ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே?

இப்போது நாம் சுயநேசத்தின் அடுத்த அம்சத்தைப் பார்ப்போம். தன்னை அறிதல் (Self Discovery).

ஏன் நம்மை அறிய வேண்டும்? என்னை எனக்குத் தெரியாதா என்பவர்களுக்காக ஒரு சிறிய பயிற்சி.

தனியாக இருக்கும் போது, ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு, உங்களது மொத்த நாளில் எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று யோசித்து எழுதுங்கள். அதாவது என்ன செய்து கொண்டிருக்கும் போது முழு மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள்?

சிலருக்கு ஒரு கேள்வி வரலாம். நான் எப்போதுமே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன், தனியாக எதை எழுதுவது என.

எந்த வேலையைச் செய்யும் போது நீங்கள் உங்களை மறந்து போகிறீர்களோ, எப்போது நீங்கள் பசி, தூக்கம், தாகம் தாண்டி முழு ஈடுபாட்டுடன் இருக்கிறீர்களோ, எதைச் செய்யும் போது மொபைல் எடுத்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லையோ, அந்த வேலைதான் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வேலை. அது பயனுள்ள வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை. அதைச் செய்யும் போது உங்கள் உடலும் மனமும் ஒன்றிப் போகிறது. நேரம் போவதே தெரியவில்லை. பசி, தூக்கம் மறந்து போகிறதென்றால் அதுதான் உங்களின் மகிழ்ச்சி. அதுதான் உங்களது அடையாளம்.

ஒரு வேளை இன்றுள்ள வாழ்க்கையில் அப்படி எதுவும் இல்லாமலிருக்கலாம். சற்று நினைவுகளில் பின்நோக்கி நீந்துங்கள். நீங்கள் சிறு குழந்தையாக இருந்ததில் இருந்து யோசித்துப் பார்த்தால், எப்போதேனும் அப்படி ஒரு விஷயத்தைச் செய்திருப்பீர்கள். மிகவும் மகிழ்ந்து  உங்களைக் கொண்டாடி இருப்பீர்கள். அது என்ன என்று யோசியுங்கள்.

அது பாட்டு, நடனம், ஓவியம், வாத்தியம் என்று கலை சம்பந்த பட்டதாக இருக்கலாம். எழுத்து, பேச்சு எனவும் இருக்கலாம். ஒரு சிலர் பொதுச் சேவையில் தன்னை மறந்து ஈடுபடுவர். ஒரு சிலருக்கு மற்றவருக்குச் சொல்லிக் கொடுப்பதில்  தனி இன்பம் கிடைக்கலாம். சிலருக்கு விதவிதமான ஆடைகளை வடிவமைப்பது, அணிபவருக்கு ஏற்றவாறு சரியான ஆடையைத் தேர்ந்தெடுப்பது போன்ற தனித்திறமைகள் இருக்கலாம். சிலருக்கு லாவகமாக வாகனம் ஓட்டுவது, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வது, புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வது, படங்கள் பார்த்து நிறை குறைகளை அலசுவது, கணித புதிர்களுக்கு விடை சொல்வது, விதவிதமாகத் துணி தைப்பது, சின்ன குழந்தைகளுடன் விளையாடுவது, வீட்டைப் படு சுத்தமாகப் பராமரிப்பது, வித விதமாகச் சமைப்பது என்று ஆர்வம் இருக்கலாம். உங்கள் ஆர்வம் எதில் என்று கண்டறியுங்கள். உங்கள் ஆர்வம் மற்றவரின் அங்கீகாரத்தைப் பெற வேண்டிய எந்த அவசியமும் இல்லை. நீங்கள் நீங்களாக இருக்க உங்கள் ஆர்வமும் தனித்திறமையும் உதவப் போகிறது அவ்வளவே.

உங்கள் ஆர்வம் எது என்று கண்டறிந்த பின் அடுத்து செய்ய வேண்டிய வேலை அதற்காகத் தினமும் சிறிது நேரம் ஒதுக்குவது. அது பயனற்ற நேரமல்ல. உங்களுக்காக நீங்கள் செய்யும் முதலீடு. இந்த நேரம் இருந்தால் நான் இன்னும் கொஞ்சம் அலுவலக வேலை பார்த்து முன்னேறுவேனே, வீட்டை இன்னும் கொஞ்சம் நன்றாக வைத்திருப்பேனே, இன்னும் இரண்டு வித உணவு தயாரித்து இருப்பேன் என்று எண்ண வேண்டாம். உங்களது தினசரி வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்ய அந்த நேரம் உதவும்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி, “விடிந்து எழும்போதே இட்லி மாவிலும் வெங்காயம் தக்காளியிலும்தான் விழிக்க வேண்டி இருக்கு“ என்று அலுத்துக்கொள்வார். அவருக்கு அந்த நிலை பிடிக்காத பட்சத்தில் மாற்றுவதற்கு ஏதேனும் முயற்சி செய்திருக்கலாம். ஆனால், அவருக்கு அந்த தைரியம் இல்லை. எங்கே தன் அலுப்பை வெளிகாட்டினால் வீட்டினர் மதிக்க மாட்டார்களோ என்கிற பயம். ஒரு பாதுகாப்பற்ற உணர்வு. வியாழக்கிழமை வந்தால் வெள்ளியன்று பூஜை செய்ய வேண்டுமே என அலுத்துக்கொண்டே பூஜை பாத்திரங்களைச் சுத்தம் செய்வார்கள். எந்தக் கடவுள் இத்தனை அலுப்புடன் பூஜை செய்யச் சொன்னார் என்று நினைத்துக்கொள்வேன். ஆனால், அவர்களின் பாதுகாப்பற்ற உணர்வும், விருப்பமில்லாத வேலையும் சேர்ந்து அவருக்கு வாழ்க்கையைச் சலிக்கவும் வெறுக்கவும் வைத்துவிட்டது. ஒரு வேளை அவர் தன் விருப்பமான விஷயத்திற்காகத் தினமும் சிறிது நேரம் செலவிட்டிருந்தால் இத்தனை சலிப்பு அவருக்கு வந்திருக்காது. இதே வேலையை இன்னும் உற்சாகத்துடன் செய்திருப்பார். சுய பச்சாதாபமும், சலிப்பும் அவர் வாழ்க்கையை வீணாக்கிவிட்டது. அதற்காகப் பிடிக்காத வேலையைச் செய்துதான் ஆகணுமா என்று கம்பு சுற்ற வேண்டாம். நமக்கு விருப்பமல்லாத வேலையை நாம் செய்தே ஆக வேண்டுமென்கிற எந்தக் கட்டாயமும் இல்லை.

பிடித்த விஷயத்தைச் செய்வதற்கான உரிமையும், பிடிக்காத விஷயத்தைச் செய்யாமல் இருப்பதற்கான சுதந்திரமும் பூமியில் உள்ள அனைவருக்கும் உண்டு. ஆனால், நம்  முந்திய தலைமுறை முதிய பெண்கள் பெரும்பாலோர் தனது சுதந்திரத்தைப் பற்றி யோசித்ததுகூட இல்லை. இன்றைய தலைமுறையிலும் நிறைய பேர் அதைப் பற்றி யோசித்தாலும் செயல்படுத்தும் தைரியமற்றவர்களாக உள்ளனர். அவர்களிக்கான ஒரே ஆசுவாசம், தன்னை அறிதலும் அதைச் செயலுக்குக் கொண்டு வருவதும்தான். அவர்களுக்கான ஒரே விடை சுய நேசம்தான்.  சுய நேசத்தை வாழ்வில் ஓர் அங்கமாகக் கொண்ட ஒருவர் நிச்சயம் ஒரு நேரத்தில் தன் வாழ்வைக் கையிலெடுப்பர். கொண்டாட்டமாக மாற்றுவர்.

வாருங்கள், நாமும் கொண்டாட ஆரம்பிக்கலாம்!

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.