குழந்தை வளர்ப்பு எந்தக் காலத்திலும் சவால்தான்! பயிற்சி, எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு போன்ற எதுவும் இல்லாமல் கிடைக்கும் பதவி உயர்வு எது தெரியுமா? கணவன் மனைவியாக இருந்த இளம் புறாக்கள் பெற்றோர்கள் என்ற இடத்தை அடைவது! எளிதாக அப்பா, அம்மா ஆனபிறகு பெற்றோராக இருப்பதே ஒரு கலை, ஒரு அறிவியல் (Parenting is an art and science) என்று பயமுறுத்துகிறார்கள். “அந்த காலத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா எல்லாரும் குழந்தை வளர்க்கவில்லையா? இது என்ன புது தியரி?” என்று உங்கள் நெற்றியில் எழும் கேள்விக்குறி எனக்குத் தெரிகிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில் குழந்தை வளர்ப்பு பலவகையிலும் சிரமம்தான்.
சமூக ஊடகங்களைப் பார்த்து வளர்க்கப்படும் குழந்தை நாளடைவில் அதில் வரும் மொழியில் பேசும், அதைப் போலவே நடைமுறைக்கு உதவாத பல செயல்களைப் பெற்றோர்கள் செய்ய ஆரம்பித்து விடலாம் என்ற பயம் அறிவியலாளர்களுக்கு உண்டு.
இதற்காக பயப்படக்கூடாது. சவாலே சமாளி – இதுதான் நம் தாரக மந்திரம். நமது அறிவு, மூத்தோர் மற்றும் மருத்துவர்களின் அறிவுரைகளை சரியான அளவில் மிக்ஸ் பண்ணி நமது சூழலுக்கு ஏற்ப மேட்ச் செய்து திறமையாக உங்கள் வாண்டுகிட்ட செயல்படுத்தணும். அந்த சின்னஞ்சிறுசு உங்களை விட புத்திசாலிதான், சந்தேகமேயில்லை. ஆனால் நிறைய அன்பு, பாசம், புரிதல், கொஞ்சம் கண்டிப்பு ஆகியவற்றை சேர்த்து செய்தால் வெற்றி நமதே என்று கட்டைவிரலை உயர்த்திக் காட்டலாம். அதற்கான ஒரு சில கேள்விகளையும் பதில்களையும் உங்களுக்குத் தருகிறேன்.
உங்கள் சொந்த அனுபவத்தில், வீட்டில் அக்கா குழந்தை, அண்ணன் பெண், பக்கத்து வீட்டு நண்டு சிண்டுகளைப் பார்க்கும்போது உங்களுக்கு நிறைய சந்தேகங்கள் மனதில் காளானாக முளைக்கும் இல்லையா? அவற்றைக் கேள்விக்கணைகளாகத் தொடுங்களேன். நானும் என்னுடைய குழந்தை மருத்துவ அறிவு மற்றும் எனது மகள்களை வளர்ப்பதில் கிடைத்த அனுபவப் பொக்கிஷம் ஆகியவற்றை வைத்து பதில் தருகிறேன். இணைந்து பயணிப்போம். அழைக்கிறேன்.
கேள்வி :
பிறந்த 45 நாட்கள் ஆன என் குழந்தைக்கு தாய்ப்பால் போதுமான அளவு கிடைக்கிறதா என்று தெரியவில்லையே!
பதில்:

பாலூட்டும் உங்களுக்கும் ஆகச்சிறந்த இயற்கை சத்துணவு தாய்ப்பாலைப் பெறும் உங்கள் குழந்தையின் வாழ்த்துக்கள்! ஆறு மாதம் வரை குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டும். பிறகு தாய்ப்பாலுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட இணை உணவுகளும் தொடரட்டும்!
பால் குடித்த குழந்தை எல்லா நேரமும் தூங்க வேண்டும் என்பதில்லை. உற்சாகத்துடன் சிரித்து கை கால்களை உதைத்து விளையாட ஆரம்பிக்கலாம். போதுமான அளவு பால் கிடைத்தால் தான் தினமும் 5 -6 முறை லேசான மஞ்சள் நிறத்துடன் 20 – 30 மில்லி சிறுநீர் கழிக்கும்.
முதல் சில மாதங்களுக்கு மாதாமாதம் குழந்தையின் எடை ஏற வேண்டும். 250 கிராம் இருந்து 350 கிராம் வரை ஒவ்வொரு மாதமும் எடை ஏற வேண்டும். சிறிது அதிகமாக ஏறினாலும் பிரச்சனை இல்லை. குறைவாக எடை அதிகரித்தால் அல்லது அதே எடையில் இருந்தால் மருத்துவ ஆலோசனை தேவை!
பாலூட்டி முடித்த பிறகு உங்கள் மார்பு லேசாக இருப்பது போல் உணர்வீர்கள். பால் குடித்து முடித்து குழந்தை வாயை எடுத்த பிறகு தாயின் மார்க காம்பு நீண்டு தட்டையாக, மிருதுவாக சிறிது நேரம் இருந்து பிறகு சரியாகும்.
குழந்தையை தாயின் மார்பு அளவிற்கு தலையணை கொண்டு உயர்த்தி கையால் கழுத்தையும், தலையையும் தாங்கிப் பிடித்து குழந்தையின் மூக்கை தாயின் மார்க் காம்பிற்கு அருகில் கொண்டு வர வேண்டும். அப்போது குழந்தை வாசனையை முகர்ந்து காம்பினை கவ்விப் பிடிக்கும்(Latching). மார்பு காம்பை சுற்றி உள்ள கருமைப் பகுதி(Areola) கிட்டத்தட்ட முழுமையாக குழந்தையின் வாயில் இருக்க வேண்டும் (Attachment).அப்போது குழந்தை பாலை உறிஞ்சி குடிக்க ஆரம்பிக்கும். மார்பு காம்பை தனது மேல் அண்ணத்தில் வைத்து நாக்கால் அழுத்திக் குடிக்க ஆரம்பிக்கும். மெதுவாக, ஆழமாக விட்டுவிட்டு பாலை உறிஞ்சும்.(Slow,Sustained with Intermittent Pause) இப்படி செய்வதால் தேவையான பாலை குழந்தை தானே எடுத்துக் கொள்ளும். பிறந்த முதல் ஒரு வாரத்தில் இந்த பழக்கத்தை குழந்தைக்கு கொண்டு வர வேண்டும்.
மருத்துவமனைகளில் எடை குறைந்த அல்லது குறைமாத குழந்தையைப் பராமரிக்கும் போது மருத்துவர்கள் குழந்தை பால் குடிக்கும் முன்பும் பின்பும் எடை பார்ப்பார்கள். இதற்கு Test Weighing என்று பெயர். குழந்தையின் வயிறு நிரம்பி இருந்தால் 30 கிராம் எடை அதிகரித்து இருக்கும். அடுத்த பசி வரும்போது அது மறுபடியும் குறைந்துவிடும். குழந்தையின் 50 மில்லி கொள்ளளவு கொண்ட வயிறு நிரம்பியிருந்தால் 30 கிராம் எடை ஏற வேண்டும். இதன் அடிப்படையில் மருத்துவர்கள் அடுத்த நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கு மிக நுண்ணிய எடை கருவி தேவை. தாய்மார்களே! தினமும் 6 முறை பால் குடித்தால் 6 x 30 = 180 கிராம் எடை தினமும் ஏறும் என்று கணக்கிட்டு குழம்பிப் போக வேண்டாம்.
60 நாட்களுக்குப் பிறகு உங்கள் முகத்தைப் பார்த்து சிரித்து கண்ணால் பேசி பால் குடித்தால் அதைவிட மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்!
கேள்வி :
எங்கள் செல்லம் மகிழினிக்கு ஒரு வயது 2- மாதம் கீழேயும், மேலேயும் நான்கு பற்கள் வந்துவிட்டன. எப்போது பல் துலக்க ஆரம்பிக்கலாம்?
பதில்:

இன்னும் ஆரம்பிக்க வில்லையா? இப்படி பண்றீங்களேம்மா! சரி பரவாயில்லை. Better late than never இல்லையா!
மகிழினிக்கு நாளையிலிருந்து பல் துலக்க (பல் தேய்ப்பது வேறு, துலக்குவது வேறு. பல்லைப் போட்டுத் தேய்க்கக் கூடாது, துலக்குவது என்று சொல்வதே சரி) ஆரம்பிக்க வேண்டும். மிருதுவான(Soft) பேபி பிரஷ் வாங்கிக் கொள்ளுங்கள். ஆரம்பத்திலேயே பற்பசை வேண்டாம். காலை, மாலை இரண்டு வேளையும் பிரஷ்ஷால் சுத்தம் செய்யவும். எப்படி தெரியுமா?- மேற்பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ்பற்களை கீழிருந்து மேலாகவும் பிரஷ்ஷால் இழுத்து விடுங்கள். இது பற்களின் இடையே இருக்கும் உணவுத் துணுக்குகளை வெளியேற்றும். எந்த வயதிலும், ஏன்- நீங்கள் கூட இப்படித்தான் பல்துலக்க வேண்டும். சாதாரணமாக நாமெல்லாம் செய்வதை போல் இடமிருந்து வலமாக அழுத்தி தேய்ப்பது தவறு. இது பல்லின் பாதுகாப்பு மேற்பூச்சான எனாமெல்( Enamel) என்ற பொருளை சேதப்படுத்திவிடும் அதுவும் வேதிப்பொருட்கள் நிறைந்த பற்பசை என்றால் மேற்பூச்சு சீக்கிரமாகவே தேய்ந்துவிடும். பிரஷ்ஷால் பற்களை (Circular) வட்டமாகவும் சுத்தம் செய்யலாம். அப்படி ஆனால் பல்லின் மேற்புறத்தைத் துலக்க வேண்டாமா என்பது தானே உங்கள் சந்தேகம்!
மசாஜ் செய்வது போல் 1 வயதிற்கு பிறகு பிரஷ்ஷால் 2 முறை பல்லின் மேற்புறத்தை லேசாக சுத்தப்படுத்தலாம் 2-3 வயது வரை இரண்டு வரிசை பற்களையும் நமது ஆட்காட்டி விரலால் அல்லது சுத்தமான ஈரத்துணியால் மிருதுவாகத் தேய்த்து விடலாம். அப்போது இரண்டு வரிசை ஈறுகளையும் சிறிது அழுத்தம் கொடுத்து தேய்த்து விட வேண்டும்..
குழந்தை பிறந்து 2-3 வாரங்களில் குளிக்க வைக்கும் போது ஈறுகளில் துணியால் சுத்தம் செய்து விரலால் லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.
முதல் பல் முளைத்த உடன் மிருதுவான பிரஷ்ஷால் சுத்தம் செய்யலாம். 2 பற்கள் முளைத்து விட்டால் பற்களுக்கு இடையே சுத்தம் செய்யவும் பிரஷ் தேவை.
சுமார் இரண்டு வருடமாகும் வரை பற்பசை தேவை இல்லை. இரண்டு வயதிற்குப் பிறகுதான் வாயில் வரும் முறையை கூட்டித் துப்ப குழந்தை பழகிக்கொள்ளும். அதுவரை வாயில் நுரையுடன் உமிழ்நீரும் சேர்ந்து அதிகமாகும் போது குழந்தைக்கு புரையேறிவிடும் அல்லது குழந்தை விழுங்கி விடும். குழந்தை பிரஷ்சை வைத்து கடைவாய் பற்களை கடித்தால் கூட போதும். இது பல் துலக்கும் பழக்கத்தையும் உண்டாக்கும்.
குழந்தைகளுக்கு ப்ளுரைடு(Flouride) குறைவாக உள்ள வெள்ளை நிறப் பற்பசை தான் சிறந்தது. வாசனைப் பொருட்கள் கலந்த ஜெல் வகை பற்பசைகள் குழந்தைகளின் எனாமலையும், ஈறுகளையும் புண்படுத்தி விடும். மெந்தால், ஏலக்காய் போன்ற வாசனைப் பொருட்கள்(Mouth Freshneres) சேர்த்த பற்பசைகளைத் தவிர்க்க வேண்டும். பற்பசையே இனிப்பாக இருக்கும். அத்துடன் இந்த வாசனைப் பொருட்களும் சேரும்போது குழந்தை பேஸ்ட்டை ருசிக்க ஆசைப்படும். தின்னவும் ஆரம்பிக்கும்.
விளம்பரங்களில் பார்ப்பது போல் பிரஷ்ஷில் 2-3 செ.மீ அளவிற்கு பற்பசையை வைத்து பல் துலக்க கூடாது. நமது ஒரு விரல் நுனி அளவு( Finger tip limit) எடுத்தால் போதும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் தான். இரண்டு வயது வரை ஒரு அரிசி மணி அளவும், அதன்பிறகு ஐந்து வயது வரை ஒரு நிலக்கடலை அளவும் என்று பல மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த அளவு பற்பசையை பிரஷ்ஷில் தடவி உபயோக உபயோகிக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் வரை நேரம் செலவழித்து பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தம் செய்ய வேண்டும். கடைவாய் பற்கள் முளைத்த பிறகு மேலும் கீழுமாக பற்களின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியையும் மற்றும் கன்னத்தின் உட்பகுதியையும், பற்களின் மேற்பரப்பையும் சுத்தம் செய்ய வேண்டும்.
நாமெல்லாம் தினமும் எத்தனை முறை பல் துலக்க வேண்டும் தெரியுமா? ஒவ்வொரு முறையும் எதையாவது சாப்பிட்ட உடன் பல்துலக்கவேண்டும். இதுதான் சரியான அறிவுரை. சாப்பிட்டவுடன், நொறுக்கு தீனி தின்றவுடன், வாயை கொப்பளிக்க வைக்கலாம். குறைந்தபட்சம் இரண்டு வேளை பல் துலக்குதல் கட்டாயம். வருடத்திற்கு ஒருமுறை பல் டாக்டரிடம் ஆலோசிப்பது நல்லது.
குழந்தைக்குப் பிடித்த கலரில் படங்கள் போட்ட பிரஷ் வாங்கி கொடுத்தால் குழந்தையைப் பழக்குவது எளிது. குழந்தைக்கு கதை சொல்லி, பாட்டு பாடி பல் துலக்க ஊக்கப்படுத்தலாம்.
இரண்டு வயது வரை பெற்றோர் கூடவே இருந்து பல்துலக்கப் பழக்க வேண்டும். துலக்கியும் விடலாம். இரண்டு வயதிற்கு பிறகு தானாகவே பல்துலக்க குழந்தையை பழக்க வேண்டும். அப்போது குழந்தையைக் கண்காணித்து சரி செய்ய வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் பிரஷ்ஷை மாற்ற வேண்டும். பார்ப்பதற்கு நன்றாக தோன்றினாலும் மாற்ற வேண்டும். அதனிடையே பிரஷ்ஷின் முட்கள்(Bristle) வளைந்து, சேதமடைந்து இருந்தால் உடனே பிரஷ்ஷை மாற்றி விட வேண்டும்.
தொடரும்…
நீங்கள் மருத்துவரிடம் கேட்க விரும்பும் கேள்விகளை, strong@herstories.xyz என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு, ‘குழந்தை வளர்ப்பு 2.0’ என தலைப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பலாம். அன்புடன் வரவேற்கிறோம்.
படைப்பாளர்

மரு. நா. கங்கா
நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.