பொதுவாகப் பெண்கள் தனியாகப் பயணம் செய்வதில் பெரும் தயக்கம் உள்ளது. எங்கே செல்ல வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு துணையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் தனியாகச் சென்று பாருங்கள். பின்னர் அதுவே பழகிவிடும். பத்து நாட்கள் நான் தனியாக ஆம்ஸ்டர்டாம் சென்ற பயண அனுபங்கள் உங்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
வெப்பநிலை 19 டிகிரி என்று காட்டுகிறது. இரவு எட்டு மணிக்குச் சுள்ளென்று முகத்தில் சூரிய ஒளி அடிக்கத் தன்னந்தனியாக ஆம்ஸ்டர்டாம் ஸ்கிபோல் ஏர்போர்ட்டில் நின்று கொண்டிருந்தேன். இதுவே ஓர் ஆணாக இருந்தால் இப்படித் தனியாக நின்றுகொண்டிருப்பதைக் குறிப்பிட்டு எழுதுவார்களா என்று யோசிக்கிறேன். அவர்களுக்குத் தனியாகப் பயணம் செய்வதில் எந்தத் தயக்கமும் இருப்பதில்லை. பெண்கள் மட்டும் ஏன் தனியாகப் பயணம் செய்வதில் பெருமை கொள்ள வேண்டும்? நான் பயணிக்கிறேன், அவ்வளவுதான். என்னைச் சுற்றி அத்தனை பேரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாரும் மனிதர்கள்தான். அப்புறம் தனியே என்று எப்படிச் சொல்ல முடியும்?

இரவு எட்டு மணிக்கு விமானம் தரையிறங்கும் போது எடுத்த ஒளிப்படம்
ஆம்ஸ்டர்டாம் ஸ்கிபோல் ஏர்போர்ட்டில் இருந்து நான் செல்ல வேண்டிய ஸ்லோடேர்டிக் ஸ்டேஷனுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று கூகிளில் வழி பார்த்து, அதை ஒளிப்படமாகவும் பதிவு செய்து வைத்திருந்தேன். அதற்கும் மேலே யூ டியூபில் பலர் பதிவேற்றம் செய்திருக்கும் வீடியோக்களையும் பார்த்துவிட்டு வந்திருந்தாலும், சரியாகத் தவறான பிளாட்பார்ம்க்குப் போய் நின்றேன். நம் வாயில் இருக்கிறது வழி என்பார்கள். அங்கே காத்திருந்தவர்களிடம் கேட்டபோது, இந்த பிளாட்பார்மில் வரும் ட்ரெயின் ஆம்ஸ்டர்டாம் சென்ட்ரல் போகாது என்றார்கள். மீண்டும் லிப்ட்டில் ஏறி மேலே வந்து அங்கே இருந்த காவலரிடம் வழி கேட்டு, சரியான பிளாட்பார்ம்க்குப் போனதுடன் கதை முடியவில்லை. நான் செல்ல வேண்டிய இடம் ஸ்லோடேர்டிக் ஸ்டேஷன். அது ஆம்ஸ்டர்டாம் சென்ட்ரலுக்கு முன்னால் உள்ள ஸ்டேஷன். இதையெல்லாம் கூகிள் செய்துவிட்டு போய் இருந்த காரணத்தால் நேரடியாக ஆம்ஸ்டர்டாம் சென்ட்ரல் ட்ரெயின் ஏறி ஏதோ சாதித்த திருப்தியில் நிம்மதியாக அமர்ந்துவிட்டு, “இந்த ட்ரெயின் ஸ்லோடேர்டிக் ஸ்டேஷன் போகுமா” என்றால் இல்லை என்று தலை அசைத்தார் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணி. போச்சா… நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே. கிட்டத்தட்ட 13 மணி நேர விமான பயணத்திற்குப் பின்னர் கையில் லக்கேஜையும் வைத்துக் கொண்டு, எஸ்கலேடர், லிப்ட் என்று மாறி மாறி அலைய வேண்டுமே என்கிற எண்ணமே ‘அட ச்சே’ என்று நினைக்க வைத்தது. என் நிலைமையை நன்றாகப் புரிந்துகொண்ட பக்கத்து இருக்கைப் பெண்மணி, உடனடியாகத் தன்னிடம் இருந்த ஆம்ஸ்டர்டாம் சிட்டி ட்ரெயின் மேப்பை எடுத்து எனக்கு விளக்க ஆரம்பித்தார். அதைத்தான் நாம் கிட்டத்தட்ட மனப்பாடமே பண்ணிட்டு வந்திருக்கோமே என்று நினைத்துக்கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
ஆம்ஸ்டர்டாம் சென்ட்ரல் ஸ்டேஷன் வந்ததும் இறங்குவதற்குச் சென்ற என்னிடம், “உனக்குச் சம்மதமென்றால் நானும் உன்னுடன் வந்து நீ சரியான ட்ரெயின் ஏறுவதற்கு உதவி செய்கிறேன்” என்றார் அந்தப் பெண்மணி. ஆஹா, இப்படிப்பட்ட பெண்கள் இருப்பதால்தான் உங்கள் ஊரில் வெயிலடிக்கிறது என்று மனதார வாழ்த்திவிட்டு இருவரும் ட்ரெயினை விட்டு இறங்கினோம். “நீங்கள் இந்த ஊரிலேயே வசிப்பவரா?” என்று பேச்சுக் கொடுத்தபோது, தான் அமெரிக்காவில் இருந்து தன்னுடைய நண்பருடன் ஊர் சுற்றிப் பார்க்க வந்திருப்பதாகத் தெரிவித்தார். அந்த நண்பர் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் எங்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். தன் நண்பர் அணிந்திருந்த கம்பளியை அடிக்கடி சரி செய்து, குளிர் காற்று அவரைத் தாக்காதவாறு பாதுகாத்துக் கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி.
இரண்டு நாட்களாக இந்த நகரத்தில் சுற்றிக் கொண்டிருப்பதால், ட்ரெயின் ரூட் அவருக்கு நன்றாக தெரிந்திருக்குமே என்று நினைத்துக்கொண்டு “உங்களுக்கு ஸ்லோடேர்டிக் போவதற்கான ட்ரெயின் எந்த பிளாட்பார்மில் வரும் என்று தெரியுமா” என்று கேட்க, நாம் இருவரும் சேர்ந்துதான் அதைக் கண்டறியப் போகிறோம் என்றார். ஆஹா இது நல்லா இருக்கே என்று நினைத்துக் கொண்டேன். எப்படியாவது எனக்கு உதவி செய்வதில் உறுதியாக இருந்தார். நாங்கள் மூவருமாக ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம். கையில் இருந்த மேப்புடன், அங்கே இருந்த ட்ராம் ஸ்டேஷனுக்குச் சென்று, அங்கே இருந்த மேப்புடன் இதைப் பொருத்திப் பார்த்து எனக்காக வழித் தேடிக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி. எனக்கோ, ’உங்கள் கவலையெல்லாம் நியாயம்தான், ஆனால் உங்க கையில இருக்கிறது ட்ரெயின் மேப்; நீங்க பாத்துக்கிட்டு இருக்கிறது ட்ராம் மேப்’ என்று சொல்ல முடியாமல் வசூல் ராஜா கமல் போல பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை.
“கவலைப்படாதே, உன்னைச் சரியான ட்ரெயினில் ஏற்றி விடும்வரை என்னால் நிம்மதியாக உறங்க முடியாது” என்று வேறு உண்மையிலேயே கவலைப்பட்டார். தான் இரண்டு நாட்களாக வழி தேடி மிகவும் சிரமப்படுவதாகவும், சரியான ட்ரெயினையும் பிளாட்பார்மையும் கண்டறிவது எவ்வளவு கஷ்டம் என்று தனக்குத் தெரியும் என்று எனக்கும் சேர்த்து கவலைப்பட்டார்
இவர்கிட்ட மாட்டினா நான் ஹோட்டலுக்கு போய்ச் சேர முடியாது என்று புரிந்து கொண்ட நான், அப்போது அங்கே வந்து நின்ற ஒரு ட்ராமின் ஆபரேட்டரிடம், ஸ்லோடேர்டிக் ஸ்டேஷன் செல்வதற்கு வழி கேட்க, அவர் “இந்த ட்ராம் நேரடியாக அங்கே செல்லாது; ஆனால் நீ என் ட்ராமில் ஏறிக்கொள், நடுவில் ஒரு ஸ்டேஷனில் இறங்கி இன்னொரு லைனில் போகும் ட்ராமில் ஏறி நீ ஸ்லோடேர்டிக் செல்லலாம்” என்று கூறினார். என்னங்கய்யா, எல்லோரும் அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்க, கடைசி வரைக்கும் யாரும் ஸ்லோடேர்டிக் போறதுக்கு நான் எந்த ட்ரெயின் பிடிக்கணும்ன்னு சொல்லவே மாட்டிங்க போலிருக்கே என்று நினைத்துக் கொண்டேன்.
டிராம் ஆப்ரேட்டரின் கனிவான அழைப்புக்கு நன்றி சொல்லிவிட்டு திரும்ப நினைத்த நேரத்தில், ட்ராமில் அமர்ந்திருந்த ஓர் இந்திக்கார பையா, “நீ உள்ளே பிளாட்பாரம்க்குச் சென்று ட்ரெயினைப் பிடித்தால் ஒரே ஸ்டேஷன்தான் ஸ்லோடேர்டிக்” என்று இந்தியிலேயே வழிகாட்டினார். ஆனால் அவரும் எந்த பிளாட்பாரம் என்று சொல்லவில்லை. சொன்ன வரையிலும் போதும் என்ற நிம்மதி பெருமூச்சுடன், உள்ளே செல்ல முயன்றால், அந்தப் பெண்மணி தானும் உள்ளே வந்து வழிகாட்டுவதாகக் கூறினார். இல்லை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று அவரிடம் விடைபெற்றுக் கொண்டு ஸ்டேஷனுக்குள் நுழைந்தேன்.
உள்ளே சென்ற பின்னர், ஒருவரிடம் ஸ்லோடேர்டிக் போவதற்கான ட்ரெயின் எந்த பிளாட்பார்மில் நிற்கும் என்று கேட்க அவர் ஐந்தாவது பிளாட்பார்மிற்குப் போவதற்கான வழியைச் சொன்னார். நன்றி கூறிவிட்டுச் சென்றபோது இரண்டு நிமிடங்களில் ட்ரெயின் புறப்படத் தயாராக நின்று கொண்டு இருந்தது. ஏறி அமர்ந்த பின்னர்தான் நிம்மதியாக இருந்தது.
ஆம்ஸ்டர்டாம் ஸ்கிபோல் ஏர்போர்ட்டில் ட்ரெயினில் ஏறியபோதே, ஸ்லோடேர்டிக் போகுமா என்று கேட்டு ஏறி இருந்திருக்கலாம் அல்லது பிளாட்பார்மிற்கு வழி கேட்ட காவலரிடமாவது ஸ்லோடேர்டிக் போக வேண்டும் என்று சொல்லி இருக்கலாம். இவை இரண்டும் செய்யாமல் இப்படி ஊர் சுற்றி வந்து அமர்ந்து இருக்கிறேன்.
உங்களைச் சுற்றி இருப்பவர்களும் மனிதர்கள்தான்; இன்று நீங்கள் அனுபவிக்கும் பிரச்னைகளை அவர்கள் நேற்று சந்தித்திருப்பர். அவர்களின் அனுபவங்களை உங்களின் கேள்விகளின் மூலம்தான் வெளிக்கொணர முடியும். கேட்கத் தயங்காதீர்கள்.
கூகிள் மேப் உபயோகித்து இருக்கலாமே என்பவர்கள் கவனத்திற்கு: இங்கிருந்தே யூரோப் சிம் கார்டு போட்டு ஆக்டிவேட் செய்திருந்தாலும், இணையச் சேவைகளைப் பெறுவதற்கான செட்டிங்ஸ் நான் சரியாகச் செய்யவில்லை. ஏர்போர்ட்டில் இறங்கிய உடன் எனக்கு போன் இணைப்பு கிடைத்துவிட்டது, ஆனால் இணையம் வேலை செய்யவில்லை.
ஆம்ஸ்டர்டாமிலிருந்து தரங்கிணி…
(தொடரும்)
தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.