ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே?
நாம் சுயநேசம் தொடரின் கடைசி அத்தியாயத்தில் இருக்கிறோம். சுயநேசத்தின் பல அம்சங்களை விவாதித்த பின் சுயநேசத்திற்கும், சுயநலத்திற்குமான வித்தியாசம் புலப்பட்டிருக்கும். தன்னை நேசிப்பதன் மூலம் மட்டுமே அடுத்தவரை முழுமையாக நேசிக்க முடியும் என்று புரிந்திருக்கும். எப்போதும் நிரம்பி உள்ள பாத்திரத்தில் இருந்து மட்டுமே மற்றொரு பாத்திரத்திற்கு நீர் ஊற்ற முடியும். உங்களை நீங்கள் வஞ்சித்து மற்றவருக்கு நல்லது செய்ய முடியாது. இது புரிந்தால் வாழ்வே வசந்தம்தான்!
நாம் ‘உன்னை அறிந்தால்’ மற்றும் ‘உணர்வு சூழ் உலகம்’ ஆகிய புத்தகங்களில் பேசிய விஷயம்தான். வாழ்வு ஒரு முடிவிலா விளையாட்டு. இதில் வெற்றியும் தோல்வியும் நிரந்தரமில்லை. யாரையும் ஜெயிக்க வேண்டிய நிர்பந்தமும் இல்லை. நாம் இந்த உலகில் பிறந்தது நம் வாழ்க்கையை வாழ மட்டுமே. அதில் ஜெயிக்க வேண்டியது நம்மை மட்டுமே. நேற்றைய என்னைவிட இன்றைய நான் என்னை மேம்படுத்திக் கொண்டிருந்தாலே வெற்றிதான். இதற்கு சுய நேசம் நிச்சயம் துணை வரும். நம்மை நாம் ரசித்து காதலிக்கும் போதுதான், நம் குறைகளைக் களைந்து நம்மை இன்னும் மேம்பட்டவராக்க முடியும். நம்மை நாம் மதிக்கும் போதுதான், அடுத்த மனிதருக்கும் நம்மைப் போன்ற உணர்வுகள் இருக்கும், அவை மதிக்கபட வேண்டியவை என்று புரியும். நம்முடன் நமது உறவு நன்றாக இருக்கும் போது உலகமே அழகாகவும் ரசிக்கக்கூடியதாகவும் தெரியும். சுற்றி உள்ள மனிதர்களின் குறை விடுத்து நல்லவற்றைப் பார்க்கத் தோன்றும். ஆக மொத்தம் வாழ்வு இனிமையாகும்.
சுய நேசத்தைக் கைக்கொள்ளலாமா தோழமைகளே?
படைப்பாளர்:

யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.