முகத்தில் அத்தனை சுவாரசிய சிரிப்பு. அவள் பார்த்து வியப்பதைக் கண்டு நானும் வியந்தேன்.

பூங்கா ஒன்றிற்கு நண்பர்களின் குடும்பத்துடன் நானும் என் கணவரும் எங்கள் ஒரு வயது மகளுடன் சென்றோம்.

மாற்று உடைகள், டயபர், துண்டு, தண்ணீர் பாட்டில், ஒரு கப்பில் ரசம் சாதம், ஒரு கப்பில் கஞ்சி, கொஞ்சம் பழங்கள், ஒன்றிரண்டு விளையாட்டுப் பொருள்கள் இன்னும் அவளுக்குத் தேவையான அனைத்தையும் தனியாக ஒரு பையில் எடுத்து வைத்துக் கொண்டேன்.

ஒரு நாள் அவளுடன் செல்வதற்குத் தான் இத்தனை ஏற்பாடும். மாலையில் வீடு திரும்பி விடலாம். ஆனால், அது வரை அவளைச் சமாளித்து ஆக வேண்டுமே.

பூங்காவின் உள்ளே நுழையும் போதே அழுதாள். அப்போது அவளைச் சமாதானம் செய்வதிலேயே என் பாதி சக்தி செலவானது.

உண்மையில் அவளுக்கு இந்தச் சூழல் புதிதுதான். அதிகம் அவளை வெளியில் அழைத்துச் சென்றதில்லை.

எங்கள் முதல் பயணத்தை நினைவுகூர்ந்தேன்.

காரின் முன் இருக்கையில் நான். பின் இருக்கையில் என்னைப் பெற்றவர் மடியில் நான் பெற்றவள்.

“அண்ணா கொஞ்சம் பொறுமையா போங்கண்ணா.” 

ஏற்கெனவே குறைந்த வேகத்தில் சென்று கொண்டிருக்கும் ஓட்டுநரிடம் இன்னும் கொஞ்சம் வேகத்தைக் குறைக்க வேண்டினேன்.

எனக்கு வயிறு வலிக்கும் என்பதற்காகச் சொல்லவில்லை. வண்டி குலுங்குவதில் அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் என்ன செய்வது?

பிறந்த ஐந்தாம் நாள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்குச் செல்ல முதல் கார் பயணம். பத்திரமாக அவளைப் பிடித்துக்கொள்ள வலியுறுத்திக் கொண்டே இருந்தேன். இப்படித்தான் அமைந்தது எங்கள் முதல் பயணம்.

அடுத்தது ஒரு மாதத்தில் இரு சக்கர வாகனத்தில் அவளைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றோம்.

கிளம்பிய இரண்டாம் நிமிடம்…

“வண்டிய நிறுத்துங்க.. பாப்பா அழறா… நிறுத்துங்க…”

ஏன் அப்படி அழுதாள் என்று தெரியவில்லை. குட்டி படுக்கையில் அவளை அணைத்து வைத்திருந்தேன். திடீரென கத்தினாள். நான் பிடித்திருப்பது சரியில்லையா, காற்றின் வேகத்தால் அழுதாலா, வேறு ஏதாவது காரணமா தெரியவில்லை.

வண்டியை நிறுத்தி சாலையின் ஓரத்தில் நின்று அவளைத் தட்டிக் கொடுத்தேன். அவள் அழுகையை நிறுத்தவே இல்லை.

“வீட்டுக்கே போலாம்… அப்புறம் வரலாம்… இல்லைன்னா டாக்ஸில போலாம்” என்றேன்.

குழந்தை அழும்போது முடிவெடுக்கும் திறனுக்கு என்ன ஆகுமோ? கோபம் பதட்டம் மேலெழுந்து பல யோசனைகள் சொல்லும்.

வீட்டிற்குச் செல்ல வண்டியைத் திருப்பியதும் சிரித்தாள். அவளுக்கென்ன புரிந்ததோ!

அடுத்தது மூன்றாவது மாதம் கோயிலுக்கு அழைத்துச் சென்றோம். போகும்போது காரில் உறங்கிவிட்டாள். ஆனால், கோயிலுக்குச் சென்ற சில நிமிடங்களில் அழத் தொடங்கி விட்டாள்.

அங்கே சுவர் ஓரம் அமர்ந்து பால் கொடுத்தேன். வெளியில் வரும்போது இப்படித் தாய்ப்பால் கொடுப்பதைக் கூச்சம் பார்க்காமல் செய்ய வேண்டும் குழந்தைக்காக. இதில் கூச்சப்படவும் ஒன்றும் இல்லை.

அதற்குப் பிறகு மிகத் தேவையான இடங்களுக்குத்தான் கடந்த ஒரு வருடத்தில் அழைத்துச் சென்று வந்துள்ளோம்.

இன்றுதான் பொழுது போக்கு நோக்கில் ஒரு முழு நாள் அவளை ஈடுபடுத்த (அவளைக் காரணம் சொல்லி நானும் கொஞ்சம் ஈடுபட்டுக்கொள்ள) வந்துள்ளோம்.

முதலில் புது இடத்தைப் பார்த்துப் பயந்தாள், பின் அவளைப் பார்த்துச் சிரிக்கும் மனிதர்களைக் கண்டு பயந்தாள். யார் அவளை அழைத்தாலும் என்னை இறுகப் பற்றிக் கொண்டு வர மறுத்தாள். (கொஞ்ச நேரம் அவள் அப்பாவிடம்கூட போகவில்லை.!)

சில நிமிடங்கள் கழித்து மெல்ல சுற்றியுள்ளதைக் காணத் தொடங்கினாள்.

சுற்றியுள்ள குழந்தைகளைக் கண்டு சிரிக்கத் தொடங்கினாள். பின் விளையாட்டுச் சாதனங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்.

பூங்காவில் அவளுக்குத் தோதாக இருந்த ரயில் வண்டியில் அழைத்துச் சென்றோம். கைதட்டி மகிழ்ந்தாள்.

இந்தப் புது அனுபவத்தை அவளுக்குக் கொடுக்கத்தானே இத்தனை மெனக்கெடலும்!

கீழே இறங்கி வந்ததும் பால் கேட்டு அழுதாள். அங்கேயே ஓர் இடத்தில் மறைவாக அமர்ந்து பால் கொடுத்தேன். அதற்காகவே பிடித்த உடைகளையெல்லாம் விட்டுட்டு, பால் கொடுக்க ஏதுவான உடை அணிந்து வந்தேன்.

பால் கொடுத்து கொஞ்ச நேரம் கழித்து கஞ்சி கொடுத்தேன். குடிக்க அடம் பிடித்தாள் வேடிக்கை காட்டிக் கொண்டே மெல்ல மெல்ல கரண்டியில் ஊட்டினேன்.

அதற்குள் என் கணவரும் நண்பர்கள் குடும்பமும் விளையாடத் தொடங்கி விட்டார்கள். சாகச சவாரிகள் பல செய்தார்கள்.

கஞ்சியைக் குடித்துக் கொண்டிருந்தவள் அப்படியே என் மேல் தூங்கினாள்.

நான் ஒரு மரத்தின் அடியில் போட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தேன். அவள் மேல் வெயில் படாமல் பார்த்துக் கொண்டேன்.

நன்றாக உறங்கினாள். அவளை யாரிடமாவது கொடுத்தால் தூக்கம் கலைந்து எழுந்து விடுவாளோ என்கிற பயத்தில் அப்படியே வைத்திருந்தேன்.

சற்று நேரம் கழித்து வந்த கணவர், அவளைத் தன் தோளில் போட்டுக் கொண்டார். தட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்ததில் மீண்டும் உறங்கினாள்.

அந்தச் சமயத்தில் நான் இரண்டு, மூன்று சவாரிகளில் சென்று வந்தேன்.

தூக்கம் கலைந்து எழுந்தவள் அழுதாள்.

தண்ணீர் கொடுத்து முகத்தை துடைத்து விட்டு, டயபர் மாற்றி விட்டு, உடை மாற்றிவிட்டேன்.

ரசம் சாதம் எடுத்து ஒரு வாய் சாப்பிட்டுப் பார்த்தேன் நன்றாகத்தான் இருந்தது. அவளுக்கு ஊட்டத் தொடங்கினேன். 

இரண்டு வாய் அமைதியாகத்தான் வாங்கினாள். அதற்குள் பூங்காவில் எங்களுக்கு ஆர்டர் செய்திருந்த பிரியாணி மற்றும் துரித உணவுகள் வந்தன. அதைப் பார்த்ததும் அதுதான் வேண்டும் எனக் கேட்டு அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டாள். 

எனக்கு அந்த உணவு வகைகளை ஒரு வயது குழந்தைக்குத் தர இஷ்டம் இல்லை. ஆனால் அவள் கேட்பதாக இல்லை.

அந்த உணவு வகைகளையே கையை நீட்டி நீட்டிக் கேட்டாள்.

ரசமும் ஊட்ட முடியாமல் நானும் சாப்பிட முடியாமல் அவளைச் சமாதானம் செய்தேன்.

கணவர் உண்டு முடித்துவிட்டு, அவளை வாங்கியதும் நான் சாப்பிட்டேன். கடைசி வரை அவள் சாப்பிடவே இல்லை.

அடுத்ததாக அனைவரும் நீர்விளையாட்டுகளை விளையாடச் சென்றார்கள்.

வழக்கம் போல் அவர் முன்னதாக வேகவேகமாக அனைத்திலும் ஒரு சுற்று சென்று வர நான் அதுவரை அவளை வைத்துக் கொண்டு வேடிக்கைக் காண்பித்துக் கொண்டிருந்தேன்.

எப்போது தூங்குவாள் எனப் பார்த்து யாரிடமாவது கேட்டு அவளை வீட்டிலேயே விட்டுவிட்டு வருவதற்கு, அவளையும் அழைத்து வந்து வேடிக்கைக் காண்பிப்பது பரவாயில்லை தானே. அதுவும் எப்போது வீட்டுக்குப் போவோம், அவள் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. என்னிடம்தான் இருக்கிறாள் கிளம்பி வேண்டிய அவசரம் இல்லை அதில் ஒரு நிம்மதி.

அவர் வந்ததும் கொஞ்ச நேரம் நான் சென்று விளையாடி விட்டு வந்தேன்.

இன்றைய சூழலில் பலர் தங்கள் குழந்தைகளோடு சிறு வயதில் இருந்தே பயணங்கள் மேற்கொள்வதை காணும் போது உற்சாகமாக உள்ளது.

குழந்தையைப் பாதுகாப்பாக முன் ஏற்பாடுகளோடு அவ்வப்போது வெளியில் அழைத்துச் சென்று வருவது இருவருக்கும் புத்துணர்வைத் தருவது நிஜம்தான்.

ஆனால் இவ்வளவு மெனகெட்டும் வீட்டிற்கு வந்ததும் அன்றோ அடுத்த நாளோ அவள் இருமி விட்டால்  மீண்டும் மனம் சோர்ந்து போகும். அதையும் சமாளித்துத்தானே ஆகவேண்டும்!

(தொடரும்)

படைப்பாளர்:

ரேவதி பாலாஜி

சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.