திருவிதாங்கூர் அரசு, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, நவாப் ஆகியோரின் கூட்டணி பற்றி அகிலத்திரட்டின் வரிகள் இவை.

கதையின் தொடர்ச்சி:

பத்மநாப சுவாமியாக இருந்த திருமால் திருச்செந்தூருக்கு சென்ற பிறகு முருகனாக மாறி விட்டார். முருகனாக மாறிய திருமால், நம்பூதிரி பார்ப்பனர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் செய்து கொண்டிருந்த அட்டூழியங்களை கண்டு மனம் பொருமினார்.

தேவரடியார் பெண்கள் பற்றியும், அப்பெண்களை திருச்செந்தூர் கோயில் நிர்வாகிகளும், நம்பூதிரி பார்ப்பனர்களும் தவறாக பயன்படுத்தி செய்த முறைகேடுகள் பற்றியும் அகிலத்திரட்டு அம்மானை விவரிக்கும் செய்திகளை ஏற்கனவே முந்தைய அத்தியாயங்களில் தேவையான அளவுக்கு ஆராய்ந்து இருக்கிறோம்.

இவ்வாறான நம்பூதிரி பார்ப்பனர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகளின் அட்டூழியங்களை சகித்துக் கொள்ள இயலாத திருமால்(முருகனாக இருக்கும் திருமால்) முத்துக்குட்டிக்கு இறையருள் கொடுத்து, அய்யா வைகுண்டராக மாறி, தெச்சணம்(சுவாமி தோப்பு) சென்றதாக தொடர்கிறது அகிலத்திரட்டு அம்மானையின் இக்கதை. இதற்கிடையில் அய்யா வைகுண்டரின் பிறப்பு, வளர்ப்பு, திருமணம் போன்றவற்றைச் சொல்லி நகர்கிறது அகிலத்திரட்டு அம்மானை சொல்லும் கதை.

அங்கே, பத்மநாபசுவாமி ஊரை விட்டு சென்று விட்டதால் திருவனந்தபுரத்தில் என்னென்ன நடந்ததாக அகிலத்திரட்டு அம்மானை உரைக்கிறது என்பதைக் காண்போம்.,

பிராமண நம்பூரி புலம்பி மிகத்தான் அழுது

ஸ்ரீ ராமனையும் காணலையே தேசம் இருள் ஆகுதல்லோ

அய்யோ கெடுத்தானே அரசன் நம்மை என்று சொல்லி

மெய்யோடே குத்தி விழுந்து அழுதார் வேதியர்கள்

மாயன் அனந்தபுரத்திலே வாழும் மட்டும்

நீசனோட சட்டம் நின்றதல்லோ ராச்சியத்தில்

ஸ்ரீ பத்மநாபர் இந்த சீமை விட்டுப் போனவுடன்

பிரிவாக நவ்வா பிடித்தானே சீமையெல்லாம்

என்று பல பேர்கள் இப்படியே சொல்லி மிக

அன்று புலம்பி அழுவார்கள் சில பேர்

நம்பூதிரி வேதியர்கள் நாம் கெட்டோம் என்று சொல்லி

விம்பிடா வண்ணம் வெளியில் உரையாது’1

மேற்சொன்ன அகிலத்திரட்டு அம்மானை வரிகளில்,

மாயன் அனந்தபுரத்திலே வாழும் மட்டும்

நீசனோட சட்டம் நின்றதல்லோ ராச்சியத்தில்

ஸ்ரீ பத்மநாபர் இந்த சீமை விட்டுப் போனவுடன்

பிரிவாக நவ்வா பிடித்தானே சீமையெல்லாம்

என்ற வரிகளை நோக்குக! இதில் ‘நவ்வா’ என்ற சொல் ‘நவாப்’ என்ற சொல்லின் மருவல் ஆகும். ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு தென்னிந்திய சமஸ்தானங்களில் வரி வசூல் செய்யும் உரிமையை அளித்த நவாப் மன்னரை இவ்வரி(line) குறிப்பிடுகிறது.

அதாவது, நீசன் என்னும் திருவிதாங்கூர் அரசரின் சட்டங்கள் மாற்றப்பட்டு நவாபின் சட்டம் நடைமுறைக்கு வந்த அரசியல் மாற்ற நிகழ்வை குறிப்பிடுகின்றன அகிலத்திரட்டு அம்மானையின் இவ்வரிகள்.

திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மாவின் காலத்தில், திருவிதாங்கூர் அரசு கர்நாடக நவாபுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, திருவிதாங்கூர் அரசு, நவாப் மன்னருக்கு வருடத்துக்கு ஒரு யானையும் 60,000 பணமும் கொடுக்க வேண்டும். இதற்கு பிரதிபலனாக, நவாப் திருவிதாங்கூர் அரசினை அண்டை நாடுகளின் பகையிலிருந்து பாதுகாக்க முழு ஆதரவு தருவார்.2

மார்த்தாண்ட வர்மாவின் மறைவிற்குப் பிறகு, நவாப், திருவிதாங்கூர் அரசுக்கு சொந்தமான களக்காட்டின் 12 மாவட்டங்களையும், செங்கோட்டையில் உள்ள 6 மாவட்டங்களையும் கைப்பற்றினார். நவாப்புக்கும் திருவிதாங்கூர் அரசருக்கும் இடையில் உருவான பகையை தீர்க்கும் பொருட்டு, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி 1765-ம் ஆண்டு இருவருக்கும் பஞ்சாயத்து செய்தது. இது ராம வர்மா அரசரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தது.

பஞ்சாயத்தின் முடிவில், மேற்சொன்ன 18 மாவட்டங்களையும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இணைத்து பயன்படுத்திக் கொள்ள, திருவிதாங்கூர் அரசு ஆண்டுதோறும் நவாப்புக்கு, இதுவரை வழக்கமாகக் கொடுத்து வரும் 40,000 பணத்துடன், அதிகமாக, வருடத்துக்கு 60,000 பணம் தருவதோடு, ஒரு யானையும் தருவதாகக் கூறியது. சமாதான உடன்படிக்கை செய்து வைத்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு திருவிதாங்கூர் அரசு, ஆண்டு தோறும் 2,000 கேண்டி மிளகு தருவதாக ஒப்புக் கொண்டதுடன், விழிஞத்தில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கொடிக் கம்பத்தை நடுவதற்கும் அனுமதி அளித்தது.3

இதில் 2000 கேண்டி மிளகு என்பது, 5,08,000 கிலோ கிராம் அளவுள்ள மிளகு ஆகும். 5,08,000 கிலோ மிளகு ஆண்டுதோறும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கப்பட்டது எனில் மிளகு விவசாயிகளின் நிலை என்னவாக இருந்திருக்கும்?

கதையின் தொடர்ச்சி:

திருச்செந்தூர் தன்னில் திருமால் அங்கே இருக்க

விருச்சம் உள்ள நீசன் வேசை நசுறாணி அவன்

வையகங்கள் எல்லாம் வரம்பு அழித்து மாநீசன்

நெய்யதிய சான்றோரின் நெறியை எல்லாம் தான் குலைத்து

பேரழித்து பூப்பியமும் தான் அழித்து

மார்வரையைக் கூடும் மை புரசு சஞ்சுவம் போல்

தானம் அழித்து சான்றோரின் கட்டழித்து

ஈனகுல சாதிகட்கு ஈடாக்கித்தான் கொடுத்து

பள் பறைய நீசனுக்குப் பவளத்தார்தான் கொடுத்து

கள் பறைய சாதிகளுக்கு காலம் மிகக் கொடுத்து

சாதி வரம்புதான் அழித்து வெண்ணீசன்’4

மேற்காணும் அகிலத்திரட்டு அம்மானை வரிகளில், வெண்ணீசன் என்ற சொல் ஆங்கிலேய ஆட்சியாளர்களையும், முன்னீசன் என்ற சொல்  திருவிதாங்கூர் அரசர் மற்றும் ஆட்சியாளர்களையும், நவ்வா என்ற சொல் நவாபையும், சான்றோர் என்ற சொல் சாணார் சாதியினரையும் குறிக்கின்றது.

பொருள்:

திருமால் திருச்செந்தூரில் இருக்கின்ற போது, ‘வேசை குணம் கொண்ட நசுறாணி நீசன்’ உலகத்திலுள்ள வரம்புகளை எல்லாம் அழித்து, சாணார் சாதியினரின் நெறியைக் குலைத்து, சாணார் சாதி மக்களின் பெருமையான பெயரை அழித்து, கற்பு நெறிகளையும் அழித்து விட்டான். பரந்த மலையில் ஆடுகளும் (மை), புரசு என்னும் புரச மரமும், சேர்ந்து செய்கின்ற முயற்சியைப் போல், தானத்தை அழித்து விட்டான் வெண்ணீசன். சாணார் சாதியின் கட்டமைப்பை அழித்து, ஈன குல சாதிகளுக்கு ஈடாக சாணார் சாதியை ஆக்கி விட்டான் வெண்ணீசன். பள்ளர்களும்* பறையர்களும்* நீசனுக்கு பவளங்களைக் கொடுத்து கள் இறக்கும் உரிமையை அடைந்து விட்டார்கள். கள் இறக்கி வரும் செயலுக்கு நீசன் அதிக நேரம் வழங்கி அவர்களை ஊக்குவிக்கின்றான்.

சஞ்சுவம் = முயற்சி அல்லது ஒரு செயலை செய்வதற்கான ஏற்பாடு.5

குறிப்பு: புரசு என்ற சொல்லுக்கு முருங்கை மரம் என்றும், சஞ்சுவம் என்ற சொல்லுக்கு மாமரம் என்றும் நா.விவேகானந்தன் பொருள் எழுதியுள்ளார். இவ்வரிகளுக்கான அவரது கருத்தில் நான் முற்றிலும் முரண்படுகிறேன்.

வேசை என்ற சொல் ‘விபச்சாரம் செய்கின்றவர்’ என்ற பொருளில் பேசப்படுகின்ற கன்னியாகுமரி வட்டார வழக்குச் சொல் ஆகும். மேலே, ‘வேசை நசுறாணி நீசன்’ என்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள் வசை பாடப்பட்டிருப்பதை காண்க!

சான்றோரின் கட்டழித்து

ஈனகுல சாதிகட்கு ஈடாக்கித்தான் கொடுத்து

பள் பறைய நீசனுக்குப் பவளத்தார்தான் கொடுத்து

கள் பறைய சாதிகளுக்கு காலம் மிகக் கொடுத்து’ ஆகிய அகிலத்திரட்டின் வரிகள் சாணார் சாதியின் பெருமையை உயர்த்திக்காட்ட,  மற்ற சில சாதிகளை இழிவு படுத்துவதாக அமைந்துள்ளது. ‘சாணார் சாதியினரைத் தவிர மற்ற இரு சாதிகளுக்கு கள் இறக்கும் தொழிலை செய்யும் உரிமை இல்லை’, என்ற பொருள் படும்படியான இந்த வரிகள், இன்ன சாதியினர் இன்ன தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று சொல்லும் வர்ணாசிரமக் கொள்கையை ஆதரிப்பதாக உள்ளன.

நாயரும் நம்பூதிரியும் தன்னைக் கீழாக நடத்துவதாகச் சொல்லி ஆதங்கப்படும் சாணார் சாதி, தனக்குக் கீழ் சில சாதிகள் இருப்பதாகச் சொல்லி பெருமை கொள்வது ஆதிக்க மனநோயைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

திருவிதாங்கூர் அரசால் ஒடுக்கப்பட்ட, பதினெட்டு சாதிகளையும் ஒரு குடைக்குக் கீழ் சமப்படுத்துவதாகச் சொல்லும் அகிலத்திரட்டின் இது போன்ற முரண்பாடான, சுய சாதிப் பற்று கொண்ட சில சொற்றொடர்கள் அகிலத்திரட்டையும் அய்யாவழியையும் இந்துத்துவம் களவாடிக் கொள்ள வழிவகை செய்யும் பெரிய ஓட்டைகளாக அமைந்துள்ளன என்பது எனது கருத்து.

தனக்குக் கீழாகவும் ஒருத்தன் இருக்கிறான்’ என்று தனக்குத் தானே சொல்லி நிம்மதி அடைந்து கொள்ளும் மனநோயிலிருந்து, மனிதன் விடுபடாத வரையில் சாதியப் புற்று நோயின் தாக்கத்திலிருந்தும் மனிதன் விடுபட இயலாது.

கதையின் தொடர்ச்சி:

சாதி வரம்புதான் அழித்து வெண்ணீசன்

மூதி முந்நீசன் மும்முடியும் தவிர்த்து

நவ்வா முடி எனவே நாடி அவன் நாடாகவே தான்

எவ்வோரும் தான் அறிய இவன் தேசந்தான் ஆக்கி

ஆளாக முன்னீசனையும் அவனை நாடாள வைத்து

பாழாக நீசன் பழைய சட்டமும் மாற்றி

நீசன் நவ்வாவின் நினைவு போல் சட்டமிட்டு

தேசமெல்லாம் நவ்வா செய்தானே சட்டமது

மானம் வரம்பு மகிமை கெட்டுச் சான்றோர்கள்

ஈனம் அடைந்து இருக்கின்ற நாளையிலே’6

பொருள்:

சாதி வரம்புகளை எல்லாம் அழித்து விட்டான் வெண்ணீசன் என்னும் ஆங்கிலேய ஆட்சியாளன். ‘மூதியாகிய முந்நீசன்’ என்னும் திருவிதாங்கூர் ஆட்சியாளன், சேர சோழ பாண்டிய மன்னர்கள் என்னும் மூவேந்தர்கள் இயற்றிய நெறியின் படி ஆட்சி செய்யாமல், நவாப் வகுத்த நெறியின் படி ஆட்சி செய்தான். திருவிதாங்கூரின் மணிமுடியை நவாபின் மணிமுடி என்றும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை நவாப்பின் நாடு எனவுமாக ஆட்சி முறையை வகுத்தான் முந்நீசன் என்னும் திருவிதாங்கூர் ஆட்சியாளன்.

எல்லா ஊர்க்காரர்களும் அறிய நவாபின் நாடாக ஆக்கி, முந்நீசனை நாடாளும் அரியணையில் அமர்த்திக்கொண்டு, பழைய சட்டங்களை எல்லாம் மாற்றி விட்டு, நவாபின் நினைப்பு போல் சட்டமியற்றினான்.

அதாவது ‘திருவிதாங்கூர் அரசர்களை வெற்றுப் பொம்மைகளாக அரியணையில் அமர்த்தி விட்டு, நவாபின் நினைப்பு போல் சட்டங்களை இயற்றி நவாபின் பினாமியாக இருந்து ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றி அரசாண்டது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி’, என்ற வரலாற்றுத் தகவலை மேற்கண்ட வரிகளில் எடுத்துரைக்கின்றது அகிலத்திரட்டு அம்மானை.

மூதி = முட்டாள்.

அகிலத்திரட்டு அம்மானையில் ‘புரசி’, பொருள் விளக்கம்:

மார்வரையைக் கூடும் மை புரசு சஞ்சுவம் போல்

என்ற அகிலத்திரட்டு வரியை மேலோட்டமாகப் பார்த்தால் ‘மை’ என்பது ஆட்டினைக் குறிக்கும் சொல்லாகவும் புரசு என்பது புரச மரத்தை குறிக்கும் சொல்லாகவும் தென்படுகின்றது.

புரச மரத்தை ‘பலாஸ்’ என்று வடநாட்டினர்  அழைக்கின்றனர். பலாஸ் மரங்களை அதிகமாகக் கொண்ட வங்காள நாட்டின் ஒரு ஊருக்கு ‘பலாஸி’ என்று பெயர். பலாஸி என்ற ஊர்ப்பெயரானது ஆங்கிலேயர்களின் உச்சரிப்பாலும் தென்னிந்தியர்களின் உச்சரிப்பாலும் ‘பிளாசி’ என்று மருவியிருக்கக்கூடும். 1757 ஆம் ஆண்டு ஆங்கிலேய கவர்னர் பிளாசி என்னும் இடத்தில் வங்காள நவாபுக்கு எதிராக செய்த போர் பிளாசிப் போர்!

வங்காள நவாப் சிராஜ் உத்தௌலாவின், தளபதியும் மைத்துனருமான மீர்ஜாபருக்கு பதவி ஆசையைக் காட்டி, மீர்ஜாபரை நவாபுக்கு துரோகியாக்கியது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி. துரோகி மீர்ஜாபரின் உதவியுடன் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, பிளாசிப்போரில் வங்காள நவாப் சிராஜ் உத்தௌலாவை வென்றதும், அதன் பிறகு மீர்ஜாபரை வங்காளத்தின் நவாப் ஆக்கியதும் வரலாறு. இவ்வரலாற்று நிகழ்வுக்குப் பிறகு வங்காளத்தின் நவாப்கள் அனைவரும் ஆங்கிலேயர்களின் கைப்பாவையாகவே செயல்பட்டனர். 1757-ம் ஆண்டுக்குப் பிறகு, ஆங்கிலேயப் பிரதிநிதி ஒருவரை நவாபின் சபையில் நியமித்துக் கொள்ளவும், ஆங்கிலேயப் படை ஒன்றை வங்காளத்தின் எல்லைக்குள் நிறுத்தி, அதன் பாதுகாப்பு செலவுகளை நவாப் கவனித்துக் கொள்ளவும், ஆங்கிலேயர்கள் ஒப்பந்தம் மூலம் உரிமை பெற்றனர்.

அதாவது வெல்லெஸ்லி பிரபு ஆங்கிலேயத் துணைப்படைத் திட்டத்தை உருவாக்குவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு திருவிதாங்கூர் அரசு அடிமையாகி விட்டது என்பதை அத்தியாயம் 20ல் பார்த்தோம். திருவிதாங்கூர் அரசு அடிமையாவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே வங்காளத்து நவாப் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு அடிமையாகி விட்டார். மேலும் பிளாசிப் போரும் அதற்குப் பிறகு வங்காள நவாப்புடன் ஏற்பட்ட ஒப்பந்தமும் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அவர்களது ஏகாதிபத்தியாத்தை நிறுவுவதற்கான உறுதியானத் திறவுகோலாக அமைந்தது.7

ஆக, ‘புரச மரம்’ என்று அகிலத்திரட்டு குறிப்பிடுவது ‘வங்காளத்து நவாப்களை’ என்றும் கொள்ளலாம்.

சாதிக்கட்டை தலையழித்து வெண்ணீசன்

மேதினிகள் எல்லாம் மேவினான் அய்யாவே

தானம் அழிந்தாச்சே தம்பியர்கள் சான்றோரின்

மானம் அழிந்தாச்சே வரம்பு எல்லாம் கெட்டாச்சே

பூப்பியமும் குலைத்துப் புரசியோடு ஒப்பம் இட்டான்

காப்பிலியன் ஏதுவினால் கட்டழிந்தார் சான்றோர்கள்என்று தேவர்கள் திருமாலிடம் முறையிடுவதாக்க் கூறுகின்றது அகிலத்திரட்டு அம்மானை. இதில் ‘பூப்பியமும் குலைத்துப் புரசியோடு ஒப்பம் இட்டான்

காப்பிலியன் ஏதுவினால் கட்டழிந்தார் சான்றோர்கள்என்ற இரண்டு வரிகளை ஆராய்க!

பூப்பியம் = கற்பு நெறி, புரசி = பலாசி(ப்ளாசி) நவாப், காப்பிலியன் = கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு ஒரு சாதியினரான ஒக்கலிகர்களை ‘காப்பிலியர்’ என்றும் குறிப்பிடுவதுண்டு.

மேற்சொன்ன அகிலத்திரட்டின் வரிகளில் இந்த பொருளைப் பொருத்திப் பார்த்தால், “கற்பு நெறியையும் குலைத்து பலாஸி நவாப்புடன் ஒப்பந்தம் செய்தான் ஆங்கிலேயன். காப்பிலியன் என்னும் கன்னட மொழி பேசும் ஆற்காட்டு நவாப் வழியினரால் கட்டுப்பாடுகளை இழந்தனர் சாணார் சாதியினர்”, என்ற வரலாற்றுத் தகவலைப் பெற முடியும்.

ஆக, ‘மார்வரையைக் கூடும் மை புரசு சஞ்சுவம் போல்

என்னும் அகிலத்திரட்டு அம்மானை வரியில் புரசு என்ற சொல் புரச மரத்தைக் குறிப்பிடுகின்றது.

இதில் ‘மார் வரை’(விரிந்த மலை) என்பதை இந்தியா என்றும், மை(ஆடு) என்பதை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி என்றும், புரசு என்பதை வங்காளத்து நவாப் என்றும் உவமையாகக் கொண்டால்,

‘பரந்த மலையில் ஆடும், புரச மரமும் கூட்டணி வைத்தால் ஆடு மலையையும் மேய்ந்து விட்டு புரச மரத்தையும் மேய்ந்து அழித்து விடும். அது போல், இந்தியாவில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் நவாபின் கூட்டணி என்பதன் விளைவு, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவை கொள்ளையடிப்பதுடன், நவாபையும் கொள்ளையடித்து விடும்’ என்கிற பொருள் நமக்கு கிடைக்கின்றது.

பூப்பியமும் குலைத்துப் புரசியோடு ஒப்பம் இட்டான்

என்கிற அகிலத்திரட்டு வரியில் புரசியோடு ஒப்பமிட்டான் என்ற சொற்றொடரில் ‘புரசி’ என்பது வங்காளத்து நவாபைக் குறிக்கின்றது என்பது எனது முடிவு.

இவ்வாறாக ஒவ்வொரு சொல் மற்றும் சொற்றொடருக்குள்ளும் பல வரலாற்றுத் தகவல்களை பொதிந்து வைத்திருக்கும் அகிலத்திரட்டு அம்மானை, ஆழ்ந்து ஆராயப்பட வேண்டியது அவசியமாகும்.

*அகிலத்திரட்டு அம்மானை புத்தகத்தில் சாணார், பள்ளர், பறையர் போன்ற சாதிகள் குறிப்பிடப்பட்டிருப்பதால் அவ்வார்த்தைகளை எழுத வேண்டிய சங்கடத்துக்கு ஆளானேன். அன்றி, இவ்வார்த்தைகளை உபயோகிப்பதில் எனக்கோ பதிப்பாசிரியருக்கோ உடன்பாடில்லை. – சக்தி மீனா

தொடரும்…

  1. அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும், பாகம் 1, நா.விவேகானந்தன்.M.A.(Phill),.B.L., இரண்டாம் பதிப்பு 2006, பக்கம் எண்: 292.
  2. THE TRAVANCORE STATE MANUAL, V. NAGAM AIYA, VOL I IN THREE VOLUMES, FIRST PUBLISHED 1906, REPUBLISHED 1989, PAGE NO: 368.
  3. THE TRAVANCORE STATE MANUAL, V.NAGAM AIYA, VOL I IN THREE VOLUMES, FIRST PUBLISHED 1906, REPUBLISHED 1989, PAGE NO:378.
  4. அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும், பாகம் 1, நா.விவேகானந்தன்.M.A.(Phill),.B.L., இரண்டாம் பதிப்பு 2006, பக்கம் எண்: 294
  5. திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு, பதிப்பாசிரியர்: சிரவையாதீனக் கவிஞர் புலவர் ப.வெ.நாகராசன் பி.லிட்.,விஷாரத், முதற்பதிப்பு 1992, சரஸ்வதி மஹால் வெளியீடு, பக்கம் எண்: 91, 104, 154, 163.
  6. அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும், பாகம் 1, நா.விவேகானந்தன்.M.A.(Phill),.B.L., இரண்டாம் பதிப்பு 2006, பக்கம் எண்: 294.
  7. B.A HISTORY-II YEAR, இந்திய வரலாறு கிபி 1526 முதல் 1857 வரை (FROM THE ACADAMIC YEAR 1916-1917), MANONMANIAM SUNDARANAR UNIVERSITY,TIRUNELVELI 627012, PAGE NO: 86, 87.

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.