தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள், பல லட்சம் பேருக்கு, தங்கள் எதிர்காலத்தை கட்டமைக்கும் பலத்தையும், சீரிய நன்னெஞ்சை மட்டும் அளிக்கவில்லை, காலமெல்லாம் நினைத்து நினைத்து மனங்குளிர பல நினைவுகளையும் உறவுகளையும் அளித்துள்ளன. எனது பி.யூ.எம் ஸ்கூலில் (பஞ்சாயத்து யூனியன் மிடில் ஸ்கூல்) கிடைத்த அப்படி ஒரு மாணிக்கம் பாண்டியராஜன் சார்.

அவர் எப்போதுமே இரண்டாம் வகுப்பு வாத்தியாராகவே என் நினைவடுக்குகளில் வாழ்கிறார். அவரை வகுப்பாசிரியராகப் பெற்ற குழந்தைகளை மற்ற குழந்தைகள் சற்று பொறாமையாகவே பார்ப்பதுண்டு. அதுவும் மிச்சம் இருக்கும் இன்னொரு வாத்தியார், காதில் கம்மல் ஓட்டையோடு கூடுதலாக இன்னொரு ஓட்டை போட்டு அனுப்புபவரென்றால்? அப்படி பொறாமைப்படவைக்கும் பாக்கியம் எப்போதும்போல எனக்கு வாய்க்கவே இல்லை. அதாவது எனக்கு அவர் வகுப்பு ஆசிரியராக இருந்ததே இல்லை. ஆனால் எந்த வகுப்புக்கு வாத்தியார் இல்லையென்றாலும் அவர் தான் வருவார்.

நெற்றி நிறைய விபூதி இட்டுக்கொண்டு, கமகமவென்று விபூதி மணக்க, அவரளவுக்கு வெண்மையாய் உடையுடுத்திய யாரையும், வெள்ளையுடை ரியல் எஸ்டேட்/பைனான்ஸ்/அரசியல் பண்பாடு தலை எடுக்கும் வரை, பார்த்ததே இல்லை எனலாம்.

“பிள்ளைகளா… இன்னிக்கு என்ன கதை சொல்லலாம்?” என்று கேட்டுக்கொண்டேதான் உள்ளே வருவார். குழந்தைகளின் மனம் எவ்வளவு துள்ளும். அவராகச் சொன்னாலும் சொல்லவில்லையென்றாலும், என்ன கதை வேண்டுமென்று குழந்தைகள் வெவ்வேறு கதைகளின் பெயர்களைச் சொல்வார்கள். யாராவது ஒரு குழந்தை “சிவகாமியின் சபதம் சொல்லுங்க சார்” என்று ஒரே ஒரு ஓட்டு போட்டுவிட்டால் கூட, “யாரடா கேட்டது, மூஞ்ச காட்டு” என்று பாசமாகக் கேட்டுவிட்டு, அன்றைக்கும் சிவகாமியின் சபதம்தான்! அவர் வேறு எந்த கதையும் சொன்னதாக என் நினைவில் இல்லை!

பரஞ்சோதி தாயிடம் விடை பெற்று, சிற்பக்கலை கற்க காஞ்சிக்கு கிளம்புவதில் இருந்து கதை ஆரம்பிக்கும். பரஞ்சோதியோடு நாங்கள் எல்லாரும் பயணிப்போம். காட்சிகள், வழிப்பாதைகள் கண்முன் விரியும். தூரத்தில் புத்தபிட்சு வருகிறார். அம்மா அவர்களோடெல்லாம் பேசக்கூடாதென சொல்லியிருக்கிறாளே என்று நினைவில் வரும். கண்ணை மூடி மரத்தடியில் தூங்குவது போல பாவனை செய்யும் பரஞ்சோதி நானே என்று பாதி பேருக்கும், நமது பாசத்திற்குரிய அண்ணன் போல மீதிப்பேருக்கும் தோன்றும். அப்போது பாம்பு வரும். பாம்பை கையில் பிடிப்பார் புத்தபிட்சு. அவரது கைக்குள் சிக்கிய பாம்பு வாயை பிளந்து இந்தப்பக்கம் தலையைத்திருப்பும், எல்லா பிள்ளைகளின் தலையும் இந்தப்பக்கம் சாயும். பாம்பு தலையை அந்தப்பக்கம் திருப்பும். எல்லா பிள்ளைகளின் தலையும் அந்தப்பக்கம் சாயும். அதோ அந்த புத்தபிட்சுவின் கைகட்டைவிரலின் நீண்ட நகம் அந்தப் பொல்லாப் பாம்பின் தலையைக்குறிவைக்கிறது, அடடா! அதோ தலையை கிள்ளி கிழித்தே விட்டது. பரஞ்சோதி கண் விழிக்கிறான். இப்படிப் போகும் கதை!

விரல் நகமெல்லாம் கல்கி அவர்கள் கதையில் வரவே வராது. ஆனாலும் சாரின் கைவிரலில் இருந்த நகம் எங்களுக்கு இப்படி ஒரு கற்பனையைக் கொடுத்தது. அந்த நகம் எங்களையெல்லாம் பொறுத்தவரை பரஞ்சோதியைக் காப்பாற்றிய மரியாதைக்குரிய நகம். காஞ்சிதான் எங்கள் ஊர் குழந்தைகள் கனாக்கண்ட முதல் நகரமும் பிரம்மாண்டமும்.

நான்காம் வகுப்பில் டீச்சர் ஒரு கேள்வி கேட்டார்கள். தட்டியால் மறைக்கப்பட்ட பக்கத்து கிளாசில் பாண்டியராஜன் சார் இருந்தார்.

டீச்சர் கேட்ட கேள்வி: “யாரெல்லாம் மதுரைக்கு போயிருக்கீங்க?”

நான் உள்பட 4 பேர் கை தூக்கினோம்.

“மதுரைல என்னல்லாம் பாத்திருக்கீங்க?” என்று டீச்சர் கேட்டதும், ஆளுக்கு ஒவ்வொரு விசயத்துடன் நிறுத்திக்கொண்டார்கள். அதிகம் பேசாத குழந்தையான நான் மட்டும் பத்து நிமிடங்களுக்கு பதில் சொன்னேன். அதில் கிட்டத்தட்ட பாண்டியராஜன் சார் சொல்லும் காஞ்சியின் அமைப்பு போல சொன்னேன். அதை ரசித்த டீச்சர், “மதுரை பெருசா, தமிழ் நாடு பெருசா?” என்று கேட்டார். இந்த விவரிப்பு லயத்தில் மூழ்கி இருந்த நான், அவர் பூகோள பாடத்திற்கு செல்கிறார் என்ற உணர்வு இல்லாமல், “மதுரை தான் பெருசு” என்று சொன்னேன். வகுப்பே சிரித்து விட்டது. அதைக்கூட என் மனம் அக்கணம் உணர இயலா வண்ணம் காஞ்சியில் லயித்து இருந்தது.

உடனே வகுப்பிற்குள் நுழைந்த பாண்டியராஜன் சார், “அடடே, மதுரை இவ்வளவு அழகா? டீச்சர் பத்து நிமிசம் எங்களுக்கு ஏற்பட்ட அழகான பயண உணர்வையும் குழந்தைத்தன்மையையும் சிதைச்சு நீங்க பூகோளம் போனதை நான் கண்டிக்கிறேன்” என்றார். வகுப்பை தன் கையில் எடுத்துக்கொண்டு, பயண அனுபவங்களைப் பற்றி குழந்தைகளைப் பேசவைத்தார். அன்றைய புவியியல் வகுப்பை ரத்து செய்ததன் மதிப்பு, இன்று நினைத்துப்பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.

இன்று நாம் அவ்வளவு உன்னிப்பாக குழந்தைகளை கவனிப்பது எவ்வளவு பெரும் பிரயத்தனமாக இருக்கிறது என்பது உணர்கிறேன். சார் செய்தது எவ்வளவு அரிதிலும் அரிதானது என்பது புரிகிறது. அன்று அதோடு விடாமல், மந்தையில் என் அப்பாவைப்பார்த்து, “உங்க பிள்ள ரெம்ப தெறமையான பிள்ள சார், நெறய புஸ்தகம் வாங்கிப்போடுங்க, நகை போட்டு, காசு பணம் குடுத்தா நடக்கிறத விட, சந்தோசமான விஷயமெல்லாம் நடக்கும்”, என்று அவர் சொன்னதாக அப்பா சொல்வார்.

உணர்வுப்பூர்வமான குழந்தைகளை பொக்கிஷமாக பாதுகாக்கத் தவறிவிடும் இந்த சமூகம், குழந்தையோடு குழந்தையாகி அவர்களுக்கு கற்பனை கொடுக்கும் இந்த வாத்தியாரையும் பாதுகாக்கத்தவறியது. சக வாத்தியார்களின் எரிச்சல், கதைகளை அனுபவித்த குழந்தைகளே, கொஞ்சம் பெரிய வகுப்புகளில் சென்று, “சிவகாமி வந்துருச்சே” என்று தலையிலடிக்கும் ‘வளர்-சிதை மாற்றம்’, பைத்தியக்காரன், பொழைக்கத்தெரியாதவன் என்ற பட்டங்கள் அவரைக் காயப்படுத்தின.

குடும்பம் இருந்தும் தனியாளாக, தனி அறையில் எங்கள் ஊரிலேயே குடியிருந்த அவர், மிகக்குறைந்த நண்பர்களின் அரவணைப்பில் ,மிக எளிதான முறையில் இறந்து போனார்.

பாரதியார் இறுதி ஊர்வலத்தைப்போல இருந்திருக்கலாம் அவர் இறுதி ஊர்வலம். அப்போது நான் கல்லூரி படிப்பிற்காக வெளியூரில் இருந்தேன். அவர் இறுதி ஊர்வலம் எப்படி இருந்தது என்று என் அப்பாவுக்குக்கூட நினைவிலில்லை!

முதல் பாகத்தில் பாதிகூட தாண்டாத அவர் சொன்ன சிவகாமியின் சபதம்தான், பத்தாம் வகுப்பு விடுமுறையில் மொத்த பொன்னியில் செல்வனையும் படித்து முடித்த என் தாகத்திற்குக் காரணம். கல்லூரி வந்துதான் சிவகாமியின் சபதம் படித்தேன். அவர் வாயால் கேட்ட அத்தியாயங்கள் படிக்கும்போது விபூதி வாசனையோடேயே படித்தேன்.

சிறுவயதில் அறிமுகமான புத்த பிட்சு, விபூதி வாசனையுடன், கட்டைவிரலில் நீள நகம் வைத்திருப்பவர் என நம்பினேன். 28 வயதில் வடகிழக்கு மாநிலத்தில் ஒரு புத்த மடாலயம் சென்றபோது எதிர்பட்ட முதல் புத்த பிட்சுவின் கட்டை விரல் நகங்களை அனிச்சையாகப் பார்த்து விட்டு, பின் நானே சிரித்துக்கொண்டேன். இந்த கதை கேட்ட அனுபவம்தான் வரலாற்றின் மீது ஒரு தீரா காதலை எனக்கு உண்டுபண்ணியது என்று கூடச் சொல்லலாம்.

என்னுடைய வரலாற்று தாகத்தில் வாழ்கிறார்தானே பாண்டியராஜன் சார்?

படைப்பாளர்

காளி

இதே பெயரில் Twitter-ல் @The_69_Percent என்று இயங்கி வருகிறார். முச்சந்துமன்றம் என்ற பெயரில் உள்ள புத்தக வாசிப்பு குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.