அகல்யா மருத்துவமனைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அழைப்பு மணி அடிக்கவும், ‘யார் அது கிளம்புற நேரத்துல’ என்று சலித்துக் கொண்டே வந்து எட்டிப் பார்த்தாள்.
வாசலில் நின்ற பெண்ணைப் பார்த்ததும் அவள் முகம் வியப்படைந்தது. “அட நீங்களா, வாங்க வாங்க” என்று அழைக்க, அவர் உள்ளே வந்ததுமே, கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டார். அகல்யாவிற்குப் பதற்றமாகிவிட்டது. அதுவும் அவர் மகள் செல்வியை முதல் முதலாகப் பார்த்த அந்தக் கோலத்தை அவள் வாழ்நாளில் மறக்க முடியாது. இப்போது நினைத்தாலும் அடிவயிற்றைப் பிசைந்தது.
“என்னாச்சு… செல்வி நல்லா இருக்கா இல்ல?” என்று அவள் படபடப்பாகக் கேட்க, சட்டென்று நிமிர்ந்த அப்பெண், “உங்க புண்ணியத்துல அவ ரொம்ப நல்லா இருக்காம்மா” என்று அழுதபடியே அவள் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார். மூன்று வருடத்திற்கு முன்பும் இதேபோலதான் அவள் கையைப் பிடித்துக் கதறினார்.
“ஆம்பிள இல்லாத வூடும்மா. விஷயம் தெரிஞ்சா, குடும்ப மானமே போயிடும்” என்று சொல்லி அழ, அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர் மகள் செல்வியின் பிறப்புறுப்பிலிருந்த காயத்தை பார்த்த கணமே, அவள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பதை அகல்யா அறிந்து கொண்டுவிட்டாள். அதுவும் இந்த அக்கிரமத்தை செய்தவன் அப்பெண்ணின் சொந்த சித்தப்பாவாம்.
‘குழந்தையைக்கூட விட்டு வைக்க மாட்டானுங்க. என்ன ஜென்மங்களோ… ச்சை’ சிகிச்சையளிக்கும்போதே அவள் உள்ளம் குமுறியது. இதனைச் சட்டப்படி எதிர்கொள்வதுதான் சரியாக இருக்கும். ஆனால் மகளுக்கு நடந்த கொடூரத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதைவிடப் பெண்ணின் வாழ்க்கை கெட்டுப்போய்விடும் என்பதுதான் ஓர் அம்மாவாக அவரின் கவலை.
அதற்குப் பயந்துதான் இந்த வழக்கெல்லாம் வேண்டாமென்று கைகூப்பிக் கேட்டுக் கொண்டார்.
“அதெப்படி அப்படி விட முடியும்? அவனைச் சும்மா விட்டா, நாளை வேறொரு குழந்தைக்கு இந்த நிலை வரும்” என்று அவருக்கு நிதானமாகப் புரிய வைத்த அகல்யா, நேரடியாகக் காவல்துறை மேலதிகாரி ஒருவருக்குத் தகவல் கூறினாள். அந்த ஊரில் வைத்து அப்பெண்ணிற்குச் சிகிச்சை தந்தால், தேவையில்லாத வதந்திகள் பரவும் என்று சிகிச்சைக்காக வெளியூரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு மாற்றினாள்.
செல்வியின் அம்மாவை இந்த வழக்கைத் தைரியமாக எதிர்கொள்ள வைக்க, அவள் நிறைய அவரிடம் பேசவும் போராடவும் வேண்டியிருந்தது. ஒரு வழியாகக் குற்றவாளியைக் கைது செய்தனர். ஊருக்குள் விஷயம் பரவியது.
ஊர்மக்களும் செல்விக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். வழக்கும் விரைந்து முடிக்கப்பட்டு குற்றவாளிக்குத் தண்டனை கிடைத்தது. மேலும் அரசாங்கம் அந்தப் பெண்ணின் படிப்பிற்கான செலவு மொத்தத்தையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது.அதெல்லாம் நடந்து முடிந்து பல மாதங்கள் ஓடிவிட்டன. அன்று போலவே இன்றும் அவர் கண்ணீர் அவள் கைகளை நனைத்தது. இம்முறை அது வேதனையில் உதிரவில்லை. ஆனந்தத்தில் உதிர்ந்தது.
“என்ன விஷயம்னு முதல்ல சொல்லுங்க செல்விம்மா” என்று அவள் மீண்டும் கேட்க, அவர் தன் இடுப்பில் சொருகியிருந்த நாளிதழை எடுத்து நீட்டினார். அதனை வாங்கிப் படித்ததுமே, அகல்யாவின் முகம் பளிச்சிட்டது.
“என்ன நம்ம செல்வி போர்ட் எக்ஸாம்ல டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்டா? வாவ்… நான் வேலை பிஸில ரிசலட் வந்தது கூட கவனிக்கல பாருங்க. முதல்ல நான் செல்வியை நேர்ல பார்த்து வாழ்த்து சொல்லணும்” என்று பூரித்துப் போனாள். “அவளும் உங்களை நேர்ல பார்க்கனும்னுதாம்மா சொன்னா… அதுவும் அவங்க பள்ளிகூடத்துல பாராட்டு விழா நடத்தப் போறாங்களாம், நீங்க கண்டிப்பா வரணும்னு சொல்லி அனுப்பினா” என்றதும். “ஓ கண்டிப்பா வரேன்” என்றுநெகிழ்ச்சியுடன் சம்மதித்தாள் அகல்யா.
அதன் பின்பு அவரை உள்ளே அழைத்து காபி கொடுத்து உபசரித்தாள். சில நிமிடங்கள் பேசிவிட்டு அவர் புறப்பட, அகல்யா தன் செல்பேசியில் நேரத்தைப் பார்த்தாள். வீட்டிலிருந்து சுகாதார நிலையத்திற்கு நடந்து சென்றால் இருபது நிமிடமாகும். காரில் சென்றால் ஐந்து நிமிடம் போதும். எப்போதும் பரபரப்பாக அடித்துப்பிடித்து காரில் சென்று இறங்குபவள், அப்போதைய அந்த மனநிலையை நிதானமாக ரசித்து அனுபவிக்க வேண்டி நடந்து செல்வது என்று தீர்மனித்தாள். பணிப்பெண்ணிடம் சொல்லிவிட்டு வாயிலைத் தாண்டியவள், வழி முழுதும் அவ்வூர்ப் பெண்களின் விசாரிப்புகள், புன்னகைகளைப் பெற்றுக் கொண்டே நடந்தாள்.
ஒவ்வொரு முகமும் ஒரு கதை சொன்னது. கூடவே சந்துரு சொல்லிவிட்டுச் சென்ற ‘கல்யாணம்’ என்ற சொல்லும் நினைவில் வந்து குதித்தது. மனநல மருத்துவராக இருக்கும் தன் தோழி வித்யாவின் நினைவு வர, அவள் செல்பேசிக்கு அழைத்தாள். “ஹே அகல்யா, என்ன அதிசயமா போன் எல்லாம் பண்ணி இருக்க”
“நீ கூடதான் அதிசயமா போனை எடுத்திருக்க”
“டைமே இல்லபா… இப்ப வீட்டுல இருக்குறதாலத்தான் போனை எடுத்தனே”
“சரி, நான் உன் கிளினிக் அனுப்பி வைச்ச அந்த இரண்டு பொண்ணுங்க இப்போ எப்படி இருக்காங்க”
“வந்த போது இருந்ததைவிட இப்போ நல்ல மாற்றம் இருக்கு, ஆனாலும் பெத்த அம்மா பிரசவ வலில துடிச்சதை எல்லாம் கண்ணு முன்னாடி பார்த்த அந்த குழந்தைங்களால அவ்வளவு சீக்கிரத்துல அதுல இருந்து மீண்டு வந்துட முடியாது”
“உண்மைதான்” என்று அகல்யா வருத்தமாக கூற, “கவலைப்படாத. என்னால முடிஞ்ச எல்லா முயற்சியும் நானும் செஞ்சிட்டுதான் இருக்கேன்” என்றாள் வித்யா.
“தேங் யூ ஸோ மச் வித்து”
“ஏய், எனக்கு எதுக்கு தேங்க்ஸ். இதுவும் என் வேலைதானே? ஆனாலும் உன் அளவுக்கு எல்லாம் நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன்பா. ஆமா கேட்கணும்னு நினைச்சேன். அந்தப் பிரச்னை எல்லாம் முடிஞ்சிருச்சு இல்ல”
“அதெல்லாம் எப்பவோ முடிஞ்சுடுச்சு, ஆனா அந்த பிரச்னையால நான் வேற ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்”
“சிக்கலா… என்ன அது?”
“சந்துருவை மீட் பண்ணேன்.”
“யாரு… உன் எக்ஸ் லவர் சந்துருவா?” என்று கேட்டு கலகலவென்று சிரித்த வித்யா, தொடர்ந்து தோழி சொன்ன கதைகளை எல்லாம் கேட்டு மௌனமானாள்.
“எதையுமே நாங்க திட்டமிட்டு எல்லாம் பண்ணல வித்து. ஏன் இப்படி நடந்ததுன்னு எனக்கே தெரியல?”
“அதாங்க மேடம் லவ்வு”
“பதினெட்டு இருபது வயசுல இருந்த பெப்பியான காதல் வேற… இப்பவும் இது அதேபோல தொடர முடியாது இல்ல”
“ரொம்ப யோசிக்காத. பிடிச்சு இருக்கா, என்ஜாய் பண்ணு”
“விஷயம் இப்போ அது மட்டும் இல்ல. சந்துரு, வீட்டுல பேசி கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றான்”
“வெல் அன் குட், கல்யாணம் பண்ணிக்கோங்க”
“நீ வேற, எனக்கு இந்த கல்யாணம், குழந்தைங்குற வார்த்தை எல்லாம் கேட்டாலே கடுப்பாவுதுயா. அதுவும் இந்த கல்யாணம்கிற கான்ஸப்ட் மேலே சுத்தமா இன்டிரஸ்ட் இல்லாம் போயிடுச்சு. நான் இருக்க மனநிலைல அப்படி ஒரு செட்-அப்புக்குள்ள எல்லாம் போக முடியும்னும் எனக்குத் தோணல”
“சீசீ இந்தப் பழம் புளிக்கும்கிற மாதிரி நடக்காத விஷயத்துமேல ஏற்பட்ட வெறுப்பா இது?”
“அப்படி ஒன்னும் இல்ல. நான் நினைச்சா இப்பவும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியும். நான்தான் வேண்டாம்னு இருக்கேன். அதுவும் நான் பிரசவம் பார்த்த பொண்ணுங்களோட வாழ்க்கை அனுபவத்தை எல்லாம் கேட்க கேட்க…” என்று அகல்யா கடுப்புடன் விவரிக்க, இடையிட்டு நிறுத்தினாள் வித்யா.
“என்ன பேசுற நீ, எல்லோர் வாழ்க்கையும் இப்படிதான் இருக்கும்னு நீயா ஒரு கணிப்புக்கு போகாத. என் ஹஸ்பென்ட் எனக்கு சப்போர்டிவா இல்லையா? அந்த மாதிரி சந்துருவும் இருக்கலாம் இல்ல? அதுவும் இல்லாம இரண்டு பேரும் பிரிஞ்சு, இப்போ திரும்பவும் ஒருத்தர் ஒருத்தரோட அருமை புரிஞ்சு சேர்ந்து இருக்கீங்க. ஸோ உங்க உறவு நல்ல புரிதலோட இருக்க நிறைய வாய்ப்பும் இருக்கு” என்றாள்.
தோழியின் கருத்தை அகல்யாவால் ஏற்க முடியவில்லை. சந்துருவுக்கும் அவளுக்கும் இடையில் இப்போதும் இருப்பது வெறும் ஈர்ப்பு மட்டும்தான் என்று தோன்றியது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் அது இருவருக்குமான உடல் தேவை. அவ்வளவுதான். ஆனால் இந்த எண்ணத்தை எல்லாம் அவள் தோழியிடம் வெளிப்படுத்தவில்லை.
மறுபுறம் வித்யா, “அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் போகாத” என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கும்போது, அகல்யாவின் செல்பேசியில் தேவிகாவின் அழைப்பு மின்னியது. “ஹாஸ்பிட்டல்ல இருந்து முக்கியமான கால் வருது வித்து, நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன்” என்றவள், உடனடியாக தோழியின் அழைப்பைத் துண்டித்துவிட்டு, தேவிகாவின் அழைப்பை ஏற்றாள்.
“அந்தச் சரண்யா பொண்ணுக்குப் பிரசவ வலி வந்திருச்சு மேடம், கூட்டிட்டு வந்திருக்காங்க”
“தோ நான் வந்துட்டே இருக்கேன்” என்ற அகல்யாவின் நிதானமான நடை, வேகமாக மாறியது. சுகாதார நிலையத்திற்குள் நுழைந்ததுமே எப்பொழுதுமான பரபரப்பு அவளை ஆட்கொண்டது. பிரசவம் நல்லபடியாக முடிய, பிறந்த பச்சிளம் குழந்தையை கையில் ஏந்தினாள் அகல்யா. ஆனால் அவள் மனம் ஏனோ சந்தோஷமடையவில்லை. அதில் ஆனந்தம் கொள்ள என்ன இருக்கிறது?
“எனக்கு மேல படிக்கத்தான் விருப்பம். ஆனா வீட்டுல அதுக்குள்ளே கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க டாக்டர்” என்று அந்தப் பெண் கண்ணீருடன் சொன்னது அவள் நினைவிலாடியது. இதோ இப்போது அவளுக்கு குழந்தையும் பிறந்துவிட்டது. இது என்ன ஒன்றுடன் முடியப் போகிறதா? இதெல்லாம் உலக வழக்கம்தானே என்று அவளால் சகஜமாக ஏற்க முடியவில்லை. இரவு நடந்தது வேறு அவள் மூளையைப் போட்டு குடைந்தெடுத்துக் கொண்டிருந்தது.
அகல்யா தன் அறைக்குள் நுழைந்ததுமே, எடுத்து வந்த மார்னிங் ஆஃப்டர் பில்லை தொண்டைக்குழியில் போட்டு, தண்ணீரைச் சரித்தாள். பின்னர் நிம்மதியாக மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு வெளிநோயாளிகளைக் கவனிக்கத் தயாராக, முதல் ஆளாக ஈஸ்வரி மகளுடன் உள்ளே நுழைந்தாள்.
தொடரும்…
செயற்கை நுண்ணறிவுப் படங்கள்: மோனிஷா
படைப்பாளர்

மோனிஷா
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன. சிறார் எழுத்திலும் தற்போது ஈடுபட்டுள்ளார். இவரின் ‘ஒரே ஒரு காட்டில்’ சிறார் நூலை ஹெர் ஸ்டோரீஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.