எங்கள் கல்லூரியின் மிகப் பெரிய சிறப்பு அம்சமே நுண்கலை வார விழாதான் (Fine Arts Week). ஒரு வாரம் முழுவதும் பாடம்/ படிப்பு என எதுவும் கிடையாது; வாரம் முழுவதும் கொண்டாட்டம், கொண்டாட்டம்தான். இதற்கான அறிவிப்பு எப்போது வருமெனக் காத்திருப்போம்.
இது பெரும்பாலும் டிசம்பர் இரண்டாவது வாரம், அதாவது கிறிஸ்மஸ் விடுமுறைக்கு முன் நடைபெறும். கர்நாடக சங்கீதம், மெல்லிசை, பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனம், குழு நடனம், ஜோடி நடனம், தனி நடனம், தமிழ் நாடகம், ஆங்கில நாடகம், பூ அலங்காரம், ரங்கோலி, கோலம், ஓவியம், கரும்பலகை ஓவியம், பென்சில் ஓவியம், மோனோ ஆக்டிங், மிமிக்ரி, மாறுவேடப் போட்டி, சிகை அலங்காரம், ஆடை அலங்காரம் போன்ற போட்டிகள் நடைபெறும்.
பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி போன்றவை தமிழ் மன்றம் ஆங்கில மன்றத்தால் தனியாக நடத்தப்படும். அவை இலக்கியம் சம்பந்தப்பட்டவை; நுண்கலையில் வராது.
ஒரு வாரம், பத்து நாட்களுக்கு முன்பே பைன் ஆர்ட்ஸ் வீக் அறிவித்து விடுவார்கள். இந்த ஆண்டு, எந்தத் துறை கேடயம் வாங்குகிறது என்ற ஆவலும், போட்டியும் நிலவும். இதற்காக அந்தந்த துறையைச் சார்ந்த பேராசிரியைகள் வழி நடத்துவதும் உண்டு.
இந்த விழாவிற்குப் பொறுப்பு மூன்றாம் ஆண்டு வகுப்புத் தலைவிகள் தான். அவர்கள் முதலாம் ஆண்டு வகுப்புகளுக்குச் சென்று யார் யாரிடம் என்ன திறமை உள்ளது என்று கண்டறிந்து போட்டியில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். ஒரு தடவை பங்கேற்று விட்டால் அதன் பின்வரும் காலங்களில் அவர்களாகவே போட்டிகளில் கலந்துகொள்வார்கள்.
இரண்டாம் ஆண்டு மாணவிகளைப் பற்றி ஏற்கனவே தெரிந்து வைத்திருப்போம். அவர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். வேதியியல் துறையில் சகாய ராணி தான் வகுப்பு தலைவி. எனவே நாங்கள் இருவரும் சேர்ந்து சென்று அந்த வேலையைச் செய்வோம்.
மேடையில் நடைபெறும் போட்டிகள் – நடனம்,பாட்டு, நாடகம் போன்றவை எல்லாம் பெரும்பாலும் காலை – உணவுக்கு முன் நடைபெறும். வரைதல், ரங்கோலி போன்றவை பெரும்பாலும் மாலை – உணவுக்குப் பின் நடைபெறும். பூ அலங்காரம் அந்த நாளின் முதல் போட்டியாக இருக்கும். பிந்தினால் பூக்கள் வாடிவிடும் அல்லவா? ஒவ்வொரு போட்டிக்கும் அந்தந்த துறையைச் சார்ந்த விற்பன்னர்கள் (Experts) மூவர் நடுவர்களாக இருப்பர். அவர்கள் தூத்துக்குடியிலேயே பெரிய பிரபலங்களாக (celebrities) இருப்பார்கள்.
நமக்குப் பிடித்தால் போட்டிகளைப் பார்வையிடலாம் இல்லாவிட்டால் விருப்பமான இடத்தில் அமர்ந்து கதை பேசலாம். மேடையில் நடைபெறும் போட்டிகளை யாரும் தவற விட மாட்டார்கள். அந்த வாரம் ‘கேண்டீன்’ விற்பனை அமோகமாக இருக்கும்.
எங்கள் கல்லூரியின் அரங்கம் (ஆடிட்டோரியம்) மிகப்பெரியதாக இருக்கும் பேராசிரியர்களுக்கு நாற்காலி போட்டிருப்பார்கள். நாங்கள் தரையில் உட்கார்ந்து கொள்வோம். பார்வையாளர்களாக உட்கார்ந்திருக்கும் மாணவர்களின் உற்சாகத்தைச் சொல்லி மாளாது. லெக்சர், பிரக்டிகல்ஸ், ரெகார்ட் என்று எதுவும் இல்லாமல் சுதந்திரப் பறவைகளாக உட்கார்ந்து கதை பேசுவதும், கமெண்ட் அடிப்பதுமாக இருப்போம். பேராசிரியைகளும் (மிஸ் என்று தான் கூப்பிடுவோம்) எங்களுக்கு இணையாக இருப்பார்கள்; இயல்பாக இருப்பார்கள்.
முதலாம் ஆண்டு படிக்கும் போது போட்டியிட யார் யார் வரப்போகிறார் என்ற ஆவல் எங்கள் முகத்தில் தெரியும். இரண்டாம், மூன்றாம் ஆண்டு படிக்கும்போது இன்னின்ன போட்டிக்கு இன்னன்னார் வருவார் என்று பேசிக் கொண்டிருப்போம்.
என்னிடம் என்னுடன் பயின்ற தோழர்களின் புகைப்படம் இல்லை. 2023-2024 கல்வியாண்டில் எங்கள் கல்லூரியின் குழந்தைகளின் காணொளி ஒன்று இணையத்தில் உள்ளது. அதிலிருந்து எடுத்த புகைப்படங்கள் இவை.
பரத நடனத்திற்குக் குறைந்த எண்ணிக்கையில்தான் மாணவிகளின் பங்கு இருக்கும். பரதநாட்டியத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ராதா என்ற சீனியர் பி.காம். மாணவர் எப்போதும் பரிசு வாங்குவது நினைவில் இருக்கிறது. அவர் மட்டும் தான் தலையைத் தஞ்சாவூர் பொம்மை போல இப்படி அப்படி ஆட்டுவார். அப்போது மாணவிகளின் கைகள் தாமாகவே தட்டும். இப்போது பள்ளிகளில் சின்னஞ்சிறு பிள்ளைகளே நடனம் கற்றுக்கொண்டு அப்படித் தலையை ஆட்டுகிறார்கள்.
கரகம் தெரிந்த மாணவிகள் யாராவது இருந்து கரகம் ஆடினால் எல்லோரும் உற்சாகமாகி விடுவார்கள். தாம்பாளத்தில் நின்று கொண்டு கரகம் ஆடும் போது கைதட்டலில் அரங்கமே அதிரும். ஓரளவு நடனம் தெரிந்தவர்கள் கூட இதற்காகப் பயிற்சி எடுத்து கரகம் ஆடுவதுண்டு.
அனைத்தையும்விட ஓரியண்டல் நடனத்திற்குத் தான் மாபெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. அப்போது என்ன பாடல்கள் பிரபலமாக உள்ளனவோ அவை மேடையேறும். சிலர் படம் பார்த்திருப்பார்கள். பலரும் படம் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் வானொலி மூலம் எங்களுக்கு பாடல் அறிமுகமாகியிருக்கும். இவ்வாறு எல்லோருக்குமே அந்தப் பாடல்களுடன் ஒரு நேரடி இணைப்பு இருக்குமென்பதால் உற்சாகம்; உற்சாகம்; உற்சாகம்தான்.
‘என்னடி மீனாட்சி’ என்ற பாடலுக்கு இயற்பியல் துறையைச் சேர்ந்த வசுமதி ஆடினார். இந்தப்பாடல், இலங்கை வானொலியின் இசைத் தேர்தல் நிகழ்வில் ஏறக்குறைய ஒரு ஆண்டு முதலிடத்திலேயே இருந்தது. கமலின் ரசிகர்களின் எண்ணிக்கையைக் கூட்டிய பாடல். வார்த்தை தவறிவிட்டாய் என மெதுவாகத் தொடங்கும் பாடல் ‘Come on clap’ என்ற சொற்கள் வந்ததும் பாடல் வேகமெடுக்கும். வசுமதி ஆடும்போது, ‘Come on clap’ சொற்கள் வந்ததும் அனைவரும் பாடலில் வருவது போல் இசையுடன் ஒன்றி உற்சாகமாகக் கைதட்டினோம்.
விலங்கியல் துறையின் ஹெலன் ரெஜினா மேரி கைக்குட்டையை வைத்துக் கொண்டு ஆசையக் காத்துல தூது விட்டு பாடலுக்கு ஆடினர். (பின்னர் இந்தப் பாடலுக்கு குழு நடனம் ஆடி கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில் (Inter-college competition) எங்கள் கல்லூரியின் குழுவுடன் இணைந்து முதல் பரிசு வாங்கினர்.
ஜோடி நடனம் நாங்கள் ஆவலுடன் எதிர் பார்த்த ஒன்று. ஜெசிந்தா ஆன்டனி, லிடியா ஜோடி ‘நம்ம ஊரு சிங்காரி’ பாடலுக்கு ஆடி பெரும் புகழைத் தேடி வைத்திருந்தார்கள். அடுத்த ஆண்டு, ‘குர்பானி’ படப் பாடலான ‘லைலா ஓ லைலா’ விற்குஆடினர். (aa-aa) (aa-aa) எனப் பாடலில் வரும் இடங்களிலெல்லாம் எல்லோரும் இணைந்து பாடியது என்பதெல்லாம் நினைவிற்கு வருகிறது. அவர்களுக்கே முதல் பரிசு. மூன்றாம் ஆண்டு ‘குங்குமப்பூவே’ பாடலுக்கு இவர்கள் ஆடினார்கள்.
1980ம் ஆண்டு வெளியான குர்பானி படமும், பாடல்களும் மிகவும் பிரபலம். பாகிஸ்தானைச் சேர்ந்த ‘நசியா ஹாசன்’ பாடிய ‘ஆப் ஜெய்ஸா கோயி’ பாடல் பட்டிதொட்டிகளில் எல்லாம் ஒலித்தது. ஆடியோ கேசட் ஒலித்த அந்தக் காலகட்டத்தில் டேப் ரெக்கார்டர் இருந்த வீடுகளிலெல்லாம் இதன் கேசட் இருந்தது.
‘அடடட மாமரக்கிளியே’ என்ற பாடலுக்கு ஒரு பெண் சிறப்பாக ஆடினார். ‘நினைத்தாலே இனிக்கும்’ படப் பாடல்கள் பெருமளவில் பிரபலமாக இருந்தன. ‘இனிமை நிறைந்த உலகம் இருக்கு’, ‘ஆனந்த தாண்டவமோ’ என புதிய பாடல்கள் வரிசையில் மேலும் ‘சித்தாடை கட்டிகிட்டு’, ‘குற்றால மலையிலே’, ‘குங்குமப்பூவே’, ‘விஸ்வநாதன் வேலை வேண்டும்’ எனப் பல பழைய பாடல்களும் இணைந்தே வந்தன.
இவை போக, இசை மட்டும் ஒலிக்கவிட்டு ஆடிய ஜப்பானியக் குடை நடனம் (முதல் பரிசு), டெவில் டான்ஸ் (மிகவும் துல்லியமான, காகிதம் வைத்து பேய் போல அலங்காரம் பண்ணி இருந்தார்கள்), ஏஞ்சல் டான்ஸ் இப்படி விதவிதமான நடனங்கள் இடம்பெற்றிருந்தன. ஓலைத் தொப்பி முதல் என்னென்னவோ பயன்படுத்தி நடனமாடினார்கள்.
குழு நடனம், ஜோடி நடனமென எல்லாவற்றிலும் Boney M பாடல்கள் நீக்கமற ‘பை த ரிவர்ஸ் ஆஃப் பாபிலோன்’, ‘பிரவுன் கேர்ள் இன் த ரிங்’, ‘குரே குரே இட்ஸ் எ ஹாலி ஹாலி டே’ போன்ற பாடல்கள் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டன.
மெல்லிசைப் பாடல் போட்டிகளில் ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’, ‘பை தி ரிவர்ஸ் ஆஃப் பாபிலோன்’ போன்ற பாடல்கள் பாடப்பட்டன. அந்த இசைத்தட்டு அப்போது மிகவும் பிரபலம்.
நாடகங்களில் தமிழ், ஆங்கிலம் என இரு பிரிவுகள் உண்டு. தமிழ் நாடகங்களில் சமூக நாடகங்கள், பைபிள் கதைகளை அடிப்படையாக வைத்த நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள் இடம் பெற்றன. ஆங்கில நாடகங்களில் பெரும்பாலும் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் சிறு பகுதி நடிக்கப்பட்டது.
எங்கள் பள்ளியில் (கல்லூரி அல்ல) ராஜ் என்று ஒரு ஆசிரியர் எம்.ஏ. ஆங்கிலம் தொலைதூரக் கல்வியில் பயின்றதால் எங்களுக்கு ஷேக்ஸ்பியர் கதைகளைச் சொல்லுவார். கதாபாத்திரங்களின் பெயரைக் கரும்பலகையில் எழுதிப் போட்டுக் கதை சொல்லுவார். அதனால் எனக்கு ஷேக்ஸ்பியர் நாடகக் கதைகள் அத்துப்படி. ஆங்கில நாடகம் நடக்கும் போது நான் என் அருகில் இருக்கும் தோழிகளுக்குக் கதை சொல்லுவேன். பியூசி-யில் ஆங்கில வகுப்பிலும் ஷேக்ஸ்பியர் நாடகம் துணைப்பாடமாக வரும்போது என்னைக் கதை சொல்லும் படி பேராசிரியர் கேட்டுக் கொள்வார். ஏனென்றால் அவர்கள் தமிழில் பேசக்கூடாது. நாங்களும் பேராசிரியர்களிடம் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். தோழிகளிடம் தமிழில் பேசலாம். தமிழில் புரியவைக்க அவர் என்னைப் பயன்படுத்தினார். இதை இங்கே சொல்வதற்குக் காரணம், அன்று ஆசிரியர்கள் பாடம் தாண்டியும் மாணவர்களுடன் உரையாடினார் எனச் சொல்வதற்காகத்தான். எங்கள் பள்ளி ஆசிரியர்கள் பலரும் அப்படிப்பட்டவர்கள்தான்.
நாடகங்களுக்கு விதவிதமான திரைத்துணிகள் பின்னால் போடப்பட்டிருக்கும் நாம் நமது காட்சிக்கு ஏற்றபடி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
நடனத்திற்கு அடுத்தபடியாக எல்லோரும் எதிர்பார்க்கும் போட்டி, Flower arrangement போட்டி. பூக்களுடன், பழம், காய்கறிகளும் பயன்படுத்தலாம். இந்த ஆண்டின் புதிய சிந்தனை என்பதைப் பார்க்க ஆவலாகக் காத்திருப்போம். ஒரு பாம் (Palm) இலை/ ஓலையை விரித்து, லில்லி மலர்களால் அலங்காரம் செய்து, அதன் முன் பூக்களால் அலங்கரித்த விளக்கு வைத்திருந்தார்கள். விளக்கிற்கு முன் தேங்காய்ப் பழத்தட்டு வைத்து அலங்காரம் செய்திருந்தார்கள்.
பப்பாளியைச் சிறிது வெட்டி உடலாகவும், சிறிய ஆரஞ்சை முகமாகவும் வைத்து, தலையில் பாதி சாத்துக்குடியைக் கூடையாக வைத்து அந்த கூடையில் பூ அலங்காரம் செய்திருந்தார்கள்.
தாம்பாளத்தில் தண்ணீர் வைத்து அதற்குள் கோலம் போட்டு இருப்பதைப் பார்த்து மிகவும் வியந்தோம்.
கோலம் போட்டு நடுவில் சிறு குடத்தில் (பால்குடம்) தென்னம் பூ வைத்தது மாறுபட்ட சிந்தனையாகத் தோன்றியது. ரங்கோலியிலும் அவ்வாறே மாறுபட்ட சிந்தனைகள் வெளிப்படும். ஒருமுறை பாரதமாதாவிற்கு கை விலங்குகள் உடைபட்டிருப்பதைப் போல ரங்கோலி போட்டு ஆகஸ்ட் 15 -1947 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு முதல் பரிசும் கிடைத்தது.
மாறுவேடப் போட்டியையும் ஆவலாக எதிர்பார்ப்போம்; ஏதாவது புதுமையான மாறுவேடம் அரங்கேறுகிறதா என்று ஆர்வமாக இருப்போம். ஒருவர் முத்துக்குளிக்கும் ஆடை அணிந்து முத்துக்குளிப்பவர் போல் பேசினார். அவருக்கு முதல் பரிசு கிடைத்தது.
செய்தித்தாள் வைத்து ஆடை அணிந்து வருதல், சார்ட் பேப்பரில் செய்த கோல்கேட் பேஸ்ட், மூடிக்கு சிறிய சிகப்பு வாளி இவையெல்லாம் எங்களைப் பெரிதும் கவர்ந்தவை. மற்றபடி வீரபாண்டிய கட்டபொம்மன், ஜான்சி ராணி போலப் பல தலைவர்கள் வேடம், குடிகாரன் வேடம் இப்படி வழக்கமான பல வேடங்களில் வருவார்கள்.
மாடியில், வரலாறு மற்றும் பொருளாதார வகுப்புகளில் பென்சில் ஓவியம், வண்ண ஓவியம், கரும்பலகையில் சாக்பீஸ் வைத்து வரையும் கரும்பலகை ஓவியப் போட்டிகளும் நடைபெறும்.
பென்சில் ஓவியம்
நான் பி யூ சி படிக்கும் போது Miss.St.Mary’s அழகிப்போட்டி கடைசியாக நடைபெற்றது. அந்தப் பட்டம் வாங்குவது பெரிய கிரெடிட் ஆக இருந்தது. முதலாம் ஆண்டு படிக்கும் போது அதற்குப் பதிலாக ஃபேஷன் ஷோ என்று ஆடை அலங்காரப் போட்டி நடைபெற்றது. அதன் பின் அதுவும் நடைபெறவில்லை. பிரைல் கிரீம் மட்டுமே பயன்படுத்தி சிகை அலங்காரம் செய்வார்கள். இப்போது விதவிதமான கிரீம்கள் வந்துவிட்டன; அப்போது அந்த பிரைல் கிரீமே பெரிய விஷயமாக இருக்கும்.
மேடையில் அரங்கேறாத போட்டிகளில் நடுவர்கள் மதிப்பெண் போட்ட பின்னரே நம்மைப் பார்க்க அனுமதிப்பார்கள். ஒவ்வொரு போட்டிக்கும் எந்த துறை பரிசு பெற்றது என்பதை அறிய தித்திக் என்ற மனதுடன் காத்திருப்போம். தேர்வு முடிவுகளுக்குக்கூட இப்படி இருக்காது. ஒரு கரும்பலகையில் எல்லா துறைகளின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். போட்டி முடிவுகள் வெளியாகும் போது ஒரு பேராசிரியர் வந்து மதிப்பெண்களைக் கூட்டி எழுதுவார். முதல் பரிசுக்கு ஐந்து, இரண்டாவது பரிசுக்கு மூன்று, மூன்றாவது பரிசுக்கு இரண்டு மதிப்பெண்கள். போட்டி முடிவுகள் வெளியாகும் போது கரும்பலகையைச் சுற்றி பலர் நின்று கொண்டிருப்போம். எந்தத் துறைக்கு மதிப்பெண் கூடுகிறதோ அவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அந்த மகிழ்ச்சியை எல்லாம் அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும்.அதெல்லாம் ஒரு காலம்! திரும்ப வராத காலம். தற்போது எல்லாம் டிவியில், இன்டர்நெட்டில் பார்ப்பதால் இந்த அளவு திரில் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
போட்டி முடிவுகளை சற்று நேரத்தில் ஒலிபெருக்கியிலும் அறிவிப்பார்கள். மேடையில், ஒலிபெருக்கியில் எதை அறிவித்தாலும் வெள்ளைக்காரன் போல ரொம்ப ஸ்டைலான இங்கிலீஷில் ஏற்ற இறக்கங்களோடு அற்புதமாக அறிவிப்பார்கள். அதைக் கேட்பதே ஒருவித Fantasy ஆக இருக்கும். கல்லூரி விழா அன்று வெற்றி பெற்ற துறைக்குக் கேடயம் கிடைக்கும்.
நான் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது கேடயம் ஆங்கிலம் மற்றும் இயற்பியல் துறைகளுக்குக் கிடைத்தது. நான் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது கேடயம் தாவரவியல் துறைக்குக் கிடைத்தது. எங்கள் துறை இரண்டாவதாக வந்தது. மற்ற இரண்டு ஆண்டுகளும் யார் என்று சரியாக நினைவில் இல்லை.
இந்த வாரம் முடியும் போது முடிந்துவிட்டதே என்று வருத்தம் இருந்தாலும் அடுத்தது கிறிஸ்மஸ் கொண்டாட்டம், விடுமுறை வருகிறதே என்று மனதைத் தேற்றிக் கொள்வோம்.
படைப்பாளர்
பொன் ஜெய இளங்கொடி
MSc. Chemistry. MSc. Psychology. B.Ed. PGDGC. வயது 62. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இவர் PUC மற்றும் BSc. புனித மரியன்னை கல்லூரி, தூத்துக்குடியில் 1978 முதல் 1982 வரை படித்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்களை இந்தத் தொடரில் எழுதியுள்ளார். இது இவரின் முதல் முயற்சி.
“இரண்டு பக்கமும் மாத்தி மாத்தி பால் கொடு ரேகா. கை வாட்டம்னு ஒரு பக்கமாவே கொடுக்காத” மூத்த மகள் மலர்விழிக்கு தாய்ப்பால் தரும் சமயங்களில் அவள் அம்மா ராஜேஸ்வரி அழுத்தமாக அறிவுறுத்திய விஷயம் இது….
என் பேரு பிருந்தா கதிர். நான் பிறந்தது முதலே இந்த உலகத்தை வெளிச்சத்தோட பார்க்க முடியல. ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துல பார்க்குறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. இப்போ நான் கல்யாணம் ஆகி…
நுண்கலை வாரம்- மிக நுண்ணிய வர்ணனை – மிகச்சிறப்பு
ஆஹா… படிக்க படிக்க ஒவ்வொன்றாக ஞாபகத்து வந்து, மீண்டும் fine arts week கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அனுபவத்தை கொடுத்தது.
It remembers my college fine arts week 😍