துளி விஷம், 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.
சாண்டில்யன் அவர்கள் எழுதிய கதை இது. வரலாற்று நாவல்கள் எழுதி மிகவும் புகழ் பெற்ற அவர், சில திரைப்படங்களுக்குக் கதையும் எழுதி இருக்கிறார். அவற்றுள் இதுவும் ஒன்று. வரலாற்றுப் புதினங்கள் என்றால் சாண்டில்யன் என வாழ்ந்தவர். எண்பதுகள் வரை அவரது தொடர், ஏதாவது ஒரு பத்திரிகையில் வந்த வண்ணமிருக்கும். அதனால் வாசகர்களுக்கு மிகவும் அறிமுகமானவர். பிற்காலத்தில் தனதுத் திரைத்துறை அனுபவங்களை, ‘சினிமா வளர்ந்த கதை’ (1985) என எழுதியிருக்கிறார்.
கதை வசன உதவி ச ஐயாப்பிள்ளை எனப் போடுகிறார்கள். வாழத் தெரியாத சோம்பேறி விதியைக் காரணம் கூறுகிறான். மழை பெய்யாததற்கு, மதவாதி ‘பாவம் பெருகிவிட்டது’ என்கிறார். விஞ்ஞானி, காலநிலை மாறிவிட்டதற்கு, ‘பருவக்காற்று மாறி அடிக்கிறது என்கிறார்’… என வசனங்கள் தூள் பறக்கின்றன.
A. S. A. சாமி திரைக்கதை எழுதவும் இயக்கவும் செய்திருக்கிறார்.
கே.என். தண்டாயுதபாணி இசையமைத்திருக்கிறார். அவரே நடன அமைப்பும் செய்திருக்கிறார். பாடல்களை கே.பி. காமாட்சி சுந்தரன் எழுதியுள்ளார்.
நரசு ஸ்டுடியோஸ் திரைப்படத்தைத் தயாரித்து இருக்கிறது. நரசு காபி நிறுவனத்தின் அதிபரான வி.எல். நரசு அவர்களின் நிறுவனம் இது.
ஆண் நடிகர்கள்
சந்திரனாக கே.ஆர். ராமசாமி
சூர்யகாந்தனாக சிவாஜி கணேசன்
வீரமார்த்தாண்டனாக எஸ்.வி. ரங்காராவ்
மலையமானாக முக்காமலா கிருஷ்ணமூர்த்தி
ஜெயங்கொண்டராக டி.வி. நாராயணசாமி
கரும்புவாக டி.வி. ராதாகிருஷ்ணன்
சிவக்கொழுந்துவாக கொட்டாப்புளி ஜெயராமன்
கோதண்டமாக கிருஷ்ணமூர்த்தி
கே. நடராஜன் பிரதமராக
பெண் நடிகர்கள்
நாகவல்லியாக டி. கிருஷ்ணகுமாரி
அங்கயற்கண்ணியாக பி.கே. சரஸ்வதி
மகாதேவியாக எஸ்.டி. சுப்புலட்சுமி
பூஞ்சோலையாக டி.பி. முத்துலட்சுமி
நடனம்
கேரள சகோதரிகள்
கொட்டும் மழையிலே கணவன், மனைவி ஒரு கைக்குழந்தையுடன் ஒரு துறவியிடம் வருகிறார்கள். துறவி தமிழ்நாடு அமைதியாக இருக்க வேண்டும் என விரும்புபவர். தமிழ்நாட்டின் மூவேந்தர், குறுநில மன்னர் என அனைவரும் இவர் சொல் தட்டாதவர்கள். வந்த மலை நாட்டு மன்னர் மலையமான் (கணவர்), நாக நாட்டு மன்னர் வீரமார்த்தாண்டன் நயவஞ்சகமாகத் தன் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டதாகக் கூறுகிறார். துறவி நாட்டை வாங்கித் தருவதாகச் சொல்கிறார். ஆனால் பிச்சையாகத் தனக்கு நாடு வேண்டாம் எனச் சொல்லி, மனைவியையும் குழந்தையையும் இவரிடம் ஒப்படைத்து விட்டு, மலையமான் வெளியில் செல்கிறார்.
அந்தக் குழந்தை சந்திரன், வீரனாக வளர்கிறார். நாக நாட்டின் தளபதியாகத் துறவி, சந்திரனை நியமிக்கச் சொல்கிறார். அப்படியே அந்நாட்டு மன்னர் செய்கிறார். இளவரசி நாகவல்லியும் சந்திரனும் காதலிக்கிறார்கள். தனது தந்தையிடம், தானே தனக்கான கணவனைத் தேர்ந்தெடுத்து விட்டதாக நாகவல்லி சொல்கிறார். அவரும் இசைவு கொடுக்கிறார். இந்த நேரத்தில் பக்கத்து நாட்டு மன்னர் சூரியகாந்தன் பெண் கேட்டு வருகிறார். நாக நாட்டின் மன்னர், தன் மகளின் முடிவு குறித்துச் சொல்கிறார்.
இதனால் சந்திரன், சூரியகாந்தன் இடையே பூசல் உருவாகிறது. இந்தக் காலகட்டத்தில், மலையமான் அம்மாவைப் பார்க்க வருவது தெரிகிறது. அவர் தான் தந்தை எனத் தெரியாததால், அம்மாவிடம் சந்தேகித்துச் சண்டை போடுகிறார். மலையமான் வீட்டிற்கு வந்து செல்வதைக் குறித்து அரசவையில் விவாதம் வருகிறது. மலையமானைக் கொண்டு வந்து நிறுத்துவதாகச் சொல்லிச் சந்திரன் செல்கிறார். துறவி, சந்திரனுக்கும் நாகவல்லிக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.
தந்தையைக் கைது செய்யப் போகும்போது, உண்மை தெரிந்து மீண்டும் சந்திரன், நாக நாட்டு அரசவைக்கு வருகிறார். தான், மலையமான் மகன் என்றும் இப்போதே தானே நாகநாட்டை எதிர்க்கப் போவதாகவும் சொல்கிறார். இதனால் மரண தண்டனை பெறுகிறார்.
துறவி, சந்திரனின் அம்மாவிற்கும் மனைவிக்கும் ஒரு துளி விஷத்தைக் கொடுத்து, மரண தண்டனை விதித்தால், பயன்படுத்துங்கள் எனச் சொல்கிறார். மேலும் நாக நாட்டு மன்னரின் மகனைக் கடத்திக் கொண்டு போய் மலையமானிடம் கொடுக்கிறார்.
மரண தண்டனை கொடுக்கும் கொலைத்தளத்திற்கு மலையப்பன் வருகிறார். தான் சரணடைவதாகச் சொல்கிறார். அப்போது கூடவே நாக நாட்டு மன்னரின் கடத்தப்பட்ட மகன் வருகிறான். இந்த மாமா என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார் என அவன் சொல்கிறான். அப்படி இருந்தும் நாக நாட்டு மன்னன் வீரமார்த்தாண்டன், மலையமானைக் கொல்ல நினைக்கிறார். அப்போது, சந்திரனின் அம்மாவும் மனைவியும் இறந்து போனதாகச் செய்தி வருகிறது.
இறந்து போன மனைவியின் முகத்தைப் பார்க்க அனுமதி கொடு எனத் துறவி கேட்க, நாக நாட்டு மன்னர் ஒத்துக் கொள்கிறார்.
இறந்த உடல்கள் அருகில் நின்று, ‘உங்கள் போரால் என்ன கண்டீர்கள்’ எனத் துறவி திட்டுகிறார். மன்னர்கள் இருவரும் சண்டை போடும் உளநிலையிலிருந்து மாறுகிறார்கள். துறவி இறந்த இருவருக்கும் மாற்று மருந்து கொடுத்துப் பிழைக்க வைக்கிறார் என்பதாகத் திரைப்படம் நிறைவு பெறுகிறது.
கே.என். தண்டாயுதபாணி அவர்கள் இசை அமைத்து, நடன அமைப்பும் செய்து இருக்கிறார். காரைக்காலில் பிறந்த இவர் இசையை விடநாட்டியத்தில் மிகவும் பிரபலமானவர். ஸ்ரீ வித்யா, ஜெயலலிதா போன்றோர் இவரது மாணவர்கள்.
கே.பி. காமாட்சி சுந்தரம் அவர்கள் எழுதி, பி.லீலா ஏ.ஜி. ரத்ன மாலா இணைந்து பாடிய, ஒரே பாடலில் குழந்தை நாயகனாக வளரும் பாடல்-
மலை அரசன் குலவிளக்கே மாமதி நீயே
கலைமணியே எனதுயிரே விண்ணமுதே என் மகனே
கண்மணியே கண்ணுறங்காய்
ஈடில்லாத உனது தந்தை வாளெடுத்தே வந்திடுவார்
நாடு செல்வம் வாழ்வு யாவும் நமக்கொருநாள் தந்திடுவார்
என்ற எண்ணம் உறங்கிடாமல் கண்மணியே கண்ணுறங்காய்
மணமில்லா மலர்க்கோ மகிமையில்லை -நல்ல
குணமில்லா மனிதருக்கோ பெருமையில்லை
லட்சணமில்லா தமிழுக்கோ இனிமை இல்லை
லட்சியமில்லா வாழ்வுக்கோ பலனுமில்லை
அச்சமில்லாமல் வாழ்வோம்
அச்சமில்லாமல் வாழ
அறிவும் திறனும் நெறியும் வேண்டும்.
வாழ்வதற்கென்றே பிறந்தோம் நாம் -இன்று
இன்று வகையறியாது இருக்கின்றோம்
ஆள்வதற்கென்று பிறந்தவர் நாம் -என்று
அறிந்தும் அடிமை ஆகிடலாமா?
உள்ளத் தெளிவும் நெஞ்சில் உறுதியும் வேண்டும்.
கள்ளமில்லை சொல்வன்மையும் வேண்டும்
நல்லது கேட்டது என்றறிந்திட வேண்டும்
நாடு நலம் பெறவே பணி செய்ய வேண்டும்.
நடன அழகியரில் ஒருவர் பத்மினி பிரியதர்சினியாக இருக்கலாம். மற்றவர் யாரென்று தெரியவில்லை! அற்புதமான நடனக்காரர் ரீட்டாவை தம்புரா மீட்ட வைத்திருக்கிறார்கள்! குரல் : எம்.எல். வசந்தகுமாரி என்கிறது இந்தக் காணொளியின் குறிப்பு.
நன்றாக வாழவேண்டும் -நாம்
நன்றாக வாழவேண்டும்
தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும்
நன்றாக வாழவேண்டும்
நம்மில் ஒற்றுமை ஓங்க வேண்டும் என்ற
ஆன்றோர் சொல் கேட்டாலே
ஏற்றம் உண்டாகும் என்றும்
பூசலும் பொறாமை கோபமில்லாத
புதிய தமிழ்நாடு வேண்டும்-இனி
நேசமும் அன்பும் நிறைந்தே வாழ
நிதமும் பெருகிட வேண்டும்
தனக்கே வாழும் சிறுமதியின்றி
பிறர்குதவும் நல்ல குணமும் பெருக வேண்டும் -நன்றாக
மனித பண்பு தான் இன்னதென்றறியும்
மனிதன் தமிழகம் போலே -என்று
மாநிலமெல்லாம் நம்புகழ் ஓங்கும்
மார்க்கம் வளர வேண்டும்
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
என்று உணர வேண்டும்
என்றும் நாம் -நன்றாக
பாடியவர்கள் கே.ஆர். ராமசாமி சூலமங்கலம் ராஜலட்சுமி என்கிறது இந்தக் காணொளி.
சம்மதித்தால் என்றும் சந்தோசமே நம்
மனம் போல் வாழும் நாளினி தானே!
வாடை தரும் நறும் மலரே நல்ல எழிலே!
உனை மறவேனே
கோடை தனில் பெரு நிழலே!
நல்ல எழிலே உமை மறவேனே
பேசும் ஓவியம் நீயே!
என் பெண் தெய்வம் நீ தானே
பேசும் காவியம் நீரே -என்
பேரின்பம் நீர் தானே!
நம் ப்ரேமையே வெற்றி தானே!
கலை சேர் மணியே எனதாருயிரே
புதிதாம் உலகில் புகுவோம் -நாமே
கனிரசம் போலானேன்
காதல் வானிலே நாம் இரு பேரும்
கானம் பாடுவோம் வானம்பாடி போல்
கதிரால் மலரும் செழுந் தாமரையே!
இனி நாம் உடலாய் உயிராயினமே
கனவு நினைவாமே -சம்மதித்தால் என்றும் சந்தோசமே
பல திரைப்படங்களில் நாயகனாக நடித்த சிவாஜி கணேசன், நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி அவர்களுக்கு எதிர் நாயகனாக நடித்தது என்பது அவரது பெருந்தன்மை எனத் தோன்றியது. கே.ஆர். ராமசாமி என முதலில் போட்டு அவரின் பெயருக்குக் கீழே தான் சிவாஜி கணேசன் எனப் போடுகிறார்கள். நடிப்பிசைப் புலவர்தான் நாயகன் என்றாலும் திரைப்படம் முழுக்க முழுக்க நடிகர் திலகம்தான் நம் மனதில் பதிகிறார். அந்த அளவிற்கு அவருக்கான இடத்தை நடிப்பிசைப் புலவர் கொடுத்தது போலத் தெரிகிறது. சிவாஜி அவ்வளவு அழகாக இருக்கிறார். aவரது ஆடை அலங்காரங்கள், வசனங்கள் எல்லாம் அவ்வளவு அழகு. அவரை மிக அழகாகக் காட்டிய, அவர் சிறப்பாக வசனம் பேசிய படங்களின் வரிசையில் இந்தத் திரைப்படத்தை உறுதியாக வைக்கலாம்.
அதே போல உள்ளத்தைக் கவர்ந்த இன்னொரு நடிகர் என்றால், நாகமன்னராக வரும் ரங்காராவ் அவர்கள். அவர் போலவே பெரிய உருவம் கொண்ட முக்காமலா கிருஷ்ணமூர்த்தி மலையமான் வேடத்திற்குக் கச்சிதமாக இருக்கிறார்.
‘நன்றாக வாழவேண்டும் தமிழ்நாடு ஜெயிக்க வேண்டும்’ என்று நிறைவுறும் இத் திரைப்படம், நல்ல கதையம்சம் கொண்டது எனக் கூறலாம்.
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.