்தல் என்பது துன்புறுத்தல் சம்பவத்தைப் பதிவு செய்வது அல்லது குறிப்புகள் எடுப்பதைக் குறிக்கிறது. ஆனால் இதில் கவனமாக இருக்க வேண்டும்:
- பாதிக்கப்பட்டவரின் அனுமதியின்றி காணொளி அல்லது ஒளிப்படங்களைப் பகிரக் கூடாது
- சட்டச் சிக்கல்களை உருவாக்காமல் இருக்க வேண்டும்
4. தாமதம் (Delay)
எப்போதும் உடனடியாகத் தலையிடுவது பாதுகாப்பானது அல்ல அல்லது பொருத்தமானது அல்ல. பார்வையாளர் தலையீடு என்பது பார்வையாளரை ஆபத்தில் ஆழ்த்துவதல்ல. சில சமயங்களில் சில நிமிடங்கள் அல்லது மணிநேரங்கள் காத்திருந்து, பின்னர் துன்புறுத்தப்படுபவரை அணுகுவது நல்லது.
5. நேரடி தலையீடு (Direct)
நேரடி தலையீடு என்பது பார்வையாளர் ஒருவர் யாரோ ஒருவர் பாதிப்புக்கு ஆளாகும் அல்லது ஆபத்தில் இருக்கும் சூழ்நிலையை நிறுத்த அல்லது அமைதிப்படுத்த நடவடிக்கை எடுப்பது. தலையிடுவதற்கு முன் ஆபத்தின் அளவை மதிப்பிடுவது முக்கியம்.
நேரடி தலையீட்டின் முதல் முக்கிய விஷயம் பதிலளிக்க முடிவு செய்வதற்கு முன் சூழ்நிலையை மதிப்பிடுவது. நேரடி தலையீட்டின் இரண்டாவது முக்கிய விஷயம் அதைக் குறுகிய மற்றும் சுருக்கமாக வைத்திருப்பது. உரையாடல், விவாதம் அல்லது வாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் – இதுதான் சூழ்நிலைகள் தீவிரமடையும் விதம்.
ABC அணுகுமுறை
தலையிடுவதற்கு முன், ABC அணுகுமுறையை முயற்சிக்கவும். பாதுகாப்பிற்காக மதிப்பிடுங்கள்: யாராவது சிக்கலில் இருப்பதைக் கண்டால், நீங்கள் பாதுகாப்பான முறையில் எப்படியாவது உதவ முடியுமா என்று உங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள். நினைவில் கொள்ளுங்கள், உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு முன்னுரிமை – உங்களை ஆபத்தில் ஆழ்த்த வேண்டாம்.
பார்வையாளனாக நமக்கு இரண்டு வழிகள் உள்ளன:
- செயலற்ற அணுகுமுறை: என்ன நடந்தாலும், நமக்கு நடக்காதவரை சரி என்று கண்டுகொள்ளாமல் விலகுவது. இது தவறான அணுகு முறை.
- செயலூக்கமான அணுகுமுறை: அதைத் தடுக்க முயல்வது மற்றும் எப்படித் தடுப்பது என்கிற வழிமுறைகளைத் தெரிந்து கொள்வது
பார்வையாளர் தலையீடு, பணியிடம் முழுவதும் பொறுப்புணர்வின் கலாச்சாரத்தை உருவாக்க உதவும். பொருத்தமற்ற நடத்தையைக் கண்டும் நடவடிக்கை எடுப்பதன் மூலம், பார்வையாளர்கள் துன்புறுத்தல் பொறுத்துக்கொள்ளப் படாது என்பதை நிறுவ உதவலாம் மற்றும் உங்கள் நிறுவனத்தின் துன்புறுத்தல் எதிர்ப்பு மற்றும் பாகுபாடு எதிர்ப்பு கொள்கைகளை வலுப்படுத்தலாம்.
இன்று நமது தோழருக்கோ தோழியருக்கோ நடப்பது நாளை அனைவருக்கும் பரவலாம். அதிகார சக்தியின் கரங்கள் நீளும். அதை இப்போதே தடுக்க வேண்டும். ஒன்றுகூடி அதைத் தடுக்க வேண்டும். அதனால் என்ன இழப்பு வந்தாலும் பரவாயில்லை என்று துணிய வேண்டும்.
சகபணியாளர்கள் பணியிட சுகாதார மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச் சூழலை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் ஒத்துழைக்கும் விதம் பார்வையாளர்களின் ஆதரவை அணிதிரட்டுவதில் பங்கு வகிக்கிறது. பணியிட பாதுகாப்பில் பார்வையாளர்களின் ஈடுபாடு பாலியல் துன்புறுத்தல் மற்றும் பணியிடத்தில் பிற பாலின அடிப்படையிலான தவறான நடத்தைகளுடன் தொடர்புடைய பாரம்பரிய விதிமுறைகளை மறுவடிவமைப்பதற்கு வழிவகுக்கும். என்ன எல்லாம் செய்யலாம்?
- சூழ்நிலையை மதிப்பிடுங்கள்: தலையிடுவது பாதுகாப்பானதா?
- உங்கள் வல்லமையை அறியுங்கள்: நீங்கள் என்ன செய்ய முடியும்?
- ஆதரவு அமைப்புகளைப் பயன்படுத்துங்கள்: யூனியன்கள், HR, நம்பகமான சகாக்கள்
- ஆவணப்படுத்துங்கள்: சம்பவங்களைப் பதிவு செய்யுங்கள்
- தொடர்ந்து ஆதரவளியுங்கள்: பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ச்சியான உதவி வழங்குங்கள்
நிறுவனங்கள் தங்கள் குழுக்களுக்குப் பொருத்தமற்ற நடத்தையைக் கண்டும் அவர்கள் தலையிட மற்றும் தலையிடுவதற்கான திறன்கள், அறிவு மற்றும் நம்பிக்கையை வழங்கும்போது ஆரோக்கியமான கலாச்சாரத்தை உருவாக்குவதிலும் துன்புறுத்தல் சம்பவங்களைக் குறைப்பதிலும் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
சிவப்பு புள்ளியிலிருந்து பச்சை புள்ளிக்கு மாற விரும்பும் நிறுவனம் வன்முறைகளை நிறுத்த ஆர்வம் உள்ள பேச்சாளர்களை அழைத்து உரையாற்றச் சொல்லலாம்.
இந்த மாற்றத்தைப் பட்டாம்பூச்சி கோட்பாடு (Butterfly Effect) மூலம் அமைதியான வழியில், சக பணியாளர்களின் ஒத்துழைப்பையும் பெற்று நடைமுறைப்படுத்த முடியும்.
மீண்டும் ஒருமுறை பட்டாம்பூச்சி கோட்பாட்டை நினைவுறுத்திக்கொள்வோம். 1961இல் வானியல் நிபுணர் எட்வர்ட் லோரென்ஸ் முன்வைத்த பட்டாம்பூச்சி கோட்பாடு, “பிரேசிலில் ஒரு பட்டாம்பூச்சி தன் சிறகுகளை அசைத்தால், அது டெக்சாஸில் ஒரு சூறாவளியை உருவாக்கலாம்” என்கிற கருத்தை முன்வைக்கிறது. இந்தக் கோட்பாடு chaos theory-ன் ஒரு பகுதியாகும், சிக்கலான அமைப்புகளில் சிறிய மாற்றங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதைக் குறிக்கிறது.
பட்டாம்பூச்சி கோட்பாடு என்பது தொடக்க நிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் பின்னர் பெரிய மற்றும் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம் என்கிற கருத்தைக் குறிக்கிறது. நம் தனிப்பட்ட செயல்களின் சக்தியை குறைத்து மதிப்பிடக் கூடாது. ஒரு நபரின் முயற்சிகள் பெரிய திட்டத்தில் முக்கியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் வரலாற்றில் பெரிய மாற்றத்தைத் தூண்டிய தனிநபர்களின் எடுத்துக்காட்டுகள் நிறைய உள்ளன.
சிறிய மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற கருத்து வணிக உலகில் பட்டாம்பூச்சி கோட்பாட்டைக் குறிக்கிறது. வணிகத்தில் பட்டாம்பூச்சி கோட்பாட்டின் பொருள் என்னவென்றால், வெளித்தோற்றத்தில் முக்கியமற்ற செயல்கள் அல்லது முடிவுகள் ஒரு நிறுவனத்தின் பாதையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
சிறிய கருணையான செயல்கள் மிகப் பெரிய மாற்றங்களுக்கு வித்திடலாம். காலை வணக்கத்தில் நேர்மையான புன்னகை கொடுப்பது மட்டும் ஒருவரின் நாள் முழுவதையும் மேம்படுத்தலாம். சகாக்களின் சிறிய சாதனைகளைக்கூடப் பாராட்டுவது அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்துகிறது மற்றும் அவர்களை மேலும் சிறப்பாகச் செயல்பட ஊக்குவிக்கிறது. டீ பிரேக்கில் ஒருவரை உள்ளடக்குவது அவர்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக உணர வைக்கிறது. பணியிடத்தில் ஒருவரின் கருத்தைக் கவனமாகக் கேட்பது அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் தருகிறது.
தகவல் பகிர்வு மற்றும் கற்றல் என்பது அறிவு சக்தியைப் பகிர்ந்துகொள்வதாகும். சிறிய செயல்கள் தொடக்க நிகழ்வாக இருக்கலாம், இது பரவலான, எதிர்பாராத நடத்தையை ஏற்படுத்துகிறது, அது முழு சமூகத்தையும் மாற்றுகிறது. ஓர் ஊழியரின் இரக்கமான செயல்கள் நோயாளியின் முழுக் குடும்ப வலைப்பின்னலையும் பாதிக்கலாம். ஒரு நபர் கற்றுக்கொண்ட ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வது முழு அணியின் திறனையும் மேம்படுத்தலாம்.
மனநலனுக்கு முன்னுரிமை கொடுப்பது நவீன பணியிடத்தின் அத்தியாவசிய அம்சம். பணிச்சுமை குறித்து அக்கறை காட்டுவது ஊழியர்களுக்கு அவர்கள் வெறும் இயந்திரங்கள் அல்ல, மாறாக மதிப்புள்ள மனிதர்கள் என்பதை உணர வைக்கிறது. மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு உதவி வழங்குவது அவர்களின் உற்பத்தித் திறனை மட்டுமல்லாமல், வாழ்க்கையின் தரத்தையும் மேம்படுத்துகிறது. வேலை-வாழ்க்கை சமநிலையை ஊக்குவிப்பது நீண்ட கால ஊழியர் தக்கவைப்பிற்கும், நிறுவனத்தின் நல்ல பெயருக்கும் வழிவகுக்கிறது.
பதிலளிப்பு மாதிரி (Response Model)
நேர்மறையான பணியிட கலாச்சாரத்தை உருவாக்க, வளர்ச்சியுள்ள நிறுவனங்கள் அதிக ஊழியர் ஈடுபாட்டை ஊக்குவிக்கலாம் மற்றும் தக்கவைப்பை அதிகரிக்கலாம். கலாச்சார விழிப்புணர்வு:
உங்கள் சமூக அல்லது கலாச்சார நிலையை ஒப்புக்கொள்ளுங்கள். உதாரணமாக, “நான் ஒரு ஆண் என்று எனக்குத் தெரியும், எனவே இங்கே என் அறிவு குறைவாக இருக்கலாம்” என்று ஒப்புக்கொள்வது வெளிப்படைத்தன்மையின் தொனியை அமைக்கலாம்.
நடைமுறை அணுகுமுறைகளாகக் கீழ்க்காணும் மாற்றங்களை உருவாக்கலாம்.
1. அறிதல் மற்றும் அங்கீகரித்தல்
- தவறான நடத்தையை அடையாளம் காணக் கற்றுக்கொள்ளுங்கள்.
- முன்முடிவுகள் மற்றும் சார்புகளை அங்கீகரிக்கவும்.
2. படிப்படியான தலையீடு
- நேரடி மோதலைத் தவிர்த்து, சூழ்நிலையை மாற்றுங்கள்.
- பாதிக்கப்பட்டவருக்குத் தனிப்பட்ட ஆதரவு வழங்குங்கள்.
3. ஆதரவு வலையமைப்பு
- நம்பகமான சகாக்களுடன் கூட்டணி அமைக்கவும்
- நேர்மறையான மாற்றத்திற்கான குழுக்களை உருவாக்கவும்
சமத்துவமான பணியிடத்திற்கான சில பச்சை மண்டல உத்திகளையும் சேர்க்கலாம். அவையாவன:
உள்ளடக்கிய கொள்கைகள்
பணியிட சமத்துவம் என்பது அவர்களின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் உங்கள் அனைத்து ஊழியர்களுக்கும் நியாயமான வாய்ப்புகளை வழங்கும் கருத்து. நிறுவனங்கள் தங்கள் குழுக்களுக்குப் பொருத்தமற்ற நடத்தையைக் கண்டும் அவர்கள் தலையிட மற்றும் தலையிடுவதற்கான திறன்கள், அறிவு மற்றும் நம்பிக்கையை வழங்கும்போது ஆரோக்கியமான கலாச்சாரத்தை உருவாக்குவதிலும் துன்புறுத்தல் சம்பவங்களைக் குறைப்பதிலும் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
நடைமுறை செயல்முறைகள்:
வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். சம்பள விவர அட்டவணைகளைப் பகிரங்கமாக அறிவிப்பதன் மூலம் ஊழியர்கள் தங்கள் ஊதியம் குறித்துத் தெளிவான புரிதலைப் பெறலாம். பதவி உயர்வு செயல்முறைகளைத் தெளிவாக விவரிப்பது அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குகிறது மற்றும் நேர்மையான போட்டியை ஊக்குவிக்கிறது.
ஆதரவு அமைப்புகளை உருவாக்குவது சமத்துவமான பணியிடத்தின் அடிப்படை. ஊழியர் வள குழுக்கள் (Employee Resource Groups) பல்வேறு பின்னணியில் இருந்து வரும் பணியாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்குகின்றன. வழிகாட்டுதல் திட்டங்கள் (Mentorship Programs) இளம் தொழிலாளர்களுக்கும் அனுபவமிக்க பணியாளர்களுக்கும் இடையே பாலத்தை அமைக்கின்றன.
தொடர்ச்சியான கற்றல் என்பது ஒரு நாள் முடிவடையும் நிகழ்வு அல்ல. பன்முகத்தன்மை, சமத்துவம், உள்ளடக்குதல் மற்றும் சொந்த உணர்வு குறித்த பயிற்சி தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். உண்மையான மாற்றத்தை வளர்ப்பதற்கு, நிறுவனங்கள் இந்த உரையாடலை உயிருடன் வைத்து தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கும் பயிற்சி திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறுகிய கால குறிகாட்டிகள் நம் முயற்சிகளின் உடனடி பலனைக் காட்டுகின்றன. நேர்மறையான உரையாடல்களின் அதிகரிப்பு பணியிடத்தில் ஒரு ஆரோக்கியமான மாற்றம் நடந்து கொண்டிருப்பதைக் குறிக்கிறது. புகார்களின் எண்ணிக்கை குறைவு துன்புறுத்தல் மற்றும் பாகுபாட்டு நிகழ்வுகள் குறைந்து வருவதைத் தெரிவிக்கிறது. பணியாளர் மன்னிப்பு அளவுகள் மேம்பாடு ஊழியர்கள் தங்கள் பணியிடத்தில் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உணர்வதைக் காட்டுகிறது.
நீண்ட கால விளைவுகள் நம் முயற்சிகளின் நிலையான தாக்கத்தை அளவிடுகின்றன. நேர்மறையான பணிக்கூட கலாச்சாரம் ஊழியர்களின் ஒட்டுமொத்த வேலை திருப்தி மற்றும் வெற்றியில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. 94% நிர்வாக அதிகாரிகள் மற்றும் 88% ஊழியர்கள் நேர்மறையான பணியிடக் கலாச்சாரம் வணிக வெற்றியின் முக்கியப் பகுதி என்று நம்புகிறார்கள். இது வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, மாறாக நம் அனைவரின் கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உண்மையாகும்.
நம்பிக்கை கட்டமைப்பு எந்தவொரு நீடித்த மாற்றத்தின் அடிப்படை. தனிப்பட்ட உதாரணம் காட்டுவது மிகவும் சக்திவாய்ந்த வழி. நீங்கள் மாற்றத்தைக் காண விரும்பும் நடத்தையை முதலில் காட்டுவதன் மூலம் மற்றவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்குகிறீர்கள். கதைகள் பகிர்தல் என்பது வெறும் தகவல் பரிமாற்றம் அல்ல, மாறாக நேர்மறையான மாற்றத்தின் சிறிய வெற்றிக் கதைகளைப் பகிர்வதன் மூலம் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பது. கூட்டுப் பொறுப்பு என்கிற உணர்வை ஏற்படுத்துவது எல்லோரும் மாற்றத்தின் பங்காளிகள் என்கிற சிந்தனையை வளர்க்கிறது.
எதிர்ப்பைக் கையாள்வது மாற்றத்தின் ஓர் இயல்பான பகுதி. பொறுமையாகக் கேட்பது மற்றும் புரிந்துகொள்வது எதிர்ப்பின் வேர்களை அடையாளம் காண உதவுகிறது. சிறிய படிகளில் மாற்றம் கொண்டுவருவது பெரிய அதிர்ச்சிகளைத் தவிர்க்கிறது மற்றும் படிப்படியான ஏற்றுக்கொள்ளலை ஊக்குவிக்கிறது. வெற்றிகளைக் கொண்டாடுவது அடுத்த கட்ட மாற்றங்களுக்கான உத்வேகத்தையும் ஆற்றலையும் வழங்குகிறது.
நாம் நமது நடத்தையில் ஒரு சிறிய நேர்மறையான மாற்றத்தைச் செய்ய விவேகத்துடன் முடிவு செய்யும்போது, நாம் வாழ்க்கையின் குளத்தில் ஓர் அலையைச் சேர்க்கிறோம். நம் செயல்கள் மற்றவர்களை ஊக்குவிக்கின்றன, மேலும் ஒரு சங்கிலி எதிர்வினை ஏற்படுகிறது.
பணியிடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிக்க ஒன்றாகக் குரல் கொடுப்பதுதான் ஒரே வழி. பார்வையாளர்களின் தலையீடு மற்றும் கூட்டு நடவடிக்கை இல்லாமல் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியாது. பட்டாம்பூச்சி கோட்பாட்டின் படி, சிறிய மாற்றங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். நம் அனைவரின் சிறிய, நேர்மறையான செயல்கள் சேர்ந்து ஒரு சமத்துவமான, அமைதியான பணியிடத்தை உருவாக்க முடியும்.
ஒவ்வொரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பும் ஒரு புயலை உருவாக்கலாம் என்றால், நம் ஒவ்வொரு நேர்மறையான செயலும் ஒரு சமத்துவமான உலகை உருவாக்க முடியும். இன்று தொடங்குங்கள் – ஒரு புன்னகையுடன், ஒரு கருணையான வார்த்தையுடன், ஓர் ஆதரவான செயலுடன். மாற்றம் சிறிய அடிகளிலிருந்து தொடங்குகிறது.
(தொடரும்)
படைப்பாளர்:

பத்மா அர்விந்த்
மருத்துவத்தில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க அரசியல் குறித்து மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘கனவுகள் மின்னும் தேசம்’ எனும் புத்தகம் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.