எங்கே பொறுமையின் எல்லை உடையும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அங்கே புரட்சி உருவாகும். இங்கே மக்கள் புரட்சி உருவாகக் காரணமாக இருந்தவை குப்பாயமும் தோள்சீலையும்…
‘சூத்திர வர்ணத்து, நாயர் சாதிப் பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் போதும், அரச குடும்பத்தினருக்கு எதிரே வரும் போதும் மார்பை மறைக்கக் கூடாது’, ‘அவர்ணர் வர்ணத்துப் பெண்கள் எப்போதும் மார்பை மறைக்கக்கூடாது’, ‘பிராமண வர்ணத்துப் பெண்கள் எப்போதும் தங்களின் மார்பை மறைத்துக் கொள்ளலாம்’, ஆகிய பாரபட்சங்கள் நிறைந்த சட்ட விதிமுறைகளை வகுத்த பிராமணியத்தை, நடைமுறைப்படுத்திய திருவிதாங்கூரின் ராசாக்கமார் பரம்பரையின் பெருமையை என்னவென்று வர்ணிப்பது?!
பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், திருவிதாங்கூரின் எல்லைக்குள், அவர்ணர் என்ற பெயருடன் தாழ்வான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த மக்கள் அனைவருமே மேலாடை அணிய திட்டவட்டமாக மறுக்கப்பட்டனர் என்பதை அறிந்தோம். அந்த மக்கள் தடிமனான இழைகள் கொண்ட, துண்டு அல்லது முண்டுத் துணியினைத், தங்கள் முழங்காலுக்குக் கீழும், இடுப்புக்கு மேலும் வராதபடி கட்டிக் கொள்ள மட்டுமே திருவிதாங்கூர் அரசின் ராம ராஜ்ஜியம் அனுமதி அளித்தது.1*
ஆண்களின் மார்பை மறைப்பது பற்றி நமது அறிவார்ந்த சமூகம் இதுவரை பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பதால், திருவிதாங்கூர் அரசுக்கு ஆண்களின் மார்பை மறைக்க வரி வாங்க இயலாமல் போனது. எனவேதான் ஆண்களுக்கு ‘தலை வரி’ அல்லது ‘தலை விலை’ விதித்தது.
காலங்காலமாக பெண்களின் உடல் மீது கட்டி எழுப்பப்பட்டிருக்கும் கலாச்சார மற்றும் கற்புக் கட்டுப்பாடுகளை, சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட, பெருமைக்குரிய திருவிதாங்கூர் அரசாங்கம், அக்காலத்தில் அவர்ணர்களாக வரையறுக்கப்பட்ட பெண்களின் மார்பை மறைக்க மட்டும் வரி விதித்திருந்தது. அவ்வரி ‘முலக்காரம், ‘முலை வரி, ‘முலை விலை’ என்ற பெயர்களில் அறியப்பட்டது. பெண்களின் கொங்கைகளின் பருமனுக்கேற்ப திருவிதாங்கூர் அரசு அதிகாரிகள், முலை விலையை நிர்ணயிப்பார்கள். வரிவசூல் செய்ய உயர்சாதியாக வரையறுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அதிகாரிகள் செல்லமாட்டார்கள். கீழ்சாதியாக வரையறுக்கப்பட்ட சாதியை சார்ந்தவர்கள் வரி வசூல் செய்யும் அரசு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் தண்டான், பணியன், பட்டறக்காரன் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்கள்.2*
முலை விலைக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் போராளியாக, வரலாற்றின் சுவடுகளில் செய்யப்பட்ட இருட்டடிப்பையும் உடைத்தெறிந்து ஒளிர்பவள், ஈழவர் சாதியில் பிறந்த நங்கேலி. அவளே முலை வரிக்கு எதிராகக் குரலுயர்த்தி, போர்க்களம் கண்ட முதல் போராளி. அதிகாரத்துக்கு அடிபணியாத நங்கேலி, முலை வரி தர மறுத்து, தன் கொங்கைகளைத் தானே அறுத்து, வாழை இலையில் வைத்துக் கொடுத்து, தோள் சீலைப் போராட்டத்துக்கு முதல் தீப்பொறியைப் பற்ற வைத்தவள்.
‘ஆங்கிலேய அரசின் பிரதிநிதி ஒருவர், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருக்க வேண்டும்’ என்ற ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் உடன்படிக்கையின்படி, கர்னல் மெக்காலே பொ.ஆ.1800-ம் ஆண்டு திருவிதாங்கூரின் ஆங்கிலேய அரசு ஆளுநராகப் பொறுப்பேற்றார். கிறிஸ்தவ மதபோதகர் ரிங்கல்தொபே 1806-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவிதாங்கூரின் மயிலாடி ஊருக்கு வந்தார். 1809-ம் ஆண்டு மார்ச் மாதம் முத்துக்குட்டி பிறந்தார். இந்த ஆண்டு வித்தியாசக் குறிப்புகளை, இந்நேரத்தில் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சம அளவில் இருப்பதால், இந்துத்துவ அரசியல் இந்து – கிறிஸ்தவப் பிரிவினைவாத உணர்வை மக்கள் மனதில் விதைத்துக் கொண்டிருப்பதை, மண்டைக்காட்டு கலவரம் முதலான வரலாறுகள் மூலம் அறியலாம்.
கிறிஸ்தவ மதவெறி கொண்ட ஒரு சிலரோ, ‘ஏசு கிறிஸ்துவின் போதனைகளைப் பிரச்சாரம் செய்கிறோம்’ என்ற போர்வையில், மதமாற்றத் திணிப்பை செய்து வருவதையும் சில இடங்களில் காண முடிகிறது. மதவெறி எந்த மதத்தைப் பிடித்தாலும் ஆபத்துதான்! சமீபத்தில் இந்துவாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்ற தோழி ஒருத்தியுடன் அய்யா வைகுண்டர் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, “அய்யாதானே தோள்சீலை போடவும், நாடார் மக்களுக்காகவும் மொதல்ல போராடிருக்காரு. அதுக்குப் பொறவுதான, கிறிஸ்தவர்கள் வந்துருக்காங்க”, என்றாள் ஆதங்கமாக! அத்தோழியைக் குறை சொல்வதற்கில்லை. இந்து மதப்பற்றின் போர்வைக்குள், இந்துத்துவவாதிகளால் அவர்களுக்கு போதிக்கப்படும் வரலாற்று திரிபுவாதங்கள்தான், இது போன்ற தவறான புரிதல்கள்.
கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய, ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு குப்பாயம் எனப்படும் ரவிக்கை (ஜெம்பர்) தைத்துக் கொடுத்து, தோள்சீலைக் கலகத்துக்கு வழிவகுத்த ரிங்கல்தோபே (Rev. William Tobias Ringeltaube) திருவிதாங்கூருக்கு வந்த 1806-ம் ஆண்டிலிருந்து மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் அய்யா வைகுண்டர் பிறந்தார். அதாவது அய்யா வைகுண்டர் பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு 24 ஆண்டுகளுக்கு முன்பாகவே, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வரிவிலக்கு, கூலியில்லாத ஊழிய மறுப்பு (அடிமை முறை மறுப்பு) மற்றும் பெண்களின் மார்பை மறைக்கும் உரிமைக்கான போராட்டம் போன்றவற்றை ரிங்கல்தோபே தொடங்கி வைத்துவிட்டார் என்பதே வரலாற்று நிதர்சனம்.
நான் படித்தறிந்த வரையில் நேர்மையானவராக தென்படுகிறார் ரிங்கல்தொபே. ரிங்கல்தொபேயின் நேர்மைக்கு உதாரணமாக ஒரு நிகழ்வை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
1810-ம் ஆண்டு கர்னல் மெக்காலே பதவி ஓய்வு பெற்று, கர்னல் மன்றோ திருவிதாங்கூரின் ஆங்கிலேயக் கவர்னராக பொறுப்பேற்றார். அதிகாரி மாறினாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வரி விதிப்புக் கொடுமைகளும் அடிமை முறை கொடுமைகளும் மாறவில்லை. அதே 1810-ம் ஆண்டில் கிட்டத்தட்ட ஐயாயிரம் (5000) சாணார்கள், ரிங்கல்தொபேயின் ஆலய சபையில் தங்களை இணைத்துக் கொண்டு, கிறிஸ்தவ மதத்திற்கு மாற விரும்புவதாக, ரிங்கல்தொபேயிடம் கூறினார்கள். அவர்கள் மதம் மாற விரும்புவதன் காரணத்தை ரிங்கல்தொபே விசாரித்தார். தங்கள் சாதியின் மீது திருவிதாங்கூர் அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளிலிருந்தும் கொடுமையான வரிகளிலிருந்தும் தப்பிக்கவே, தாங்கள் மதம் மாற விரும்பியதாக அந்த சாணார் மக்கள் கூறினர்.

‘ஏசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டு கிறிஸ்தவத்தை ஏற்க வேண்டுமேயன்றி, நமது பொருளாதார நிர்பந்தங்களுக்காகவும் சுயநலத்துக்காகவும் மதம் மாறக்கூடாது’, என்று அந்த சாணார் (நாடார்) சாதி மக்களுக்கு அறிவுரை சொல்லி, அந்த ஐயாயிரம் சாணாரின மக்களின் மத மாற்றத்தைத் தடுத்து நிறுத்தினார் ரிங்கல்தொபே. இந்நிகழ்வினை 1813-ம் ஆண்டு கர்னல் மன்றோவிற்கு அனுப்பிய தனது அறிக்கையில் ரிங்கல்தொபே பதிவு செய்துள்ளார்.3*
ஆக, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மக்களின் மீது, சாதியக்கட்டுப்பாட்டின் அடிப்படையில், விதிக்கப்பட்டிருந்த வரிச்சுமைகளிலிருந்தும், ‘அடிமை ஊழியம்’ முறையிலிருந்தும் அவர்களை ரிங்கல்தொபே மீட்க முயற்சி செய்துள்ளார் என்பது தெரிகிறது. கிறிஸ்தவ மதத்தின் கடவுளாகிய யேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கையும் பக்தியும் கொண்டவர்களை மட்டுமே ரிங்கல்தொபே, தன் காலத்தில் மதம் மாற்றியிருக்கிறார் என்பதும் உறுதியாகிறது.
1814-ம் ஆண்டில் நாஞ்சில் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டார்கள். இதை உணர்ந்த ரிங்கல்தொபே, கிறிஸ்தவத்திற்கு மாறிய மக்களுக்கு, அவர்களின் சாதியின் பெயரால் விதிக்கப்பட்டிருந்த வரிகளில் இருந்து விலக்கு அளிக்கும்படி, அன்றைய ஆங்கிலேய கவர்னர், கர்னல் மன்றோவிடம் விண்ணப்பித்து, ஒரு வருடத்துக்கு வரி விலக்கைப் பெற்றுத் தந்தார். 1813-ம் ஆண்டு தனது நண்பர்களிடம் நிதி உதவிபெற்று, தென்திருவிதாங்கூரின் மக்களுக்கு கிணறு மற்றும் குளம் வெட்டிக் கொடுத்துள்ளார்.4* அக்காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் (சாணார்), பொதுக்கிணறு மற்றும் பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்க!
அவ்வாறாக ரிங்கல்தொபே செய்த பல உதவிகளில் ஒன்றுதான், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய, சாணார்( நாடார்) சாதிப் பெண்களுக்கு, மார்பை மறைக்க குப்பாயம் தைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்தது. இதனைத் தொடர்ந்து, மிஷன் சொசைட்டியைச் சேர்ந்த மதபோதகர்களின் மனைவிமார்கள், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய, சாணார் (நாடார்) பெண்களுக்கு, தொய்வான மேல்சட்டையை வடிவமைத்துக் கொடுத்தனர்.
இவ்விடத்தில் ரிங்கல்தொபே ஏன் ஒடுக்கப்பட்ட எல்லா சாதிப் பெண்களுக்கும் குப்பாயம் கொடுக்காமல், சாணார் சாதிப் பெண்களுக்கு மட்டும் குப்பாயம் கொடுத்தார் என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. ரிங்கல்தொபே தனது வாழ்நாளில் தாமரைக்குளம், புத்தளம், ஈத்தாமொழி, ஜேம்ஸ் டவுண், ஆதிக்காடு, கோயில்விளை ஆகிய ஊர்களில் ஆறு கிறிஸ்தவ சபைகளை நிறுவியுள்ளார். இந்த ஆறு கிறிஸ்தவ சபைகளும் இருக்கும் ஊர்ப்பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மை மக்கள், சாணார் (நாடார்), பறையர் ஆகிய சாதியை சார்ந்த மக்களாவர். இந்த ஆறு கிறிஸ்தவ சபைகளுக்கு வந்த பெண்களுக்குத்தான் ரிங்கல்தொபே குப்பாயம் தைத்துக் கொடுக்க உதவியிருப்பார் அல்லவா? எனவேதான் பெரும்பாலான சாணார் (நாடார்) சாதிப் பெண்களும், குறிப்பிட்ட அளவிலான பறையர் சாதிப் பெண்களும் குப்பாயம் அணியத் தொடங்கியிருப்பார்கள். இதனால்தான் தோள்சீலைப் புரட்சி செய்தவர்கள் ‘சாணார்( நாடார்) சாதியினர்’ என்பது எனது ஆய்வின் முடிவு.
கிறிஸ்தவ சாணார் (நாடார்) பெண்கள் குப்பாயம் அணிந்ததால், தங்கள் மரியாதையும் கௌரவமும் அழிந்து விட்டதாகக் கற்பனை செய்து கொண்ட நாயர், வெள்ளாளர் முதலான, ஆதிக்க சாதியினர், “கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டால் கீழ் சாதி என்றில்லாமல் போகுமா?” என்று பொருமினார்கள். பொதுவிடங்களில் பெண்களின் மேலாடைகளைக் கிழித்து கலவரத்தில் ஈடுபட்டார்கள். பார்ப்பனர்கள் கலவரக்காரர்களுக்கு ஆதரவளித்தனர். இந்த வன்கொடுமைகளை பார்த்த ரிங்கல்தொபே, கர்னல் மன்றோவிடம், ஆதிக்க சாதியினரிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு வேண்டி வழக்குப்பதிவு செய்தார்.5*

கலவர வழக்குகளை விசாரித்த கர்னல் மன்றோ, 1812-ம் ஆண்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பெண்கள், வெளிநாட்டுக் கிறிஸ்தவப் பெண்களைப் போல், குப்பாயம் அணிவதற்கான உரிமையை சட்டப்பூர்வமாக வழங்கினார். இதற்கான சுற்றறிக்கை 1814-ம் ஆண்டு மே மாதம் வழங்கப்பட்டது.
1806-ம் ஆண்டு முதலே கிறிஸ்தவச் சாணார் பெண்கள் குப்பாயம் அணிகின்றனர். எனில் கர்னல் மெக்காலே கவர்னராக இருக்கும்போதே ரிங்கல்தொபே ஆதிக்க சாதியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சி செய்திருப்பார் அல்லவா? ஆனால் கர்னல் மன்றோ கவர்னராக பொறுப்பேற்று (1810) இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1812-ம் ஆண்டில்தான், கிறிஸ்தவச் சாணார் பெண்கள் குப்பாயம் அணியும் உரிமை சட்டப்படி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்தும் அவ்வுரிமைக்கான சுற்றறிக்கை இரண்டாண்டுகள் கடந்து 1814-ம் ஆண்டுதான் வெளியாகியுள்ளது என்பதை கவனிக்க! இந்த தாமதப்போக்கானது கிறிஸ்தவச் சாணார் பெண்கள் குப்பாயம் அணிவதை விரும்பாத ஆதிக்க சாதியினரின் கடினமான எதிர்ப்பையே காட்டுகிறது.
இன்றைய பிஜேபி அரசு கீழடி ஆய்வறிக்கையை சட்டப்பூர்வமாக வெளியிடத் தயங்குவதைப் போல், அன்றைய திருவிதாங்கூரின் வர்ணாசிரம தர்மம், கலனல் மன்றோவின் உத்தரவை சட்டப்படி நிறைவேற்றத் தயங்கியுள்ளது போலும்!
1814-ம் ஆண்டு, கர்னல் மன்றோவின் ஆய்வறிக்கையில் கர்னல் மன்றோ கூறியிருப்பதாவது-
‘சிரியன் கிறிஸ்தவர்கள், முஸ்லிம் சமூகத்தின் ஒரு வகுப்பினரான மாப்ளா சாதியினர், போன்றோரும், பிறரும் அணிவதைப் போன்ற, பருமனான இழைகளைக் கொண்ட துணியாலான ரவிக்கைகளை (குப்பாயம்) கிறிஸ்தவச் சாணார், கிறிஸ்தவப் பறையர் முதலான கிறிஸ்தவ மதம் மாறிய அனைத்து சாதிப் பெண்களும் அணிந்து கொள்ளலாம். ஆனால் உயர்சாதி இந்துக்களைப் போன்று உடை அணியக்கூடாது’.6*
இது குப்பாயம் அணியும் போராட்டத்தின் முடிவாகும்.
இந்த முடிவிலிருந்து, முதல் தோள்சீலைப் போராட்டம் தொடங்கியது. கர்னல் மன்றோவின் ஆய்வறிக்கை, கிறிஸ்தவச் சாணார் பெண்களுக்கு, பொதுவிடங்களில் ரவிக்கை அணிந்து செல்லும் தைரியத்தைத் தந்தது. குப்பாயம் என்பது வெளிநாட்டுக் கிறிஸ்தவப் பெண்கள் அணியும் ரவிக்கை போன்ற ஓர் உடையாகும். தமிழ்ச்சமூகத்தில் பிறந்து வளர்ந்த பெண்களுக்கு, இம்மண்ணின் பாரம்பரிய உடையான சேலையை அணிவதற்கு ஆசை வருவது இயல்பான ஒன்றே. அவ்வாறு ஆசை கொண்ட கிறிஸ்தவச் சாணார் (நாடார்) பெண்கள், குப்பாயம் அணிவதைத் தொடர்ந்து, தோளின் மீது ‘முண்டு’ அணியத் தொடங்கினார்கள். சிலர் சேலையும் உடுத்தத் தொடங்கினார்கள். சாணார் சாதிப் பெண்கள், தங்கள் குப்பாயத்தின் மேல் உடுத்திய முண்டும், சேலைத் துண்டும் ஆதிக்க சாதியினரின் பொறாமையையும் எரிச்சலையும் கோபத்தையும் தூண்டியது. நாயர் முதலான ஆதிக்க சாதியினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டனர். தங்கள் சாதிக் கட்டுப்பாடுகளை சிதைத்து விட்டதாகக் கருதிய பார்ப்பனர்கள், வன்முறையாளர்களுக்கு ஆதரவு தந்தனர்.7*
1814 முதல் 1822 வரை, ஆதிக்க சாதியினருக்கும் சாணார் சாதியினருக்கும் இடையே, அங்கங்கே, அவ்வப்போது புகைந்து கொண்டிருந்த பகை, 1822-ம் ஆண்டு உச்சத்தை அடைந்தது. 1822-ம் ஆண்டு மே மாதம், சாணார் (நாடார்) சாதிப் பெண்கள் நேர்த்தியாக சேலையும் தாவணியும் உடுத்தியதைக் கண்டு நாயர் சமூகத்தினர் ஆத்திரமடைந்தனர். ‘நாயர் சாதிப்பெண்களைப் போல் உடையணிய சாணார் பெண்களுக்கு உரிமையில்லை’ என்ற பார்ப்பனியக் கருத்தை நம்பிக் கொண்டிருந்த நாயர் சமூகத்தினர், சாணார் சாதியினருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். சந்தைகளிலும், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு செல்லும் வழிப்பாதைகளிலும், ரவிக்கை மற்றும் சேலை அணிந்து வந்த கிறிஸ்தவச் சாணார் பெண்களை சூத்திரர்கள் என்றழைக்கப்பட்ட நாயர் முதலான ஆதிக்க சாதியினர் கேலி செய்து, அவர்களின் மேலாடையைக் கிழித்து, வன்முறையில் ஈடுபட்டனர். இது போன்ற வன்முறை செயல்களுக்கு சாணார் முதலான ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் எதிர்வினை ஆற்றவே, கலவரங்கள் வெடித்தன.
அப்போது பத்மநாதபுரம் அரண்மனையில் நீதிமன்றம் இயங்கியது. 1823-ம் ஆண்டு ‘புறச்சமயத்தில் (கிறிஸ்தவத்தில்)’ சேர்ந்து விட்டதைக் காரணம் காட்டி, சாணார்கள் கள்ளிறக்க வரி செலுத்தவில்லை என்றும், கிறிஸ்தவச் சாணார் பெண்கள் மேலாடை அணிந்ததற்குரிய வரி செலுத்தவில்லை என்றும், ஆதிக்க சாதியினர்கள் பலரும் பத்மநாதபுரம் நீதிமன்றத்தில் புகார்கள் செய்தனர். அப்போது நாகர்கோயில் கிறிஸ்தவ மிஷனரியின் தலைமைப் பொறுப்பில் இருந்த சார்லஸ் மீட்டை நீதிமன்றம் விசாரித்தது. அவர் அப்போதைய ஆளுநரிடம், இப்பிரச்னைக்குத் தீர்வு வழங்குமாறு வேண்டினார்.

5-5-1823-ம் தேதி கிறிஸ்தவப் பெண்கள் மேலாடை அணியலாம் என்று தீர்ப்பு வந்தது. இது முதல் கட்ட தோள்சீலைப் போராட்டத்தின் முடிவாகும். இந்த முடிவிலிருந்து இரண்டாம், தோள்சீலைப் போராட்டம் தொடங்கியது.
வாசகர்கள் ஒன்றை நினைவில் கொள்க! இதுவரையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சாணார் முதலான ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே தோள்சீலை அணியும் உரிமையை பெற்றுள்ளனர். கிறிஸ்தவ மதத்திற்கு மாறாத, அவர்ணர் என்ற அடையாளத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு மேலாடை அணியும் உரிமை வழங்கப்படவில்லை. இந்நிகழ்வுகள் நடைபெறும்போது அய்யா வைகுண்டர் என்னும் முத்துக்குட்டியின் வயது 14 மட்டுமே!
1823-ம் ஆண்டு வந்த தீர்ப்புக்குப் பிறகு, கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய சாணார் (நாடார்) மக்கள் தோள்சீலை அணிய உரிமை பெற்றதுடன், கல்வியிலும் தொழிலிலும் முன்னேற்றம் அடையத் தொடங்கினர். படிப்பறிவின் மூலம் அரசுப் பணிகளிலும் அமரத் தொடங்கினார்கள். இந்த மாற்றங்களை பார்த்துக் கொண்டிருந்த பெரும்பான்மை சாணார் சமூக மக்களும், பிற ஒடுக்கப்பட்ட சாதி மக்களும், கொத்துக் கொத்தாக கிறிஸ்தவ மதத்திற்கு மாறத் தொடங்கினார்கள்.
அடிமைகளாக, அழுக்காடை அணிந்துத் திரிந்த ஒடுக்கப்பட்ட மக்கள், நாகரீகம் அடைவதைக் கண்ட ஆதிக்க சாதியினர் கொதித்தெழுந்து, சட்டத்தை மீறி கொலைவெறித் தாக்குதல்களில் ஈடுபட்டனர். கிறிஸ்தவச் சாணார்கள் சட்டத்தை மீறி செயல்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்குகள் பல தொடுத்தனர்.8*
தோள்சீலைப் போராட்டம் தொடரும்…
படைப்பாளர்
சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.
சான்றுகள்
- நாடார் வரலாறு கருப்பா காவியா? தி.லஜபதி ராய், ஐந்தாம் பதிப்பு, பக்கம் எண்: 48
- மகாத்மா அய்யன் காளி கேரளத்தின் முதல் தலித் போராளி, நிர்மால்யா, காலச்சுவடு பதிப்பகம், முதல் பதிப்பு 2020, பக்கம் எண் : 53.
- A HUNDRED YEARS IN TRAVANCORE 1806 – 1906, Rev.I.H. HACKER(LONDON MISSIONARY SOCIETY), EDITION: 1908, PAGE NO: 27.
- A HUNDRED YEARS IN TRAVANCORE 1806 – 1906, Rev.I.H. HACKER(LONDON MISSIONARY SOCIETY), EDITION: 1908, PAGE NO: 27.
- திருவிதாங்கூர் அரசாட்சி (கி.பி 1800 முதல் 1956 வரையிலும்) சமூகநீதியும் விடுதலையும், முனைவர் ஜெ.விஜயரெத்னகுமார்ph.d, முதல் பதிப்பு 2022, பக்கம் எண்: 116. (refered from: C.M AGUR, CHURCH HISTORY OF TRAVANCORE PAGE NO: 826).
- ‘தமிழக நாடார்கள், ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு’ இராபர்ட் எல். ஹார்டுகிரேவ், தமிழாக்கம்: எஸ்.டி. ஜெயபாண்டியன், முதல் பதிப்பு-2019, பக்கம் எண்: 79. & THE TRAVANCORE STATE MANUAL, V.NAGAM AIYA, VOL I, FIRST EDITION: 1906, PAGE NO: 525.
- THE TRAVANCORE STATE MANUAL, V.NAGAM AIYA, VOL I, FIRST EDITION: 1906, PAGE NO: 525.
- ‘தமிழக நாடார்கள், ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு’ இராபர்ட் எல். ஹார்டுகிரேவ், தமிழாக்கம்: எஸ்.டி. ஜெயபாண்டியன், முதல் பதிப்பு-2019, பக்கம் எண்: 80 & திருவிதாங்கூர் அரசாட்சி(கி.பி 1800 முதல் 1956 வரையிலும்) சமூகநீதியும் விடுதலையும், முனைவர் ஜெ.விஜயரெத்னகுமார்ph.d, முதல் பதிப்பு 2022, பக்கம் எண்: 119