காவேரி, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.
ஏ.எஸ்.ஏ.சாமி எழுதி, கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை, டி.யோகானந்த் இயக்கியுள்ளார்
சிவாஜி கணேசன் விஜயன்
NS கிருஷ்ணன் மணிமொழி
MN நம்பியார் ஞானாமிருதம்
வீரப்பா செங்கனல்
D பாலசுப்ரமணியம் நெல்லையப்பர்
R பாலசுப்ரமணியம் வெற்றி வேந்தர்
ER சகாதேவன் சிங்கம்
TE கிருஷ்ணமாச்சாரி அருள்நிறை மன்னன்
TK சம்பங்கி மந்திரி
புளிமூட்டை ராமசாமி சேவகன்
கொட்டாம்புளி ஜெயராமன் மெய்க்காப்பாளர்
மற்றும் ராஜகோபால், சங்கர மூர்த்தி, வீராசாமி, கரிக்கோல் ராஜ் முதலானோர்
பத்மினி காவேரி
லலிதா அமுதா
TA மதுரம் தங்கம்
ராகினி குறத்தி
குசலாகுமாரி, மாடி லட்சுமி – நடனமாது
ருஷ்யேந்திரமணி மகாராணி
M சரோஜா சுந்தரி
அங்கமுத்து மணிமொழியின் தாயார்
நடன மாதர்கள்
ரீடா, தனம், தங்கம், குமாரி, விசா, பிரகதா, சரஸ்வதி
கதை வசனம் சினாரியோ ASA சாமி
பாடல்கள் உடுமலை நாராயணகவி
சங்கீத டைரக்ஷ்ன் G ராமநாதன், விஸ்வநாதன் ராமமூர்த்தி
சி. எஸ். ஜெயராமன், எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி (PG கிருஷ்ணவேணி), பி. லீலா, ஏ. பி. கோமளா. ரத்னமாலா,எஸ். ஜே. காந்தா பி. லீலா
டைரக்ஷன் யோகானந்த்.
திருச்சி மலைக்கோட்டை, திருவரங்கம் கோவில் அருகில், காவிரியில் காவிரி பாடுவதாகத் திரைப்படம் தொடங்குகிறது.
அடுத்து அரண்மனைக் காட்சி. தனது மாறுவேடத்தைக் கலைத்து விட்டு, விஜயன், உள்ளே வருகிறார். விஜயன் தான் அந்நாட்டின் இளவரசன். அரசரும் அரசகுருவும், புதுமைப்பிரியன் என ஒருவன் நாட்டில் கலகம் செய்வதாகப் பேசிக்கொள்கிறார்கள். இப்போதே தெரிந்து விடுகிறது. விஜயன் தான் புதுமைப்பிரியன் என.
இந்தக் காலகட்டத்தில், கப்பம் கட்டவேண்டிய நிலுவைத் தொகையைக் கட்ட வேண்டும் என மணிப்புரி நாட்டிலிருந்து தூதுவனாக, செங்கனல் வருகிறார். இதனால், கையில் இருக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டுக், கால அவகாசம் கேட்டு, விஜயன் மணிப்புரி செல்கிறார். மணிப்புரி இளவரசி அமுதாவிற்கு, விஜயனைக் கண்டதும் காதல், அவர் தனது கையிலிருந்த, தனது பாட்டன் கொடுத்த பணத்தைக் கொடுக்கிறார். விஜயன் கடனை அடைத்து ஊர் திரும்புகிறார்.
தன் கைக்கு நாடு வரும்போது, அதை மக்களாட்சியாக மாற்றவேண்டும். அதற்கு மக்களைப் பக்குவப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் விஜயன் மாறுவேடத்தில் அலைகிறார். காவேரி, ஊரில், உணவு மற்றும் தங்கும் விடுதி வைத்து இருப்பவரின் மகள்.
புதுமைப்பிரியன் வேடத்தில் இருக்கும் விஜயனும் காவேரியும் காதலிக்கிறார்கள்.
அமுதாவின் வற்புறுத்தலால், விஜயனை மாப்பிள்ளை கேட்டுத் தூது அனுப்புகிறார், அமுதாவின் தந்தை. விஜயனின் அப்பா திருமணத்திற்கு வற்புறுத்துகிறார். விஜயன் மறுக்கிறார். இளவரசு பட்டம் கூட வேண்டாம் என்கிறார். விஜயன் மணிப்புரி கொண்டு செல்லப்படுகிறார். செங்கனல் காவேரியைத் திருமணம் செய்ய விரும்புகிறார். அதனால் காவேரியும் கொண்டு செல்லப்படுகிறார். அமுதா, காவேரிக்குப் பாலில் நஞ்சு கலந்து கொடுக்கிறார். வழக்கம் போல கோப்பை மாறிவிடுகிறது. அமுதா இறக்கிறார். விஜயன்- காவேரி திருமணம், அமுதாவின் சிலை அருகில் நடைபெறுகிறது. இரு நாடுகளும் ஒற்றுமையாகின்றன.
திரைப்படம் தொடங்கும் போதே அடுத்தடுத்தாக இரண்டு பாடல்கள் வருகின்றன.
காவேரித் தண்ணீர் பட்டால்
கன்னியர் மேனி தங்கம் -ஆகும்
கன்னியர் மேனி தங்கம்
பார் மேவிய சீர் ஓங்கிட
காட்சி தரும் ரங்கம் -ஸ்ரீரங்கம்
நாடு நலம்பெற காடு விளைந்திட
பாடுபடும் மக்கள் வாழ்ந்திடவே
ஞான விநாயகனைப் பாடி
நங்கையரே கும்மி கொட்டுங்கடி
ஏட்டுப் படிப்பு படித்தாலும் – புகழ்ப்
பட்டம் பதவிகள் பெற்றாலும் – பெண்கள்
வீட்டுப் படிப்புப் படிக்கவேணுமென்று
விளங்கிடக் கும்மி கொட்டுங்கடி
ஞான சங்கீதம் படித்தாலும் – பெண்கள்
நாட்டியம் ஆடத் தெரிந்தாலும் -பானை
பிடித்துப் பழகவேணுமென்றே
பாடிக் கும்மியும் கொட்டுங்கடி
குடித்தன முறைமை படித்திட வேணும்
குடும்பம் நடத்தவும் வேணும் – பெண்கள்
கோழி கூவும் அதிகாலையிலெழுந்து
கூட்டிப் பெருக்க வேணும் – பெண்கள்
வீட்டை மெழுக வேணும்.
இடுப்பது வளைத்திட எழில்தரும்
விதமாய்க் கோலம் போடோணும் – நன்றாகக்
படுக்கையறையும் அடுப்பங்கரையும்
சோற்றுப் பானை சட்டி
பாத்திர பண்டம் பத்தும் விளக்கோணும் – விளக்கிச்
சுத்தம் செய்யோணும்.
குருணி நெல்லே உரலி லிட்டுக்
குத்திப் புடைக் கோனும்
குடங்குடமாத் தண்ணீரெ ஓடோடி எடுக்கனும்
கொப்பரை அண்டா குண்டா நிறைய ரப்போனும்.
பரிவோடு கன்றையே பாலூட்ட வைக்கோணும்
பசுவில் பத்திரமாகக் கறக்கணும் – பாலைப்
பசுவில் பத்திரமாகக் கறக்கணும்.
பக்குவமாய்ச் சோறு வடிச்சு
பருப்புச் சாம்பாரு வச்சு
மிக்க சுவையான ஒரு கறியோடு – தாலி
கட்டினவன் வேர்வை சிந்தக் கஷ்டப்பட்டுச்
சேர்த்த பணந் துட்டுதனை
வீண்செலவு புரியாமல் – பெண்கள்
சிக்கனமாய் வாழ்க்கை செய்து பழகோணும்.
இதில் கூறும் வார்த்தைபோல் குணமாய்ப்
பெண்கள் தெரிந்து நடக்க வேணும் – விபரம்
புரிஞ்சு நடக்க வேணும்
“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.”
என்ற பாரதியின் பாடலுக்கு எசப்பாட்டுப் பாட்டுப் பாடும் விதமாக இது அமைந்துள்ளது. இரண்டு பெண்கள் கையில் புத்தகங்கள் கொண்டு வருகிறார்கள். அவற்றைப் பிடுங்கிக் கீழே வைத்து விட்டு நாயகி பாடுகிறார். புத்தகம் என்பது பெண்ணின் கைக்கு வருவதற்கு எத்தனை போராட வேண்டி இருந்தது. ஒரே காட்சியில் இயக்குநர் பிடுங்கிக் கீழே வைத்து விட்டது போலத் தோன்றியது.
உடுமலை நாராயண கவி எழுதி, எம். எல். வசந்தகுமாரி சி. எஸ். ஜெயராமன் இணைந்து பாடிய பாடல் இது. மிகவும் புகழ் பெற்ற பாடலிது.
மஞ்சள் வெய்யில் மாலையிலே
வண்ணப் பூங்காவிலே
பஞ்சவர்ணக் கிளிகள்
கொஞ்சும் பரவசம் பார்!
அஞ்சுகத்தின் பாஷையிலே
ஆணும் பெண்ணும் பேசயிலே
ஆனந்தக் காட்சி யங்கே காணுது பார்!
செண்பகத்தின் மேனியிலே
தென்றலது மேவி அன்போடு
முத்தாடும் சல்லாப
அழகினைப் பாராய்
ஒன்றுபடும் காதல் சிங்காரம்
ஒற்றுமையைப் பார் இந்த நேரம்
இன்பரச வாழ்க்கை வைபோகம்
என்றும் நமதாகுமே
நினைத்தாலும் பார்த்தாலும் இனிக்கும்
அன்பே நிஜமாகவே
மனத்திலே நான்
மனக்கோயில்தனில் வாழும்
மகாராணியே -என்
உனக்காக நான்
எனக்காக நீ
கனியது உருமாறி வந்ததுபோல்
கண்ணே! கண்காணும் காட்சி நீயல்லவோ?
துணையாக எனையாளும் சுவாமியன்றோ?
சொந்தம் இனிமேல் இருவருமே
இணைபிரியாச் சதிபதி நாம்
மஞ்சள் வெய்யில் மாலையிலே
வண்ணப் பூங்காவிலே மாறாத ப்ரேமை கொண்டே மகிழ்ந்திடுவோம்.
உடுமலை நாராயண கவி எழுதி, சி. எஸ். ஜெயராமன், ஜிக்கி இணைந்து பாடிய பாடல்;
அன்பே என் ஆருயிரே
அங்கு நிற்பதேனோ?
யாருமில்லா வேளையிலே
இந்த வெட்கமேனோ?
இன்பமாம் ராஜபோகம்
ஏழைக் கேதுஸ்வாமி?
இருவர் நாளும் உறவுகொண்டால்
ஏற்குமோ இப்பூமி?
அரசனென்றாலும் ஆண்டியென்றாலும்
மருவிய காதலிலே பேதமுண்டோ?
ஆசையினால் பேசும் வாசகமா? நிஜமா?
அன்பாலென்றும் ஒன்று சேருமா?
சந்தோஷந் தீர்ந்தால்பின் மாறுமா?
கற்ற கலை ஞானமென்னும்
கடவுள் மீதில் ஆணை
கனவிலும் என் நினைவிலும் நான்
கைவிடேனே மானே
வெற்றியும் நீரே வீரமது நானே
உற்றதுணை நாமேதான் உலகினிலே.
வேண்டுமென் பாக்கியமெல்லாம்
வேல்விழி நீயல்லவோ?
வேண்டாத வீண் புகழ்ச்சி வேணுமா?
கண்ணே இன்னுங்கூட நாணமா?
அன்பே யென்னாருயிரே
அறிவொடு நாமே!
என்னைவிட்டு எங்கே போனே மானே?
இன்பதுன்பம் இருவகையில் இசைந்து வாழுவோம்!
https://www.youtube.com/watch?v=pRuG1Nr0LCo
ஜிக்கி பாடிய பிரபலமான பாடல் இது.
என் சிந்தை நோயுந் தீருமா?
தீயன் சூழ்ச்சி மாறுமா?
ஸ்நேகம் ஒன்று சேருமா? என்
தாயில்லா ஏழை நான் தரணிமீது வாழ்வெனோ? சகாயம் தானில்லாது பெருமை தாழ வீனில் மாள்வெனோ? தந்தை அன்பைக் காண்பெனோ? சாந்தி தேடிப் போவேனோ?
மணம் பெறாத மல்லிகை
மாண்பு குறைதல் போலவே
மாதும் நானும் சீரிலாப் பேதையாதல் ஞாயமா?
மாசிலாத தெய்வமே தேவியே கண் பாரம்மா!
இப்பாடல் ஏறக்குறைய அனார்கலி திரைப்படத்தில் வரும் ஜீவிதமே சபலமோ என்ற பாடல் போன்றே இருக்கும். இரு பாடல்களும் ஒரே திரைப்படத்தின் பாடல்கள் என்றே நினைத்திருந்தேன்.
உரையாடல்கள் இன்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. கதை, வசனம், சினாரியோ ASA சாமி எனப் போடுகிறார்கள். ASA சாமி, தனது திறமையை மீண்டும் நிரூபித்த திரைப்படம். ஆனாலும், பெண்ணிடமிருந்து ஏட்டைப் பிடுங்கிவிட்டு, சமைக்க வேண்டும் என்பது போல வருவது நெருடல்.
‘புதுமைப்பிரியன் ஒழியவேண்டும் என்பதில் இருக்கும் அக்கறையை, அவன் கூறும் கருத்துக்களில் திருப்பினால்?’,
என விஜயன் கேட்க,
‘ஆலோசனை கூற உனக்கு அனுபவம் போதாது’
எனப் பதில் வருகிறது.
‘மங்களபுரி என்ற நாட்டின் பெயரை ஞானபுரி என மாற்ற வேண்டும். திக்கெட்டிலும் உள்ள மக்கள் இதை ஒரு திருத்தலமாகக் கருத வேண்டும்.’
‘வேம்புக்கு வெல்லம் எனப் பெயரை மாற்றினால் அதன் கசப்பு மாறிவிடுமா? மங்களபுரி ஞானபுரி என மாறிவிட்டால் நாட்டில் நிலவும் பஞ்சம் பட்டினி மாறிவிடுமா?’
‘அப்போதே சொன்னேன் ஆலோசனை கூற உனக்கு அனுபவம் போதாது என்று!
‘தூது செல்லக்கூடாது துறவி’
‘ஆனால் அரசியலுக்கு மட்டும் ஆலோசனை கூறலாம்!
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
திரைப்படத்தின் காட்சியமைப்பை, அரங்க அமைப்புகள் எல்லாம் மிகவும் அழகாக இருக்கின்றன. குறிப்பாக ‘மஞ்சள் வெயில் மாலையிலே வண்ண பூங்காவிலே’ பாடல் காட்சி மிகவும் அழகு. கங்கா என்பவர் ஆர்ட் வேலைகளைச் செய்து இருக்கிறார்.
பத்மினி தான் நாயகி என்றாலும், லலிதா தான் கூடுதல் காட்சிகளில் வருவது போலத் தெரிகிறது. நடிப்பிலும் அவர் தான் முன்னணியில் இருக்கிறார்.
நடிகர் திலகத்தின் நடிப்பு என்பதைச் சொல்லியே ஆகவேண்டும். தொடக்கத்தில் ராஜகுருவுடன் விவாதம் நடத்தி முடிக்கும்போது, நம்பியார் ‘மங்களம் உண்டாகட்டும்’ என சொல்ல நடிகர் திலகம் ‘தன்யனானேன் ஸ்வாமி’ என சொல்லும் காட்சி அவரின் எள்ளலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. ‘காலைத் தூக்கி நின்றாடும்’ பாடலுக்கு அவர் உளநிலை சரியில்லாதவராக ஆடும் ஆட்டம் அவ்வளவு இயல்பாக உள்ளது. விஜயனாக வருவதை விட, மச்சம் வைத்து மாறுவேடத்தில் வரும் போது மிகவும் நன்றாக இருக்கிறார்.
சந்தோஷம் கொள்ளாமே
சாப்பாடும் இல்லாமே
தாய்நாடு திண்டாட்டம் போடுதே
தினம் அன்றோர் துன்பம் கொஞ்சமா?
நெஞ்சமே அஞ்சுதே பஞ்சத்தால்
நாடு வாடுதே
வேலையில்லே வேலையில்லே -செஞ்சா
கூலி இல்லே கேட்பார் யாருமில்லே நாட்டிலே- ஏழை
விவசாயம் வீணாச்சு காட்டிலே
உயர் வெண் மாரி தான் விழி மேலே
அழுகையால் பொழியுதே
நாடு பஞ்சத்தால் வாடுதே
ராஜா இவரு மகா ராஜா இவரு
ராஜ்யத்தைப் பாக்காதவரு
நன்மை தீமை தெரியாதவரு
ராத்திரி பகலா தூங்கிடுவாரு
அருள்குரு நாதன் ஞானாநந்தர் -இந்த
ஆட்டிவைப்பதே பொம்மை
அவரும் இவரும் ஒண்ணா சேர்ந்தா
எப்படி கிடைக்கும்
நாட்டுக்கு நன்மை?
மூளையில்லா ராஜாவுக்கு மூணு பேரு மந்திரி -இந்த
ரெண்டு பேரு தற்குறி ஒருத்தன் படிக்கவேயில்ல
அழகான அரசாங்கப் பிள்ளை -இவரு
அறியாதவர் உலகம் தெரியவே இல்லை
அப்பனைப் போலவே இருப்பார் -இவரும்
என்று செப்புகிறார் -இவரைப்
பலபேர் மதிப்பார்.
கற்பனைப் பேச்சல்ல உண்மை -இன்னும்
கல்யாணம் இல்லாத உல்லாச பொம்மை
ஜிக்கி பாடிய பாடல் ஒன்று உள்ளது. நாட்டின் நிலைமையை விளக்கும் பாடல். பத்மினி தான் ஆடுகிறார். சிவாஜி, பத்மினி இருவர் நடிப்பும் அவ்வளவு அழகு.
ராகினி கைரேகை பார்க்கும் பெண்ணாக வந்து ஆடும் நடனம் மிகவும் சிறப்பு.
தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.