என் பேரு பிருந்தா கதிர். நான் பிறந்தது முதலே இந்த உலகத்தை வெளிச்சத்தோட பார்க்க முடியல. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துல பார்க்குறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு.
இப்போ நான் கல்யாணம் ஆகி சென்னையில சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கேன். என்னோட கணவர் பேரு கதிர்வேல். அவரும் என்னை மாதிரிதான்… பார்வையற்றவர். நாங்க ரெண்டு பேரும் யாருடைய உதவியும் இல்லாம, சென்னையில ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கோம். ஒருத்தருக்கொருத்தர் துணையா, சந்தோஷமா போய்ட்டு இருக்கு எங்க வாழ்க்கை.
‘உணர்வுகளின் உலகம்’ – இந்தத் தலைப்பு வெறும் சொற்கள் இல்ல. இது என்னுடைய உலகம் பற்றிய சின்ன அறிமுகம். என்னைப் போல நிறைய பேரோட கதையும்கூட இது. நம் சமூகத்தில் நிறைய பேருக்கு பார்வையற்றவர்கள் என்றால் யார் என்றே சரியாகத் தெரியாது. அவர்களைப் பற்றி ஒரு தெளிவான புரிதல் இல்லாமல் இருப்பதுதான் உண்மை. ஒரு சிலர் பரிதாபப்படுவார்கள், இன்னும் சிலர் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். ஆனால் உண்மையில நாங்கள் யார்? எங்களுடைய உலகம் எப்படிப்பட்டது?
தமிழ்நாட்டையும் இந்தியாவையும் பொறுத்தவரைக்கும் பார்வையற்றவர்களைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது என்று சொல்லவேண்டும். இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், இந்த கட்டுரைத் தொடர் மூலமாக நான் உங்களிடம் எங்களுடைய உலகத்தைக் கொஞ்சம் அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.
இந்தக் கட்டுரைகளில் நான் என்னுடைய தனிப்பட்ட கதையை மட்டும் சொல்லப் போவது இல்லை. பொதுவாகப் பார்வையற்றவர்கள் என்றால் யார், இந்த சமூகத்தில் அவர்கள் என்னென்ன கஷ்டங்களை சந்திக்கிறார்கள் அதே நேரத்தில் எத்தனையோ தடைகளைத் தாண்டி எப்படி சாதிக்கிறார்கள் என்று நிறைய விஷயங்களைப் பேசப் போகிறோம்.
பார்வை இல்லாவிட்டாலும் நம் நாட்டிலும், நம்ம தமிழ்நாட்டிலும் எத்தனையோ பேர் பெரிய பெரிய விஷயங்களைச் செய்துகொண்டு இருக்கின்றனர். அவர்களுடைய கதைகளும் இதில் வரும்.
பார்வை குறைபாடு இருப்பவர்களுடைய வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் எப்படி சாப்பிடுவார்கள், எப்படி நடப்பார்கள், எப்படி படிப்பார்கள், எப்படி வேலைக்குப் போவார்கள் என்று நிறைய கேள்விகள் உங்கள் மனதில் இருக்கலாம். இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் எங்களுடைய தினசரி வாழ்க்கையில் நடக்கிற சில சுவாரசியமான விஷயங்களையும் நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ளப் போறேன்.
இதில் வெறும் நான் மட்டும் இல்ல, என்னுடைய நண்பர்களுடைய அனுபவங்களையும் சொல்வேன். இன்னும் நிறைய பார்வையற்ற நண்பர்களைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவங்களுடைய கதைகளையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்க ஆசைப்படுறேன். ஏன் என்றால் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு பாடம்தான்.
சும்மா ஒரு புள்ளிவிவரம் சொல்கிறேன், கேட்டுக்கொள்ளுங்கள். நம் இந்தியாவில் தோராயமாக 4.95 மில்லியன் பார்வையற்றவர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல், சுமார் 35 மில்லியன் பேர் பார்வை குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர்.
நம் தமிழ்நாட்டில் மட்டும் 1 லட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையற்ற நண்பர்கள் இருக்கின்றனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களுடைய வாழ்க்கையைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா?
இந்தத் தொடரில் வரவுள்ள ஒவ்வொரு கட்டுரையிலும், பார்வையற்றவங்களுடைய வாழ்க்கையில இருக்கிற சந்தோஷம், துக்கம், நம்பிக்கை, ஏமாற்றம் என்று எல்லா உணர்வுகளையும் நீங்கள் உணர முடியும். நாங்களும் உங்களை மாதிரி சாதாரண மனிதர்கள்தான். எங்களுக்கும் ஆசைகள் இருக்கின்றன, கனவுகள் இருக்கின்றன, லட்சியங்கள் இருக்கின்றன. சில நேரங்களில் கஷ்டமாக இருந்தாலும், அதைத் தாண்டி வர நாங்கள் கற்றுக்கொண்டோம்.
வாங்க! இந்த தொடரில் என்னோடகூட சேர்ந்து பயணியுங்கள். ஒவ்வொரு அத்தியாயத்துலயும் புதுப்புது விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புறேன். உங்களுடைய ஆதரவும் புரிதலும்தான் எங்களை மேலும் முன்னேறிப் போக வைக்கும்.
அது சரி, ஒரு சின்ன கேள்வி உங்கள் மனதில் இப்போது எழும்பி இருக்கலாம். நாங்கள் எப்படி படிக்கிறோம்? எப்படி எழுதுகிறோம்? இதெல்லாம் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதா? கவலைப்படாதீர்கள்… இதுக்கான எல்லா பதில்களையும் நாம் அடுத்த அத்தியாயத்துல பார்க்கலாம்! அதுவரைக்கும் காத்திருங்கள்…
படைப்பாளர்

பிருந்தா கதிர்
தீவிர வாசிப்பாளர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். எழுதுவது மிகவும் பிடிக்கும்.
அருமை தோழர், பிருந்தா கதிர். உங்கள் புதிய தொடர் வெற்றிபெற வாழ்த்துகள். உங்களுடன் பயணிக்க காத்திருக்கிறேன்.
ஆர்வமுடன் காத்திருக்கிறோம்
அக நிறைவுடன் எனது வாழ்த்துக்கள்