“சூதானமா போயிட்டு வாங்க டீச்சர்…” பேருந்தின் கீழிருந்து கத்தினாள் கார்த்தீஸ்வரி. பேருந்தில் ஏறிக்கொண்டிருந்த வசந்தி டீச்சர் திரும்பிப்பார்த்து, “நீ மொதல்ல சூதானமா வீட்டுக்குப்போ”, அக்கறையுடன் கொஞ்சம் கண்டிப்பு கலந்த குரலில்  கூறிவிட்டு கூட்டமாக இருந்த அந்த பேருந்திற்குள் இடம் தேடி அமர்ந்தாள். 

முக்கிய சாலையிலிருந்து பிரிந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் நான்கு புறமும் மலைகளுக்கு நடுவில் பத்திரமாய் ஒளிந்திருக்கும் அழகிய கிராமம் அது. நகரத்து வாசனை இன்னும் எட்டிப்பார்த்திருக்க வில்லை. RMTC (ராணி மங்கம்மாள் போக்குவரத்து கழகம்) புண்ணியத்தில் ஒரு நாளைக்கு இரண்டுமுறை மட்டும் ஊருக்குள் வரும் டவுன்பஸ்தான் வெளி உலகுக்கும் அந்த கிராமத்துக்குமான தொடர்பு. பள்ளி நேரத்திற்கு ஒரு நாளும் அந்த பேருந்து வராததால், பெரும்பாலும் அந்த ஊர் பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியர்களுக்கு ‘நடராஜா ட்ரான்ஸ்போர்ட்’ தான். 

முக்கிய சாலையில் இறங்கி சக ஆசிரியர்களுடன் பேசிக்கொண்டே நடந்தால், 20 நிமிடங்களில் ஊரை அடைந்து விடலாம். பாதையின் இருபுறமும் விவசாயத் தோட்டங்கள். ‘கம்மாவெட்டு’ வேலை அறிமுகமாகாத காலம். விவசாயத்துக்கு ஆள்கள் தாராளமாய் கிடைக்க, தண்ணீர் பிரச்னையும் இல்லை என்பதால், எப்போதும் ஏதோவொரு விவசாயம் நடந்து கொண்டிருக்கும். பச்சைப்பசேல் வயல்களும் கிராமத்து மனிதர்களின் எடக்கு மடக்கான குசும்புப் பேச்சுக்களும் அச்சு அசல் பாரதிராஜா படத்து கிராமத்துக்குள் நுழைவதைப்போலவே இருக்கும்.

காலையில் ஆசிரியர்கள் போகும் நேரத்துக்கு, ஆண்களும் பெண்களும் கேலியும் கிண்டலுமாய் அலுப்புத் தெரியாமல் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்கள். “டீச்சர்மாருக வந்துட்டாக, மணி ஒம்போது ஆயிடுச்சு போல” என தங்களுக்குள் பேசிக்கொண்டே அவர்களைப் பார்த்து வணக்கம் வைப்பது போல சைகையுடன் மரியாதையாய் சிரிப்பார்கள். ஆசிரியர்களுக்கு பொதுமக்களிடத்தில் நல்ல மரியாதை இருந்தது. சிலர், “டீச்சர், பாப்பா காய்ச்சலோட ஸ்கூலுக்கு வந்திருக்கா, அவளை செத்த பாத்துக்கோங்க”, “டீச்சர், பாண்டிக்கு எழுதப் பேனா இல்லைனு அழுதுகிட்டே வந்தான், உங்ககிட்ட ஏதாச்சும் பழைய பேனா இருந்தாக் கொடுங்க”, என உரிமையுடன் கோரிக்கை வைப்பார்கள். அவர்கள் செய்யும் வேலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே, அவர்கள் கேள்விகளுக்கு பதில்   சொல்லிக்கொண்டே நடந்தால், ஊருக்குள் நுழையும் இடத்திலேயே பள்ளி.

அந்தக்காலத்து கட்டிடம், அரசுப்பள்ளிகளுக்கே உரிய அடையாளத்துடன் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில்தான் இருந்தது.   இரண்டு கட்டிடங்கள், ஐந்து ஆசிரியர்கள், 80 மாணவர்கள் என அளவான நடுநிலைப்பள்ளி. இரண்டு கட்டிடங்களுக்கும் நடுவில் அந்த ஊரின் ‘பஸ் ஸ்டாண்டு’ என அழைக்கப்பட்ட ஒரு பொட்டல்வெளி. ஒருபுறம் டீக்கடை, நடுவில் ஒரு சின்ன சிமென்ட் மேடையில் ஒரு சின்ன பிள்ளையார். இவற்றைக் கடந்துதான் ஊர்க்குடியிருப்புகள். மொத்தமாகப் பார்த்தால் ஒரு 100 வீடுகள் இருக்கும்.

பள்ளிக்கு எதிரே ஒரு டெய்லர் கடை. எட்டுக்கு எட்டு அடி கடையில் ஒரு தையல் மிஷின் ஓடும் சத்தம் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும். ஒரு டேப் ரெக்கார்டர், இளையராஜா பாடல், நாலைந்து இளந்தாரிப் பயல்கள் என்று வழக்கமான கிராமத்து டெய்லர் கடைக்கான பத்துப் பொருத்தங்களுடன் இருக்கும்.

பொருளாதாரத்திலும், கல்வியிலும் மிகவும் பின்தங்கிய பகுதிதான். மூட நம்பிக்கைகள், பில்லி, சூனியம், மருந்து வைத்தல், பாம்பிலிருந்து மருந்து தயாரித்தல், மிகக் கடுமையான ஊர்க்கட்டுப்பாடுகள் என பல வருடங்கள் பின்னோக்கியிருந்தது அந்த ஊர். ஆரம்பத்தில் இதையெல்லாம் பார்க்கவும் கேட்கவும் கூட வசந்திக்கு பயமாக இருந்தது. பிறகு பழகிவிட்டது. நாளடைவில்  சண்டை சச்சரவில்லாத அமைதியான கிராமமும், அன்பைக் கொட்டும் வெள்ளந்திக்  குழந்தைகளும் மெல்ல மெல்ல அவள் மனதில் ஒட்டிக்கொண்டார்கள்.

அங்குதான் அவளைச் சந்தித்தாள். பெயர் கார்த்தீஸ்வரி. வசந்தி பணியில் சேர்ந்த வருடத்தில் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். கொழுகொழுவென்று பூசினாற்போல உடம்பு, பேசும்போதெல்லாம் வாய்கொள்ளாமல்  சிரிப்பு. என்ன கேள்வி கேட்டாலும் சிரிக்காமல் பதில் சொல்லத் தெரியாது. அவள் முகம் சிரிக்கும்போதெல்லாம் கண்களும் அதே புன்னகை காட்டி மின்னும். படிப்பில் சுமார்தான். சில நேரங்களில்  அட்டெண்டென்ஸ் முடித்த பிறகு, வேர்க்க விறுவிறுக்க, தாமதமாக ஓடி வருவாள். “எல்லாப் பிள்ளைங்களும் வந்துட்டாங்க இல்ல? உனக்கு மட்டும் ஏன் லேட்டாகுது?” என வசந்தி கோபத்துடன் திட்டும்போது, “அம்மா காலையிலேயே வேலைக்குப் போயிடிச்சு, வீட்ல மாட்டுக்கு தண்ணி காட்டிட்டு, சோறு பொங்கிட்டு, வீட்டு வேலைகளை முடிச்சிட்டு வர  லேட் ஆயிடிச்சு டீச்சர்”, என அதே சிரிப்பு மாறாமல் மூச்சிறைக்கச் சொல்லும்போது பாவமாக இருக்கும்.

ஏழாம் வகுப்பு அரையாண்டு விடுமுறையில் கார்த்தீஸ்வரி  ‘வயசுக்கு வந்து விட்டதாக’ பள்ளி திறந்த நாளன்று பிள்ளைகள் கிசுகிசுத்தார்கள். முப்பது நாள் கழித்து தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு அதே சிரிப்பு மாறாமல் வந்தாள். “இனிமேட்டுக்கு ஆம்பளப் பசங்களோட பேசக்கூடாது னு அம்மா சொல்லிடிச்சு டீச்சர், ஏன் டீச்சர்?” எனக் கேட்டவளிடம், “அம்மா சொன்னபடி கேட்டு நடந்துக்கோ கார்த்தீஸ்வரி” என சமாளித்து வைத்தாள்.

அடுத்த வருடம் எட்டாம் வகுப்புக்கு வந்து விட்டாலும், அதே வெள்ளந்தித் தனமும், முகம் நிறைய பொங்கி வழியும் சிரிப்பும்  மாறவேயில்லை.        பள்ளியில் எல்லா டீச்சர்களையும் அவளுக்குப் பிடிக்கும். இருந்தாலும் ஏனோ வசந்தியைக் கூடுதலாக பிடித்துப் போயிருக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் இடைவேளையில் அவள் இருக்கும் இடத்துக்கு ஓடி வந்து, மேசையில்  இரண்டு கைகளையும் ஊன்றியபடி முன்னால் சாய்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பாள். வீட்டுக்கு அக்கா வந்தது, அக்கா குழந்தைக்கு மொட்டை போட்டது, பொங்கலுக்கு ஆண்டிபட்டி போய் ட்ரெஸ் எடுத்தது என அவளுக்கு வசந்தி டீச்சரிடம் சொல்வதற்கு தினமும் ஏதோவொரு விஷயம் இருக்கும். அதுபோல, “தம்பி நல்லா இருக்கானா டீச்சர்?”, “தம்பி நடக்குறானா டீச்சர்?”, “லீவுக்கு ஊருக்குப் போறீங்களா டீச்சர்?”, “இன்னிக்கு என்ன கொழம்பு கொண்டு வந்தீங்க டீச்சர்?” என பெரிய மனுஷி மாதிரி கேட்பதற்கும் ஏராளமாய்  இருக்கும். மதியம் சத்துணவு வாங்கி சாப்பிட்டு முடித்த அடுத்த நிமிடம் ஓடி வந்து விடுவாள். “டீச்சர்,  வெஞ்சனத்துக்கு கடையில ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?”, “வீட்ல எங்கம்மா புதுசா ஊறுகா போட்ருக்கு, கொண்டு வரட்டுமா?” என ஏதாவது கேட்பதுபோல வசந்தியைச் சுற்றி சுற்றி வருவாள்.

என்றாவது ஒருநாள் எட்டாவது அதிசயமாய் பள்ளி விடும் நேரத்திற்கு பஸ் வந்து விட்டால், ஆசிரியர்கள் ஏறியபின் பஸ் கிளம்பும் வரை பொறுமையாய் நிற்பாள். கண்டக்டர் விசில் ஊதியவுடன்,  “சூதானமா போயிட்டு வாங்க டீச்சர்ர்ர்ர்”, என்று கீழிருந்து கத்துவாள். பேருந்திலிருக்கும் மொத்தக் கூட்டமும் திரும்பி வசந்தியைப் பார்க்க சங்கடத்துடன் தலை குனிந்து கொள்வாள். “பொது இடத்தில் அப்படி கத்தக்கூடாது கார்த்தீஸ்வரி” என்று எத்தனை முறை கூறினாலும், “சரிங்க டீச்சர், சரிங்க டீச்சர்…” என சிரித்த முகத்துடன் கேட்டுக்கொள்வாள். ஆனால் மறுபடியும் மாலையில் அதே கதைதான் நடக்கும். 

ஒருநாள் வழக்கம்போல தேநீர் இடைவேளையில் வசந்தி டீச்சரைத் தேடி வந்தாள். கால் கெந்தி கெந்தி நடந்து வந்தவளின் முகம் வாடிப்போயிருந்தது. சிரிப்பில்  உயிரில்லை. 

“என்ன கார்த்தீஸ்வரி, உம்முனு இருக்க, பிள்ளைகளோட போய் விளையாட வேண்டியதுதான..?”

“ஒண்ணும் இல்ல டீச்சர்”

“முகத்தைப்பார்த்தா ஒண்ணும் இல்லாதது போல தெரியலியே, கால வேற கெந்தி கெந்தி நடக்குற?”

“அம்மா என்னை எப்போ பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்கு டீச்சர்…இன்னிக்கு காலையில சூடு வைச்சிடிச்சு அதான்…” பாவாடையைத் தூக்கி காட்டினாள், கெண்டைக்காலில் நீளமாய் சூடு போட்டதன் அடையாளமாய் தோல் உரிந்து சதை சிகப்பாய் தெரிந்தது.

“அடக் கடவுளே, இப்படி சூடு போடுற அளவுக்கு நீ என்ன பண்ணின?”

“நா ஒண்ணும் பண்ணல டீச்சர், நான் யார் கூட பேசினாலும் அம்மாவுக்குப் பிடிக்கல…”

“அப்படியா, எங்கூட பேசறதும் பிடிக்காதா..?”

“அய்யோ அப்படில்லாம் இல்ல டீச்சர், நான் ஆம்பளப் பசங்க கூட பேசக்கூடாதாம்…”

“ஏனாம்?”

“ஆம்பளப்பசங்ககூட பேசினா கெட்டுப் போயிடுவேனாம். அவங்ககூட ஓடிப்போயிடுவேனாம்…”

“அப்படிச் சொல்லி சூடுபோட்டாங்களா?”

“ஆமா டீச்சர்”

“உங்க அப்பா ஒண்ணும் சொல்லலியா?”

“எங்க அப்பா வெளியூர்ல வேலை பார்க்கிறாரு டீச்சர், எப்பவாச்சம்தான் வருவாரு. அக்காவுக்கு கல்யாணம் ஆயிடிச்சு. தாய் மாமாவைத்தான் அக்கா கட்டியிருக்கு. பக்கத்து ஊர்ல இருக்காங்க. இங்க அம்மாவும் நானும் தனியா இருக்கோம்ல? அதனால் நான் ஆம்பளைங்ககூட பேசக்கூடாதாம், அப்படிப் பேசினா ஊர்க்காரங்க எங்களைத் தப்பா பேசுவாங்களாம்”

கிராமத்தில் பெண் குழந்தையுடன் தனித்திருக்கும் பெண்ணின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. அதே நேரத்தில்  கள்ளம் கபடமில்லா மனதில் நஞ்சை விதைக்கிறாரோ என்றும் தோன்றியது.

“சரி, அம்மா சூடு போடற அளவுக்கு இன்னிக்கு என்ன நடந்துச்சு? அவங்களுக்குப் பிடிக்காதுனா நீ ஏன் ஆம்பளங்ககூட பேசற?”

“பக்கத்து வீட்டு சுமதிக்கா தைக்க கொடுத்திருந்த ஜாக்கெட்டை வாங்கியாறச் சொல்லிச்சு னு, நம்ம ஸ்கூலுக்கு எதிர்க்க இருக்கிற டெய்லர் கடைக்கு போனேன் டீச்சர். அங்கன நாலைஞ்சு அண்ணனுங்க இருந்தாங்க. அதுல ஒரு அண்ணன் என்னைப் பார்த்ததும் ஏதோ சினிமா பாட்டு பாடுச்சு. அதுக்கு அந்த டெய்லர் அண்ணன் சுரேஷ் இருக்குல்ல, அது அந்த அண்ணனை சத்தம் போட்டுச்சு. அது கெட்ட வார்த்த பாட்டாம்… அப்போ அந்தப்பக்கம் போன வேலு மாமா அதைப் பார்த்திட்டுப்போய், அம்மாட்ட சொல்லிடுச்சு. ‘ஓடுகாலி நாயே’ன்னு அம்மா என்னை திட்டிக்கிட்டே சூடு போட்டுச்சு. அந்த அண்ணன் என்னை கிண்டல் பண்ணினா நான் என்ன டீச்சர் செய்ய முடியும்? அந்த அண்ணனைத் தானே திட்டனும்?” நியாயமான கேள்வியுடன்  முழு நிகழ்வையும் சொல்லி முடித்தாள்.  எப்போதும் சிரித்துக்கொண்டேயிருக்கும் கார்த்தீஸ்வரியின் கண்களிலிருந்து முதன் முதலாக கண்ணீர் தாரை தாரையாக. கஷ்டமாக இருந்தது. அருகில் இழுத்துப் பிடித்து அணைத்துக் கொண்டாள்.

“சரிடா, நான் அம்மாட்ட சொல்றேன், நீயும் அம்மா சொல்றபடி கேட்டு நடக்கனும், சரியா..?”

“சரிங்க டீச்சர்” கண்களைத் துடைத்தபடியே நடந்தவளைப் பார்க்க பாவமாக இருந்தது.

அவள் அம்மாவைக் கூப்பிட்டு அனுப்பி, வந்தவரிடம், “இப்படியா பிள்ளை காலில் சூடு போடுவீங்க?” கொஞ்சம் கோபத்துடனே கேட்டாள். “அவ செய்யற வேலைக்கு அவளை கழுத்தை நெறிச்சு கொன்னு போட்ருக்கனும், சும்மா விட்டேன் பாருங்க என்னைச் சொல்லனும்” முகத்தில் கோபமும், ஆற்றாமையும் தெரியத் தொடர்ந்தார்.

 “எப்பப்பாரு, அந்த டெய்லர் கடையில இவளுக்கு என்ன வேலை டீச்சர்? போயிப் போயி பல்ல இளிச்சிக்கிட்டு நிக்கறா. அங்ஙன பூராப் பேரும் ரவுடிப் பயலுக மாதிரி இருந்துகிட்டு இவளைக் கிண்டல் பண்றானுக. இந்த கோட்டானுக்கு அது புரியாம கெக்கே பிக்கேனு சிரிச்சிட்டு இருக்கா. பார்க்கறவன் எல்லாம் எங்கிட்ட வந்து பொண்ணக் கண்டிச்சு வையினு எனக்கு கோளாறு சொல்லிக்கிட்டு இருக்கானுக. ஏதாச்சும் ஏடாகூடமா ஆச்சுனா, அவங்க அப்பா என்னைக் கொன்னே போட்ருவாரு. என் தம்பி சும்மாவே கோவக்காரன், ஒண்ணு கெடக்க ஒண்ணு பண்ணிடுவான். எட்டாப்பு முடிச்சதும் எவனையாவது பாத்து கட்டி வைச்சாத்தான் நான் நிம்மதியா இருக்க முடியும். அதுவரைக்கும் இவளோட பெரிய ரோதனையா இருக்கு” கண்களைத் துடைத்துக்கொண்டே சொன்னார். “அதெல்லாம் கவலைப்படாதீங்க, கார்த்தீஸ்வரி பச்சப்பிள்ளை மாதிரி. மனசுல ஒண்ணும் இருக்காது. நான் சொல்லி வைக்கிறேன் அதுக்காக நீங்க புள்ள படிப்பை நிறுத்திராதீங்க. நீங்களும் அவகிட்ட கொஞ்சம் அன்பா எடுத்துச்சொல்லுங்க” என ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்தாள்.

அதற்குப் பிறகு வந்த நாட்களில் கார்த்தீஸ்வரியிடம் ஏதோ மாற்றம் தெரிவது போல் இருந்தது. இப்போதெல்லாம் காலை மாலை இடைவேளையிலோ, மதிய உணவு இடைவேளையிலோ வசந்தி டீச்சரைப் பார்க்க வருவதில்லை. வகுப்பிலும் அமைதியாக இருந்தாள். வசந்தி ஏதாவது கேள்வி கேட்டால், அவள் கண்களைப்பார்த்து பேசாமல் தரையைப் பார்த்துப் பேசினாள். ‘இது இல்லையே கார்த்தீஸ்வரி..?’ என மனதுக்குள் யோசனை புரண்டாலும், இந்த சமூகத்தின் அழுத்தம் தாயின் வார்த்தைகள் வழியாக ஒரு குழந்தையின் இயல்பைப் பிய்த்துப் போட்டு விட்டதே  என கவலையாக இருந்தது.  ஆனால் மாலையானால் ஓடி வந்து, “சூதானமா போயிட்டு வாங்க டீச்சர்” என சொல்வதில் மட்டும் மாற்றமில்லை. அந்த வெள்ளந்திச் சிரிப்பைத்தான்  காணோம்.

அரையாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. கடைசி நாள் விளையாட்டும் நடனமும் பாடலும் விருந்துமாகக் கழிந்தது. கார்த்தீஸ்வரி  மட்டும் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்தாள். மதிய இடைவேளையில் ஒரு பெரிய பப்பாளிப்பழத்தைத் தூக்கி வந்தாள். அவளே அதை வெட்டி எல்லா ஆசிரியர்களுக்கும் கொடுத்தாள். ஏதோ சொல்ல வந்ததுபோல சுற்றி சுற்றி வந்தாள். “என்ன கார்த்தீஸ்வரி?” என்ற கேள்விக்கு, “ஒண்ணுமில்லை டீச்சர்” என மழுப்பியது போலத் தோன்றியது. வழக்கம்போல மாலையில், “சூதானமா போயிட்டு வாங்க டீச்சர்” என வழியனுப்பி வைத்தாள்.

விடுமுறை முடிந்து புத்தாண்டில் பள்ளிக்குள் ஆசிரியர்கள் நுழைந்தார்கள். பத்து நாள்களுக்குப் பிறகு பார்த்ததும் ஓடி வந்து கை பிடித்து புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன  குழந்தைகளில், அவளின் கைகளைக் காணாமல் வசந்தி தேடினாள்.

“எங்கேடா கார்த்தீஸ்வரி?”

“அவ… அவ… இல்ல டீச்சர்” கோரஸாக பதில் வந்தது.

“ஏன் அவங்க அக்கா ஊருக்கு போயிருக்காளா?”

“இல்ல டீச்சர்… செத்துப் போயிட்டா…” எல்லோரும் அமைதியாய் இருக்க, ஒரு குட்டி வாண்டு கத்தியது. வசந்திக்கு ஒரு கணம் மூச்சு நின்றது. என்ன நடந்தது? ஏதும் விபத்தா? விசாரித்த போது, எதையும்  மறைக்கத் தெரியாத அந்தக் குழந்தைகள் கதை கதையாகச் சொன்னதன் சாராம்சம் இதுதான்.

கார்த்தீஸ்வரி டெய்லரை லவ் பண்ணினாளாம். அவன்கூட ஓடிப்போக திட்டம் போட்டாளாம். அதைத் தெரிந்து கொண்டு அவள் அம்மாவும், மாமாவும் சேர்ந்து அவளைக் கொலை செய்து விட்டார்களாம். அதை எப்படிச் செய்தார்கள், அவள் கடைசியாக என்ன பேசினாள்… எப்படித் துடித்தாள் என்பதை விவரித்ததை கேட்கும்போது உடம்பெல்லாம் நடுங்கியது.

“வயக்காட்டு பூச்சிமருத்தை கார்த்தீஸ்வரி வாயில வம்படியா  ஊத்திட்டு அவங்க அம்மா வெளியே வந்து உட்கார்ந்துகிடுச்சு டீச்சர். கார்த்தீஸ்வரி ‘கதவத் தொறங்கம்மா, கதவத் தொறங்கம்மா’னு அழுதுச்சு, அதுக்குப்பொறகு அவங்க மாமா அவளைக் கயத்துல கட்டி வீட்டுக்குள்ள தொங்க விட்டுட்டாரு, ஆனா  கயறு அறுந்து கீழே விழுந்துட்டா. அப்பறமும் உசிரு போகலியாம், அதனால அவங்க மாமா செருப்புக் காலால கழுத்த நெரிச்சுருக்காரு. அதுக்குப்பொறகு அவங்க தோட்டத்துக்கு கொண்டு போகும் போதுகூட  உயிர் இருந்துச்சாம். ஆனா அப்படியே உயிர் இருக்கும்போதே வண்டி டயரை மேலே போட்டு கொளுத்திட்டாங்க. எங்க வீட்ல வந்துதான் டயர் வாங்கிட்டுப்போனாங்க”, அந்தப் பிஞ்சுகள் நாள் முழுக்க விவரிக்க, ஆசிரியர்கள் அனைவரும் உறைந்து போய் நின்றார்கள். இவ்வளவு கொடூரத்தை அனுபவித்தாளா? அந்த வெள்ளந்தி முகத்தில் காதலுக்கான ஒரு அடையாளமும் பார்த்ததில்லையே?

சிறிது நேரத்தில் உள்ளூரைச் சேர்ந்த  சத்துணவு அமைப்பாளர் வந்தார்.  “உண்மையைச் சொன்னா, அந்தப்புள்ளக்கு வெவரம் பத்தாது டீச்சர், டெய்லர் கடைல விளையாட்டுத்தனமா பேசிட்டு இருந்திருக்கு. மத்தப்பசங்கல்லாம் கிண்டல் பண்ணினப்ப, டெய்லர் பையன் அவங்கள திட்டி அடிச்சிருக்கான். அந்தக் கோபத்தில அந்தப் பசங்க எல்லாம் ஊருக்குள்ள ‘கார்த்தீஸ்வரியும் டெய்லரும் லவ் பண்றாங்க’னு கதை கட்டி விட்டுட்டானுங்க. டெய்லர் வேற சாதிக்காரப் பையன். ஊருக்குள்ள கசாமுசானு பேசவும், கார்த்தீஸ்வரி  அம்மாவும், மாமாவும் பிரச்சினையைப் பெரிசாக்கி, பஞ்சாயத்துல போய் சொல்லிட்டாங்க. ‘வேற சாதிப்பையன் கூட ஓடிப்போனா ஊருக்கே அசிங்கமாப் போயிடும், இவளைப்பார்த்து நாளைக்கு இன்னும் நாலுபேரு லவ் பண்றோம் னு கிளம்பிடுவாளுங்க. அதனால காதும் காதும் வைச்சது போல நீங்களே முடிச்சிடுங்க. அப்பத்தான் பொம்பளப் புள்ளைகளுக்கு ஒரு பயம் இருக்கும்’னு பஞ்சாயத்துல சொல்லிட்டாங்க. அவங்க அம்மாவும், மாமாவும் சேர்ந்து வீட்டுக்குள்ளேயே மருந்தை ஊத்தி, தொங்க விட்டுட்டு, அந்தப் பையனையும் ஊரை விட்டே தொரத்திட்டாங்க” அரதப் பழசான சினிமாக்கதை கை கால் முளைத்து வந்தது போல இருந்தது.

மனது தாங்காமல் கார்த்தீஸ்வரி வீட்டுக்கு பள்ளியிலிருந்து எல்லா ஆசிரியர்களும் போனார்கள். அவள் மாமா வெளியில் உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தான். “யக்கா, ஸ்கூல்ல இருந்து டீச்சருங்க வந்துருக்காங்க பாரு, கேட்டு அனுப்பு” என உள்ளே திரும்பி சிக்னல் கொடுத்தான்.

உள்ளேயிருந்து வந்த அவள் அம்மா, “இந்தப் புள்ள இப்படி பண்ணுவாளா டீச்சர்? நான் சொன்ன ஒத்தச் சொல்லு பொறுக்க முடியாம இந்தா… இந்த உத்தரத்துல தொங்கிட்டா…” அந்தக்குடிசையின் உயரம் குறைவான உத்திரக் கட்டைகளை கை காட்டி விட்டு கண்ணைத் துடைத்துக்கொண்டார். “தோட்டத்துல வேலை இருக்கு டீச்சர்”, மேற்கொண்டு எந்த விபரமும் சொல்லாமல், அவர்களைக் கிளப்புவதில் மும்மரமாக இருந்தார். புரிந்து கொண்டு மௌனமாய் வெளியே வந்து அவரவர் வகுப்பை நோக்கி நடந்தார்கள். வசந்தியின் மனதில் இனம் புரியாத குற்ற உணர்வு மேலிட்டது.

பொட்டலில் நின்று சுற்றிலும் பார்க்கிறாள். டீக்கடை வழக்கம்போல பிசியாக இருக்க, ஒரு குடும்பம் பிள்ளையார் கோவிலில் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தது. டெய்லர் கடையில் யாரோ புதுப்பையன் தைத்துக் கொண்டிருந்தான். அவனைச்சுற்றி, நான்கைந்து வாலிபப் பசங்கள் கையில் சிகரெட்டுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கிராமத்தின் சாதிவெறி, ஒன்றுமறியா அப்பாவிக் குழந்தையின் உயிரைத் தின்று செரித்ததற்கான எந்தச் சுவடுமின்றி அந்த சின்னஞ்சிறு உலகம் இயல்பாய் இயங்கிக்கொண்டிருந்தது.

இத்தனை அமைதியுடன் இன்னும் எத்தனையெத்தனை கார்த்தீஸ்வரிகளை பலி வாங்கக் காத்திருக்கிறதோ? கண்களில் நீர் மறைத்து,  நடை தள்ளாடியது.  பள்ளி விட்டு கிளம்பும்போது, “சூதானமா போயிட்டு வாங்க டீச்சர்”, என்ற வார்த்தைகள் மட்டும் அந்த பொட்டலில் உருவமற்று அலைந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது. 

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். அடுத்து, ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும், ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வி த் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் அழகாக எழுதியிருக்கிறார். இம்மூன்று தொடர்களும் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. ‘வியட்நாம் அனுபவங்கள் ‘என்கிற இவரது நான்காவது தொடர் நூலாக்கம் பெற்றுவருகிறது. இது தவிர ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்துக்காக ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் எழுதியுள்ளார். குட்டிப் பெண்களின் பெரிய கதைகள் இவர் எழுதும் ஐந்தாவது தொடர்.