அந்தக் காலத்தில் பெரும்பாலான வீடுகளில் மதியம் ஒரு நேரம்தான் சோறு பொங்குவார்கள். அசைவம் சாப்பிடுவதாக இருந்தால், மீன் குழம்பாக இருக்கும்; சைவம் என்றால் பருப்பு அல்லது தயிர் இருக்கும். அவ்வளவுதான்.

காலையில் பழைய கஞ்சி குடிப்பார்கள் (தற்போது அதுதான் உடலுக்கு நல்லது என்கிறார்கள்). சில வீடுகளில் மட்டும் பழைய குழம்பு ஊற்றிச் சாப்பிடுவார்கள். மற்றபடி, உள்ளி (சிறு வெங்காயம்), மிளகாய்தான். இப்படிச் சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு, விடுதியில் விதவிதமாக சாப்பிடும்போது சாப்பாடு நன்றாகவே இருக்கும். ஆனால் வீட்டில் நல்லவிதமாகச் சாப்பிட்டுப் பழகியவர்களுக்குச் சாப்பாடு மோசமாக இருக்கும்!

விடுதியில் நன்கு சாப்பிட்டுப் பழகியவர்கள் பலர் இருந்தனர். அப்போது பெண்கள் விடுதியில் தங்கி கல்லூரியில் படிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல; பொருளாதார வசதி இருந்தால் மட்டுமே அது முடியும். கல்லூரிப் படிப்பு என்பதே பலருக்கும் எட்டாத தூரத்தில்தான் இருந்தது. ஆனால் படித்த பலர் விடுதியில் தங்கிப் படித்தார்கள். காரணம் போக்குவரத்து வசதி என்பது மிகவும் குறைவு. பேருந்துகளையே காணாத ஊர்கள் பல. இக்குறையைப் பிற்காலத்தில் வந்த மினி பஸ் எனப்படும் சிற்றுந்து போக்குவரத்துதான் நீக்கியது எனலாம். போக்குவரத்தில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக விடுதியில்தான் நிறைய மாணவிகள் தங்கிப் படித்தனர். 500, 600 பேராவது இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. 

எங்கள் வீட்டில் எனது அம்மா மும்பையில் (பம்பாயில்) பத்து ஆண்டுகள் இருந்ததால், நேரமிருக்கும் நாள்களில் காலையில் சப்பாத்தி, பூரி போடுவார்கள். தண்ணீர் பிடிக்க, குளிக்க என சில காலைப் பொழுதுகள் செலவாகும். அப்படிப்பட்ட நாள்களில் எளிமையாக, ஆனால் ஏதாவது செய்து விடுவார்கள். காலையில் கஞ்சி குடிக்கும் வழக்கம் எங்களுக்கு இருந்ததில்லை. உப்புமாவு, புட்டு,  சீனிக்கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு, பயறு வகைகள், பலாக்கொட்டை  இப்படி எதாவது இருக்கும். உப்புமா உதிர் உதிராகத் தேங்காய் பூ போட்டு சுவையாக இருக்கும்.  பயறு வகைகள், பலாக்கொட்டை போன்றவற்றை சிலநேரம் இடித்து உருண்டை பிடித்துத் தருவார்கள். அதற்கும் நேரமில்லையா, முறுக்கும் பொரிக்கடலையும் சேர்த்துச் சாப்பிடுவோம். கூடவே பப்பாளிப்பழம் போன்றவை இருக்கும். வாரத்தில் ஒரு நாள் இட்லி, தோசை என ஏதாவது இருக்கும். இட்லி, தோசை எல்லாம் பஞ்சு போல மெத்து மெத்தென இருக்கும். 

வாரம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் மதியம் மீன் குழம்பு, ஒரு நாள் கறிக்குழம்பு, மீதி நாள்கள் வேறு குழம்புகள் வைப்பார்கள். பருப்புக் குழம்பு, ரசம், புளிக்குழம்பு, மோர்க் குழம்பு என ஏதாவது ஒன்று இருக்கும். அதனுடன் கூட்டு, பொரியல் இப்படி ஏதாவது இருக்கும். சில நாள்கள் அப்பளம், முட்டை (அதற்காகக் கோழி வளர்த்தார்கள்) என்று அமர்க்களமாகவே  இருக்கும். நெல்லுச் சோறு என்பது கனவாக இருந்த காலகட்டத்தில் பிறந்தவர் என்பதால், எங்கள் வயிறு வாடிவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்றே சொல்ல வேண்டும். என்ன சிரமம் என்றாலும் சோறு இருக்கும். பசி என்பதை நாங்கள் உணர்ந்ததே இல்லை. 

இவ்வாறு வாழ்ந்த எனக்கும், விடுதி சாப்பாடு என்பது  மோசமாகவே இருந்தது. அவ்வப்போது வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாததாக இருந்தது. அதற்கு மருந்தாக அடிக்கடி கேண்டினில் சீனி, பால் சேர்க்காத கடும் தேயிலை குடிக்க வேண்டியிருந்தது. இந்த தேநீர் பத்து பைசா; வழக்கமான தேநீர் இருபது பைசா. இது எனது சொந்த கருத்துதான். யாரையும் குறை சொல்வது எனது நோக்கம் அல்ல. பலருக்கும் மாறுபட்ட கருத்து உறுதியாக இருக்கும். எனது அனுபவத்தைச் சொல்லுவதே எனது நோக்கம். மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் தவறுகள் இருந்தாலும் பொருட்படுத்த வேண்டா.

உணவு ஆயத்தமானதும், மெஸ்ஸில் வேலை செய்யும் ஒரு பெண் சர்ச் முன்னால் நின்று கை மணியை அடித்து விட்டுச் செல்வாள் (எங்களை விடச் சிறு வயதுப் பெண்). அவள் மணி அடிக்க வருகிறாளா என்று ஜன்னல் வழியே சிலர் பார்த்துக் கொண்டு இருப்போம். அவள் மணியடிக்க வந்ததும் தகவல் சொல்ல, உடனே சாப்பிடச் சென்று விடுவோம். காலையில் 7:30 மணிக்கும், மதியம் ஒரு மணிக்கும், மாலை ஏழு மணிக்கும் சாப்பாடு ஆயத்தமாக இருக்கும்.

மதியம் கல்லூரியிலிருந்து நேரே உணவுக்  கூடத்திற்குச் சென்று விடுவோம். உணவுக் கூடம் ‘ட’ வடிவத்தில் இருக்கும். ஓரங்களில் தட்டுகள் வைக்க ஷெல்புகள்; சாப்பிடுவதற்கு இரும்பு மேஜைகள் என அதன் அமைப்பு இருக்கும். உணவுக் கூடத்தின் நடுவில்  இரண்டு அல்லது மூன்று மேஜைகள் போட்டு, அதில் பல குத்துப்போணிகளில் சாப்பாடு வைக்கப்பட்டிருக்கும். குத்துப்போணி என்பது,  நேராக இருக்கும் பாத்திரம். 

ஒரு மேஜையில் நான்கு பேர் சாப்பிடலாம். நாம் போய் சாப்பாடு எடுத்துக் கொள்ள வேண்டும். கூட்டு மட்டும் சிறிய டிஷ்களில் வைக்கப்பட்டிருக்கும். ஆளுக்கு ஒரு டிஷ் தான் எடுக்க வேண்டும். அதைக் கண்காணிக்க சிஸ்டர் நிற்பார்கள். காலையில் ஒரு நாள் பொங்கல், ஒரு நாள் உப்புமா, ஒரு நாள் தோசை, ஒரு நாள் பிரட், மீதி 3 நாள்களும் இட்லி தான். 

இட்லி எளிதாக வேக வைக்க   கப்-போர்டு போன்ற அமைப்பு அப்பவே வைத்திருந்தார்கள். அதன் தட்டுகளில் இட்லியை ஊற்றி வைத்தால் கப் போர்டுக்குள் நீராவி சுற்றி வரும். இட்லி வெந்துவிடும். இட்லி கல் துண்டு போல இருக்கும். அதற்கு வெறும் பொரிக்கடலையும், வத்தலும், உப்பும் மட்டுமே போட்டு அரைத்துச் சட்டினி. சிறுசிறு ஊத்தப்பங்கள் போன்று தோசை இருக்கும். அப்போது பொரிகடலை தேங்காயை விட மிக மிக விலைகுறைவு. தேங்காய் வீடுகளிலெல்லாம் துண்டு கணக்கில்தான் வாங்குவார்கள். தேங்காய் என்ன விலையாக இருந்தாலும், என் அம்மா, இட்லி தோசைக்கு மட்டும் தேங்காய் சட்னிதான் வைப்பார்கள். அல்லது கறிக்குழம்பு. இப்படி சாப்பிட்ட எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது.        

பொங்கல், உப்புமா களி போல இருக்கும். பிரட்டிற்குத் தரும் தக்காளி ஜாம் குழம்பு போல ஓடும். பின் நாள்களில் பிரட்டிற்கு குருமா என்று ஒன்று தந்தார்கள். அது சுமாராக இருக்கும். 

அனைவருக்கும் சேர்த்து ஒரே மெஸ்தான். மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் பெண்கள் வேலை செய்தனர். ஆகவே மிகச் சீக்கிரமே சமையலைத் தொடங்கி விடுவார்கள். அதனால், தோசை காய்ந்து போய் இருக்கும்.

வீட்டிலிருந்து விடுதிக்குச் சென்ற சில நாட்களுக்கு ஹார்லிக்ஸ் பாட்டிலில் எண்ணெய் ஊற்றிய பொடியைக் கையில் கொண்டு செல்வோம். நான் பொரிகடலைப் பொடி கொண்டு செல்வேன். பொரிகடலைப் பொடிக்கு முதலில் வறுத்த வற்றலை உப்பு போட்டு உரலில் இடித்து அதன் பின் பூண்டு, சீரகம்,பொரித்த காயம் போட்டு இடித்து அதில் பொரிகடலையும் சேர்த்து இடிக்க வேண்டும். இடிக்கும் போது வாசமும், வற்றல் கமறலும் வீடு முழுவதும் நிறைந்திருக்கும். எனது அம்மாவின் தோழி தான் இடித்துக் கொடுப்பார்கள். அவர்களை நன்றியோடு நினைவு கூறுகிறேன். அம்மா,தோழி இருவரும் இப்போது இல்லை. பொடியைப் பகிர்ந்து உண்ணுவதால் சீக்கிரம் தீர்ந்துவிடும். இதனால், பிறகு வரும் நாள்கள் இன்னமும் சிரமமாகி விடும். 

மதியம் சாம்பார், மோர்க் குழம்பு, ரசம், பயிறு குழம்பு, சீகக்காய் குழம்பு என்று எங்களால் குறிப்பிடப்படும் புளிக் குழம்பு போன்றவை இருக்கும். புளிக் குழம்பு, ஏதோ ஒரு பொடியை கலக்கிப்  புளியும் காயும் போட்டு செய்யப்பட்டிருக்கும். பார்த்தால் சீகைக்காய் கரைத்தது போல இருக்கும். அதில் போட்டிருக்கும் வெண்டைக்காய் வதக்காமலிருக்கும். அதைச் சாப்பிடவே முடியாது. சாம்பார், ரசம் போலவே இருக்கும்; கொஞ்சம் பருப்பு கிடக்கும் அவ்வளவுதான். நாள்தோறும் ஏதாவது ஒரு பொரியல் இருக்கும். அதில் உப்புச் சுவை தவிர எதுவுமே இருக்காது.

ஆய்வுக் கூடத்தில் (lab) இருந்து பெரும் பசியோடு வரும்போதுகூட, இந்தக் குழம்பு இருந்தால் சாப்பிட இயலாது. இந்தக் குழம்பு வைக்கும் அன்று மீதமாகும் உணவைப் போடும் வாளி நிரம்பி விடும். அதன்பின் சாப்பாட்டைக் கொட்டாமல் கவனிக்கவும் ஒரு சிஸ்டர் நியமித்தார்கள்.

அப்படியும் கூட்டு வைக்கும் டிஷ்ஷில் வைத்து அதை தட்டால் மறைத்துக் கொண்டு தட்டுவார்கள். பசியாக இருக்கிறது என்று தட்டில் சோறு போடுவோம். நான் குறைந்த அளவே எடுப்பேன். அப்படியும் பல நாள்கள் அதைச் சாப்பிட முடியாமல் போய்விடும். 

சனிக்கிழமை மதியம் ரசமும், உருளைக்கிழங்கு பொரியலும்; அது மட்டும் சுவையாக இருக்கும். அன்று வேகமாக நடை போடுவோம். அன்று வேண்டுமென்றே கூட்டமாக நின்று கொள்வோம். ஒரு டிஷ்ஷில் இன்னொரு டிஷ்  கூட்டை போட்டுக் கொண்டு மேஜைக்கு வந்து விடுவோம். கொஞ்சம் கூட்டை சாப்பாட்டில் ஒளித்து வைத்து விடுவோம். சிஸ்டர், ‘அது யாரு கூட்டை எடுத்துட்டு போறது?’ என்று சத்தம் போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் கூட்டத்தில் யாரையும் கண்டுபிடிக்க முடியாது. பிந்தி வரும் மாணவிகள் முதலில் ஒரு டிஷ்ஷை எடுத்துக் கொள்வர். சிஸ்டர் அசந்த நேரம் பார்த்து இன்னொன்று எடுத்து வருவார்கள். என்னைப் போன்றோர் அன்று மட்டுமே வயிறார உண்போம். 

ஞாயிறு அன்று சைவ உணவு தேர்ந்தெடுப்பவர்களின் உணவில் மாற்றம் ஏதும் கிடையாது. ஆனால், அசைவம் என்று பெயரைப் பதித்துக் கொண்டவர்களுக்கு மட்டும் மட்டன் கூட்டு அல்லது சிக்கன் கூட்டு மதியம்  உண்டு. அசைவம் என்று பதித்துக் கொண்டால் அந்த ஆண்டு முழுவதும் வாங்க வேண்டும். நோட்டில் பெயர் எழுதியிருப்பார்கள். அதைப் பார்த்துத் தருவார்கள். ஒரு டிஷ் ஒரு ரூபாய். எங்கள் குழுவில், பியூசியில் நான் மட்டுமே மட்டனுக்கு பெயர் கொடுத்திருந்தேன். அந்த மட்டன் பகிர்ந்து உண்ணப் பத்தாது. எனவே அதன்பின் மூன்று ஆண்டுகளும் நான் பெயர் கொடுக்கவில்லை. 

உணவுக் கூடத்தின் பக்கத்தில் ஒரு சிறிய சமையலறை உண்டு. அங்கு மதியம் தயிர் விலைக்கு வாங்கலாம். 

மாலையில் தரம் குறைந்த கருப்புக்கட்டி போட்டு  காப்பி வைத்திருப்பார்கள். அப்போது கருப்புகட்டிதான் விலை குறைவு. ஒரே ஒரு நாள் எப்படி இருக்கிறது எனப் பார்த்ததோடு சரி. அதன் பின் குடித்ததே இல்லை. நிறைய பேர் காப்பி குடிக்கப் போக மாட்டார்கள். காப்பிக்கு அடிமையானவர்கள் மட்டுமே செல்வார்கள். 

மாலையில் மட்டும் அரை மணி நேரத்திற்கு ஒரு அம்மா மிக்ஸரும், பச்சை வாழைப்பழமும் கொண்டு வருவார்கள். மிக்ஸர் ஒரு பொட்டலம் ஐம்பது பைசா. இடையிடையே வாங்கி தெரிந்தவர்களோடு பகிர்ந்து சாப்பிடுவோம். மிகவும் பசியாக இருந்தால், ஒரு பழம் வாங்கி நான் மட்டும் சாப்பிடுவேன். ஒரு பழம் பத்துபைசா. 

இரவு ரசமும், பொரியல் அல்லது அப்பளமும் தருவார்கள். சோறு வெந்திருக்காது. நான் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் முட்டை வாங்குவேன். அதையும் இரண்டு அல்லது மூன்று பேர் பங்கிட்டுக் கொள்வோம். அங்கு ஒரு சிஸ்டரின் கண்காணிப்பில் சாப்பாட்டு மணி அடிக்கும் பெண், அரை வேக்காடு முட்டை போட்டுத் தருவாள். தற்போது போல் முட்டைக்கான கோழி வளர்ப்பு; வணிகம் போன்றவை பெருமளவில் இல்லாததால், முட்டையின் விலை கூடுதல். பியூசி படிக்கும் போது நாற்பது பைசாவாக இருந்த முட்டை மூன்றாம் ஆண்டில் எழுபத்தைந்து பைசா என ஆகிவிட்டது.

மெஸ்ஸைக் கவனிக்கும் சிஸ்டரிடம் சோறை கொஞ்சம் வேகவைத்து தரும்படி சிலர் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் எதையுமே அவர்கள் நடை முறைப்படுத்தியதில்லை. அந்த சிஸ்டர் கொஞ்சம் வயதானவர்கள். அவர்கள் காலத்தில் நெல்லுச்சோறு என்பதே பெரிதாக இருந்திருக்கும். குழம்பு, கூட்டு என்பதெல்லாம் கனவாகவே இருந்திருக்கும். இட்லி, தோசை என்பதெல்லாம் அரிதான பொருளாக இருந்திருக்கும். அதனால் எங்களின் குறைகள் அவர்களுக்குக் பெரிதாகத் தோன்றியிருக்காது என இப்போது எண்ணத் தோன்றுகிறது. 

பி யூ சி யில் என்னுடன் படித்த எனது ஊர் பெண் சாந்தா சாப்பாடு நன்றாக இல்லை என்று டிகிரி படிக்க வேறு கல்லூரி சென்று விட்டாள்.  நான் படிப்பின் தரம் இங்கு சிறப்பாக உள்ளது என இங்கேயே டிகிரி முடித்தேன். ஹாஸ்டல் டே, காலேஜ் டே, மதர் ஃபீஸ்ட்  டே (மதர் சுப்பீரியர் பெயரில் இருக்கும் புனிதரின் திருவிழா), செயின்ட் ஜோசப்  ஃபீஸ்ட் டே போன்ற சிறப்பு நாள்களில் சாப்பாடு ஓரளவு நன்றாக இருக்கும். தக்காளி சாதம், முட்டை போன்ற ஏதாவது உணவு வகைகள் இருக்கும்.

பி ஜி (P.G.) மாணவிகளுக்கு சாப்பாடு நன்றாக இருக்குமாம். அவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், மீன் போன்றவை வைப்பார்களாம்.

மெஸ் பீஸ் – பி யு சி யில் ரூபாய் 75; முதலாம் ஆண்டு 90; இரண்டாம் ஆண்டு 115 ;மூன்றாம் ஆண்டு 120; அந்தக் காலகட்டத்தில் ஹோட்டலில் சாப்பாடு ஒரு ரூபாய்தான். இட்லி பத்து பைசா. எஸ்டாபிலிஸ்மென்ட் (establishment) பி யூசி யில் ரூ 40; முதலாம் ஆண்டு 50; இரண்டாம் ஆண்டு 60; மூன்றாம் ஆண்டு 70; இவ்வாறு ஆண்டுக்கு இரண்டு முறை கட்ட வேண்டும்.

என்னைப் பொருத்தவரை படிப்பு, விளையாட்டு, ஒழுக்கம், எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்,  Infrastructure என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய எங்கள்  கல்லூரி சாப்பாட்டில் மட்டுமே சற்று சறுக்கி விட்டது.  

ஞாயிற்றுக்கிழமைகளில் கேண்டீன் செல்வோம். கல்லூரியில் அவ்வப்போது என் எஸ் எஸ் டோக்கன் (50 பைசா) தருவார்கள். சில நாள்கள் அவற்றைப் பயன்படுத்துவோம். கடலை மிட்டாய் இரண்டு பைசா, வடை, பஜ்ஜி 10 பைசா, காப்பி, தேநீர் 20 பைசா, தோசை 35 பைசா… இப்படி இருக்கும்.

சில நாள் ஒரு தோசை மட்டும் சாப்பிடுவோம். காபி பிரியர்கள் ஒரு காப்பியும் சேர்த்துக் குடிப்பார்கள். டே ஸ்காலர் மாணவிகளுக்காக மதியம் தக்காளிச் சோறு போன்ற ஏதாவது ஒருவகை சோறு இருக்கும். மற்றபடி தோசை தான்; இட்லிகூட இருக்காது. மிகவும் குறைவான உணவுப் பொருள்களே இருக்கும். சில சமயம் மிகவும் சுவையான சம்சா இருக்கும். சம்சா இருக்கிறது என்று தகவல் அறிந்து, கல்லூரி இடைவேளை நேரத்தில் வாங்கிச் சாப்பிடுவோம். 

கேண்டீன் கட்டடம் மிகப் பழமையானதாகவும், வெளிச்சம் இல்லாமலும் இருக்கும். தற்போது போல பொருளாதார வசதி பெரும்பாலானோர் வீடுகளில் கிடையாது. படிக்க வைப்பதே பெரிய சாதனை. இதனால் பெரும்பாலானோர் கேண்டீன் பக்கமே செல்வதில்லை. 

தொடரும்…

படைப்பாளர்

பொன் ஜெய இளங்கொடி

MSc. Chemistry. MSc. Psychology. B.Ed. PGDGC. வயது 62. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இவர் PUC மற்றும் BSc. புனித மரியன்னை கல்லூரி, தூத்துக்குடியில் 1978 முதல் 1982 வரை படித்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்களை இந்தத் தொடரில் எழுதியுள்ளார். இது இவரின் முதல் முயற்சி.