முந்தைய பதிவில் நீங்கள் கொடுத்திருந்த பேராதரவுக்கு முதலில் என் நெஞ்சார்ந்த நன்றி!

உங்களுடைய ஒவ்வொரு கருத்தும் எங்களின் உலகத்தைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தைக் காட்டியது. அது எனக்கு மிகவும் சந்தோஷத்தையும் ஊக்கத்தையும் கொடுத்திருக்கிறது. இன்று நாம் அந்த உலகத்திற்குள் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பயணிப்போமா?

பொதுவாக, பார்வையின்மை என்றால் என்னவென்று சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். நம்மில் சிலருக்கு, பிறக்கும்போதே இந்த உலகத்தை ஒளிமயமாகப் பார்க்கும் பாக்கியம் இல்லாமல் போய்விடலாம். இன்னும் சிலருக்கு எதிர்பாராத விபத்துக்களாலோ அல்லது வேறு ஏதேனும் உடல்நலக் குறைபாடுகளாலோ அந்த வெளிச்சம் அவர்கள் வாழ்க்கையிலிருந்து மறைந்துவிடலாம்.

 யாராலும் ஒரு பொருளைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லையென்றாலோ, அல்லது மிகவும் மங்கலான நிழல் மாதிரி மட்டும்தான் பார்க்க முடிந்தாலோ, அதைப் பார்வையின்மை என்று சொல்லலாம். இது ஒவ்வொருவருடைய பார்வையின் திறனைப் பொறுத்து வேறுபடும்.

மருத்துவர்கள் பார்வையின்மையைச் சில வகைகளாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் B1, B2, B3 என்று சொல்வார்கள். B1 பிரிவில் இருப்பவர்களுக்குச் சுத்தமாகப் பார்வை இருக்காது. அவர்களுக்கு வெறும் இருட்டு மட்டும்தான் தெரியும், வெளிச்சம் வந்தால்கூட உணர முடியாது.

B2 பிரிவில் இருப்பவர்களுக்கு ஒரு சில வெளிச்சக் கீற்றுகள் தெரியும். மிகவும் பெரிய உருவங்களையோ அல்லது வெளிச்சத்தையோ ஒரு நிழல் மாதிரி ஓரளவுக்கு அடையாளம் காண முடியும். B3 பிரிவில் இருப்பவர்களுக்கு இன்னும் கொஞ்சம் தெளிவான பார்வை இருக்கும். அவர்கள் மிகவும் அருகிலிருக்கும் சில பொருள்களை மங்கலாகப் பார்க்க முடியும். ஆனால், இது ஒவ்வொருவருடைய பார்வைக் குறைபாட்டின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும்.

பொதுவாகப் பிறக்கும்போதே பார்வைக்குறைபாடு இருக்கும் குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்கள் பெரும்பாலும் சிறப்புப் பள்ளிகளில்தான் சேர்ப்பார்கள். ஏனென்றால், அங்கு அவர்களுக்கான பிரத்யேகமான பயிற்சி முறைகள் இருக்கும். எப்படித் தட்டுத்தடுமாறாமல் தனியாக நடக்க வேண்டும், தங்களின் அன்றாடத் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்று எல்லா அடிப்படை விஷயங்களையும் கற்றுக்கொடுப்பார்கள்.

அதுமட்டுமில்லாமல், பெரும்பாலான சிறப்புப் பள்ளிகள், உண்டு உறைவிடப் பள்ளிகளாகத்தான் இருக்கும். அதாவது, போர்டிங் ஸ்கூல் மாதிரி! அதனால், சின்ன வயதிலிருந்தே எல்லாக் குழந்தைகளும் அங்கேயே தங்கிப் படிக்கும்போது, அவர்களுடைய சின்னச் சின்ன பழக்கவழக்கங்களிலிருந்து படிப்பு வரைக்கும் எல்லாவற்றையும் ஆசிரியர்கள் முழுமையாகக் கவனித்துச் சொல்லிக்கொடுக்க முடியும்.

அரசாங்கம் இப்போது அனைவரையும் உள்ளடக்கிய கல்வி (Inclusive Education) கொண்டு வந்திருந்தாலும், பார்வையற்றவர்களுக்குச் சிறப்புப் பள்ளிகள்தான் மிகவும் நல்லது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

ஏனென்றால், அங்குதான் சிறப்பாகப் பார்வையற்றவர்களுக்காக பி.எட் (B.Ed.) முடித்த ஆசிரியர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு எங்களுடைய தேவைகளும், கஷ்டங்களும் நன்றாகப் புரியும். நான்கூட சிறப்புப் பள்ளி ஒன்றில்தான் படித்தேன். அது என் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருந்தது.

சரி, நாங்கள் எப்படிப் படிக்கிறோம் என்று தெரிந்துகொள்ள உங்களுக்கு மிகவும் ஆர்வமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். நாங்கள் படிப்பதற்குப் பயன்படுத்தும் அற்புதமான முறைக்கு பிரெய்லி என்று பெயர். இதில் சின்னச் சின்னதாக ஆறு புள்ளிகள் உயர்த்தப்பட்டிருக்கும். இந்த ஆறு புள்ளிகளும் ஒரு செவ்வக வடிவில் அமைந்திருக்கும். அந்தப் புள்ளிகளை விரல்களால் தொட்டு உணர்ந்துதான் நாங்கள் படிப்போம்.

பிரெய்லி நோட்டுப் புத்தகம் (https://www.lipikagupta.com/maths-tools-for-the-blind)

ஒரு காகிதத்தில் இந்த புள்ளிகள் வரிசையாக அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு புள்ளி அமைப்பும் ஒரு எழுத்தை அல்லது ஒரு குறியீட்டைக் குறிக்கும். இந்த பிரெய்லி முறை எல்லா மொழிகளிலும் இருக்கிறது என்று நினைக்கிறேன். தோராயமாக 133 மொழிகளில் இந்த பிரெய்லி முறை பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

ஸ்லேட் மற்றும் ஸ்டைலஸ் (https://www.lipikagupta.com/maths-tools-for-the-blind)

நாங்கள் பிரெய்லியில் எழுதுவதற்கும் படிப்பதற்கும் தனித்தனியான முறைகள் இருக்கின்றன. எழுதுவதற்கு ஸ்லேட் (slate), ஸ்டைலஸ் (stylus) என்ற கருவிகளைப் பயன்படுத்துவோம். ஒரு மரப்பலகை மாதிரி இருக்கும் இந்த ஸ்லேட். அதில் காகிதத்தை வைத்துவிட்டு, ஸ்டைலஸ் என்கிற கூர்மையான குச்சியை வைத்துப் புள்ளிகளை அழுத்தி எழுதுவோம். அந்தப் புள்ளிகளைத் தொட்டு உணர்ந்து படிப்போம்.

Taylor Frame (https://www.lipikagupta.com/maths-tools-for-the-blind)

அதுமட்டுமில்லாமல், கணக்கு பாடத்திற்கென்று தனியாக டெய்லர் பிரேம் (Taylor Frame) என்று ஒரு கருவி இருக்கிறது. இது ஒரு சின்னப் பலகைபோல இருக்கும். அதில் வரிசையாக நிறையச் சின்னச் சின்ன துளைகள் இருக்கும். அந்தத் துளைகளில் சின்னச் சின்னதாகச் சதுர வடிவ குச்சிகளைச் சொருகி எண்களை உருவாக்குவோம்.

ஒவ்வொரு எண்ணுக்கும் அந்தக் குச்சி ஒரு குறிப்பிட்ட திசையில் இருக்கும். உதாரணத்திற்கு, ‘1’ என்கிற எண்ணுக்கு ஒரு திசையிலும், ‘2’ என்கிற எண்ணுக்கு வேறொரு திசையிலும் அந்தக் குச்சி இருக்கும். அதையும் நாங்கள் தொட்டு உணர்ந்துதான் கணக்குப் போடுவோம்.

PC: https://www.lipikagupta.com/maths-tools-for-the-blind

நாங்கள் பள்ளியில் படிக்கும்போது எல்லா வகையான தேர்வுகளையும் பிரெய்லி முறையில்தான் எழுதுவோம். ஆனால், பத்தாவது, பன்னிரண்டாவது மாதிரியான முக்கியமான பொதுத் தேர்வுகளையும், கல்லூரியில் படிக்கும்போது வரும் தேர்வுகளையும் ஸ்க்ரைப் (scribe) வைத்து எழுதுவோம்.

PC: The Better India

ஸ்க்ரைப் என்றால் வேறு ஒன்றும் இல்லை. பார்வையுள்ள ஒருவர், நாங்கள் சொல்வதை வேக வேகமாகப் பேப்பரில் எழுதுவார். நாங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லச் சொல்ல அவர்கள் அதை அப்படியே எழுதிப் பதிவுசெய்வார்கள். கல்லூரி பொறுத்தவரைக்கும் நாங்களும் மற்ற எல்லாரும் படிக்கும் அதே கல்லூரியில்தான் படிப்போம். அதில் எந்த வித்தியாசமும் இருக்காது.

பிரெய்லி எழுத்துகள், டெய்லர் பிரேம் எல்லாமே எங்களுக்கு இருந்தாலும், இப்போது இருக்கும் தொழில்நுட்பம் பார்வையற்றவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், எங்கள் வாழ்க்கையை முடிந்தவரை தற்சார்பாக, அதாவது யாரையும் அதிகமாகச் சார்ந்திராமல் வாழ, இந்தத் தொழில்நுட்பம் மிகவும் உதவுகிறது.

தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துவதற்கு ஸ்கிரீன் ரீடர் (Screen Reader) என்கிற மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கிறது.

ஸ்கிரீன் ரீடர் என்றால் என்னவென்று நிறையப் பேருக்குத் தெரியாது. அது எப்படி வேலை செய்கிறது என்று ஒரு சின்ன எடுத்துக்காட்டுடன் சொல்கிறேன். இப்போது நீங்கள் உங்கள் அலைபேசியில் ஒரு செயலியைத் திறக்க வேண்டுமென்றால், அந்த செயலியின் உருவத்தைத் (icon) தொடுவீர்கள்.

ஆனால், நாங்கள் ஸ்கிரீன் ரீடர் ஆன் செய்து வைத்திருந்தால், எங்கள் விரலை செயலியின் உருவத்தின் மேல் வைத்தாலே அந்த செயலியின் பெயரை அது படித்துச் சொல்லும். எடுத்துக்காட்டுக்கு, ‘வாட்ஸ்அப்’ என்று சொல்லும். அதனை இருமுறை அழுத்தினால் (double tap) அந்த செயலிக்குள் நுழைந்துவிடலாம். இதுதான் ஸ்கிரீன் ரீடரின் அடிப்படை வேலை. இதுபோல ஒவ்வொரு விஷயத்தையும் அது படித்துச் சொல்லும்.

கம்ப்யூட்டரைப் பொறுத்தவரைக்கும், நீங்கள் மவுஸ் அதிகமாகப் பயன்படுத்துவீர்கள். நாங்கள் விசைப்பலகை (Keyboard) அதிகமாகப் பயன்படுத்துவோம். பொதுவாக, கணினியில் பார்வையற்றவர்கள் விசைப்பலகையைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். ஏனென்றால், அதில் உள்ள விசைகள் அனைத்தும் எங்களுக்கு மனப்பாடமாகத் தெரியும். ஒரு எழுத்து எங்கு இருக்கிறது என்பதைத் துல்லியமாக உணர்ந்து, தட்டச்சுசெய்ய முடியும்! அதேபோல், அலைபேசியிலும் விசைப்பலகை அமைப்பு ஒரே வரிசையில் இருப்பதால், எங்களால் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.

நாங்கள்  எந்த எழுத்தை உள்ளிட  விரும்புகிறோமோ, அதன் மீது விரலை வைத்து, ஸ்கிரீன் ரீடர் அந்த எழுத்தை உச்சரித்த பிறகு, விரலைத் திரையில் இருந்து எடுக்கும்போது, அந்த எழுத்து தானாகவே உள்ளிடப்படும்.

அதாவது, ‘A’ மீது விரலை வைத்து, ‘A’ என்று ஸ்கிரீன் ரீடர் சொன்னதும், விரலை எடுத்தால், ‘A’ என்ற எழுத்து டைப் ஆகிவிடும்.

சிலர், ஒரு எழுத்தின் மேல் விரலை வைத்து, அடுத்த எழுத்துகளுக்கு விரலை நகர்த்தி உள்ளிடுகின்றனர். மேலும், சில பார்வையற்றவர்கள் குரல் உள்ளீடு (Voice Input) வசதியையும் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் நாங்கள் பேசுவதை எழுத்துக்களாக மாற்றிப் பதிவுசெய்ய முடியும்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நாங்கள் எல்லோரும் பயன்படுத்துவது நீங்கள் பயன்படுத்தும் அதே கணினிகளும், அதே அலைபேசிகளும்தான். ஆண்ட்ராய்டு அலைபேசிகளில் டாக் பேக் (TalkBack) என்கிற வசதியும், ஐபோன்களில் வாய்ஸ் ஓவர் (VoiceOver) என்கிற தெரிவும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இயல்பாகவே இருக்கும். இது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. அதேபோல், ஸ்கிரீன் ரீடர்கள் பெரும்பாலான கணினிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது எங்களின் அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தை இயல்பாகப் பயன்படுத்த உதவுகிறது.

அலைபேசி பயன்படுத்துவதற்கு நண்பர்கள் மூலமாகவோ, அல்லது சொந்தமாகவோ கற்றுக்கொள்வோம். கணினி கற்றுத்தருவதற்குச் சில தனியார் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அதுபோன்ற தொண்டு நிறுவனம் ஒன்றில்தான் என் கணவர், கணினி ஆசிரியராக இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

இப்போது செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) தொழில்நுட்பமெல்லாம் வந்ததால் இன்னும் நிறைய விஷயங்கள் சுலபமாகிவிட்டன. ஒரு பக்கம் தொழில்நுட்பத்தால் நிறையக் கெடுதல்கள் இருக்கின்றன என்று சொன்னாலும், எங்களைப் பொறுத்தவரைக்கும் தொழில்நுட்பம் இல்லையென்றால், நாங்கள் நிறைய விஷயங்களைச் செய்ய முடியாது. அது எங்களுக்கு மிகப்பெரிய உதவி.

ஆகமொத்தத்தில், கல்வி கற்றுக்கொள்வதற்கும் சரி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் சரி, பார்வையற்ற நாங்கள் மற்றவர்களைவிடக் கொஞ்சம் வித்தியாசமான முறைகளைப் பின்பற்றுகிறோம்.

இங்கு பலரும் பார்வையற்றவர்களுக்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தெரியாது என்று நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. எங்களில் பலர், அமேசான் மாதிரி சில தனியார் நிறுவனங்களிலும் அரசாங்க வங்கிகளிலும் பெரிய பெரிய பதவியில் இருக்கிறார்கள். இதெல்லாம் தொழில்நுட்பம் இல்லாமல் சாத்தியமில்லை.

அதுமட்டுமில்லாமல், நாங்கள் ஆன்லைன் மூலமாகப் புத்தகங்கள் வாசிப்பதற்கும், பொருள்களை வாங்குவதற்கும், இன்னும் சொல்லப்போனால், நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் இந்தக் கட்டுரையை எழுதுவதற்கும், மிகப்பெரிய அளவில் தொழில்நுட்பம் உதவியாக இருக்கிறது.

ஆக, கல்வியும் தொழில்நுட்பமும் எங்களுக்கு இரண்டு கண்களாக இருப்பதால் எங்களால் உங்களைப் போலவே இயல்பான ஒரு வாழ்க்கையை வாழ முடிகிறது.

இந்த அத்தியாயத்தில் நாம் கல்வி, பிரெய்லி, டெய்லர் பிரேம், அப்புறம் தொழில்நுட்பம், விசைப்பலகை பயன்பாடு மற்றும் ஸ்மார்ட்போன் அம்சங்கள் என்று நிறைய விஷயங்களைப் பற்றிப் பார்த்தோம். அடுத்த பதிவில் இன்னும் சுவாரசியமான தகவல்களுடன் உங்களைச் சந்திக்கிறேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கருத்துப்பெட்டியில் கேளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

தொடரும்…

படைப்பாளர்

பிருந்தா கதிர்

தீவிர வாசிப்பாளர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். எழுதுவது மிகவும் பிடிக்கும்.