இந்தியன் எக்ஸ்பிரஸ்
வள்ளியின் செல்வன் 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம்.
கொத்தமங்கலம் சுப்பு எழுதி இயக்கிய இத்திரைப்படத்தை யுனைடெட் ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிக்க ஜெமினி ஸ்டுடியோஸ் விநியோகித்துள்ளது. பாடல்களையும் கொத்தமங்கலம் சுப்பு தான் எழுதியிருக்கிறார். திரைப்படத்திற்கான இசையை P. S. அனந்தராமன் வழங்கியிருக்கிறார்.
லலிதா வத்சலா
சஹஸ்ரநாமம் மனோகரம்
சுந்தரி பாய் வள்ளி
எஸ்.வி.சுப்பையா கந்தன்
வனஜா லீலா
ஆர்.கணேசன் மூர்த்தி
டி. எஸ். துரைராஜ் சிரஸ்தார் துரைசாமி
பி.எஸ்.ஞானம் மனோகரம் சகோதரி
மாஸ்டர் முரளி ராஜு
மாஸ்டர் பாபுஜி பாலுவாக
மனோகரம் ஒரு பணக்காரர். அவர் மனைவி வத்சலா. இவர்களுக்குக் குழந்தை இல்லாததால், மனோகரத்திற்கு இரண்டாம் திருமணத்திற்கான ஏற்பாடு நடைபெறுகிறது. வத்சலா அழுகிறார். அந்தக் காலகட்டத்தில் இவர்களின் வேலைக்காரர் கந்தனின் மனைவி வள்ளி கருவுருகிறார். அவர் தனது மனைவியைச் சமாதானப்படுத்தி, யாருக்கும் தெரியாமல் வத்சலாவிற்குக் கொடுக்க ஒப்புக் கொள்கிறார். இது வத்சலாவின் தம்பி மூர்த்திக்கும் தெரிகிறது.
மூர்த்தியும் திருமணமானவர் தான். ஆண்டுக்கணக்கில் மாமனார் வீட்டில் வாழ்ந்தவர். மூர்த்தி மற்றும் அவரின் மனைவி லீலா இருவருக்கும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் நடனம் பாட்டு என வாழ விருப்பம். ஆனால், மாமனாரோ குழந்தை பிறந்தால், குழந்தை இல்லாத பணக்கார மனோகரனுக்கு இவர்களின் குழந்தை வாரிசாக மாறும் என கணக்குப் போடுகிறார். இதனால் கோபித்துக் கொண்டு வந்த நேரத்தில் தான் இவை அனைத்தும் நடக்கின்றன.
வத்சலா, தான் கருவுற்றிருப்பதாகவும், அம்மா வீட்டிற்குப் போவதாகவும் சொல்லிப் போய் மாதக்கணக்கில் இருந்துவிட்டுக் குழந்தையுடன் வருகிறார். வள்ளியும் உடன் வருகிறார். அவர் பால் கொடுப்பதை மாமா பார்க்க, வள்ளி இனி இங்கு வரக்கூடாது எனச் சொல்லிவிடுகிறார்கள். கந்தன், குழந்தையை வெளியில் கொண்டு செல்வதாகச் சொல்லி, மனைவியிடம் காட்டி வருகிறார். ஒரு காலகட்டத்தில் அதுவும் அவரால் முடியவில்லை. வள்ளி குழந்தைக்காக ஏங்குகிறார். பார்க்கக்கூட முடியாமல், அதே ஏக்கத்தில் இறந்தும் விடுகிறார்.
இங்கு வத்சலா உண்மையாகவே கருவுற்று ஒரு மகனைப் பெற்று எடுக்கிறார். இப்போது முதல் குழந்தையின் மீது இவருக்கு வெறுப்பு ஏற்படுகிறது. ஆனால் குழந்தைகள் இருவரும் மிகவும் அன்பாக இருக்கிறார்கள். வத்சலாவால், இதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. மூர்த்தி எவ்வளவு சொல்லியும் வத்சலா கேட்கும் மனநிலையில் இல்லை. இதனால் ஒருநாள் கந்தன், தன் மகனை அடிக்கிறார். இதைக் குடும்பத்தினர் பார்த்து விடுகிறார்கள். அவர்களுக்குத்தான் உண்மை தெரியாதே! வேலைக்காரன் ‘எங்கள் பிள்ளையை நீ அடிப்பதா’ என கண்டிக்கிறார்கள்.
மகன் துன்பப்படுவதைக் காணச் சகிக்காத கந்தன், உளநிலை பிரண்டவர் போல அலைகிறார். அக்காவும் தம்பியும் பேசிக் கொள்வதைக் கேட்டு உண்மையை அறிந்த மூத்தக் குழந்தை அப்பாவிடம் சென்று விடுகிறது.
அண்ணன் ஏக்கத்தில் தம்பி நோய்வாய்ப்படுகிறான். வத்சலா தம்பி என நினைத்துக் கணவனிடம் இது குறித்துப் பேச, கணவர் புரிந்து கொள்கிறார். கணவன் கந்தனிடம் வந்து கேட்க, கந்தன் மறுத்து விடுகிறார். பின் தன் குழந்தையால் ஒரு குழந்தை பிழைக்கும் என்ற உயரிய எண்ணத்தில் குழந்தையுடன் வருகிறார்.
நாங்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, மனநலம் குன்றிய கருவுற்ற பெண் ஒருவர், ஊரிலிருந்தார். யார் அவர்? எங்கிருந்து வந்தார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. வலி வரவே அருள் சகோதரிகள் மருத்துவமனையில் கொண்டு விட்டார்கள். என் தோழியின் அண்ணன், குழந்தை இல்லாமலிருந்தார். அவர் குழந்தையை ஏற்றுக் கொண்டார். நாங்கள் மருத்துவமனை சென்று ரோஜாக்குவியல் போன்று இருந்த அந்த ஆண் குழந்தையைச் சென்று பார்த்தோம். நிர்மல் எனப் பெயரிட்டு வளர்த்தார்கள். மறு ஆண்டே அவர்களுக்குக் குழந்தை பிறந்தது. அவன் வந்த நேரம் என மகிழ்ந்தார்கள். இருவரும் இணையாகவே வளர்ந்தார்கள். எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் அதற்கெல்லாம் விசாலமான உள்ளம் வேண்டும்.
வள்ளி என்கிற சுந்தரி பாய் தான் திரைப்படத்தின் நாயகி. அவரின் பெயரைத் தாங்கித் தான் திரைப்படத்தின் தலைப்பு இருக்கிறது. கொத்தமங்கலம் சுப்பு, தன் மனைவி சுந்தரிபாய் அவர்களுக்காகவே எழுதிய கதை எனச் சொல்லலாம். பெரும்பாலான திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்திருக்கும் இவர், இதில் நன்றாகவே நடித்து இருக்கிறார்.
எஸ்.வி.சுப்பையா என்கிற கந்தன் தான் நாயகன். திரைப்படத்தின் முழு ஓட்டத்திலும் வருபவர் அவர் தான். மிகவும் இயல்பான நடிப்பு.
லலிதா, சஹஸ்ரநாமம், ஜெமினி கணேசன், லீலாவாக வரும் வனஜா என அனைவரும் மிக இயல்பான நடிப்பைக் கொடுத்து இருக்கிறார்கள். வனஜா இவர்களில் இன்னமும் ஒரு படி மேலாகத் தெரிகிறார். இவர் வேறு படங்களில் நடித்திருக்கிறாரா எனத் தெரியவில்லை.
திரைப்படத்தில் மனம் கவருபவர்கள் என்றால் குழந்தைகள் இருவரும் தான். அவர்கள் பாடி நடிப்பதாக ஒரு பாடல் வருகிறது. அது ஒரு ரயில் பயணத்தையே கண்முன் கொண்டு வந்து விடுகிறது. குழந்தைக் குழுவினர் பாடிய பாடல் இது.
ஊதும் ஓடும் ரயில் – அது
நீளம் ஒண்ணரை மைல் -உங்கள்
ஊரில் நிற்காது மெயில்
கும்பகோணம் கும்பகோணம்
காபி சுண்டல் காலணா வடை
ஹிண்டு எக்ஸ்பிரஸ் ஆனந்த விகடன்
அபாயம் அபாயம்
அகாரணமாய் சங்கிலி இழுத்தால்
ஐம்பது ரூபாய் அபராதம்
சாம்பார் சாதம் தயிர் சாதம்
கதவில் கையை வைக்காதே நீரைச்
சேதப்படுத்தாதே துப்பு இங்கே துப்பு
டிக்கெட் டிக்கெட் டிக்கெட்
அம்மாவுக்கு அரை டிக்கெட்
அப்பாவுக்கு டிக்கெட்
எனக்கு மட்டும் முழு டிக்கெட்
அரைமணி நேரம் லேட் ஏன்
அடைச்சிருக்குது கேட்
கைகாட்டி மரமே கைகாட்டி மரமே
கையை நீ ஏன் இறக்கல்லே
காத்து மழையிலே நின்னு நின்னு
கையை சுளுக்கிக் கொண்டதோ
தண்டவாளத்தின் மேலே ஒருத்தன் தடுக்கி விழுந்தததாலே
எவனோ ஒருவன் இஸ்குரு ஆணியைப் பேத்திருப்பதாலே
எருமை ஒண்ணு கன்னுக் குட்டியை போட்டிருப்பதாலே அரைமணிநேரம் லேட்
அடைச்சிருக்குது கேட்
இன்ஜின் இன்ஜின் ஏன் பெருமூச்சு விட்டே?
எத்தனை பாரத்தை ஏத்திக்கிட்டு இழுக்கிறேன் நான் தெரியுமா?
ஆனைக்குட்டி ரெண்டு அல்சேஷன் பன்னெண்டு
பாசஞ்சர் முன்னூறு பாசுக்காரன் தொண்ணூறு
டிக்கட்டில்லா வித்தவுட்டு ட்ரையினுக்குள்ளே பதினெட்டு
இழுக்கிறேன் இழுக்கிறேன் இழுக்கிறேன்
https://www.youtube.com/watch?v=Ce76-4vXv0I
கொத்தமங்கலம் சுப்பு இயற்றி M.L.வசந்தகுமாரி, T.V.ரத்தினம் பாடிய பாடல் இது.
விளையாடும் தெய்வமடி – வீட்டில்
விளையாடும் தெய்வமடி – நமது
களைதீர மணிவாயில் கரும்பான
மழலை மொழி பழகி
விளையாடும் தெய்வமடி
நடமாடும் தெய்வமடி – மெள்ளத்
தடமாடி முந்தாணை தலைப்பைக் கையால் பற்றி
காசு பணக்காரர்களும் பெற்றோரில்லை – வைரக்
கம்மலை அணிந்தவரும் பெற்றோரில்லை
பேசும் மழலைச் செல்வம் பெற்றவர்தான் உலகில்
பெற்றோர் எனும் பெருமை பெற்றாரடி
பங்காளிச் சண்டை வரும் பிள்ளை பிறந்தால்
பாகம் பிரிக்க வேண்டும் பிள்ளை பிறந்தால்
சிங்காரம் கெட்டுவிடும் பிள்ளை பிறந்தால் – உடம்பில்
தங்காது கட்டழகு பிள்ளை பிறந்தால்
வாழையடி வாழையென வம்சம் வளரும் – பெண்ணை
மலடி யெனும் பேர் தொலையும் மனம் குளிரும்
ஏழை செல்வர் எல்லோரும் இன்பமுடனே வாழ
இது ஒன்று தான் உலகில் செல்வமடி
கச்சேரி கேட்க முடியாது – சபையில்
கச்சேரி கேட்க முடியாது – நடுவில்
கத்தாத குழந்தையே கிடையாது
இச்சையாய் வாழ முடியாது நமது
நாம் இச்சையாய் வாழ முடியாது
நமது இளமைக்குக் குழந்தையால் எந்நாளும் தீது.
சோபாவில் ஏறிவிளையாடுவான் – கையில்
ஸ்பூனிலே மருந்தெடுத்தால் ஓடுவான்
சும்மா சும்மா குதிரை மேலே ஆடுவான் – நான்
சொல்லித் தரும் பாட்டெல்லாம் பாடுவான்.
தலைசீவ நேரமிருக்காது – உனக்குத்
தாலாட்டுப் பாடவே பொழுது போதாது
பீச்சிலே வாக்கிங்கு ஏது – பிள்ளைக்கு
காச்சலும் இருமலும் வருமே தப்பாது.
உனக்கும் ஒரு பெண்குழந்தை பிறக்க வேண்டும் -அடியே
உன்னை ஓடியாட விடாமல் தடுக்கவேண்டும்
எனக்கு நீ சம்மந்தியாகி – உன்னை
எடுத்த தெல்லாம் குற்றம் நான் சொல்ல வேண்டும்.
அம்மான் மகளுக்கு ஆசைப்பட்டு
நீ ஆண் குழந்தை பெற நினைத்தாயோ ?
அம்மான் மகளுக்கு ஆசைப்பட்டு
இரண்டும் பெண்ணாய்ப் பிறந்தாலோ ?
இரண்டும் ஆணாய்ப் பிறந்தாலோ?—
நாம் என்ன செய்வோமடி ஏது செய்வோம்.
கொத்தமங்கலம் சுப்பு இயற்றி M.L.வசந்தகுமாரி பாடிய பாடல் இது.
கண்ணின் மணியே வா கற்பகமே வா வா
அன்னை கலிதீர்க்க பிறந்த ஆரமுதே வா வா
உன்னைப் பெறுவதற்கே உலகில் என்ன தவம் செய்தேன்
கன்னத்தில் முத்தமிட்டால் எனது கருத்தினில் நிக்குதடா
வாசனைத் தைலமிட்டே உனக்கு மஞ்சன நீராட்டி
மையிட்டு பொட்டிட்டுவேன் அழகில் மயங்கியே மெய்மறப்பேன்
அம்புலி காட்டிடுவேன் உனை நான் அள்ளி அணைத்திடுவேன்
தம்பி உனக்காக உயிரையும் தந்து மகிழ்வேனடா
டி.எம்.சௌந்தரராஜன் & டி.வி.ரத்தினம் பாடிய நாட்டுப் பாடல் நடனமிது. “போகாதே போகாதே என் கணவா” மற்றும் “தடுக்காதே என்னைத் தடுக்காதே” என இரு பாடல்கள் இந்தப் பாடலில் வரும் சொற்றொடர்கள் கொண்டு பின்னாளில் உருவாகியுள்ளன.
பசுவெல்லாம் குடம் குடமாய் பால் கறக்க வேணும் -இந்த
பச்சைப் பிள்ளையைப் பெத்த தாய்க்கு பால் சுரக்க வேணும்
மாரி மாரி மாதம் மூன்று மழைகள் பொழிய வேணும் -இந்த
மகராசன் பொறந்த நேரம் மண்ணு விளைய வேணும்
மண்ணைத் தொட்டா தங்கமாகணும் – நாங்க
மானத்தோடு என்றும் வாழணும்.
பஞ்சாயத்துக்கு வா புள்ளே -என்
பரிசப் பணத்தை தா புள்ளே
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி எந்தன் கோபத்தை நீ கெடுக்காதே
போகாதே போகாதே என் கணவா -இந்தப்
பொம்புளைப் பாவமும் பொல்லாது – ஐயா
தடுக்காதே என்னைத் தடுக்காதே உன்னை
தள்ளிவச்சு நான் இன்னொருத்தியை
கல்யாணம் கட்டப் போறேன்
தொட்டுத் தாலி கட்டிக்கிட்ட
சிட்டுக்குருவி என்னைவிட்டு
பட்டுக்கோட்டைக் காரக் குட்டி மீதிலே -ஆசைப்
பட்டதென்ன சொல்லு இந்தப் போதிலே
உந்தனை நான் தாலிகட்டி வந்து எட்டு வருசமாச்சு
மைந்தனும் பிறக்க வகையில்லை -கையால்
சந்தனம்
கொடுக்க வழியில்லையே
அரசமரம் சுத்தி வந்தேன், கால் நொந்தேன்
தவங் கிடந்தேன் -பத்து
ஆண்டிக்குச் சோத்தையும் போட்டேன்- மலை
ஆண்டியையும் குறி கேட்டேன் -ஒரு
ஆம்புள்ள புள்ளை பொறக்குமென்றே -நல்ல
பாம்புக்குப் புத்திலே பாலையும் ஊத்தினேன்
ஒண்ணும் பலிக்கலே மச்சான் -ஒரு
பொண்ணும் பொறக்கல்லே மச்சான்
ஒட்டு மாஞ் செடியை வாங்கி
நட்டு வச்சேன் தோட்டத்திலே
கட்டி மாம்பழம் பழுத்துத் தொங்குது – நீ
வட்டியில்லா மொதலைப் போலே நிக்கிற
மாடுமில்லே மரமுமில்லே – மச்சான்
மங்கை நானே கேடு கெட்டுப் பேச வேண்டாம் இப்போ
கவருமெண்டு சட்டம் உண்டு
டைவசு கேசு போட்டு உனக்கு
தண்டனையும் வாங்கி வைப்பேன்
கைவரிசை காட்ட வேண்டாம்- இப்ப
காலம் மாறிப் போச்சு மச்சான்
தெரிஞ்சுகிட்டேன் புரிஞ்சுக்கிட்டேன் இறைஞ்சு பேச மாட்டேன்
தேவரம்பையானாலும் திரும்பிப் பார்க்க மாட்டேன்
தாரமிருக்க இன்னொருத்தியை தாரங் கட்ட மாட்டேன்
தங்கமே உன்னை விட்டு எங்கும் போக மாட்டேன்.
உன் முகம் வாடக் கண்டால் -எனது
உள்ளம் தடுமாறும்
கண்கள் கலங்க கண்டால் எனது
கால் கை நடுங்குதடா
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
ஆயிரம் காலத்துப் பயிராய் -ராஜா
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திடுவாய்
நோயும் நொடியும் உனை அணுகாமல் -உன்
தந்தையும் தாயும் மகிழ்ந்திடவே நீ
பால்வடியும் உன் முகத்தை ஒரு தரம்
பார்த்தாலே பசி தீருமடா
பாலும் தேனும் இணையாகாது
பாப்பா உந்தன் மழலைக்கே
தொட்டு மகிழ்ந்தால் உன்னைப் பெற்றவள்
பட்ட பாடெல்லாம் மறந்திடுவாள்
கட்டியணைத்தால் ஆனந்தத்தில்
கண்ணீர் விடுவாள் களித்திடுவாள்
பத்து மாதங்கள் சுமந்தத்தைப் பாராள்
பட்டினி கிடந்ததை அவள் பாராள்
பெற்ற மகன் வாய் முத்தம் கிடைத்தால்
பேரின்பம் அது பேரின்பம்
எத்தனை பிறவிகள் எடுத்துழைத்தாலும்
பெற்றவள் கடனது தீராது
எத்தனை உறவுகள் இருந்தாலும் அது
பெற்றவள் போலே ஆகாது.
நல்லவர் என்றே பாராயோ அடா
நமனே உனக்குக் கண்ணில்லையே
தொல்லைகள் இழைத்தது போதாதோ – உயிரைத்
தூக்கியும் செல்லத் துணிந்தாயோ
புத்திர வாஞ்சையில் ஓடிவந்தாள்- அங்கே
பொல்லா நமனும் காத்திருந்தான்
இத்தரை மீது சத்தியம் காக்க
இத்தனை சோதனை ஏன் இறைவா
அன்னையின் நெஞ்சில் அடைத்துக் கிடந்த
ஆறாத் துயரே அனலாச்சே
புண்ணியவதியின் உடலம் இதனால்
புனிதமடைந்தாயே தீயே
நல்லவன் கண்ணீர் தரையில் விழுந்தால்
நானிலமே நீ நடுங்காயோ
நல்லது செய்தாரை அல்லலுக்காளாக்கி
நடுத்தெருவில் விட்டு நகைப்பாயோ
காலனை உதைத்த கதை பொய்யோ- அந்தக்
கால்கள் எங்கே போயினவோ
காளியுடன் நடனம் ஆடும் வேளையோ
கருணைச் சிவனே மறந்தாயோ
தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.