அவர்கள் வேக வேகமாக நடந்து அந்த ஆலமரத்தடிக்குச் சென்றார்கள். தலையைச் சீவாமல் பரப்பிக் கொண்டு நூற்றாண்டுகள் கடந்த அந்த ஆலமரம் ‘ஹோ’வென்று நின்றிருந்தது. அங்கிருந்த சிறிய கல்மேடையில், வலது காலை மடித்து வைத்து, வலது கரத்தில் அபயஹஸ்தம் கொடுத்து அமர்ந்திருந்த சிலைக்கு சிவப்பு புடவை கட்டி, மேலெல்லாம் குங்குமம் தெளிக்கப்பட்டிருந்தது. சிலையின் வயிறு நிறைமாசமாய் மேடிட்டிருந்தது. ஒரு காய்ந்த சாமந்திப் பூமாலை சிலையின் கழுத்தில் எப்போதோ போடப்பட்டு, காற்றில் தாறுமாறாக அலைக்கழிந்து கொண்டிருந்தது. பிசுக்கு தட்டிப் போயிருந்த சிலைக்கு அருகில் காய்ந்த எலுமிச்சம் பழங்கள் தோல் சுருங்கிக் கருத்துக் கிடந்தன. நான்கைந்து மண் விளக்குகள் எண்ணெய்ப் பிசுக்கோடு திரி முழுவதும் எரிந்த கோட்டை வயிற்றில் சுமந்து கொண்டு சிதறிக் கிடந்தன.
அந்தச் சூழல் ஐராவதிக்கு அமானுஷ்யமாகத் தோன்றியது. இரண்டு பெரிய வேர்களுக்கு இடையே திண்டு மாதிரி இருந்த அமைப்பில் சாய்ந்த வாக்கில் உட்கார்ந்து கொண்டு சாவதானமாக வெற்றிலையை மென்று கொண்டிருந்த அந்தக் கிழவி பார்வையில் விழுந்தாள். உடன் வந்தவளைப் பார்த்தாள்.
“க்கா.. அது கூனிக் கிழவி. உங்களுக்கு என்ன வெவரம் வேணுமோ கேட்டுக்குங்க. எங்கூர்லயே ரெம்ப வயசாளி இதான்.” அவள் தலையைச் சொரிந்து கொண்டே சொன்னாள்.
நெருங்கிச் சென்றார்கள். அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்த கூனிக் கிழவி வெயிலுக்குப் பார்வை கூச, கையை கண்ணுக்கு மேலாக மறைப்பு வைத்துக் கொண்டு பார்த்தாள். “ஆருத்தா நீயி..?”
ஐராவதி பக்கத்தில் இருந்த வேர்த் திண்டில் அமர்ந்தாள். “பாட்டி… அவுங்க மெட்ராஸ்லருந்து வந்துருக்காங்க. ஏதோ கதை எளுதறவுங்களாம்” உடன் வந்தவள் சொன்னாள். “எங்கூட்ல தான் இருக்காங்கோ…”
கூனிக் கிழவி முகத்தைச் சுளித்தாள். “உங்கூடு எங்கிருக்குத்தா?”
“ம்… நாந்தேன் மச்சு வூட்டுப் புள்ளை நீலாமணி. இந்த இடத்துக்கு நான் வந்தது எங்க வூட்டுக்கு மட்டும் தெரிஞ்சுதுன்னா அவ்ளோதான்” அவளும் அமர்ந்தாள். “இந்தா மாசாணி ஆத்தா. இவுங்க கேக்குறதைச் சொல்லு மொதல்ல” என்றாள்.
“பாட்டிம்மா… உங்களுக்கு என்ன வயசு..?”
அந்தக் கிழவி ஐராவதியைப் பார்த்துச் சிரித்தாள். “எனக்கு அதெல்லாம் தெரியாது கண்ணு. ரொம்ப வருஷமா இங்கெதான் கெடக்குறேன். பொறந்து கீழ உழுந்தது, வாக்கப்பட்டது எல்லாம் இங்கெதேன்” புகையிலையைச் சுருட்டி வாயில் அதக்கி, பல்லில்லாத வாயால் மென்று சாற்றை விழுங்கினாள்.
“பாட்டி… நான் சிறு தெய்வங்கள் பத்தின வரலாறுகளைத் தொகுத்து ஒரு புத்தகம் எழுதிட்டு வரேன். நாட்டுப்புறங்கள்ல உயிரோட வாழ்ந்தவங்க சூழ்நிலை காரணமா உயிரை விடவேண்டி வந்திருந்தா அவங்களுக்கு சிலை வெச்சு வழிபட்டு, காலப்போக்கில் தெய்வமாக்கிருக்காங்க. அந்த மாதிரி இருக்குற சாமிங்க வரலாறை பதிவு பண்ணனும். இங்க ஒரு சிலை இருக்குல்ல, இது யாரு, எவருன்னு உங்களுக்குத் தெரியுமா..?” ஐராவதி விளக்கமாகக் கேட்டாள்.
மாசாணிக் கிழவி நீளமாக ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்.
“ம்ம்… தெரியும். அது வேறாருமில்ல என் சிநேகிதக்காரி தான். பேரு காந்தாரி. அது ஆச்சு அறுவது, எழுவது வருஷத்துக்கு மேல. அப்ப எங்க ரெண்டு பேருக்கும் பதினஞ்சு வயசு” மாசாணி இளம் பிராயத்துக்குள் நுழைந்தாள்.
1950 களில் வாழ்க்கை மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த காலக்கட்டம். வேகமாக நடந்து வந்த மாசாணி, அந்தக் குடிசைக்கு முன்னால் நின்று சத்தமிட்டாள்.
“ஏலே காந்தாரி. வெரசா வாடி. பண்ணக்காரம்மா வெள்ளனயே தோட்டத்துக்கு வரச் சொல்லி உட்டாக. கெரகம் கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். உனக்கென்னடி கொள்ளை… நேரமே எந்திரிக்க..? ஒருநாளைப் போல நா வந்து கூவனுமா..?” பொரிந்தாள்.
“கத்தாதடி. உச்சிக்கு பழஞ்சோத்துக்கு தொட்டுக்க உனக்கும் எனக்கும் சேத்து காரசாரமா நெத்திலிக் கருவாடு வறுத்திருக்கேண்டி. அதான் நேரமாயிட்டு. வா போலாம்” என்று வெளியே வந்த காந்தாரி, துலக்கி வைத்த செப்புக் குடம் போல பளிச்சென்றிருந்தாள்.
இடுப்புவரை நீண்டிருந்த முடி இரண்டு கைகளால் கொத்தாகப் பிடித்தாலும் அடங்க மறுத்தது. அதை வேப்பெண்ணெய் தடவி இறுக்கிப் பின்னி மஞ்சள் நிற ரிப்பனை முடிந்திருந்தாள். போன மாதம் சந்தையில் அம்மாவிடம் சண்டை போட்டு வாங்கிய, பச்சையில் சிவப்புப் பூப்போட்ட சீட்டிப் பாவாடையும், அதே துணியில் ரவிக்கையும் போட்டு அம்மாவின் பழஞ்சேலையை இரண்டாகக் கிழித்து, தாவணியாகச் சுற்றியிருந்தாள். “என்னடி மதமதன்னு இருக்கே. எனக்கே பொறாமையா இருக்கு.”
மாசாணி அவளது முகத்தைச் சுற்றி வழித்து திருஷ்டி எடுத்தாள். “பாருடி… படபடன்னு நெட்டி முறியுது. அவ்ளோ திருஷ்டி உம்மேல. இதை ஆள்ற ராசகுமாரன் எந்தக் குதிரை மேல ஏறி வாரானோ..?” என்றவளிடம், “எல்லா இதே ஊருலருந்து தான் வருவான்டி” என்றாள் காந்தாரி. இருவரும் சோத்து மூட்டைகளை எடுத்துக் கொண்டு விரைவாக நடைபோட்டனர்.
வெயில் ஏறிக் கொண்டிருந்தது. பின் வாசலில் கொய்யா மரங்கள் பழுத்துக் கிடந்தன. முருங்கை மரம் சடைசடையான காய்களோடு தொங்கிக் கொண்டிருந்தது. தண்டுங்கீரை செழித்துக் கிடந்தது.
பண்ணைக்காரம்மா பிடிப்பிடியான நகைகளோடு, பச்சை, மஞ்சள் கட்டமிட்ட சுங்குடிச் சேலையுடன் வந்தாள். அவள் கையில் ஒரு சிறிய பாத்திரம் நிறைய கருப்பட்டி போட்ட வரக்காப்பி. பின்பக்கம் இருபது மாடுகள் நின்றிருந்தன. கறவை மாடுகள்தான். ‘பால் காப்பி குடிக்கிற அளவுக்கு அவளுகளுக்கு பவுசு வந்திருச்சா என்ன..? வெறுங்காப்பி போதாதா..?’ இருவரையும் அழைத்தாள்.
அவர்கள் ஆளுக்கொரு தேங்காய் சிரட்டையுடன் வந்து அமர்ந்தனர். பண்ணைக்காரி டம்ளரை உயர்த்திப் பிடித்து, அவர்கள் மீது தனது நிழல் கூடப் படாமல் சிரட்டையில் காப்பியை ஊற்றினாள். முகத்தில் தெறித்த துளிகளைப் புறங்கையில் துடைத்து விட்டு இருவரும் ஆவலுடன் காப்பியைப் பருகினர்.
“அம்மா… இந்த முறுக்கைக் கொடேன். திங்கட்டும் காப்பிக்குத் தோதா…” என்ற குரல் கேட்டு இருவரும் திரும்ப, பின்வாசல் படியை அடைத்துக் கொண்டு கையில் முறுக்குகளுடன் நின்று கொண்டிருந்தான் பண்ணைக்காரியின் மகன் சின்னசாமி. அவள் கோபத்தில் முகம் சிவந்தாள்.
“அதெல்லாம் கொடுக்கலாம். நீ உள்ள போ. பின்கட்டுல உனக்கென்ன வேலை..?” விரட்டினாள். அவன் காந்தாரியை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டே உள்ளே போனான். அவள் லேசாக முகம் சிவந்தாள்.
வேலை முடிந்து அன்றைய கூலியை வாங்கிக் கொண்டு இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்நேரம் வரை மாசாணியின் மனசை அரித்துக் கொண்டிருந்த சந்தேகத்தை அவள் கேட்டாள்.
“ஏலே… நம்ம சின்ன மொதலாளி என்ன உன்னய அப்புடிப் பாக்குறாரு..?” காந்தாரி இன்னும் சிவந்தாள். மாசாணி அதிர்ந்தாள். “ஏ… காந்தாரீ. என்னல..?”
“அவுரு என்னைக் கல்யாணம் பண்ணிக்குறேன்னு வாக்கு குடுத்திருக்காரு… அதுவுமில்லாம நா… நா… இப்ப மூணு மாசம் முழுகாம இருக்கேன்” திக்கித் திணறிச் சொல்லி முடித்தாள். மாசாணி அப்படியே வரப்பில் உட்கார்ந்து விட்டாள்.
“என்னடி சொல்றே..? நம்ம சாதி என்ன? அவுக சாதி என்ன? அவுக ஆண்டைக. நாம அடிமைக. இது ஊர்ல எப்பேர்ப்பட்ட பிரச்சினையைக் கெளப்பும்னு தெரியாதா உனக்கு? இதுதான் காத்தால உன் மதமதப்புக்குக் காரணமா? அய்யோ. எனக்குத் தலைசுத்துதே…” அப்படியே வரப்பில் சாய்ந்துவிட்டாள்.
அதன்பின் காந்தாரியின் வயிற்றையும் காதல் விவகாரத்தையும் ஊருக்குத் தெரியாமல் மறைத்து வைக்க இயலவில்லை. அவளது உறவுகள் ஆண்டைகளுக்குப் பயந்து அவளைத் தள்ளி வைத்தனர். மாசாணி மட்டும் அவ்வப்போது வயித்துப் பிள்ளைக்காரி என்று பாவம் பார்த்து யாருக்கும் தெரியாமல் உணவிட்டு வந்தாள்.
ஒடுக்கப்பட்ட சாதியின் வயிற்றில் ஆதிக்க சாதியின் வாரிசு வளர்வதா என்று கொந்தளித்த ஊர்ப் பெரிசுகள் கூடிக் கூடி அமர்ந்து பேசி ஒரு முடிவெடுத்தனர்.
ஒரு மாலை நேரத்தில் நிறைமாத கர்ப்பிணியான காந்தாரி ஊர்ப் பஞ்சாயத்து கூடும் இடமான அந்த ஆலமரத்தடிக்கு இழுத்து வரப்பட்டாள். சின்னசாமி முன்பே வெளியூரில் இருக்கும் அவனது உறவினர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டு விட்டான். பெண்களும், குழந்தைகளும் அப்புறப்படுத்தப் பட்டனர்.
“என்ன தெகிரியம் பாத்தியாடி அந்தக் கீழ்சாதி நாயிக்கி. இவ இருப்புக்கு ஆண்டை வீட்டுப் பையன் கேக்குது. ஆடு கெடந்த கெடையையும் பாரு. சாறு மணக்குற மணத்தையும் பாரு. த்தூ.” என்று காறி உமிழ்ந்தாள் ஒருத்தி.
“இவளுக எல்லாம் துளுத்துப் போயிட்டாளுக. எல்லாம் இந்த காமராசரு ஆட்சிக்கு வந்ததுல இருந்துதேன். குலக் கல்வி ஆகாது. பொஸ்தவத்தைப் படின்னு இந்த மனுசன் சொன்னாருன்னு கூலி வேலைக்கி கூட வர மாட்டேங்குறாளுக” ஒருத்தி சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் இன்னொருத்தி. “சட்டி பானை செய்யறவன் மகன் அதத்தான பண்ணோனும். சாணியள்ளுற குடியில பொறந்துட்டு படிக்கப் போயிருவாங்களோ..? வெட்டியான் மகன் வெட்டியான்தான். மாத்த உடலாமா..? அப்பறம் நம்ம குடியெல்லாம் என்னாகுறது..?” வெற்றிலையைத் துப்பினாள்.
“வந்தாலும் தளுக்கி, மினுக்கி மொதலாளி மவனுங்களை கைக்குள்ள போட்டுக்குறாளுங்க. அவனுக ஆம்பளைக. ஆயிரம் எடத்துக்குப் போவானுங்க. அவளையெல்லாம் என்ன பண்ணோனும் தெரீமா? ஒசறப் பறந்தாலும் ஊர்க் குருவி பெராந்தாகுமா..?” பழமொழியைத் தூக்கிப் போட்டாள் இன்னொருத்தி.
ஆலமரத்தடியில் காந்தாரி திமிறத் திமிற அவள் மீது சீமெண்ணெயை ஊற்றினர். தீப்பந்தம் கொண்டு வரப்பட்டு அவள் உயிரோடு கொளுத்தப்பட்டாள். தீ மளமளவென்று உடலெங்கும் பரவியது. தோல் பொசுங்கிய நாற்றம் மூக்கைத் தீய்த்தது. கனத்த தலைமுடி உருகி வழிந்தது. அவள் எரிச்சல் தாளாமல் பெருத்த ஓலமிட்டுக் கீழே விழுந்து புரண்டாள். அப்போது வயிறு வெடித்து தசைப் பிண்டமொன்று எகிறி வந்து விழுந்தது. அருவெறுப்புடன் அதைக் கையில் எடுக்காமல் கம்பால் தீக்குள் உருட்டி விட்டார் ஆண்டை. துள்ளித் துடித்து பெரும் அவஸ்தையோடு சாம்பலானாள் காந்தாரி.
அதன்பின் அவள் சார்ந்த சமூகத்தினரின் கனவில் வந்தவளுக்காக அந்த ஆலமரத்தடியிலேயே சிலையெடுத்து அவளைச் சிறுதெய்வமாக்கி வழிபடத் தொடங்கினர்.
மாசாணிக் கிழவி சொல்லி முடித்து விட்டு தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். ஐராவதி அவளை அழவிட்டுத் திரும்பிப் பார்க்க, பக்கத்தில் அமர்ந்திருந்த நீலாமணியைக் காணாது அதிர்ந்தாள்.
சட்டென்று எழுந்து அங்குமிங்கும் அவளைத் தேடினாள்.
அப்போது ஓட்டமும் நடையுமாக வந்து சேர்ந்தாள் நீலாமணி. “க்கா.. இங்கல்லாம் வந்தா எங்க சாதி ஆளுங்க பாத்தா திட்டுவாங்க. அதான் அந்தப் பக்கமா போயிட்டேன்” என்றவளின் முகத்தில் உண்மையைத் தேடினாள் ஐராவதி.
இருவரும் நடக்கத் தொடங்கினர்.
***
“நீ என்ன படிச்சிருக்கே நீலா?”
“என்னத்தைப் படிக்க க்கா..? எங்க ஊர்லல்லாம் பொண்ணுங்க வயசுக்கு வந்ததுமே படிப்பை நிப்பாட்டிருவாங்க. வெளிய வாசல்ல போகக் கூடாது. எந்த ஆம்பளைங்க கூடயும் பேசக்கூடாது. அப்பாவும், அண்ணாவும் பார்த்தா அடி வெளுத்துருவாங்க”
“உனக்கு படிக்கணும்னு ஆசையில்லையா..?” ஐராவதி ஒரு இலைக்கொத்தைப் பறித்துக் கொண்டே கேட்டாள்.
“நில்லுங்கக்கா…” என்று அவளை நிறுத்திய நீலா, பக்கத்தில் இருந்த ஒரு மஞ்சள் மலர்க் கொத்தைப் பறித்து ஐராவின் தலையில் சூட்டினாள். “ஆஹா… வனதேவதை மாதிரி இருக்கீங்க” என்றாள் கண்கள் விரிய.
“பேச்சை மாத்தாத. நீ ஏன் படிக்கலை.?”
“எனக்கு ஆசைதான்க்கா. படிச்சு உங்களை மாதிரி வேலைக்கு போகணும்னு ஆசையா இருக்கு. ஆனா எங்க சாதியில ஆம்பளைங்க அதிகமா படிச்சதில்லை. மிஞ்சிப் போனா எட்டாப்போட நின்னுருவாங்க. அவங்களைவிட அதிகமா பொட்டச்சிங்க படிச்சா கல்யாணம் பண்ண மாட்டாங்க”
“வெளியூர் எங்காவது போவீங்களா?” நீலா திடுக்கிட்டு சிரித்தாள்.
“இந்த மாதிரி வெளிய தெருவுல சும்மா நடந்தாலே பேரு கெட்டுப் போகும் எங்கூர்ல. கல்யாணம் முடிஞ்சு இந்த ஊட்டு சமையலறைல இருந்து புதுசா வேற சமையலறைக்குப் போவோம். அதான் எங்க பயணம்”
ஐராவதி யோசனையுடன் நடந்து கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் கழித்து, “என்னக்கா ஒண்ணும் பேசாம வர்றீங்க..?” என்றாள் நீலா.
“ம்… யோசனைதான். எல்லா சாதியிலும் பொண்ணுதான் பாதிக்கப்படுறா இல்லையா? அதுல மட்டும் எல்லா சாதி ஆம்பளைங்களும் ஒண்ணு…”
நீலா ஆமோதிப்பாய்த் தலையசைத்தாள்.
“நீங்க என்ன வேலை பாக்குறீங்க க்கா..?”
“நான் ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலை செய்யறேன். தனிப்பட்ட முறையில புத்தகங்கள் எழுதுறேன். என் ஆபீசில் வேலை செய்யுற நண்பரோட அப்பாவும், உங்கப்பாவும் ஃப்ரெண்ட்ஸ்னு தான் நான் இந்த ஊர்ல இருக்குற கோயிலைப் பத்திக் கேள்விப்பட்டு வந்தேன். நாளைக்குக் காலைல நான் கிளம்பிருவேன்.”
நீலாமணியின் முகம் சோர்ந்தது.
“இந்தக் காந்தாரி கதை மட்டுமில்ல. நான் இதுவரைக்கும் சேகரிச்ச எல்லா சிறு தெய்வங்கள் கதைகள்லயும், சாதிப் பிரச்சினை காரணமாத்தான் உசுரு போயிருக்கு. அதை மறைக்க விதவிதமா மேல் பூச்சு பூசி வெச்சிருக்காங்க.”
“எப்படிக்கா சொல்றீங்க..?*
“ஆமா. ஒடுக்கப்பட்ட சாதியும், ஆதிக்க சாதியும் கல்யாணம் பண்ண ஆசைப்பட்டா அந்தப் பொண்ணைக் கொலை பண்ணிருவாங்க. இல்லைனா தற்கொலை செஞ்சுக்க வைச்சிருவாங்க. பொண்ணு செத்துப்போன பின்புலத்தை யாரும் வந்து தோண்டக் கூடாதுன்னு தான், சிலை வெச்சு தெய்வமாக்கி கும்பிட்டு, அவ மேல ஒரு பயத்தை ஏற்படுத்திருக்காங்க. நாமளும் கேள்வி கேக்காம விபூதியைப் பூசிட்டு, கெடா வெட்டிட்டு, பொங்கலைத் தின்னுட்டு வந்துடறோம்” ஐராவதி கோபமாகப் பேசினாள்.
“அக்கா. நீங்க யாரையாச்சும் லவ் பண்றீங்களா..?” நீலா திடுமென்று கேட்டாள்.
“இல்லை. ஏன்?”
“பண்ணினா சாதி பார்த்து பண்ணுவீங்களா.?”
“காதல்னா சாதி, மதம் எல்லாம் கேட்டு வராது. மனசுக்குப் பிடிச்சிருந்தா போதும்ல?” ஐராவதி சொன்னாள்.
“என்ன திடீர்னு காதலைப் பத்தி..?”
“அக்கா… வந்து…” நீலாமணி தயங்கினாள். பிறகு,”சும்மா தான் கேட்டேன்.” தலையைக் குனிந்து கொண்டாள்.
“வாழ்க்கை ரொம்ப இனிமையானது. நாமதான் அதைக் கஷ்டப்படுத்திக்கிறோம். பெண்களுக்குப் படிப்பறிவு வேணும். தன்னோட தேவையை கேட்டு வாங்குற துணிச்சலை படிப்பு தரும். தன் கால்ல சுயமா நிற்க, பொருளாதார பலம் வேணும். யாரையும் நம்பி இருக்காம வாழணும். எந்த மாதிரி ஆபத்து வந்தாலும் எதிர்த்து நிற்கிற மனோ தைரியம் வேணும். அதுக்கு படிப்பறிவு ரொம்ப அவசியம்மா” ஐராவதி சொன்னாள்.
“ஒரு சமுதாயம் முன்னேறணும்னா படிப்பு ரொம்ப முக்கியம். ஒரு பொண்ணு படிச்சிருந்தா ஒரு தலைமுறையே அறிவோட இருக்கும்.”
நீலாமணி மௌனமாக நடந்து வந்தாள்.
“நான் காலைல கிளம்பிருவேன். உனக்கு எப்ப என் கூடப் பேசணும்னாலும் பேசலாம்.
ஐரா ஒரு பேப்பரில் அலைபேசி எண்ணை எழுதிக் கொடுத்தாள்.
மறுநாள் காலை. பேருந்து நிறுத்தத்திற்கு இருவரும் வந்தார்கள்.
“நேத்து ராத்திரியெல்லாம் நான் தூங்கலைக்கா. நீங்க பேசினதையே நினைச்சிட்டு இருந்தேன்.”
ஐராவதி புன்னகைத்தாள். நீலாமணி அவள் கைகளைப் பற்றிக் கொண்டு அமைதியாக இருந்தாள். பேருந்து புழுதியைக் கிளப்பிக் கொண்டு வந்தது. ஐரா அவள் கைகளை நம்பிக்கையூட்டும் விதத்தில் அழுத்தி விட்டு ஏறிக் கொண்டாள். அந்தப் பயணம் முழுவதும் ஐராவதிக்கு நீலாமணியின் கலங்கிய முகமே நெஞ்சில் நின்றிருந்தது.
சென்னை வந்து இரண்டு வாரத்திற்குப் பிறகு அன்று காலை தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது.
“கோவை தென்னமநல்லூர் கிராமத்தைச் சார்ந்த நீலாமணி என்ற இளம்பெண் தாங்க முடியாத வயிற்றுவலியால், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிமருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்” நீலாமணியின் படம் பெரிதாகத் திரையில் விரிந்தது.
அன்றைய நாளிதழில் அதே கிராமத்தைச் சார்ந்த தலித் இளைஞன் ஒருவன் வயலுக்கு காவலுக்குச் சென்ற நிலையில், திருடர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட செய்தி ஒரு ஓரமாக வந்திருந்தது.
ஐராவதி சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தாள். மூடிய இமைகளையும் மீறிக் கண்ணீர் வழிந்தது.
கையிலிருந்த ‘சிறு தெய்வங்கள்’ நோட்டுப் புத்தகத்தில் புதிய பக்கம் திருப்பி, ‘நீலாமணி..?’ என்று எழுதி மூடி வைத்தாள்.
***
படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.