“இரண்டு பக்கமும் மாத்தி மாத்தி பால் கொடு ரேகா. கை வாட்டம்னு ஒரு பக்கமாவே கொடுக்காத”

மூத்த மகள் மலர்விழிக்கு தாய்ப்பால் தரும் சமயங்களில் அவள் அம்மா ராஜேஸ்வரி அழுத்தமாக அறிவுறுத்திய விஷயம் இது. கூடவே பாட்டி வசந்தாவின் மார்பகத்தில் கட்டி வந்து இறந்த கதையைப் பற்றியும் சொன்னார்.  

“எனக்கு அப்புறம் எங்க அம்மாவுக்கு புள்ளையே தங்கல. இருந்து இருந்து பத்து வருஷம் கழிச்சு ஒரு புள்ள பொறந்துச்சு. என்ன நேரமோ? அதுவும் ஆறு மாசத்துல செத்துப் போச்சு. அப்புறம் நாலு வருஷம் கழிச்சுதான் யோகேஸு பொறந்தான். அப்போ எனக்கும் கல்யாணமாகிடுச்சு. ஒங்க அண்ணன் வயித்துல இருந்தான். நாலு மாசம்னு நினைக்குறேன். அந்த சமயத்துலதான் எங்க அம்மாவுக்கு திடீர்னு ரொம்ப உடம்பு முடியாம போச்சு. எது அவங்கள அப்படி முடக்கி போட்டுச்சுனு அப்போ எங்க யாருக்கும் தெரியல…

   அப்புறம்தான் அம்மாவோட மாருல இருந்த கட்டிதான் அவங்க உயிரை குடிச்சிடுச்சுனு தெரிய வந்துச்சு. யாரு கண்டா… இப்படி மாருல வர சின்ன கட்டி நம்ம உசிரை காவு வாங்கும்னுட்டு? என் தம்பியோட பொறுப்பை என் தலையில கட்டிக்கிட்டு எங்க அம்மா போய்ச் சேர்ந்துருச்சு” என்று சொல்லி முடித்து கன்னங்களில் வழிந்தூற்றிய கண்ணீரை முந்தானையில் துடைத்துக் கொண்டார்.

வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் அம்மா அன்று வேதனையுடன் பேசிய அந்தக் காட்சி இன்றும் அப்படியே அவள் நினைவில் பதிந்திருந்தது.

இப்போது அதெல்லாம் ரேகாவின் நினைவில் வந்த குதித்தது. முக்கியமாக அம்மாவைப் பற்றிய ஞாபகம்…  

ஏன் வசந்தா ஆயா அப்படி ஒரு நோய் வந்து இறந்து போனார்? ஏன் யோகேஸ்வரனை வளர்க்கும் பொறுப்பு அம்மாவிடம் வந்தது? ஏன் அப்பா விட்டுச் சென்றார்?

இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைகளே கிடையாது. காட்டாற்று வெள்ளமாக அடித்துச் செல்லும் வாழ்க்கையின் ஓட்டத்தில் எதைப் பற்றியும் யோசிக்க நமக்கு நேரம் இருப்பதில்லை. நாமும் அந்த ஓட்டத்துடன் ஓட்டமாகக் கலந்து போவதைத் தவிர வேறு வழியும் இல்லை.

அவள் அம்மாவின் வாழ்க்கையும் அப்படித்தான். இப்போது அவள் வாழ்க்கை? ஆனால் அம்மா ராஜேஸ்வரி அளவுக்கு அவள் வாழ்வு துயரங்கள் நிறைந்ததாக இல்லை.  

யோகேஸ்வரனின் பொறுப்பை அம்மா எடுத்துக் கொண்டதிலிருந்து அப்பாவுடனான அவரின் உறவு முட்டலும் மோதலுமாகவே இருந்தது. அவள் பிறந்த பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று அம்மா நினைத்தார். ஆனால் அவர் போட்ட கணக்கு தப்பானது.

யாரோ பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் அப்பா ஓடிப் போய்விட்டார். போட்டோவில்தான் அப்பா என்ற உறவையே அவள் அடையாளம் கண்டுகொண்டது. 

அதன்பிறகு அம்மாவிற்கு இருக்கும் பிரச்னைகளில் அவளும் சேர்ந்து கொண்டாள். ஒன்றுக்கு மூன்று பிள்ளைகள். இதில் அம்மாவைப் பெற்ற தாத்தாவின் பொறுப்பு வேறு. அவருக்கும் சேர்த்து வடித்துக் கொட்டியது மட்டுமில்லாமல்,  வயதான காலத்தில் பீ, மூத்திரம் அள்ளிப் போடும் பொறுப்பும் அம்மாவின் தலையில்தான் விழுந்தது.

வேலைகள் அதிகமானதில் அம்மா அவளைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார். அவளும் பெரிதாக ஒன்றும் படித்துக் கிழித்து விடவில்லை. வீட்டு வேலைகளில் அம்மாவிற்கு ஒத்தாசையாக இருந்தாள். 

மறுபுறம் யோகேஷ் பத்தாம் வகுப்பு வரை முடித்துவிட்டு அவர்கள் ஊரின் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த சைக்கிள் கடையில் வேலை பார்த்தான். அண்ணன் சேகர் மட்டும் எந்த சூழ்நிலையிலும் படிப்பை நிறுத்தவில்லை. பிடிவாதமாகக் கல்லூரிக்குச் சென்றான்.

கல்லூரி கட்டணம், விடுதி கட்டணமென்று அம்மாவிடம் இருந்த கொஞ்ச நஞ்சம் நகையும் அடகுக் கடைக்குச் சென்றது. இந்த நிலையில் அவர்களுக்கு என்று எஞ்சியிருந்தது ஓட்டையும் உடைசலுமான பழைய ஓட்டு வீடு மட்டும்தான்.

மகனைப் படிக்க வைத்தாகிவிட்டது. மகளைத் தன் தம்பி யோகேஷிற்கு திருமணம் முடித்துவிட்டால் தன் கடமை முடிந்தது என்று அம்மா நினைத்திருந்த சமயத்தில்தான், யோகேஸ்வரனின் காதல் விஷயம் தெரிய வந்தது. 

“ரேகாவை நான் அப்படி நினைச்சதே இல்ல க்கா…” என்று சொல்லிவிட்டான். அதன்பிறகு அம்மாவிற்கும் அவனுக்கும் நடந்த வாக்குவாதத்தில் அவன் வீட்டை விட்டுச் சென்றுவிட்டான்.

‘யோகேஷ்தான் உன் கணவன்’ என்று அம்மாவும் மற்ற உறவினர்களும் சொல்லிச் சொல்லி அவள் மனதில் ஆசையை வளர்த்திருந்தனர். அவளின் அந்த பல ஆண்டு ஆசையை அவன் ஒரே நாளில் தரைமட்டமாகத் தகர்த்து எறிந்தான். 

அவள் அண்ணன் சேகரும் இதுதான் சமயம் என்று, “அவனை புள்ள மாதிரி வளர்த்தியே, கடைசில என்ன பண்ணிட்டான் பார்த்த இல்ல?” என்று பேசிப் பேசியே அம்மாவை நோகடித்தான்.

 அவனுக்கு ஆரம்பத்திலிருந்தே யோகேஸ்வரனைப் பிடிக்காது. தன் அம்மாவின் பாசத்தைப் பங்கு போட்டுக் கொள்ள வந்தவன் என்று அடியோடு அவனை வெறுத்தான். ஒரு வகையில் அண்ணனின் எண்ணமும் பொய்யில்லை. அம்மாவிற்கு யோகேஷின் மீது கொஞ்சம் அதிகப்படியான பாசம்தான்.

உறவுமுறையில் அவன் தம்பியாக இருந்தாலும் அவனை தன் மூத்த மகனாகத்தான் பார்த்தார். அதனால்தான் வீட்டை விட்டுச் சென்றவன் காதல் தோல்வியில் குடிகாரனாகத் திரும்பி வர, ஒரு வார்த்தை சொல்லாமல் அவனை மீண்டும் வீட்டில் சேர்த்துக் கொண்டார்.  

அதுமட்டுமில்லாமல் அவனைக் குடிபோதையிலிருந்த மீட்டெடுக்க, வீட்டுப் பத்திரத்தை அடகுவைத்து, லோடு வண்டி வாங்கி தந்தார்.

அண்ணனுக்கு இந்த விஷயம் தெரிய வந்தபோது, வீட்டில் பெரிய பிரளயமே வெடித்தது.

“யாரைக் கேட்டு இந்த வீட்டை அடமானம் வைச்சீங்க..? இது எங்க அப்பாவோட சொத்து… இதை எவனோ ஒருத்தனுக்காக அடமானம் வைப்பீங்களா?”

“என்னதான் இருந்தாலும் அவனும் உன் கூடவே வளர்ந்தவன்தானே”

“ஆனா அவன் என் கூட பொறந்தவன் இல்லையே”

“அவன் என்கூடப் பொறந்தவன். என்னை விட்டா அவனுக்கு வேற யாரு இருக்கா?” 

“அதுக்கு நீங்க உங்க அப்பன் வீட்டு சொத்தை எழுதிக் கொடுத்திருக்கணும். எங்க அப்பன் சொத்தை தூக்கி கொடுத்திருக்கக் கூடாது. அதுக்கு உங்களுக்கு உரிமையும் இல்ல” என்றான்.

அந்த வார்த்தைகளால் மனம் கலங்கி நின்றபோதும், அம்மா யோகேஸ்வரனை விட்டுக் கொடுக்கவில்லை.   

“உன் தங்கச்சியை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சுட்டா? அப்போ அவனுக்கும் இந்த வீட்டுல உரிமை இருக்கும்தானே” என்றவர் அடுத்த முகூர்த்தத்திலேயே அவர்கள் இருவருக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்.

இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்திவிட வேண்டுமென்று சேகர் எண்ணினான். அவளிடம் வந்து பேசினான். இன்னும் சொல்லப் போனால் கெஞ்சினான்.

 “அவனை நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட, உன்னை அவன் சந்தோஷமா வைச்சிருக்க மாட்டான் ரேகா. இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்காத. நான்… நான் உனக்கு நல்ல மாப்பிளையா பார்த்து கட்டி வைக்குறேன்.”

ஆனால் அவள் பிடிகொடுக்கவில்லை. இவ்வளவு காலமாக அவள் ஆசைப்பட்டுக் காத்திருந்த வாழ்க்கை அதுவாக அமையும்போது, வேண்டாமென்று அவள் ஏன் சொல்ல வேண்டும்?

அண்ணனின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் திருமணம் நல்லபடியாக முடிந்தது. ஆனால் அதன் பிறகுதான் உண்மையான பிரச்னையே ஆரம்பித்தது.

“சொத்துக்காகதான் என் தங்கச்சியை கட்டிக்கிட்ட” என்று அண்ணன் யோகேஷை குத்திக்காட்டிக் கொண்டே இருக்க, பொறுக்க முடியாமல், “உங்க சொத்தும் வேணாம் ஒன்னும் வேணாம்” என்று அவளையும் அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான் யோகேஷ். 

அவள் கருத்தரித்தபோது அம்மா துணைக்கு வந்து தங்கியிருந்த சமயத்தில், சேகர் யாரிடமும் சொல்லாமல் காதல் திருமணம் முடித்துவிட்டான்.

அதன்பிறகு ராஜேஸ்வரி நிரந்தரமாக அவள் வீட்டிலேயே வந்து தங்கிவிட்டார். அவளுடன் இருந்த வரை அவர் சந்தோஷமாகத்தான் இருந்தார். மாரடைப்பு வந்த அந்த ஒரு நாளை தவிர்த்துவிட்டால்…  

அம்மாவின் மரணத்திற்குப் பிறகு கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த அண்ணனின் உறவு மொத்தமாக அறுந்துபோனது.

தற்சமயம் அவளுக்கு இருக்கும் ஆதரவு அவள் கணவன் மட்டும்தான். அவனைச் சுற்றித்தான் அவள் உலகம் சுழல்கிறது.

ஆனால் அந்த நோட்டு புத்தகத்திலிருந்த ஈஸ்வரியின் பெயரைப் பார்த்த நொடியில் அவள் இதயமே இரண்டாகப் பிளந்துவிட்டது.

‘என்ன எழவுக்கு இன்னும் அந்த நோட்டைப் பத்திரமா பெட்டிக்குள்ள வைச்சுருக்காராம்’ என்று தனக்குதானே கேட்டு, உள்ளூரக் குமுறினாள்.

ஒருவேளை அவன் தன்னை கடமைக்கு என்றுதான் கல்யாணம் செய்து கொண்டானோ? இந்த உறவே வெறும் கட்டாயத்தில் ஏற்படுத்திக் கொண்டானோ? அவனுக்குத் தன் மீது காதல் அன்பு, இப்படி எதுவும் இருந்ததில்லையா? இந்த உறவே பொய்யோ?

இப்படியெல்லாம் யோசித்து… குழம்பி, அழுது, தவித்து…

ம்ஹும்! அவள் மனம் ஆறவே மாட்டேன் என்கிறது. அதுவும் பக்கத்து வீட்டிலேயே…

அந்தச் சமயம் சின்னவள் தூக்கத்திற்காக அழுதாள். அவளை ஆற்றுப்படுத்தி தூளியில் போட்டு ஆட்டியவளுக்கும் அழுகையாக வந்தது. ஆனால் குழந்தையைப்போல அவளால் கத்தி அழ முடியவில்லை.

வாயை மூடிக்கொண்டு அழுதாள். அந்தக் கணத்தில்  யாருமில்லாத அநாதையாகத் தன்னை உணர்ந்தாள் ரேகா.

(தொடரும்)

படைப்பாளர்

மோனிஷா

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.