கேள்வி

குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது முக்கியமா! என்ன?

பதில்

 இந்த தொடரின் தலைப்பை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தை வளர்ப்பு 2.0 இதை  இன்னும் விரிவுபடுத்தி 3.0, 4.0 என்று கூட நீடிக்கலாம். குழந்தைகள் பிறக்கின்றனர், அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். இதில் என்ன 2.0, 3.0 என்ற ஏமாற்று வேலை என்று நீங்கள் நினைக்கலாம்.

இதில் ஏமாற்றும் செயல் ஏதும் இல்லை . இது டிஜிட்டல் உலகம். 30 வருடங்களுக்கு முன் கணினி, செல்போன், ஊடகங்கள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு நாம் சொல்லும் செய்திகள் மட்டும் தான். அவர்களாக செய்தித்தாள்கள், புத்தகங்களை படித்து புரிந்து கொள்ளும் வயது வரை, சுமார் 15 வயதிற்கு மேல் வேறு எப்படியும் செய்திகள் கிடையாது. வானொலி இருந்தது அதிலும் உண்மைக்கு புறம்பாகவோ, தரமற்றதாகவோ செய்திகள் ஏதுமில்லை. என் அனுபவத்திற்கு நான்  உறுதியாக சொல்ல முடியும்.

 இது செய்திகளின் உலகம். Information Boom காலக்கட்டத்தில் இருக்கிறோம். வெடிகுண்டு போல் வெடித்து சிதறி உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவும் பலவித செய்திகள் ஒரு அறைக்குள்ளே உள்ளங்கையில் கிடைத்து விடுகின்றன. உண்மையானவை, உண்மைக்கு புறம்பானவை, முற்றிலும் திரிக்கப்பட்டவை என்று பலவித செய்திகள் உண்டு. இவற்றைப் பல கோணங்களில் பார்த்து, மனதில் ஏற்றுக்கொண்டு, தரம் பிரித்து பயன்படுத்துவது என்பது வளரும் குழந்தைகளுக்கும் , அறியா பருவத்தில் இருக்கும் பிஞ்சு மூளைக்கும் மிகவும் கடினம். அதனால் அவர்கள் மனரீதியாகவும் உணர்வு ரீதியாகவும், எது சரி, எது தப்பு என்று குழப்பத்திலேயே இருக்கிறார்கள். குழந்தைகளிடையே மனநிலை பாதிப்பு மிக வேகமாக அச்சுறுத்தும் அளவில் அதிகரித்து வருகிறது.

 எது நல்லது எது கெட்டது என்பதை எப்படிப் புரிந்துகொள்வது, எந்த தருணத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், சரியான முடிவு எடுப்பது எப்படி, பிரச்சனைகளை புரிந்து கொண்டு தீர்ப்பது எப்படி என்று பல செயல்பாடுகளுக்கு கதைகள் மிகச்சிறந்த உதாரணங்களையும், வழிகாட்டுதல்களையும் கொடுக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள 10 வாழ்வியல் நெறிகளை (Life Skills)  குழந்தைகளுக்கு மிக எளிதாக எடுத்து சொல்ல கதைகள் உதவுகின்றன. உதாரணமாக இராமாயணம் மற்றும் மாகபாரதக் காவியங்களைக் கூறலாம் .

மேம்போக்காகப் பார்த்தால் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதும், உடன்பிறந்தோர்கள் இடையே இருக்க வேண்டிய அசைக்க முடியாத மதிப்பையும், அன்பையும் இராமாயணம் காட்டுகிறது. ஆணவமும், சொத்துக்காக பேராசையும், குடும்பத்தில் கலகங்களை ஏற்படுத்தி பேரழிவை ஏற்படுத்தும் என்பதை காட்டுகிறது. சிறு சிறு கதைகளாகப் பிரித்து குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப புரியும் வண்ணம் இவற்றை மிகைப் படுத்தாமல் சொல்லி, கதையின் ஊடே இந்த நல்ல கருத்துக்களைச் சொல்லலாமே? முடிவில் நீயும் தம்பியும் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது, ஒற்றுமையாக இருக்க வேண்டும், விட்டுக் கொடுத்து போக வேண்டும் என்று புரிய வைக்கலாமே?

சுமார் 25 வருடங்களுக்கு முன்னால் குழந்தைகளுக்குப் பெரிய பொழுதுபோக்கே பாட்டி தாத்தாவின்  கதைகள் தானே? சிறுவர்களைத் தூங்க வைத்து, பக்கத்தில் அணைப்பாகப்படுத்துக் கொண்டு, தலையைத் தடவி, கண்ணோடு கண் பார்த்து பாட்டி சொன்ன கதைகள் தாம் Bed Time Stories  ஆயின. அன்பாகப் பேசும் பாட்டியிடம் இருந்து அமைதியான இரவு நேரத்தில் அரை இருட்டில் நல்ல செய்திகள் காதில் விழுந்தால் குழந்தை மனம் எவ்வளவு அமைதிப்படும். தூக்கமும்  சொக்கிக் கொண்டு வருமே! அதிவேகமாக, வண்ணக் குவியல்களான செல்போன் விளையாட்டுகளும், குழந்தைகளிடமிருந்து வெகு தூரம் தள்ளித்தான் நிற்க வேண்டும்.

7 வயது குழந்தை இரவு ஒரு மணி வரை செல் பார்க்கிறான், தூங்குவதில்லை, காலையில் எழுப்ப முடிவதில்லை என்று அங்கலாய்க்கும்  இளம் தாய்மார்களே! கதைகளை படியுங்கள். குழந்தைகளுக்குச் சொல்லுங்கள்.

black teacher reading a book to kids of different ethnicities

பாட்டி வடை சுட்ட கதை எல்லோருக்கும் தெரியும். காக்கையை நரி ஏமாற்றியதும்… இதில் நரி  சாமர்த்தியசாலியா? இல்லவே இல்லை! ஒருவரை ஏமாற்றிப் பிடுங்குவது புத்திசாலித்தனம் இல்லை; பெரிய தவறு என்று குழந்தைக்குப் புரிய வைக்கவேண்டும்.

இந்தக் கதையில் இன்னொரு நீதியும் இருக்கிறது  காக்கையின் குரல் அழகை நரி வர்ணிக்கிறது. காக்காய்க்கு  தன்  குரல் எப்படிப்பட்டது என்று தெரிந்தும் புகழ்ச்சிக்கு மயங்கி வடையை இழந்தது. இப்படி யாராவது சொன்னால் ஒரு நிமிடம் யோசித்து பிறகு செயல்பட வேண்டும் . வீண் புகழ்ச்சிக்கு  அடிபணியக்கூடாது என்றும் குழந்தைக்கு புரிய வைக்க வேண்டும். வளர் இளம் பருவத்து பிள்ளைகளுக்கு தன்னுடைய பலம் (Strength), பலவீனம் (Weakness) இரண்டையும் நன்றாக புரிந்து கொண்டு நடந்து கொள்வதும், பலவீனங்களை பலமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்வதும் முக்கிய வாழ்வியல் திறன்கள்.

குளிரில் நடுங்கும் மயிலுக்கு சால்வை கொடுத்தான் ஒரு மன்னன் . மற்றொருவன் முல்லைக் கொடிக்கு பின்னி வளரத்  தேர் கொடுத்தான். இதன் மூலம் நமது சங்கத்  தமிழ் நூல்கள் துன்பப்படும் ஒருவருக்கு ஒரு உயிருக்கு உதவுவது கட்டாயம் என்று சொல்லி  இருப்பதை குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும்.

என் உறவினர் ஒரு பெண்மணி வீட்டில் உள்ள செடிகளைப் பற்றிக் குழந்தைகளுக்கு சொல்லும்போது, “இது செடிப் பாப்பா. இலைகளைக் கிள்ளினால் அதற்கு வலிக்கும் . உனக்கு வலிக்கும் அல்லவா அதேபோலத்தான் செடிப்பாப்பாவுக்கும் வலிக்கும்” என்பார். அப்படி வளர்க்கப்பட்ட குழந்தை மரங்களை வெட்டாது.

 கதைகளை சொல்லும் போது குழந்தைகளை கண்ணோடு  கண் பார்த்து, நமது முக பாவங்கள், கண்களின்  பாவங்கள், உடல் மொழி ஆகியவற்றை அளவாக, தேவையான இடங்களில் சொருகிக் கதை சொன்னால் கேட்காத குழந்தையும் ஆசையாகக் கதை கேட்கும். தொலைக்காட்சியிலும் அலைபேசியிலும் குழந்தையின் ஆர்வம் தானாக குறையும்.

 தகவல் தொழில்நுட்பம் வானமே எல்லையாக வளர்ந்து பல நன்மைகளை செய்து வருகிறது. இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் பலதரப்பட்ட, தரமற்ற  தகவல்களால் நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. குழந்தைகளை திசைதிருப்ப  முதல் உத்தி  மிகப் பழமையான உத்தி,  கதை சொல்வது!

கதைகளைக் கேட்டு வளர்வதால் குழந்தைகளுக்கு என்னென்ன பயன்? இவை அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையில் தொகுக்கப்பட்டவை.

  1. சிந்திப்பது, மனதில் உருவங்களை செயல்களை சித்தரித்துக் கொள்வது, கருத்துக்களை தொடர்பு படுத்திப் பார்ப்பது ஆகியவை உருவாகின்றன.
  2.  குழந்தைகளுக்கு அன்பு ,கருணை போன்ற உணர்வுகள், பிறர் சிரமத்தை தன்னுடன் பொருத்திப் பார்ப்பது போன்றவை வளர்கின்றன.
  3.  சமுதாயம் சார்ந்த, வாழ்க்கைக்கு தேவையான முடிவுகளை எடுப்பது, பிரச்சனைகளை சுமுகமாகத்  தீர்ப்பது, பலவித மனிதச் செயல்பாடுகள் ஆகியவற்றை புரிந்து கொள்கின்றனர்.
  4.  குழந்தைகளின் மொழி, தகுந்த வார்த்தைகள் பயன்படுத்துவது, பேச்சுத் திறன், எழுதும் திறன் போன்றவை அதிகரிக்கின்றன.
  5.  குழந்தையின் கற்பனைத்  திறன் மேம்பட்டு படைப்பாக்கத் திறன் (Creativity) உருவாகிறது.
  6.  குழந்தைகளின் படிக்கும் திறனும், ஆர்வமும் அதிகரிக்கிறது. இலக்கியங்களில் ஆர்வம் அதிகரிக்கிறது.
  7.  குழந்தைகள் மனதில் நேர்மை, மற்றவர்களுக்கு உதவுவது, பெரியோர்களை மதிப்பது போன்ற நற்பண்புகள் ஏற்படுகின்றன.
  8.  குழந்தைகளின் முடிவெடுக்கும் திறன்கள், தீர ஆலோசித்து பல கோணங்களில் சிந்தித்து முடிவுகள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆகியவை அதிகரிக்கின்றன.
  9.  கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், கோபம், வருத்தம், மகிழ்ச்சி ஆகியவற்றை எப்படி கையாள்கிறார்கள் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்கின்றனர்.
  10.  குழந்தைகள் தன்னை உணர்வதற்கும் (Self Identity) தன்னிடம் இருக்கும் எப்படிப்பட்ட அம்சங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று யோசிப்பதற்கும் பெரிதும் உதவுகின்றன.

            ஒரு குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு, சமூகத்துடன் ஒத்து வாழ்வதற்கு, நண்பர்களை தேர்ந்தெடுப்பதற்கு, மற்றவர்களின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் மதிப்பதற்கு  சிறு வயது முதலே கதைகளை கேட்டும் , படித்தும் வளர்வது முக்கியம்.

ஆகையினால் கதை சொல்லுங்க, சொல்லுங்க, சொல்லிக்கிட்டே இருங்க பெற்றோர்களே!

படைப்பாளர்

மரு. நா. கங்கா

நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.