ஏரலின் சில தெருக்கள் ‘ட’ வடிவிலோ அல்லது வளைந்து செல்லக்கூடியதாகவோ அல்லது இடையில் சிறு சந்து குறுக்கிடுவதாகவோ அமைந்திருப்பவை. ஆனால் ஊரின் ஏழு முஸ்லிம் தெருக்களுமே தொடர்ச்சியாக வீடுகள் அமைந்த நீளமும் அகலமுமான தெருக்கள்.

அந்த அகலமான தெருக்களில் இன்று பையன்கள் கிரிக்கெட் விளையாடும் காட்சியைத் தவிர பெண்பிள்ளைகளின் சத்தத்தைக் கேட்பதும் விளையாட்டைக் காண்பதும் அரிதாகிப்போன ஒன்று. ஆனால் அன்று எங்கள் தெருக்களின் நீளத்தையும் அகலத்தையும் ஒரு இண்டு இணுக்கும் விட்டு விடாமல் சுற்றிச் சுழன்றபடி அளந்த வண்ணமே இருந்தன எங்கள் கால்கள்.

அன்றைய எங்கள் பொழுதுகள் தெருவோடும் புழுதியோடும் கலந்தே பொலிந்தன. காலையிலும் பகலிலும் ஓதப்பள்ளியிலும் பள்ளிக்கூடத்திலும் கலகலத்துத் திரிந்துவிட்டு மாலையில் வீடடைந்து பள்ளிப் பைக்கட்டு கையிலிருந்து கழன்றதுமே கால்கள் பாய்ந்து விடும் தெருவை நோக்கி. அந்தத் தெருதான் என்னென்ன ஆட்டங்களையும் பாட்டங்களையும் வைத்திருந்தது தனக்குள்! ஓடிப்பிடிப்பது, தட்டாமாலை சுற்றுவது, பாண்டி, சங்கித்கா, தண்ணீர் தரை, கோழி பறபற, கண்ணா மூச்சு, கள்ளன் போலீஸ், கொலைகொலையா முந்திரிக்கா, பூப்பறிக்க வருகிறோம், ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது, மல்லிப்பூ மல்லிப்பூ மெல்ல வந்து கிள்ளிப்போ, ஏந் தலைக்கு எண்ணெய் ஊத்து இப்படி விதவிதமான ஆட்டங்களால் முழுதுமாகப் புழுதி படிந்து போன எங்களின் பாவாடைச் சட்டைகளைத் துவைக்க வாய்க்காலில் மல்லுக்கட்டினர் எங்க ம்மாக்கள் .

ஸ்கிப்பிங் கயிறு எல்லோரிடமும் இருந்தது, புதிதாகவோ லாத்தாக்கள் குதித்துத் தேய்ந்து வெளிறியதாகவோ… பையன்களின் குச்சிக்கம்பு, கோலிக்காய், பம்பரம், சிகரெட் அட்டைகள் சோடா மூடிகளைச் சேகரித்து வட்டத்துக்குள் போட்டு வட்டாக்கை வைத்து செறுக்கி எடுப்பது போன்ற களேபரங்களுக்கு நடுவில்தான் எங்களின் ஸ்கிப்பிங் கயிறுகளும் தெருவின் அந்தத் தலைமாட்டுக்கும் இந்தத் தலைமாட்டுக்குமாக தாவிக் கொண்டிருந்தன. இருந்திருந்து சோடாபாட்டில் மூடிகளையோ அழகழகு கோலிக்காய்களையோ சேகரிக்க ஆசை வந்துவிட்டால், நாங்களும் பையன்களோடு சேர்ந்து விளையாடுவதுண்டு.

அப்படிச் சேர்ந்து விளையாடும் இன்னொன்று கள்ளன் போலீஸ் ஆட்டம்.
இதில் கள்ளன் போலீஸ் ‘வெளாட’ எங்க ஒரு தெரு மட்டும் போதவே போதாது. எங்க சின்ன வாப்பா வீட்டு வளவுப் பக்கமாகப் போய், முத்துநாடார் வீட்டுக்கு அடுத்த முக்கு வழியாகப் போனால் பெரியமணராத்தெருவிலிருக்கும் ரசிதாவாப்புமா வீட்டு வளவுப் பக்கம் வந்து விடும்; இந்தப் பக்கம் சவுக்கம்மன் கோயில் அல்லது சூசையப்பர் கோயில் வரைக்கும்; இங்கே பள்ளிக்கூடம் வரை என்றால் பஜாரில் போலீஸ் ஸ்டேஷனைத் தாண்டிப் போகக் கூடாது என்பதாக எல்லைகளை வகுத்துக் கொண்டு, ஊர் முழுக்கச் சுற்றி கள்ளனைத் தேட வேண்டி வருவதால் கள்ளம்போலீஸ் விடுமுறை நாள்களின் பகல் பொழுதுகளுக்குத்தான் சரி. இதில் சில சந்துகளையும் சில வளவுகளையும் எங்களுக்கு நாங்களே தடை செய்து கொள்வோம். முனி பேய் பிசாசு இப்படி வகைக்கு ஒன்றாக அங்கங்கு உள்ள மரத்தில் குடியிருக்கலாம் என்ற எச்சரிக்கைதான். அப்புறம் ஏதாவது ஒரு வீட்டில் இறப்பு நேர்ந்தது எனில் அந்த வீட்டு வளவு வழியாக ஒரு மூன்று நாட்களுக்குப் போவதில்லை. ‘மௌத்தாப் போன பெத்தாவோ அப்பாவோ அந்த வளவுப்பக்கமா‌ திடீர்னு வந்து நின்னு ‘ஏலா யம்மா’ன்னு கொரல் குடுத்துட்டாங்கன்னா’… அதான்!

விடுமுறை நாள்களில் காலையில் ஆற்றுக்கோ வாய்க்காலுக்கோ போய் ஆசைதீரக் குளித்துக் கும்மாளமடித்துவிட்டு வந்து காலைப் பசியாற தயாராக இருக்கும் புட்டையோ, இடியாப்பத்தையோ சாப்பிட்டுவிட்டு, பகல் முழுதும் இப்படித்தான் விளையாடித் திரிந்தோம். மத்தியானம் ஆகிவிட்டால் தெரு வாசலில் வந்து நின்று பிள்ளைகளை உரக்கக் கூவி உணவுண்ண அழைத்த குரல்களைக் கேட்டு எத்தனை காலமாகியிருக்கும் எங்கள் தெருக்களுக்கு!

மதிய வேளைகளில் “சோத்தை உண்டு கைமாறல… அதுக்குள்ள என்ன அவசரம் பிந்திப் போவுது! இப்படி வெயில்ல கெடந்து அலையிறியளே என்னத்துக்கு! செத்த வூட்டுக்குள்ள கெடந்தா என்னா?” என்ற வாப்புமாக்களின் (சற்று வலிமையான) கண்டிப்புக் குரல் காதில் விழ நேர்ந்துவிடும்.

https://yourstory.com/tamil/7f37e2d242-the-ancient-tamil-trad

அப்படியான வேளைகளில் உணவுக்குப்பின் யாருடைய வீட்டுத் திண்ணையிலாவது கூடி உட்கார்ந்து விளையாடவென்றே இருப்பது பொண்ணு மாப்பிள்ளை விளையாட்டு. சிறு துண்டுத் துணியை உருட்டி இரண்டாக மடக்கி குறுக்காக ஈர்க்குச்சியை வைத்துத் தைத்துக் கொண்டால் பொம்மை போலாகிவிடும். கூடவே கருப்புத் துணியால் முடியும் தைத்துக் கொள்ள வேண்டும். இனி தையல் கடைகளில் வெட்டிப்போட்ட துண்டு துணிகளிலிருந்து நல்ல பளபளப்பான துணிகளாக எடுத்து வந்திருப்பதைச் சட்டையாகவும் சேலையாகவும் அணிவித்து பொண்ணு மாப்பிள்ளையாக்கிவிட்டால், இரண்டுக்கும் கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டியதுதான் பாக்கி!

இது போக இன்னுமிருக்கும் தாயக்கட்டம், பல்லாங்குழி, வண்ண வண்ணக் கண்ணாடி வளையல்களைச் சிறுசிறு துண்டுகளாக உடைத்துச் சேர்த்துக் குலுக்கிப் பின் தனித்தனி நிறங்களாகப் பிரிப்பது, திரைப்படப் பெயர்களை நினைத்துக்கொண்டு முதலெழுத்தைச் சொல்லி ஊகிப்பது எல்லாவற்றையும் சிறுமிகளின் சிரிப்பொலியோடும் வாப்புமா மூமாக்களின் வெற்றிலை மெல்லும் காறலொலியோடும் திண்ணைக்கு வெளியே நின்று பார்த்து ரசித்தது பின்மதிய வெயில்.

சின்னச் சின்ன செப்புச் சாமான்களில் மணலால் சோறாக்கி முருங்கையிலை பறித்து வந்து கீரை கடைந்து, எங்காவது இருக்கும் உடைந்த சுவரிலிருந்து சாந்தையும் செங்கலையும் சுரண்டி எடுத்து வந்து நெய்யென்றும் மசாலாவென்றும் இட்டுச் சமைத்த சமையலூடே ஒலிக்கிறது –

“ஆத்து மணலிலே சோறாக்கி அவரைக்காய்ப் பிஞ்சிலே கறிசமைச்சு
மின்வெட்டாம் பூச்சியில் விளக்கேத்தி
வேடிக்கை பாக்கலாம் சோடிப்பெண்ணே” என்ற எங்க வாப்புமாவின் சிரிப்பாணி வழியும் குரல்.

எங்கள் ஆட்டத்தையும் பாட்டத்தையும் பார்த்திருந்த தெருக்கள் என்றேனில்லையா. அது உண்மைதான். எதைப்பற்றியும் கவலைப்படாமல் எதையாவது பாட்டு என்ற பெயரில் சத்தமாகப் பாடிக்கொண்டே விளையாடியது அந்தப் பருவத்தின் கோலாகலம். விளையாட வேண்டும் என்றில்லாவிட்டாலும் எதையாவது பாடிக் கொண்டிருப்பதுமுண்டு. இப்படி, ‘ஆத்துக்குள்ள ரெண்டு முட்டை தப்படிக்கிது
அழகான சாமி வந்து ஆட்டம் ஆடுது
திண்டுக்கல்லு பூட்டு வந்து திண்டாடுது
மதுர ஊரு மாடு வந்து மாவாட்டுது
ஒன்னப் பெத்தம்மா என்னப் பெத்தம்மா
கருவாட்டு முள்ளெடுத்து பல்லக் குத்தம்மா.’

தோழிகளை விளையாட அழைப்பதே ‘மும்மும்தாஜ் வில்விளையாட வல்வாரியா’ என்றுதான். அதற்கு பதில் இப்படி வரும் ‘இல்இதோ வல்வந்துட்டே இல் இருக்கேன்.’
‘கஜகரிகனா கநாகளைகக்ககு கபகடகம் கபாகக்கக கபோகலாகமா’ என்று ஒரு புது மொழியால் அவ்வப்போது தெருவே கலகலத்தும் போகும் எங்களால்!

விளையாட்டுக்கு இரண்டு அணிகள் வேண்டும். இரண்டுக்கும் தலைவிகள் அதாவது அம்மாக்கள் இருப்பார்கள். யார்யாரெல்லாம் அம்மாவுக்குப் பிள்ளை எனப் பிரிப்பதற்குச் சில பாட்டுக்கள்.
‘ஓர் அம்மா கடைக்குப் போனா
ஒரு டஜன் மிட்டாய் வாங்குனா
அதன் நிறம் என்ன’ நிறத்தைச் சொன்னவுடன் அதை எழுத்துக் கூட்டி அது யாரிடம் முடிகிறதோ அந்தப் பிள்ளை அந்த அம்மாவுக்கு.

‘அக்கு புக்கு சந்தனம் தேவி
ராஜா மக்கள் பேரைச் சொல்லி சலூட்’

‘பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட்
என்ன ஜாம் டீ ஜாம்
என்ன டீ பெண்டாட்டீ
என்ன பெண் ராணிப் பெண்
என்ன ராணி மகாராணி
என்ன மகா தாஜ்மகா
என்ன தாஜ் மும்தாஜ் “

“தத்தக்கா புத்தக்கா
தவலச் சோறு
எட்டு எருமை எருமைப் பாலு
தூக்கு மரத்துல துணியக் கட்டி கூப்பிடுங்க குல உடுங்க
கொறத்தி மகளே கையை எடு’

‘ரப்பர் ரப்பர் இந்தியா ரப்பர்
என்ன இந்தியா வடஇந்தியா
என்ன வட ஆமவட
என்ன ஆம குளத்தாம
என்ன குளம் திரிக்குளம்
என்ன திரி வெளக்குத்திரி
என்ன வெளக்கு குத்துவெளக்கு
என்ன குத்து டிஷ்யூம்குத்து’
இதெல்லாமும் அம்மாக்கள் பிள்ளைகளைத் தத்தெடுக்கத்தான்.

https://www.shikaracosmo.com/2022/09/outdoor-traditional-games-of-tamil-nadu.html

‘பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம்
எந்தப் பூவைப் பறிக்கிறீர்கள் எந்தப்பூவைப் பறிக்கிறீர்கள் செண்டுப்பூவைப் பறிக்கிறோம் செண்டுப்பூவைப் பறிக்கிறோம்
யாரை விட்டுப் பறிக்கிறீர்கள்
யாரை விட்டுப் பறிக்கிறீர்கள்
ரோஜாவை விட்டுப் பறிக்கிறோம்
ரோஜாவை விட்டுப் பறிக்கிறோம்’

இது பிள்ளைகளை இரண்டு அணிகளாகப் பிரித்து ஒவ்வொருவருக்கும் பூப்பெயரைச் சூட்டிப் பூப்பறித்து விளையாடும் பாட்டு.
மற்றொரு விளையாட்டில் ,
‘செவந்திப்பூ செவந்திப்பூ மெல்ல வந்து கிள்ளிப்போ’ என்ற பாட்டைக் கேட்டுச் சத்தம் எழாமல் நடந்து வந்து கண்பொத்தப் பட்டிருக்கும் கனகாம்பரத்தைக் கிள்ளிச் செல்லும் செவ்வந்திப்பூ ஒன்று.

இன்றும் குழந்தைகள் ஃபோர் கார்னர்ஸ் என்று விளையாடுவதைப் பார்த்தால் நாங்கள் மூலைக்கொருவராக நால்வர் நடுவில் ஒருவர் என நின்று விளையாடுவது நினைவு வரும். ஆனால் என்ன, அன்று நடுவில் நின்றவர் சும்மா நின்றதில்லை.
‘ஏந் தலைக்கு எண்ணெ ஊத்து
எருமை மாட்டுக்குப் புல்போடு’ என்று பாடிக்கொண்டே உச்சந்தலையையும் தேய்த்துக் கொண்டு சுழன்றபடியிருக்கவேண்டும். இப்போது இதைப் பிள்ளைகளிடம் சொல்லி அவர்கள் சிரிப்பது ஒருபக்கம் இருக்க நமக்கே நினைக்கும்போது சிரிப்புதான் வருகிறது!

‘கிச்சுக் கிச்சுத் தாம்பாளம் கிய்யா கிய்யாத் தாம்பாளம்
கள்ளச்சி வாரா கதவைப் பூட்டிக்கோ பூட்டிக்கோ’
என்று அந்தப் புழுதி மணலில் கைகளால் அளையும் போதும் வாய் ஓய்ந்திருந்ததில்லை‌ .

குனிந்திருக்கும் ஒருத்தியின் முதுகில் மற்றவர் கைகளை விரித்து வைத்து
‘அரியரிசி பொரியரிசி
ஆரா மணியரிசி
கிண்ணியில போட்டரிசி கிலுக்காம்பொட்டி மாவுருண்டேய்’
என்று பாடியபடியே உருண்டையான ஒரு சிறு பொருளை யாராவது ஒருத்தியின் கையில் வைத்துவிட எல்லோரும் மாவுருண்டேய் எனச் சொல்லி உருட்ட குனிந்தவள் நிமிர்ந்து யாருடைய கையில் உருண்டை இருக்கிறதெனக் கண்டுபிடிப்பது ஒரு பொழுதுபோக்கு .

இப்படி விளையாட்டோடு இன்னொரு விளையாட்டாகவே நடக்கும் மருதாணி அரைப்பது. தெருவில் குளுவர் இனப் பெண்கள்தான் அன்று மருதாணி விற்க வருவார்கள். ஐந்து பைசாவுக்கு வாங்குவதே நான்கு ஐந்து பேர் தாராளமாக வைக்கப் போதுமானதாக இருக்கும். வீட்டில் இருக்கும் லாத்தாக்கள் வாங்கிய மருதாணியை ஒழுங்காக அரைத்து வைத்துக் கொள்வார்கள். சிறுமிகளான நாங்களோ எங்களுக்கான‌ மருதாணியை நாங்களே அரைத்துக்கொள்ள ஆசைப்பட்டு அவரவர் வீட்டிலிருந்து சிறு கைப்பிடி (லாத்தாக்களிடம் கெஞ்சித்தான்) வாங்கி வந்து விடுவோம். யார் வீட்டு வளவிலாவது புழங்காத அம்மியும் குழவியும் கிடக்கும் .

https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/since-the-maruthani-leaves-is-placed-what-are-the-benefits-120062300044_1.html

மருதாணியோடு பாக்கு, புளி, ஏழு வீட்டுக் கூரை, நூலாம்படை, கட்டெறும்பு என்றும் சிலதைச் சேகரித்துக் கொண்டு ஒன்றாய்ச் சேர்த்து அரைக்க வேண்டியதுதான். ‘இதெல்லாம் சேர்த்தாதான் பிள்ளைலுவோ கைல செக்கச் செவேல்னு புடிக்கும்’ என்று கடமையாய் எடுத்துச் சொல்லி எங்களைத் தூண்டிவிட்ட பெத்தாக்கள் நாங்கள் அரைத்து முடித்ததும் “ஏ பிள்ளைலுவோ நூலாம்படைய மறக்கலியே ஏழு வூட்ல கூர பிச்சியளா இல்லியா?” என்று சிரிக்காமல் கேட்டும் கொள்வார்கள். அந்த மருதாணியும் இரவு தலையணையையும் பாயையும் சிவப்பாக்கியது போக, போனால் போகட்டுமென்று எங்கள் கைகளையும் கொஞ்சமேனும் சிவக்க வைத்ததுதான்.

இந்த விளையாட்டுக்கள் எல்லாவற்றையும் விட எப்போதும் எங்களுக்குப் பிடித்தமாய் இருந்தது ‘சங்கித்கா’தான். பாண்டி என்று சொல்வதைத்தான் நாங்கள் சங்கித்கா என்போம் . வட்டாக்கை அதாவது ஓட்டாங்கண்ணியை ஒவ்வொரு கட்டமாக எறிந்து ஓடிப்போய் எடுத்து, பழம் கொய்யப் போகையில் தலைவழியாகப் பின்னால் வீசி, அது சரியாகக் கட்டத்துக்குள் விழுந்ததும் அந்தக் கட்டம் நமக்குச் சொந்தமாகிவிடும். இந்தச் சுற்று முழுவதும் சங்.. கித் கித் கித் கித்.. என்று மூச்சு விடாமல் தொடர்ந்து சொல்லியபடியே விளையாட வேண்டும். மூச்சு முட்டி நின்று விட்டால் அடுத்த வாய்ப்பில் தொடரலாம். அந்த விளையாட்டுக்குத்தான் எத்தனையெத்தனை சட்டமும் திட்டமும்! நொண்டியடித்தபடியே கட்டம் கட்டமாக வட்டாக்கைச் செறுக்கிக் கொண்டு செல்வது, வட்டாக்கு கீழே துள்ளி விழுந்துவிடாமல் அதைத் தலைமேல் வைத்தபடி, முதுகில் வைத்தபடி, ஒரு பாதத்தில் வைத்தபடி நொண்டியடித்தவாறே செல்வது, பழம் கொய்யச் செல்லும்போது கோட்டை மிதித்து விடாமல் கண்களை மூடியபடி கட்டத்துக்குள் சரியாக நடந்து செல்வது, கட்டத்துக்குள் விழுந்த வட்டாக்கை அதன் எதிர் கட்டத்துக்கு வெளியே குத்துக்காலிட்டு அமர்ந்து கையையோ முழங்காலையோ ஊன்றிவிடாமல் எடுப்பது! அடேயப்பா ! சங்கித்கா விளையாடப் புகுந்துவிட்டால், நேரம் பறக்கத்தான் பறக்கும்.

PC: Quora

பாண்டி விளையாட்டை வேறுவிதமாக அதாவது ஒவ்வொரு கட்டத்துக்கும் இரண்டிரண்டு அடிகளாக அமைந்த பாட்டாகப் பாடிக்கொண்டே விளையாடுவதும் உண்டு சிலநேரங்களில்.
‘ஆஹா அலங்காரம்
கோழி முட்டை சிங்காரம்

அம்மி கொழவி
அரைச்சா மொளவு

அண்டா கொப்பரை
அடிச்சா வெண்கலம்

கத்தரிக்காய் காசுமாலை
கடவுள் தந்த பூமாலை

எள்ளு கடலை
ஏழுச்சட்டிப் புண்ணாக்கு

டூம்டூம் துப்பாக்கி
போலீஸ்காரன் பொண்டாட்டி

காடு மேடு காக்கா கூடு
ஊரு வீடு குருவிக் கூடு…’

இன்னும் கூட இந்தப் பாட்டில் நிறைய அடிகள் உண்டு. எழுதும்போது தான் தெரிகிறது மறந்துவிட்டேன் என்று. ஊரில் என் வயது அல்லது எனக்கு மூத்தவர்களிடம் கேட்டுக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் மறந்து விடாமல்.

சிறுமிகள் சிறுமிகளாக இருந்த வரையில் இப்படித் தெருவில் துள்ளிய கால்கள், இனி குமரிகளாய் வீடுகளுக்குள் உட்கார்ந்து தாயக்கட்டத்தையும் பல்லாங்குழியையும் ஆடத் தொடங்குகையில், அவர்களின் கைகளில் குலுங்கும் வளைகளோடும் சோழிகளோடும் சேர்ந்து குதிக்கத் தொடங்கும் அவர்களின் மனதுக்குள்ளேயே…

படைப்பாளர்

ஜமீலா

54 வயதாகும் ஜமீலா, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர். சுற்றி நடக்கும் வாழ்வைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர். கவனித்தவற்றையும் மனதில் படிந்தவற்றையும் அவ்வப்போது எழுதியும் பார்ப்பவர். ஹீனா பாத்திமாவின் முக்கிய கட்டுரை ஒன்றை அருஞ்சொல் இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தீக்கதிர் இதழிலும் இவருடைய மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.