கிழக்கிந்திய நிறுவனம் (East India Company) 1600-ம் ஆண்டின் இறுதிநாள் லண்டனில் தொடங்கப்பட்டது. நிறுவனத்திற்கு முகலாயப் பேரரசால் சலுகைகள் வழங்கப்பட்டன.

சூரத் கோரமண்டல் கரை எனப்பட்ட கிழக்குக் கரை போன்றவற்றில் நிறுவனம் காலூன்றியது. வணிகம் நடைபெற்றது. இங்கிலாந்து மன்னரும் இவர்களுக்கு, வணிகம் செய்யுமிடங்களில்  கோட்டைகளைப் பிடிக்க, அரசமைக்க என உரிமை கொடுத்தார். 1680-ம் ஆண்டு உள்ளூர் மக்களைக் கொண்டதாக அமைந்த படைகளை நிறுவனம் உருவாக்கியது. 

மேலும் தங்கள் வணிகத்தில் சலுகைகள் பெரும் நோக்கில், கிழக்கிந்திய நிறுவனம் பேச்சுவார்த்தைகள் சிலவற்றை வங்காள முகலாயருடன் நவாபுடன் நடத்தியிருக்கிறது. ஆனால் அவை அவர்களுக்குத் தோல்வியில் முடிந்தன.  நவாப் திறையை 2% லிருந்து 3.5% ஆக உயர்த்த வேறு செய்திருக்கிறார். இதனால் ஆங்கிலோ – முகலாயப் போர் அல்லது சைல்ட்  போர் 1686–1690 காலகட்டத்தில் நடைபெற்றது. கிழக்கிந்திய நிறுவனம் சார்பாக சர் ஹொசையா சைல்டு (Sir Josiah Child) என்பவர் வழிநடத்திய போர். இதுவே இந்தியத் துணைக் கண்டத்தில் நடந்த முதல் ஆங்கிலோ – இந்தியப் போர்.

ஔரங்கசீப் கிழக்கிந்திய நிறுவனத்தின் தொழில் நடத்திய இடங்களையும் கைப்பற்றினார். பலரைக் கைதும் செய்தார். நிறுவனம் மன்னிப்பு கேட்டது. இழப்பீடு கொடுத்தது. வணிகச் சலுகைகளை மீண்டும் பெற்றது. 

ஆங்கிலோ-முகலாயப் போருக்குப் பிறகு மதராஸ் (சென்னை), கல்கத்தா மற்றும் பம்பாய் ஆகிய மூன்று முக்கிய நிலையங்களில் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் வலுவான இருப்பைக் கொண்டிருந்தது.

வங்காளம், முகலாயப் பேரரசின் மிகப்பெரிய பிரிவாக இருந்தது. 1751-ம் ஆண்டில், வங்காளம் மராட்டியர்களுக்குக் கப்பம் கட்டும் பகுதியாக மாறியது. இக்காலகட்டத்தில் பிரெஞ்சுக்காரர்கள் வங்காளத்தில் சந்தர்நகர் மற்றும் புதுச்சேரியில் வலுவாக இருந்தனர். தெற்கில் ஆற்காட்டு நவாபுகளை வைத்து இரு நிறுவனங்களும் உரிமைப் போட்டிகளை நடத்தின. 

1757-ம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்திற்கும், வங்காளத்தின் நவாப் சிராஜ் உத் தவ்லாவிற்கும் இடையே பிளாசி போர் (Battle of Plassey) நடைபெற்றது. கிழக்கிந்திய நிறுவனம் வெற்றி பெற்று வங்காளத்தைக் கைப்பற்றியது. இவ்வெற்றி இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தோன்ற வழிவகுத்தது.

1764ம் ஆண்டு நடைபெற்ற பக்சர் போர் (Battle of Buxar) மூலம் கிழக்கிந்திய நிறுவனம் முகலாயப் பேரரசர், அயோத்தி நவாப், வங்காள நவாப் ஆகியோரின் கூட்டணிப் படைகளை வென்றது. தொடர்ந்து நடைபெற்றப் பல போர்கள் நிறுவனத்திற்குச் சாதகமாக முடிந்தன. துணைப்படைத் திட்டத்தின் (Subsidiary alliance) கீழ் மீதமிருந்த இந்திய அரசர்களின் அதிகாரத்தை குறைத்து, பாதுகாப்பைக் கொடுத்து என போச்சுக்கீசியர் மற்றும் பிரெஞ்சுக்காரர் வசமிருந்த சிறு பகுதி தவிர, இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே நேரடி அல்லது மறைமுகமாக கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியின் கீழ் வந்தது.

1957 ஏற்பட்ட சிப்பாய்க் கிளர்ச்சிக்குப்பின், 1858-ம் ஆண்டில் இங்கிலாந்து அரசு நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது.

கிழக்கிந்திய நிறுவன அஞ்சல் தலைகள் 

1764 -1766 ஆண்டுகளுக்கிடையில் மும்பை, சென்னை மற்றும் கல்கத்தா (கொல்கத்தா) நகரங்களில் அஞ்சல் நிலையங்களை கிழக்கிந்திய நிறுவனம் நிறுவியது. முதல் இந்திய அஞ்சல்தலை, தி சிந்தே டாக் (The Scinde Dawk) 1852 இல் வெளியிடப்பட்டது. சிண்டில் என்ற சொல் சிந்து என்ற சொல்லில் இருந்து வந்தது. இந்தியில் டாக் என்றால் அஞ்சல். கிழக்கிந்திய கம்பெனி முழுவதும் பயன்படுத்தப்பட்ட முதல் தபால்தலை இதுவாகும்; இந்தியா, பர்மா, நீரிணைக் குடியிருப்புகள் (the Straits Settlements) போன்ற கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த பல இடங்களிலும் இந்திய அஞ்சல்தலைகள்தான் அந்தந்த பகுதிகளில் அஞ்சல் தலைகள் வெளியிடும் வரைப் பயன்பட்டன. 

இவை Victorian (1837-1901) அஞ்சல் தலைகள்:

Service அஞ்சல்தலைகள்

On Her Majesty அஞ்சல்தலைகள்

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.