செய்தியாளர் ஜெஸிக்கா, ஏமாற்றுப் பேர்வழியான இளம் பெண்ணின் கதையைத் தேடிப் போவதுதான் இன்வென்டிங் அன்னா தொடர். காட்சிகளாக விரிவதென்னவோ ஏமாற்றும் அன்னாவின் சாகசங்கள்தான். எனவே, தொடர் முடியும்போது தோலுரித்துக் காட்டப்படுவது அன்னா அல்ல. மாறாக பணத்தாசை கொண்டலையும் சமூக யதார்த்தம் பல்லிளிக்கிறது.

அன்னாவுக்கு (Anna Delvey) ரஷ்யா பூர்விகம். பதினாறு வயதில் குடும்பத்தோடு ஜெர்மனுக்கு வந்தவர். பத்தொன்பது வயதில் பாரிஸில் ஆடை வடிவமைப்பை படிக்கக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்தார் அன்னா. படிக்கவில்லை. நியூயார்க் வந்தவருக்கு அங்குள்ள பணக்காரச் சமூகத்துடன் பார்ட்டியில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது. பாரிஸில் இருப்பவர்களைவிட நியூர்யார்க் பணக்காரர்களை ஏமாற்றுவது எளிதென்று தோன்றியிருக்கும் போல.

நியூயார்க்கில் தங்கிவிட்டார்.

சும்மா தங்கமுடியாதே. தனக்கான பின்னணி ஒன்றையும் உருவாக்கினார் அன்னா. ஜெர்மனி ராஜ குடும்பத்து வாரிசான தனக்குப் பல மில்லியன் டாலர்கள் டிரஸ்ட் ஃபன்ட் இருக்கிறது. இருபத்தைந்து வயதானதும் அந்தப் பணம் கைக்கு வரும். உலகின் அதி உன்னதமான கலை அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பதே லட்சியம். உலகப் புகழ்பெற்ற நவீன, பின் நவீனத்துவ கலைஞர்கள் வரைந்த ஓவியங்கள் அங்கே காட்சிப்படுத்தப்படும். உயர்தர மது, பன்னாட்டு உணவுகள் கிடைக்கும் உணவகம், கேளிக்கை விளையாட்டுகள் அரங்கம், தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகள் அடங்கிய பெருங்கனவு அது.

பணக்காரக் குடும்பத்தின் வாரிசுகள் இப்படிக் கலைக்கனவுகளுடன் திரிவதும் சில நேரங்களில் அது நிஜமாகவே நடப்பது நியூயார்க் மேல்தட்டு சமூகத்தில் வாடிக்கைதான். அன்னாவின் இந்தப் பொய்யை யாரும் சந்தேகிக்கவில்லை. ஐரோப்பிய மொழிச் சாயலுடன் அவர் பேசும் ஆங்கிலமும், பிரான்டட் ஆடைகளும், கைப்பைகளும் அன்னா ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றே மற்றவர்களை எண்ண வைத்தன. யாரிடமும் போய் அவராக என்னிடம் இவ்வளவு பணம் இருக்கிறது எனச் சொல்லி ஏமாற்றவில்லை.

அன்னா ஏமாற்றியதெல்லாம் பெருநிறுவனங்களையும் வங்கிகளையும் தங்கும்விடுதிகளையும்தான். பணக்கார நண்பர்களை அழைத்து பார்ட்டி கொடுத்து பில்லை, தான் தங்கும் அறைக் கணக்கில் சேர்க்கச் சொல்லிவிடுவார். பல நேரங்களில் “அச்சச்சோ… கிரெடிட் கார்டு வேலை செய்யவில்லையே” என்று அன்னா முணுமுணுத்தால் போதும். அன்றைய பார்ட்டியின் பில் தொகையை மனமுவந்து கொடுக்கப் பலர் இருந்தனர். பணக்கார நண்பர்கள் என்பதால் இந்தத் தொகை ஒன்றும் பெரிதல்ல அவர்களுக்கு. அதோடு பலமுறை அன்னா கொடுத்த பார்ட்டிகளில் இலவசமாகக் குடித்ததால் ஓரிருமுறை பணம் செலுத்துவது நியாயமும் கூட.

அடிக்கடி பில் தொகையை கட்டவேண்டி வந்தால் அன்னாவை கழட்டி விட்டுவிடுவார்களேயன்றி யாரும் புகார் அளிக்கத் தயாராக இல்லை. பணக்கார மூதாட்டி ஒருவர் தன்னுடைய கிரெடிட் கார்டில் அன்னா வாங்கிய பொருள்களை தன்னால் திருப்பிச் செலுத்த முடியாது என நிறுவனத்துடன் சண்டையிட்டுப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். அன்னாவைத் தள்ளி வைத்தார். ஏழைகளிடம் கழுத்தை நெரித்துக் கடனைப் பிடுங்கும் நிறுவனங்கள் பணக்காரப் பெண்மணி என்றதும் எதிர்த்துப் பேசாமல் பல ஆயிரம் டாலர்கள் நஷ்டத்தை ஏற்றுக் கொண்டு பணத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டன.

அன்னா

இப்படிப் போய்கொண்டிருந்த ஏமாற்றுத் தொழிலில், வானிடி ஃபேர் பத்திரிகையில் வேலை செய்யும் ரேச்சல் சிக்கினார். நடுத்தரவர்க்கம் என்பதால் இவரால் அறுபத்திரண்டாயிரம் டாலர்களை போனால் போகட்டும் என விட்டுத்தர முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்ட கதையைத் தான் வேலை செய்யும் நிறுவனத்துக்கு விற்று அதைக் கட்டுரையாக வெளியிடுவதன் மூலம் ஏமாந்த பணத்தை ஈடுசெய்தார். இதற்கடுத்து, அன்னா பற்றி புலனாய்வு செய்து கொண்டிருந்த செய்தியாளர் ஜெஸிக்கா பிரெஸ்லர் எழுதிய கட்டுரை நியூயார்க் மேகசினில் வெளியானது.

பிறகென்ன? அமெரிக்க வழக்கப்படி எல்லாம் நடந்தது. 22 மில்லியன் டாலர் அதாவது சுமார் இரு நூறு கோடிக்கு கடன் வாங்க அன்னா போட்டிருந்த திட்டம் முடிவுக்கு வந்தது. அன்னா சிறைக்குப் போனார். அவர் கதை நெட்பிளிக்ஸுக்குப் போனது. ஜூலியா கார்னர் அன்னாவாகவே வாழ்ந்திருக்கிறார் எனச் சொன்னால் கிளிஷே ஆகாது. முற்றிலும் உண்மை. அவர் நடிப்புத் திறமைக்காக மட்டுமே தொடரைப் பார்க்கலாம். உண்மைக் கதையை அப்படியே படமாக்கவில்லை. தழுவல்தான். இந்தக் கதையில் வருவதெல்லாம் முற்றிலும் உண்மையே, புனையப்பட்ட சில பகுதிகளைத் தவிர என்கிற பொறுப்புத்துறப்போடுதான் ஆரம்பிக்கிறது.

ரீல் மற்றும் ரியர் ஜெஸிகா

நியூயார்க் மேகசினில் கட்டுரை எழுதிய ஜெஸிகா, இன்வென்டிங் அன்னா தொடரின் தயாரிப்பிலும் பங்கேற்றார். ஷோன்டா ரைம்ஸ் தயாரிப்பில் வெளியான தொடர் உலகம் முழுக்கப் பெரும் வரவேற்பு பெற்றது. ஷோன்டா ரைம்ஸ் தயாரிப்பு நிறுவனம் பொதுவாகவே பெண்களை முதன்மையாக வைத்துத் தொடர்கள் தயாரிக்கும் நிறுவனம். இம்மாதிரி குற்றங்களில் ஈடுபடுவோரைக் கொண்டாடுவதே அமெரிக்காவின் குல வழக்கம். இந்தியாவிலும்கூட ஹர்ஷத் மேத்தாக்களும் லக்கி பாஸ்கர்களும் நாயகர்கள்தான். நம்மைப் போன்ற நிலையில் இருக்கும் ஒருவர் பணம் படைத்தவர்களை ஏமாற்றுவதை பெரும்பாலானோர் வரவேற்கிறோம். அன்னா ஒரு பெண் என்பதாலேயே அவருக்கு எதிரான செய்திகளும் வெறுப்பும் பரப்பப்பட்டதாகவும் அதிக தண்டனை அளிக்கப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு. அதனடிப்படையில் அன்னா மீது மரியாதை வரும் வகையில்தான் தொடர் படமாக்கப்பட்டுள்ளது.

அன்னாவாக ஜூலியா

ரேச்சல், நெட்பிளிக்ஸ் தொடர் வந்த பிறகு ஏமாற்றுக்காரிக்கு இவ்வளவு விளம்பரம் எதற்கு என மீண்டும் கட்டுரை எழுதினார். நெட்பிளிக்ஸ் தொடரில் தான் காட்டப்பட்ட விதம் குறித்து அவருக்கு உடன்பாடில்லை. எனவே அவதூறு வழக்கு பதிந்தார். முதல் கட்டமாக ரேச்சலுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்துவிட்டது. மேல் முறையீடு மூலமாகவோ பேச்சு வார்த்தை மூலமாகவோ ரேச்சல் மேலும் பணம் பெறக்கூடிய சாத்தியம் உள்ளது. தன் கட்டுரை, நேர்காணல்கள், எச்பிஓ நிறுவனத்துக்குத் தான் ஏமாந்த கதையைச் சொல்ல உரிமை அளித்ததன் மூலம் ஏற்கெனவே அவர் கணிசமான லாபமடைந்துள்ளார். எவ்வளவு என வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை. 

அன்னாவுக்கு நெட்பிளிக்ஸ் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் கொடுத்துள்ளது. அதை அவர் தன்னுடைய கடன்களைத் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தினார். குறிப்பிட்ட பகுதி வழக்கறிஞருக்கும் அரசால் விதிக்கப்பட்ட தண்டங்களைச் செலுத்தவும் பயன்படுத்தப்பட்டது. இருபது லட்ச ரூபாய் மட்டுமே அன்னா தன் சொந்த செலவுகளுக்காக எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

குற்றம் புரிந்தோர் அந்தக் கதையை விற்று, லாபம் பெறுவதைத் தடுக்க உள்ள சட்டத்தின் மூலம் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆமாம். அமெரிக்காவில் குற்றவாளிகள் தங்கள் கதையை விற்றுப் பணம் சம்பாதிப்பது வாடிக்கை. இதைத் தடுக்க சட்டமே இருக்கிறது. சன் ஆஃப் சாம் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது இச்சட்டம் (Son of Sam law – notoriety-for-profit law). பணத்தைத் தடுக்கலாம். புகழைத் தடுக்க முடியாது.

தொடருக்கு முன்பும் அன்னாவுக்கு நிறைய ரசிகர்கள் இருந்தார்கள். நீதிமன்ற விசாரணையின் போது அவர் அணிந்து வரும் ஆடைகள் வைரலாகின. அதற்கெனத் தனியாக இன்ஸ்டா பக்கம் இருக்கிறது. தொடர் வந்த பிறகு இன்னும் அதிகமாக உலகெங்கும் அவருக்கு ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள்.

ருஜா இக்னடோவா என்றொரு பெண், எஃப்.பி.ஐ.யின் தேடப்படும் முதல் பத்து குற்றவாளிகள் பட்டியலில் இருக்கிறார். வெறும் வாய்ப்பேச்சை வைத்தே பல கோடி ரூபாயை ஏமாற்றியவர். அன்னா செய்தது போல ‘விக்டிம் லெஸ்’ கிரைம் கிடையாது. நடுத்தரவர்க்க மக்கள் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அன்னாவால் ஏழை எளியோர் பாதிக்கப்படவில்லை. பெருநிறுவனங்களும் பணக்காரர்களும் மட்டுமே பாதிக்கப்பட்டனர் என்பது அவர் கதையை நாயக பிம்பத்தோடு படமாக்குவதை சாத்தியமாக்கியது.

மது குடிப்பது இழிவானது எனும் சமூகக் கருத்து இங்கே உள்ளது. பெண் மது குடிப்பதைக் கூடுதல் கடுமையுடன் எதிர்ப்பது அவசியமில்லைதானே? போலவே, குற்றச் செயல்களில் ஈடுபடும் குணம் பொதுவுடமைதான்.

தான் பெற்ற குழந்தையைக் கொல்லும் பெண்கள் பற்றிய செய்திகளைப் படிக்கிறோம். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நினைத்துப் பார்க்க இயலாத கொடுஞ்செயல்களைச் செய்யக்கூடியவர்கள்தாம். அதில் பாலின வேறுபாடுகள் இல்லை. தண்டனைகள் வேறுபாடின்றி இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. பெண்ணை வன்புணர்ந்து, அடித்துத் துன்புறுத்திக் கொடூரக் கொலை செய்த ஆண் குற்றவாளிகள் கூட ஆயுள் தண்டனை பெறுவதும் விஷம் வைத்துக் கணவனைக் கொன்ற பெண் மரண தண்டனை பெறுவதையும் நாம் காண்கிறோம். ஆம்பளைங்க அப்படித்தான் என ஆணின் குற்றத்தை இயல்பெனக் கருதும் சமூகம் பெண்ணின் குற்றத்தைக் கடும் கோபத்துடன் அணுகுகிறது. குற்றம் செய்த ஆண்கள் தெய்வத்துக்கு நிகராகப் போற்றப்படுவதையும் நாம் அறிவோம்.

அன்னா பொதுச்சமூகத்துக்கு வேண்டுமானால் ரோல் மாடல் இல்லாமல் இருக்கலாம். வேறு யாருக்காகவோ குற்றச் செயலில் ஈடுபடும் பெண்கள் மட்டுமாவது அன்னாவை ரோல் மாடலாக வைத்துக் கொள்வதைக் குறை கூற முடியுமா என்று தெரியவில்லை. பாலின வேறுபாடுகளின் பின்னணியோடு யோசித்தால் கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையே இருக்கும் கிரே ஏரியா புலனாகும். அறவுணர்வோடு யோசித்தால் அன்னா மட்டுமின்றி எந்தக் குற்றவாளிக்கும் கிடைக்கும் புகழ்வீச்சு தவறென்பதில் ஐயமில்லை.

படைப்பாளர்

கோகிலா 

இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இணையத் தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் மூலம் வெளிவந்திருக்கிறது. இது தவிர ‘உலரா உதிரம்’ என்கிற அரசியல் வரலாறு நூல் மற்றும் ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ என்கிற சிறார் நூலையும் எழுதியுள்ளார்.

பின் இணைப்புகள்

இன்வென்டிங் அன்னா நெட்பிளிக்ஸ் தொடர் டிரைலெர்

ஜெஸிகா பிரெஸ்லர் எழுதிய கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.

அன்னா டெல்வே கோர்ட் லுக்ஸ்

நெட்பிளிக்ஸ் தொடரோடு அன்னா நின்றுவிடவில்லை. எச்பிஓ கூட இவரைப் பற்றி ஒரு தொடர் தயாரித்தது. நெட்பிளிக்ஸ் தொடரில் கொஞ்சம் எதிர்மறையாகக் காண்பிக்கப்பட்ட ரேச்சலின் கோணத்தில் இந்தத் தொடர் இருக்கிறது. பிபிசி பாட்காஸ்டில் அன்னா பற்றிய ஒரு தொடர் இருக்கிறது. இன்னும் சில பிரபலமான தளங்களிலும் அன்னா பற்றிய ஆவணப்படங்கள் உள்ளன.